Wednesday, February 22, 2017

வன நாயகன் குறித்து-2 (விட்டதை, வன நாயகனில் பிடித்து விட்டார்)

"வனநாயகன்-மலேசிய நாட்கள் குறித்து எழுத்தாளர் அரசன் (இண்ட முள்ளு நூலாசிரியர் ) முகநூலில் பகிர்ந்தது.

*******************************************************************
வன நாயகன் - ஆரூர் பாஸ்கர் பங்களா கொட்டா நூலின் வாயிலாக அறிமுகம் ஆனவர், அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு தமிழ் வளர்க்கும் மனிதர். தனது இரண்டாவது தொகுப்பு "வன நாயகனை" கிழக்கு பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்திருக்கிறார். பங்களா கொட்டாவில் விட்டதை, வன நாயகனில் பிடித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கும்பகோணத்திற்கு பக்கத்திலுள்ளா ஊரிலிருந்து சுதாங்கன் எனும் இளைஞன் பணி நிமித்தமாக மலேசியா செல்கிறான், சில மாதங்களில் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிர்வாகத்தினரால் நீக்கப் படுகிறான், தான் நீக்கப்பட்ட காரணத்தை அறிய பயணப்பட்டு, அதற்கான விடைகளை அறிய முற்படுவது தான் நாவலின் சாரம்சம்.
ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து மீள ஒருவன் என்ன என்ன முயற்சிகள் எடுக்கிறான் என்பதை அவ்வளவு நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். படித்தது போதும் மீதியை நாளை படித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தினை வரவழைக்காமல் அடுத்தடுத்து நம்மை நகர்த்திச் செல்லுதலில் இருக்கிறது நாவலின் வெற்றி, அந்த வேகம் வன நாயகனிலும் இருக்கிறது.


நிர்வாக அரசியல், இடம்பெயர்ந்து வேலைக்கு செல்லும் மனிதர்களின் மன நிலை, அங்குள்ள மக்களின் வாழ்வியல் பழக்கங்கள், கடற்கரை பற்றிய நுணுக்கமான வரலாறு, காடுகளின் வளங்களை சூறையாடும் பெரு முதலாளிகளின் அரசியல் என்று ஒவ்வொன்றையும் நிதானமாக பதிவு செய்திருக்கிறார். வெறுமனே கதையை நகர்த்திவிடாமல் வாசிப்பவரையும் அதனோடு பயணிக்க வைத்திருக்கும் செய் நேர்த்திக்கு வாழ்த்துக்கள் பாஸ்கர். தொடர்ந்து இயங்குங்கள், இன்னும் நிறைய படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...

*******************************************************************

Saturday, February 18, 2017

எழுத்தாளர் சுஜாதாவும் புலியும்

    நண்பர்களே எழுத்தாளர் சுஜாதாவுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு எனத் தெரிந்துக் கொள்ளும் ஆர்வமாயிருந்தால் தொடர்ந்து படியுங்கள்.

    ஒருமுறை  சுஜாதாவிடம் 'எந்த வட்டாரத்துப் பேச்சுத் தமிழ் உங்களைக் கவர்ந்திருக்கிறது ?' என்ற கேள்விக்கு 'என்னைக் கவர்ந்த பேச்சுத் தமிழ், திருநெல்வேலித் தமிழ்தான் என்றிருக்கிறார். அதோடு விடாமல்  'என்னடே' என்பதே மரியாதைச் சொல். 'புலிய அங்க வச்சுப் பாத்தேன்' போன்ற வசீகரமான  பிரயோகங்கள், எளிய ஜனங்களின் எளிய மனங்களின் வெளிப்பாடு' என சிலாகித்திருக்கிறார்.  இப்போ தொடர்பு புரிஞ்சுதா ? ;)

    நானும் சுஜாதாவின் பதிலோடு இணைந்துப்போவதில் மகிழ்ச்சி. 'சரி, அப்போ இரண்டாவது ? ' என  நீங்கள் கேட்டால் கோவையின் 'ஏனுங்க' வைச் சொல்வேன் என நினைக்கிறேன். இப்படிச் சொல்லுவதால் மற்ற வட்டார வழக்குகள் பிடிக்கவில்லை என நீங்கள் புரிந்துக்கொள்ளத் தேவையில்லை.

    ஆனாலும், திருநெல்வேலி தமிழை புரிந்துக்கொள்ள சில நுட்பங்கள் தேவை. "இந்தா இந்த வாரியலை  வச்சு, வாச தூத்துட்டு வா" என்றால் "என்னது துப்பணுமா ?" எனக் கேட்காமல் துடைப்பத்தால் வாசலை  சுத்தம் செய் எனப் புரிந்துக் கொள்ள வேண்டும். அப்புறம், "ஏன்ல இப்படி படப்பயம் போடுத?" என்றால்" ஏன் இப்படி கூப்பாடு/சத்தம் போடுகிறாய்" எனப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

    அதுபோல "எனக்கு காய்ச்சலடிக்கி" எனச் சொன்னால் "எனக்கு ஜூரம்" எனப் புரிந்துக் கொள்ளவேண்டும்.

    இப்படி வீட்டில் திருநெல்வேலி பாசை பேசிக்கொண்டிருந்த என் அம்மாவையும் கடந்த 40 வருடங்கள் மாற்றிதான் விட்டது. ஆமாம், அவள் பேச்சில் நெல்லை தமிழ் வாடை குறைந்து விட்டது. "வீட்டுல எல்லாரும் சும்மா (சுகமா) இருக்காளா?" எனக் கேட்காமல் "வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா ? " எனக் கேட்க பழகிவிட்டாள். ஆனாலும், இப்போதும் வீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நெல்லை வாட்டார வார்த்தைகள் காதில் விழத்தான் செய்கிறது.

    இங்கே சினிமா, தொலைக்காட்சி, நகர்மயமாதல் தாண்டி உலகமயமாக்கலும் தன் பங்கிற்கு எல்லா ஊர்மக்களையும் தங்களின் வட்டார மொழியை விட்டு வேறு ஏதோ மொழியை நோக்கி திருப்பியிருக்கிறது. "ஸ்கூல் முடிச்சு, காலேஜ்க்கு மெட்ராஸ் போனபோதே திருநெல்வேலி பாசைக்கு நோ சொல்லிட்டேன்" என்கிறான் கலிபோர்னியாவிலிருக்கும் என் உறவினன். இது தான் இன்றைய நிதர்சனம்.

Sunday, February 12, 2017

வனநாயகன் குறித்து -1

நண்பர்களே,

"வனநாயகன்- மலேசிய நாட்கள்" நாவல் குறித்து வாசகர்கள் எழுதும், முகநூலில் பகிரும் கருத்துகளை உங்களுடன் பகிர்கிறேன்.

இதுபோல், எந்தவோரு  நாவலையும் வாசித்து தங்கள் கருத்துகளை ஆசிரியருடனும், நண்பர்களிடமும் பகிரும் வாசகர்கள்
பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு  எனது மனமார்ந்த நன்றிகள் பல !!.

முகநூலில்  Prasancbe Thamirabarani அவர்கள் பகிர்ந்த கருத்து இங்கே.

*********************************
இன்று வனநாயகன் படித்து முடித்தேன். ஆருர் பாஸ்கர் மிகச்சிறப்பாக படைத்திருக்கிறார். சிறந்த முதல் நாவலுக்கான விருதுகள் கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகம். மலேஷியா பிண்ணணியில் கம்ப்யூட்டர், இணையம் என்று பின்னிப் பெடலெடுக்கும் திரில்லர். அந்த நாட்டின் சுற்றுலாத் தலங்களை இந்தியாவின் இடங்களோடு ஒப்புமை படுத்திச் சொன்ன விதம் புதுமை. Weldon and Welcome ஆருர்.

*********************************


Wednesday, February 1, 2017

இந்திய வணிகச் சந்தையில் கார்பெரேட் சாமியார்கள்

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "புளூம்பர்க் பிசினஸ் வீக்" (Bloomberg Businessweek) வணிக இதழில்  இந்திய வணிகச் சந்தையில் நுழைந்த கார்பெரேட்  சாமியார்கள் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

"மேற்கத்திய கம்பெனிகளின் வணிகச் சந்தையை திருடும்
உள்ளூர் சாமியார்கள்" எனும் தலைப்பிட்ட அந்தக் கட்டுரையில்
கார்பரேட் சாமியார்களின் சமீபத்திய அசுர வளர்ச்சியைப் புள்ளி விவரங்களுடன் புட்டுபுட்டு வைத்திருக்கிறார்கள்.

டை கட்டியவர்களை வியர்க்க வைக்கும் கோமணான்டிகள் என
பாபா ராம்தேவ், ரவி சங்கர், ஜக்கி போன்ற சில பெயர்களையும் அவர்களின் பிராண்ட் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பதஞ்சலி (ராம்தேவ்) நிறுவனத்தின் 97 சதவீத பங்குகளை வைத்துள்ள ஆச்சார்யா பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். இவர்களின்  வெற்றிக்கு  ஹெர்பல் என்பதைத் தாண்டி உலகத் தரம், குறைந்த விலை,நல்ல நெட்வோர்க், மார்கெட்டிங்,  மற்றும் தொழிலில் வரும் லாபம் தொண்டு நிறுவனங்களுக்கு எனும் பரப்புரையும் முக்கியக் காரணம் என்கிறார்கள்.

அப்படியே போகிறபோக்கில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலிருந்தும் இயங்கும் பல மதநிறுவனங்கள்
மோடியின் Make in India மந்திரத்தை நன்றாக பயன்படுத்தி இந்த வணிகத்தில் குதித்திருகின்றன என கொளுத்திப்போட்டிருக்கிறார்கள்.

வரும் நாட்களில்  இந்தக் கம்பெனிகள் சோப்,ஷாம்பூ,  பேஸ்ட் எனும் காஸ்மெடிக்கைத் தாண்டி, எண்ணெய்,பால்,துணி  என சகலவிதமான துறையிலும் இறங்கப் போகிறார்களாம்.

முக்கியமாக, வெளிநாட்டுக் கம்பெனிகள் A1 பால் விற்பனையில் இறங்கிவிட்டன எனும் குற்றச்சாட்டு வைக்கப்படும் இந்தத் தருணத்தில் இந்தக் கம்பெனிகள் A1 பால் விற்பனையில் குதித்து
கொடி கட்டலாம். பொறுத்திருந்து பார்க்கலாம்.

வாடிக்கையாளர்கள் பாரம்பரியத்தை நோக்கித் திரும்ப நினைப்பதை உள்ளூர் நிறுவனங்கள் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்வது தப்பில்லைதான். ஆனால், அவர்களின் பொருட்கள் தரமானதா இல்லை கண்களை மூடி வாங்கிக் குவிக்கிறோமா என யோசிக்க வேண்டும். அடுத்து லாப நோக்கில்லை எனச் சொல்லும் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் எந்த அளவு வெளிப்படையானது என்றும் தெரியவில்லை.

நன்றி; Bloomberg Businessweek