Monday, November 16, 2020

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் - கவிஞர் வைரமுத்து

"...தமிழில் நம்பிக்கை இல்லாத, தமிழை எழுதவோ படிக்கவோ தெரியாத, ஏன் தமிழை பேச மறுக்கிற ஒரு தலைமுறை எங்கள் கண் முன்னால் நிற்பது கண்டு இதயம் நடுங்குகிறது.." என  கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் குறித்து தனது ஆதங்கத்தையும் அதிர்ச்சியையும் கவிஞர் வைரமுத்து வெளியிட்டிருக்கிறார்.

உண்மையில், நமது தாய்மொழி நம் கண் முன்னால் இன்று அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து  நாம் ஒவ்வொரும் அச்சப்படத்தான் வேண்டும்.


அதே செவ்வியில் கவிஞர் ,  “இனி எந்த மொழி தொழில்நுட்பத்தின் தோள்களில் ஏறி தொண்டு செய்கிறதோ அந்த மொழிதான் நிலைக்கும். துருப்பிடித்த பழம்பெருமைகள் மட்டும் இனி ஒரு மொழியைத் தூக்கி நிறுத்த முடியாது. இன்று சர்வதேச சமூகம் 3 மொழிகளை முன்னிலைப்படுத்துகிறது. ஆங்கிலம் - சீனம் - ஜப்பான். இந்த 3 இனங்களுமே தொழில்நுட்பத்துக்கு தங்கள் மொழியைக் கொம்பு சீவுகின்றன. தமிழுக்கும் அந்த தகுதி இருக்கிறது. தமிழர்களுக்குத்தான் நம்பிக்கை வேண்டும்”. என்றும் சொல்லி இருக்கிறார். 

இதை நாம் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம்.  ஆனால், அறிவுசார் புலத்தில் இதுபற்றிய தீவிர உரையாடல்களோ ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளோ இல்லை. காரணம் பலர் இங்கே மொழியை தங்களை அதிகார மையத்தை நோக்கி நகர்த்தும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. 

பலருக்கு மத்திய அரசின் ஆசி இல்லாமல் பிராந்திய மொழியால் என்ன பெரிதாக சாதித்துவிட முடியும் எனும் எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். வையத் தலைமை கொள்! என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். 

இது தொடர்பாக தமிழ்ச்சரம்.காம்- வுடன் இணைந்து செயல்பட விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

கவிஞரின் செவ்வி இணைப்பு.

https://youtu.be/ue0zc1fgdVA

Saturday, November 14, 2020

ஜெப்ரடி (jeopardy) புகழ் அலெக்ஸ் ட்ரெபெக்

ஜெப்ரடி (jeopardy) புகழ் அலெக்ஸ் ட்ரெபெக் பற்றி தனியாக எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், அது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக அமைந்துவிட்டது.

"ஜெப்ரடி" நிகழ்ச்சியை அமெரிக்கத் தொலைக்காட்சியில்  தொடர்ச்சியாக 36 ஆண்டுகள் நிகழ்த்திக் கொண்டிருந்த அலெக்ஸ் இரண்டு நாட்களுக்கு முன் மரணமடைந்தார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 80.

தனது இறுதி நாட்கள் வரை வழக்கம்போல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அலெக்ஸ் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர். அவர் தொகுத்து வழங்கிய ஜெப்ரடி ஒரு வினோதமான ஒரு வினாடி வினா நிகழ்ச்சி. வழக்கமான கேள்வி கேட்டு பதில் சொல்லும் நிகழ்ச்சியாக இல்லாமல் போட்டியாளர்களுக்கு பதிலைக் கொடுத்து கேள்வியை
எதிர்பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.  

எளிதில் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு கேள்வி... "கீதாஞ்சலி எழுதியவர்." என்பது கேள்விக் குறிப்பு என்றால்,  அதற்கான சரியான பதில் "யார் தாகூர் ? (Who is Rabindranath Tagore )" என்பதாகும்.

இப்படி கலை,இலக்கியம், அறிவியல், பொருளாதாரம், பூளோகம்,வரலாறு என எண்ணற்ற பல துறைகளில் பொது அறிவை வளர்க்கும் விதமாக அமைந்த இந்த நிகழ்ச்சியை  ஆர்வத்தோடு பல ஆண்டுகளாக வீட்டில் பார்க்கிறோம். தேவையற்ற வெட்டி பேச்சுகள் இன்றி, அதே சமயத்தில் போட்டியாளர்களைச் சற்று நகைச்சுவையோடு உற்சாகப்படுத்திப் பேசும் அவருடைய ஆளுமை அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. அதீத ஆர்வமும், கடும் உழைப்பும் உள்ள ஒருவரால் மட்டுமே இத்தனை ஆயிரம் நிகழ்ச்சிகளைக் கண்டிப்பாக செய்திருக்க முடியும்.

அலெக்சின் இழப்பைக் குடும்ப உறுப்பினர் ஒருவருடைய இழப்பாக நினைகின்ற பல மில்லியன் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. RIP Alex !

Friday, November 6, 2020

திருமதி. மேகலா இராமமூர்த்தி - ஃபிளாரிடா

பேச்சு என்பது ஆற்றல் வாய்ந்த ஒரு கலை. அதுவும் மேடைப் பேச்சு என்பது பேராற்றல் வாய்ந்த ஒன்று. அந்தக் கலையில் வித்தகர் ஒருவர் இங்கே ஃபிளாரிடாவில் இருக்கிறார். அவர் திருமதி. மேகலா இராமமூர்த்தி.

வெளிப்படையாக சொல்தென்றால் பலர்  மேடையில் பேச சந்தர்ப்பம் கிடைத்தால் தான் பேச எடுத்துக் கொண்ட விஷயத்தை மறந்துவிட்டு
தன் பெருமையை எடுத்துக் கூறுவதில் ஈடுபட்டு விடுவார்கள். சிலர்
தான் எதைப்பற்றி பேச போகிறோம் என்ற தெளிவு இல்லாமல் அல்லது யாருக்காக பேசுகிறோம் என்ற சரியான புரிதல் இல்லாமல் பேசுவார்கள்.

 

ஆனால்,  மேகலா இதுபோன்ற குறைபாடுகள் எதுவும் இல்லாமல்  இலக்கிய, ஜனரஞ்சக மேடைகளில் கேட்பவர்கள் கவனம் சிதறாமல் ஆற்றொழுக்காக பேசுவதில் வல்லவர். மிகத் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் பேசும் மேகலா
தொடர்ந்து பல வானோலி நிகழ்ச்சிகளை அமெரிக்காவில் இருந்து அதுவும் நான் வசிக்கும் ஃபிளாரிடாவில் இருந்து செய்து வருகிறார்.


2020- ஜனவரியில் கூட எனது அழைப்பினை ஏற்று இர்மா நாவலை அறிமுகப்படுத்த ஓர்லாண்டோ தமிழ்ச்சங்க விழாவில் மேடையேறியவர் மிகக்குறுகிய நேரத்தில் படைப்பின் சாரம்சத்தைச்  சுருக்கமாக அதே சமயத்தில் சுவாரசியம் குறையாமல் அழகாக அறிமுகம் செய்து பேசிவிட்டு இறங்கினார்.

மேகலா சிறந்த பேச்சாளர் என்பதை தாண்டி அவர் கவிஞர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். அவருடைய கவிஞர் மகுடேசுவரனுடனான சமீபத்திய நேர்காணல் முக்கியமான ஒன்று.

"தமிழர்களிடம் இருப்பது மொழிப் பற்றா இல்லை மொழி வெறியா ? இன்றைய  தமிழக கல்விச் சூழலில் தமிழின்  நிலை என்ன ?"  என்பது போன்ற பல முக்கிய வினாக்களை நிகழ்வில் எழுப்பி இருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் கேளுங்கள்.

**யூடியூப்- இணைப்பு**

இர்மா-அறிமுக விழா (4:20-8:50)

Irma

கவிஞர் மகுடேஸ்வன்- நேர்காணல்

மகுடேஸ்வன்


Monday, November 2, 2020

வனநாயகன் குறித்து-18 ( ஆர்வத்தைத் தூண்டுகிறது )

"வனநாயகன்: மலேசிய நாட்கள்"  குறித்து எனது மதிப்பிற்குரிய தமிழ்
ஆசிரியர் ஒருவர் அனுப்பிய வாழ்த்துகளை இங்கே நண்பர்களுடன் பகிர்கிறேன். 

//

வனநாயகன் புதினம்  ஒரேமூச்சில் படித்தேன்.

என்ன அழகாக விறுவிறுப்பாக,சொல்லாட்சிச் சிறப்புடன்  உள்ளது! முன்னரே கதை எழுதிப் பழக்கம் உண்டா? 

இதழ்களில் எழுதியது உண்டா? முன்னர் எழுதிய.பங்களா கொட்டாவை விட எவ்வளவு சிறப்பாக உள்ளது இது. 

உங்கள் சொந்தக்கதையா ? முழுவதும்  கற்பனையாகத் தெரியவில்லை.பெரிய சிக்கலான அவிழ்க்க முடியாத முடிச்சுகள் இல்லையென்றலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
.... காட்சிகளை வருணிப்பதிலும் நிகழ்வுகளை விவரிப்பதிலும்  தேர்ச்சி பளிச்சிடுகிறது.

பெண் கதாபாத்திரங்களின் பெயர் சுருக்கம் சற்று குழப்பமடையவைக்கிறது......

மற்றபடி, பெண்களை எழுத்தால் காட்சிப் படுத்துதல் மிக அருமை; தேர்ச்சி தெரிகிறது. சிங் பாத்திரம் நன்று.பெரிய இடங்களில் நடக்கும் தில்லுமுல்லுகள்,ஒழுக்கக்கேடுகள் அம்பலமாகியுள்ளன. மகிழ்ச்சி  பாராட்டுகள் !

//

வனநாயகன் வெளியாகி சுமார் 4 ஆண்டுகள் (December 1, 2016) கடந்தும் படைப்பு தொடர்ந்து வாசிக்கப்பட்டு பேசப்படுவது மகிழ்ச்சியோடு உற்சாகத்தையும் தருகிறது.