Wednesday, December 3, 2014

அணிலாடும் முன்றில் - பாட்டி

சமிபத்தில் பாடலாசிர் நா.முத்துக்குமார் எழுதிய 'அணிலாடும் முன்றில்' புத்தகம் படித்து முடித்தேன் (முன்றில் என்றால் முற்றம்). இது கவிதை புத்தகமோ அல்லது பூதமோ என நீஙகள் பயப்படத்தேவை இல்லை.  இது அவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

கூட்டு குடும்பங்கள் சிதைந்து வரும் அல்லது சிதைந்து விட்ட தமிழ் சூழலில்
அம்மா,அப்பா,மனைவி தாண்டி அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எனும் பல உறவுகளை நினைத்து நேசித்து  எழுதியுள்ள அருமையான நூல். இந்த புத்தகத்தை வாசிக்கும் போது ஏதோ ஒரு புள்ளியில் உங்கள் வாழ்க்கையை பொருத்தி பார்க்க தவறமாட்டீர்கள்.

நாம் எளிதாய் கடந்துபோகும் மற்ற கற்பனை கதைகளை விடவும் இந்த அசலான மனிதர்களை வாசிக்கையில் மனது நம் பால்ய நினைவுகளுக்கு சென்று திரும்புகின்றன. அந்த சுகானுபாவமே நம்மை மேலும் பல தூரம் பறத்தலுக்கான சக்தியையும் உத்வேகத்தையும் தரவல்லது. வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள்.

எனது  'அணிலாடும் முன்றில்' இதோ உங்களுக்காக.

மிக அதிகாலையில் வரும் தொலைபேசி  ஏனோ தேவையில்லாமல் ஒரு அவசரத்தை தாங்கிய தந்தியை நினைவுபடுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத் தாங்கிதாக இருந்தது அந்த அதிகாலை அழைப்பு.  அது என் பாட்டி காலமான செய்தி. வாழ்வில் ஒவ்வோரு உறவுகளும் ஏதோ ஒரு அனுபவத்தை, நினைவுகளை பாடங்களை நம்மில் விட்டுச்செல்ல தவறுவதில்லை.

கொஞ்சம் ப்லாஷ்பேக். பாட்டி பிரிட்டிஷ் காலத்தில் SSLC படித்தவர். அந்த காலத்தில் வந்த போஸ்ட் ஆபீஸ் வேலையை ஏற்றுக் கொள்ள வில்லை என பல சமயங்களில் சொல்ல கேட்டிருக்கிறேன்.

எனக்கு ஒன்பதாம்  வகுப்பில் இருந்து பள்ளிஇறுதி வரை தினமும்  பாட்டி வீட்டுக்குத்தான் முதல்  விஸிட் பிறகே மற்றவை. நகரத்தின் மையத்தில் இருந்த ஓட்டு வீடு. அது எப்போதும் எங்களுக்கு பாட்டி வீடே தவிர வேறில்லை. அந்த அளவுக்கு நெருக்கம்.

என் பாட்டனார் அரசு வக்கீலாக வேலை நிமித்தமாக பல ஊர்களை சுற்றி
கடைசில் சொந்த ஊரான திருவாரூரில் வந்து செட்டில் ஆனபோது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம்.

வீட்டை பார்க்கச் சென்ற நாள் ஒரு குடியரசு தினமோ அல்லது சுதந்திர தினமாகவோ இருக்ககூடும்.  என் வீட்டில் இருந்து போகும்போது சாலையோரம் தேசிய கொடி ஏற்‌றி இனிப்பு வழங்‌கி கொண்டிருந்தனர். அப்போது குத்‌திய தேசிய கொடி போல நெஞ்சில் இன்னும் பாட்டி வீட்டு நினைவுகள்.

எனது கிராம வாழ்க்கைக்கும் நகரத்துக்‌குமான இடைவெளியை முதலில் இட்டு நிரப்பியது அந்த வீடு. அது ரேடியோவுக்கும், டிவிக்கும்; சைக்கிளுக்கும்,TVS Champக்கும்;  அம்மிக்கும், மிக்‌ஸிக்குமான இடைவெளியாக இருக்கலாம்.

வங்கி, போஸ்ட்ஆபீஸ், தையல் கடை, காய்கறி மார்க்கெட் என வெளி விசயங்களை அங்குதான் பழகிக் கொண்டேன். ஆசிரியர் வீடுகள், பிரபலமான வக்கீல் வீடுகள், விளிம்பு நிலை மனிதர்கள் என சமூகத்தின் அனைத்து தளத்திலும் அறிமுகம் கிடைத்ததும் அங்கு தான். சாமி, நாள், நட்சத்திரம்,விரதம் என சகலமும் பரிச்சமானது கூட அங்கேதான். அதே நேரத்தில் படிப்பிற்கான முக்கியத்துவத்தை திரும்ப சொல்லி சொல்லி மனத்தில் ஆழப் படிய வைத்தவர்.

பாட்டி,தாத்தா என இருவருமே அங்கு ஒரு ஒழுங்கை கடைபிடித்து வந்தனர்.  எந்த ஒரு குளிரோ,மழையோ புயலோ இருந்ததாலும் அதிகாலை நாலரை மணிக்கே வீடு விழித்துக் கொள்ளும்.  பாட்டி  அதிகாலையில் எழுந்தவுடன் சாமி அறை பெருக்கி சுத்தம் செய்து குளித்து சாமி விக்கிரகங்களுக்கு அபிஷேகம் , பூஜை  முடித்து பின்பு சாமி பாடல்களை உனுறுகிப் பாடுவார். சமைப்பதிலும் சமர்த்தர் அவர். பண்டங்கள், சாப்பாடு என அவரது கை பக்குவம் மிகஅலாதி.  ஒரு ஒப்பீட்டுக்கு கூட யாரையும் துணைக்கழைக்க இயலாத சுவை அது.

கற்றதில் சில:  அசராத உழைப்பு, சிக்கனம், பண மேலாண்மை, பொருட்களின் தரத்தில் சமரசம் செய்யாமை எல்லாவற்றை விட உறவுகளுக்கு கொடுத்து  உதவும் மனம்.

தொட்டால் பூ மலருமா தெரியாது, ஆனால் அவர் பீரோவை தொட்டால் நிச்சயம் நோட்டு வரும். கேட்காமலே எங்கேயோ சேர்த்து வைத்த பணத்தை தேவைக்கு எடுத்து பாரபட்சமின்றி தந்து உதவும் உத்தம உள்ளம் கொண்டவர்.

அவரிடம் ஒரு தெய்விகத் தன்மையைத் தரிசிக்க முடிந்தது. அவர் அன்பு பாசாங்கற்றது. மற்ற கதை சொல்லும் பாட்டிகளை போலின்றி அவர் மிகச் சிறந்த ஆளுமையாகவே எனக்குள் பரிமளிக்கிறார். அது மூன்று தலைமுறைகளுக்கு  அறிவுரையும்,ஆலோசனையும் தந்து வழிநடத்திய ஆளுமை.

பல வருடங்களுக்கு முன்பு  அவசர தேவையாக எனது பல் அறுவை சிகிச்சைக்கு சில ஆயிரங்களை ஐம்பது, நூறு ரூபாய் நோட்டுகளாக  தந்தார். மருத்துவமனை செல்லும் வழி முழுக்க அவர் பணத்தை சுருட்டி தந்த மஞ்சள் பை கனத்துக் கொண்டேயிருந்தது

அங்கே நீ
இறுதியாய்
இருளில் புதைந்து கொள்ள
இங்கே நான்
புதைந்து அழ
இருள் தேடினேன்!
..

இந்த தலைமுறையிலும் என் போன்ற பல பாக்கியசாலி பேரன்களும்,பேத்திகளும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்..


No comments:

Post a Comment