Friday, August 26, 2022

"ஜிபே" Google Pay

'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன்' என்பது போல புதிய தொழில்நுட்பங்களை விரைவாக கைகொள்வதில் இந்தியாவை அடித்துக்கொள்ள வேறு ஆட்களே இல்லை என்றே நினைக்கிறேன். அந்த விதத்தில் நான் இந்தமுறை கவனித்த விசயம் "ஜிபே(Google Pay)" . 



ஜிபே-ஐ தமிழ்நாடு என்றில்லை ஒட்டுமொத்த இந்தியாவே  தத்து எடுத்திருக்கிறது போல. சாலையோர பழக்கடையில் இருந்து ஐந்து நட்சத்திர ஒட்டல் வரை எல்லோரும் எந்த தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்கிறார்கள். நாம் முன்புபோல  பணத்துக்காக ஏடிஎம்களைத் தேடி ஓடவேண்டிதில்லை.

ஆனால் என்ன, கிரிடிக் கார்ட், பே பால் (PayPal) என இப்படி எவ்வளவுதான்  புதிதாக வந்தாலும் எனக்கு பணத்தைக் கண்ணால் பார்த்து, கைகளில் தொட்டு செலவு செய்தால்தான்  திருப்தி. அப்போதுதான் செலவு என் கட்டுக்குள் ஒழுங்காக இருக்கும் என சிலர் சொல்வதும் லேசாக காதில் விழுந்தது. 

Sunday, August 21, 2022

மூத்த அகதி

ஸீரோ டிகிரி பப்ளிஷிங்-தமிழரசி அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2021 இலக்கிய விருது பெற்ற "மூத்த அகதி"-ஐ வாசித்தேன்.  நூலின் ஆசிரியர் வாசு முருகவேல்.


வாசு முருகவேல் "கலாதீபம் லொட்ஜ்" மூலம் எனக்கு அறிமுகமானவர். நம்பிக்கைக்கு உரிய ஈழ எழுத்தாளர். இங்கே நான்  ஈழ எழுத்தாளர் எனக் குறிப்பிடுவது அவரைத் தனித்துவப்படுத்தி காட்டவே தவிர தனிமைப் படுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது.

ஒரு நல்ல இலக்கியப் படைப்பு என்பது தன்னளவில் வாசிப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறிய  மாற்றத்தை, தன்னுணர்வுப் புரிதலைத் தரவேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை வாசு முருவேலின் மூத்த அகதி நிறைவு செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

ஈழப் போரின் பொருட்டு சில தமிழர்கள் இங்கே அகதியாக வந்தார்கள். அவர்கள் ஆங்காங்கே அகதி முகாமில் வசிக்கிறார்கள் என்றெல்லாம்  மேலெழுந்த வாரியாக பேசப்படும் (தமிழ்நாட்டு) ஈழத் தமிழர் வாழ்வின் ஒரு துளி இந்த மூத்த அகதி.

ஆரம்பத்தில் பல உதிரி மனிதர்களின் கதைகள் சென்னையின் சில தெருக்களில் இலக்கின்றி பயணிப்பது போல தோன்றினாலும் மெல்ல மெல்ல வாசனும், துவாரகனும் கதை மாந்தர்களாக உருபெற்று நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் நம்மை புத்தகத்தை கீழே வைக்கவே விடுவதில்லை. 

மனதில் நினைப்பதை சுருக்கமாக அதே சமயத்தில் ஆழமாக எழுதுவது என்பது ஒரு கலை. அந்தக் கலையின் உச்சம் என்பது அப்படி எழுதியதை எந்த இடத்தில் மிகச் சரியாக நிறுத்துவது என்பதும் கூடத்தான்.  அதை வாசு சிறப்பாக செய்திருக்கிறார். அந்த வகையில் வாசு ஒரு தேர்ந்த எழுத்தாளராக மிளிர்கிறார். வாழ்த்துகள்

முன்பே சொன்னது போல இது ஈழப் போரின் வரலாற்றை, இன்னல்களைப் பேசும் படைப்பில்லை. மாறாக இது ஒரு தனிப்பட்ட அகதி வாழ்க்கையின் அபத்தத்தை, பண்பாட்டு திரிபைச் சொல்லும் படைப்பு. இது அகதி என்றில்லாமல் கிராமங்களில் இருந்து பொருளாதார வாய்ப்புகளுக்காக நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த அனைவரும் ஏதோ ஓரிடத்தில் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும் படைப்பும் கூட.

மேலேலுந்த வாரியாக வாசிப்பவர்களுக்கு நூல் நேரடி மொழியில் இருப்பது போல தோன்றினாலும், தேர்ந்த வாசகர்கள்  இந்தப் படைப்பில் வரும் குறியீடுகளைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள். வாசு முருகவேலின் மூத்த அகதி வாசிக்கவேண்டிய ஒரு படைப்பு.

Book : மூத்த அகதி

Author: வாசு முருகவேல்

Publisher: எழுத்து பிரசுரம் (Zero Degree Publishing)

********









Thursday, August 18, 2022

அறத்துக்கு அப்பால் - அர்லாண்டோ சேந்தன்

 "அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்" புத்தகம் குறித்து அர்லாண்டோ சேந்தனின் விரிவான வாசிப்பனுபவம் (ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது) ...

****
சில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த உடனே உள்ளே இழுத்துக்கொள்ளும் அப்படியான எழுதும் கலையை கைவரப்பெற்றவர் எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர். அவரின் ஒரு வருட உழைப்பின் பலனாக, எழுதிய புத்தகம் தான் சமீபத்தில் வெளிவந்த இந்த அபுனைவு (Non-fiction) படைப்பு, ஆனால் ஆரம்பமே ஒரு த்ரில்லர் நாவலை வாசிக்க ஆரம்பிக்கிறோமா என்று நினைக்க வைக்கும் வேகம். மிக லாவகமாக வாசகனை புத்தகத்தோடு இறுக கட்டிவிடுகிறார். முதல் இரு அத்தியாயங்களை வாசித்த பிறகே முன்னுரை, அறிமுக உரையெல்லாம் வாசித்தேன்.
முதல் இரு அத்தியாங்கள் வெவ்வேறு பின்னனியில் சமூக ஊடகங்களில் நிகழும் குற்றச்சம்பவங்களை பற்றியது. அது எழுதப்பட்ட விதம் என் வாசிப்பு அனுபவத்தில் புதியது. முதல் சம்பவம் உச்சம் பெறும் இடத்தில் நிறுத்தி, அடுத்த சம்பவத்தை பற்றி ஆரம்பிக்கிறார். அடுத்த சம்பவத்தின் உச்சத்தில், முதல் சம்பவத்தின் தொடர்ச்சி வருகிறது. இந்த எழுத்துமுறை வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் சுவாரஸ்யம் குறையவில்லை.
நைஜீரிய தொழில்நுட்ப குற்றக் குழுக்கள் எப்படியெல்லாம் சமூக ஊடகங்களை வைத்து Social Engineering (சரியான நபர் போல் பேசி தகவல்களை திருடி ஏமாற்றவது) செய்து ஏமாற்றுகிறார்கள் என்று புட்டு புட்டு வைத்திருக்கிறார். அடுத்த அத்தியாயமே பெண்கள் சமூக ஊடகங்களில் எவ்வாறான கெடுபிடிகளையும் அருவருப்புகளையும் சந்திக்கிறார்கள் என்பது பற்றியது.
சமூக ஊடகங்களின் வழியே வேலை வாங்கி தருகிறோம் என்று ஏமாற்றும் கும்பல்களை பற்றிய அத்தியாயம் தமிழக இளையர்கள் வாசிக்க வேண்டிய பதிவு. சமூக ஊடகங்கள் இவ்வளவு இழிவான செயல்களுக்கு தான் பயன்படுகிறதா எனும் அயர்ச்சி வரும் போது, அவரே அதை ஆக்க பூர்வ பணிகளுக்கு பயன்படுத்துபவர்களை பற்றிய தனித்தனி அத்தியாயங்களாக பதிவு செய்திருக்கிறார்.
தமிழக பெண்களின் சமூக ஊடக அனுபவங்களை அவர்களிடமே கேட்டு எழுதிய அத்தியாயங்கள் அருமை. பொதுவாக ஆண்களே பெண்களுக்கும் சேர்த்து கருத்து சொல்வதை தான் நாம் அதிகம் பார்த்திருப்போம் அதை கவனமாக தவிர்த்திருக்கிறார்.
சமூக ஊடக வெளியில் இருக்கும் பெண்களின் பதிவுகளில் தமிழ் இணைய சமூகம் எவ்வளவு பிற்போக்கானது என்பதும், சமூக ஊடகங்களில் பெண்கள் மீது எவ்வளவு வெறிக்கொண்டு தாக்குதல் நடைபெறுகிறதென்றும் தெரிகிறது, நாமும் இதை பலமுறை பார்த்து கடந்திருப்போம், அது வேறு ஒருவருக்கு நிகழ்கிறது அதனால் பெரிதாக கண்டுகொள்வதில்லை, அதன் தாக்கம் அந்த பெண்களின் வாழ்க்கையில் எப்படி இருக்கிறது என்று ஒரு முறை ஏனும் யோசித்திருப்போமா என்று நினைத்த போது, இல்லை என்று தான் சொல்வேன்.
ஒவ்வொரு அத்தியாத்தை முடித்தவுடன், அது போன்ற விஷயம் நமது சமூக ஊடக பயணத்திலும் நிகழ்ந்திருக்கிறதே என்று தோன்றும், அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு நடந்து இருக்கிறதே என்று தோன்றும். அதனால் இந்த புத்தகத்தை இன்னும் நெருக்கமாக நம்மால் வாசிக்க முடிகிறது.
நேற்று இரவு வாசிக்க ஆரம்பித்து அதிகாலை 2 மணி வரை வாசித்துவிட்டு இன்று மாலை மீண்டும் ஆரம்பித்து இப்போது தான் முடித்தேன் கிட்டதிட்ட நான்கு மணி நேர வாசிப்பு. தமிழில் சமூக ஊடகங்களை பற்றி இப்படி ஒரு புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் சமூக ஊடக வெளியில் உலவும் அனைவரும் வாசிக்க வேண்டிய
அருமையான
நூல்.
****
நூல் குறித்து விரிவாக எழுதி பகிர்ந்தமைக்கு நன்றி சேந்தன் !!

Saturday, August 13, 2022

ஓலா(Ola cabs)- பயண அனுபவங்கள்

ஓலா-வில் ஓடிபி (OTP) எண் சொல்வதில் தாமதம். அதனால், பயணம் செய்தவர் ஓலா கார் டிரைவரால்  அடித்துக் கொலை என்றொரு செய்தியைச் சமீபத்தில்  பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.  எதற்கெல்லாம் கோபப்படுவது,  கொலை வரை போவது என்ற வரைமுறையெல்லாம் போய்விட்டது.

நானும் ஊரில்  ஓலா (Ola cabs) பயன்படுத்தி இருக்கிறேன். அதுவும் இந்தமுறை ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறை என்ற அளவில் அதிகமாக பயன்படுத்தினேன்.  இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம். நண்பர் சுரேஷ் கண்ணன் கூட தான் நீண்ட காலமாக ஷோ்ஆட்டோவில் பயணிப்பவன் எனச் சொல்லி தன்னுடைய அனுபவங்களைத் தொடர்ச்சியாக முகநூலில் பதிவிட்டு வருகிறார்.

என்னுடைய ஓலா அனுபவங்கள் ஊரில் கலவையாக இருந்தன. ஒரு ஓட்டுநர் இரவு 11 மணிக்கு  தான் தூங்காமல் இருக்க எனச் சொல்லி தனது சொந்த கதை பேசியபடி ஓட்டி வழியை கோட்டை விட்டுவிட்டார்.  அன்று வழிதவறி  ஊரெல்லாம் சுற்றிவிட்டு வீட்டுக்கு வரும் போது நள்ளிரவாகிவிட்டது. இத்தனைக்கும் உதவிக்கு கூகுள் இருந்தும் இந்த இலட்சணம். நேரமும், பணமும் விரயம்.

சிலர்  வண்டிக்கு பெட்டோல் போடனும்ங்க, சில்லறை மாத்தனும்ங்க என நமது அவசரம் தெரியாமல் வழியில் நிறுத்தி இம்சித்தார்கள். ஒருவர் நான் அவசரமாக ஒன்னுக்கு போகனும்ங்க என வண்டியை ஒரு புதரோரம் ஓரங்கட்டி நிறுத்தி விட்டு  என்னை அம்போ விட்டுவிட்டு போய்விட்டார்.

ஒரு நண்பரிடம் ஓலா ஆட்டோ 3 பேருக்குதான். நான்காவதாக சுண்டெலி போல ஒரு பிள்ளை ஏறினாலும் கூடுதல் கட்டணம் 50 ரூபாய் என கராராக வசூலித்து விட்டார் என என்னிடம் வந்து புலம்பினார்.

(குறிப்பு - எல்லா ஓலா ஓட்டுநர்களையும் குற்றம் சொல்வது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல)

Friday, August 12, 2022

வீரப்பனின் நட்பால் சிறைசென்ற அன்புராஜ்



வீரப்பன் நட்பால் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வந்திருக்கும்
அன்புராஜ்-ஐ சமூக ஊடகங்களின் வழியாக நான் கவனித்து வருகிறேன். கலை இலக்கியங்களின் வழியாக தனிமனித மாற்றங்கள் சாத்தியப்படும் என்பதற்கு அவர் தன்னையே உதாரணமாக காட்டுகிறார்.

அது மட்டுமல்லாமல், சிறைவாசிகள் குறித்தும் இந்தியச் சிறைத்துறையில் தேவைப்படும் அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் தனது அனுபவங்களின் வழியாக தொடர்ச்சியாக பேசி வருகிறார். இப்படி நமது அரசியல் சாசனம் வகுத்த சட்டதிட்டங்கள் எளிய பின்புலம் உடைய சிறைவாசிகளுக்கு தொடர்ந்து மறுக்கப்படுவது என்பது அநீதி. 

இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல்,  அக்கறையின்றி அசட்டையாக இருப்பது என்பது ஒரு பண்பட்ட சிவில் சமூகத்துக்கு கண்டிப்பாக அழகில்லை.  சிறைவாசிகளும் தேர்தலில் வாக்களிக்க உரிமை தரப்பட்டால் இந்த நிலைமை மாற வாய்ப்பு இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. 

அன்புராஜின் சமீபத்திய காணொளி ஒன்றை கீழே   இணைத்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது பாருங்கள்.


Sunday, August 7, 2022

பேரா.ஹாஜா கனி நேர்காணல் (Part-2) - முழு வடிவம்

பேரா.ஹாஜா கனியுடனான எனது கலகலப்பான நேர்காணலின் 2-வது பகுதியைக் கீழே இணைத்திருக்கிறேன்.  பாருங்கள்.




இந்தச் சந்திப்பில் பல சுவையான சம்பங்களுடன்  கனி தனது நண்பரும் பாடலாசிரியருமான கவிஞர் யுகபாரதியுடனான  ஒரு  நெகிழ்ச்சியான சம்பவத்தையும் நினைவு கூர்ந்திருக்கிறார். தவறவிடாதீர்கள்.

பேரா.ஹாஜா கனி நேர்காணல் (Part-2) - முன்னோட்டம்

நண்பர் பேரா.ஹாஜா கனியுடனான எனது நேர்காணலின் 2-வது பகுதி எங்கே ? எங்கே? என பலர் முகநூல் உள்பெட்டியைத் தட்டிவிட்டார்கள்.  அவர்களுக்காக அதன் 2 நிமிட முன்னோட்டத்தை ஒலி மேம்படுத்தி  இணைப்பில் தந்திருக்கிறேன். பாருங்கள்.

இந்த இரண்டாவது பகுதியில் அவருடைய அரசியல், பொது வாழ்க்கை, நட்புவட்டம் போன்ற பல கேள்விகளை முன்வைத்திருக்கிறேன். கலகலப்பான அந்தச் சந்திப்பின்  முழுமையான வடிவத்தை வரும் ஞாயிறு அன்று தருவேன். காத்திருங்கள்.