Sunday, August 30, 2020

வனநாயகன் குறித்து-16 (கார்ப்ரேட்டின் மற்றொரு முகம்)

தமிழ்ப்படம் பார்க்கும் 1000 பேரில் ஒருவர் வாசிப்பவராக இருந்தால் கூட ஆண்டுதோறும் விற்பனையாகும் தமிழ்ப் புத்தகங்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்  என எழுத்தாள நண்பர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார்.
அந்த 1000-க்கு 1 எனும் கணக்கெல்லாம் எந்த அளவு சாத்தியமோ தெரியவில்லை. ஆனால்,  கருத்துகளைப் பகிர்வதில் கண்டிப்பாக வாசகர்களைக் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை.  கொரோனா காலத்திலும் தொடர்ச்சியாகப்  பல வாசகர் கடிதங்கள், மதிப்புரைகள் எழுதியிருக்கிறார்கள்.
நேற்று "வனநாயகன்-மலேசிய நாட்கள்" குறித்து goodreads  தளத்தில் பிரியதரிசினி எழுதிய ஒரு மதிப்புரை கூட கண்ணில் பட்டது...


எப்பொழுதுமே மனிதன் தன்னை மற்றொன்றுடன் பொருத்தி பார்த்து தான் தன் சூழலின் ஆழத்தை உணருகிறான். நாவலில் சுதாவும் தான் வேலை செய்யும் நாடான
மலேஷியாவில் சொல்லப்படும் பழங்கதையான வனநாயகன் என்று அழைக்கப்படும் குரங்கின் நிலையுடன் தன்னை ஏமாற்றியவர்களின் செயல்களால் சொல்லமுடியா அவமானத்தை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு ஒப்பீட்டு அளவில் மனதை தேற்றி கொண்டாலும் கிடைத்த குறுகிய காலத்தில் தனக்கான நியாயத்தைத் தேடுபவனுக்குக் கிடைத்தது கார்ப்ரேட்டின் மற்றொரு முகம். 


சுதாவின் வழியே மலேஷியாவின் முக்கிய இடங்களும், அவர்களின் வாழ்க்கை முறையும். மனிதர்களின் குணங்களும் என்று புதிய சூழலை கண் முன் கொண்டு வருகிறது. கதையின் மென்நகர்வு அதற்கு ஏற்ப அமைந்ததால் இயல்பான சம்பவங்களாக நடந்தேறுகிறது.

தற்பொழுது இந்த நாவலை படிக்கும் போது ஒரு தலைமுறை இடைவெளியை

துல்லியமாக உணரமுடிகிறது. கடந்தக் காலத்தை திரும்பி பார்க்கும் நிகழ்வாகவே முற்றிலும் அமைந்தது எதிர்பாராமல் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். அதுவும் யாஹூ சாட் பற்றி எல்லாம் படிக்கும் போது ஞாபகங்களைத் தட்டி எழுப்பிவிடுகிறது.
ஒரு வருடம் மலேஷியாவில் இருந்த சுதாவிற்கு முடியும் காலம் கசப்பாகவே அமைந்தாலும் பல மனிதர்களுடனான தொடர்பு வாழ்ந்த காலத்தின் எச்சமாகவே மனதில் நின்றுவிடுகிறது. காதல் என்று நினைப்பது காதலல்ல அது உணரும் போது எதிரில் இருப்பது தான் காதல் என்று பத்மாவின் மூலம் அமைந்த நகர்வு எதார்த்தம்.

நாம் அனைவருமே எதார்த்தவாதிகள் தான் ஆனால் நாவல் வாசிக்கும் போது நம்மையும் மீறி ஒரு ஹீரோயிசத்தை எதிர்பார்க்கும் மனதை அடக்கத் தெரியாதவர்களும் என்பது உண்மை. சுதாவிற்கு ஏற்பட்ட மறைமுகத் துரோகத்திற்கு அவன் எதாவது அதிரடி செய்வானோ என்று எதிர்பார்த்துக் கொண்டே கடைசிவரை வந்ததும் நம் மனம் தான்.

வாடிக்கையாளர்களின் தரவுகள் ஒவ்வொன்றும் பொக்கிஷம் தேவைப்படுபவர்களுக்கு. இதில் சம்பத் என்ற கதாபாத்திரம் கார்ப்ரேட்டின் ஒரு முகம். அது இல்லாத இடம் இல்லை. தன்னை உயர்த்த கீழே இருப்பதின் மேல் கால் மட்டும் தான் வைக்க வேண்டும் மனதை வைத்தால் முதல் பலி அவனாகத்தான் போவான்.

சாரா மாதிரி பத்திரிக்கையாளர்களின் பிரசன்னமே நியாயத்தின் வாழ்விற்காக எதிர்பார்த்திற்கும் மக்களுக்கு ஒரு பலத்தை அளிக்கிறது.

பலிகளைக் கொண்டு தான் கார்ப்ரேட் வளர்கிறது. உண்மைகள் வெளிவந்த பிறகு அதற்கான அழிவு என்று சொல்வது முடிவல்ல மற்றொரு தொடக்கத்தின் புள்ளி அது.

..
கிழக்கு பதிப்பக வெளியீடான வனநாயகன் புத்தகமாகவும், கிண்டிலிலும் கிடைக்கிறது.  இணைப்பு விவரங்கள்.
https://dialforbooks.in/product/9788184936773_/

https://www.amazon.in/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-VanaNayagan-Malaysia-Naatkal-ebook/dp/B06X9VTR71



Monday, August 24, 2020

பாலுமகேந்திராவின் வீடு

32 ஆண்டுகளுக்கு முன் சென்னை மாநகரில் ஒரு  சாதாரண குடும்பம் வீடு கட்டுவதற்காக எத்தனைத் துயரங்களைச் சந்திக்கிறது என்பதைப் பேசும் படம் பாலுமகேந்திராவின் "வீடு". 

வீடு படத்தைச்  சின்ன வயதில் கறுப்பு வெள்ளையாக தூர்தசனில் பார்த்தது. நேற்று மறுபடியும் பார்த்தேன். 

அறியாத வயதில் பார்த்த போது படம் கொஞ்சம் மெதுவாக நகர்வதாக உணர்ந்திருந்தேன். அதைத் தவிர படம் குறித்த வேறு எந்த நினைவும் இருந்திருக்கவில்லை. அதனால்,  புதிய படம் பார்க்கும் அதே ஆர்வத்துடனே  நேற்று பார்த்தேன். வீட்டில் பார்ப்பதால் தேவையற்ற காட்சிகளை வலிந்து ஓட்டும் வசதி இருந்தும் ஏனோ ஒரு வினாடி கூட அப்படிச் செய்ய தோன்றவில்லை.

இருந்தாலும், சில காட்சிகளை ஒருங்கிணைத்து ஒரே காட்சியாகச் செய்திருக்கலாமோ எனும் எண்ணம் ஓரிரு இடங்களில் தோன்றியதை மறைக்க வேண்டியதில்லை.

முன்பு, முற்றிலும் மனித உழைப்பைக் கொண்டு அஸ்திவாரம் என்னும் கடைக்கால் போடுவதில் இருந்து பக்கத்தில் நின்று சொந்த வீடு கட்டும்
பழக்கம் இன்று வழக்கொழிந்து வருகிறது. பணம் இருந்தால்  உடனே  கையில் வீடு எனும் நிலை இருப்பதால்  வீட்டைக் கட்டிப்பார்.. பழமொழி பெரும்பாலும் இன்று செல்லுபடியாவதில்லை.

அதனால், வீடு கட்டுவதன் சிரமங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும்,
படம் ஒட்டு மொத்தமாக 30 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னையின் மத்தியதர வாழ்வை அழகியலோடு ஒரு சொட்டாக நம் கண் முன்னால் நிறுத்துகிறது.

வீட்டில் அக்காவுக்குப் பிறந்தநாள் எனும்போது மதியம் பாயசமும், மாலை வடையும் வேணும் எனக் கேட்டு வாங்கிக்கொள்ளும் தங்கை.
பிறந்தநாளுக்குத் தாத்தாவின் காலில் விழுந்து ஆசீர்வாதத்துடன் 1 ரூபாய் பெற்றுக் கொள்ளும் நாயகி.  அவள் கடன் கேட்ட இடத்தில் கிடைக்காத எரிச்சலில் வீட்டுக்கு வரும் போது தங்கையிடம் காட்டும் கோபம். என குடும்ப நிகழ்வுகளை  மிக இயல்பாக செயற்கைத்தனங்கள் இன்றி அழகாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா.

உண்மையில் அன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஏறக்குறைய  ஒரே பொருளாதார நிலையில் இருந்தனர். உறவுகள் மகிழ்ச்சியை ஒன்றாக அனுபவித்தனர். துன்பத்தில் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறினர். அதனால் அன்று உறவுகள் பலப்பட்டன. வளர்ந்தன.  என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

அதுபோல, பணத்தால் சக பெண் ஊழியரைப் படுக்கைக்கு இழுக்க நினைக்கும் அலுவலக உயர் அதிகாரி ஒருபுறம் என்றால் சித்தாளைத் தவறான கண்ணோட்டத்தில் நோக்கும் மேஸ்திரி என வாழ்வின் இரு புறங்களையும் காட்டும் நேர்த்தி என படம் அழகான யதார்த்தமான சிறுகதையாகத்  திரையில் விரிகிறது. இறுதிக் காட்சி கூட வலிந்து திணித்தது போல இல்லாமல் இயல்பாக வந்திருக்கிறது. பாடல்கள் இல்லாத படத்துக்கு இளையராஜாவின் இசை பக்க பலமாக இருக்கிறது.

முக்கியமாக, படத்துக்கு மிகப்பெரிய பலம் அர்ச்சனாவும், அவருடைய தாத்தாவாக வரும் சொக்கலிங்க பாகவதரும். அதை நடிப்பு என்பதை விட அந்தப் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள் எனச் சொன்னால் அது தேய்வழக்காகவே இருக்கும். அதிலும் குறிப்பாக, வீட்டுக்குக் கடைக்கால் போடும் நிகழ்ச்சியில் அர்சானாவை முன்னிருத்திச் சடங்கு செய்யும் காட்சி அதில் அவருடைய முகத்தில் தெறிக்கும் பெருமையும், கம்பீரமும் படம் பார்க்கும் நமக்கும் ஒட்டிக்கொள்கிறது. இப்போது எங்கே இருக்கிறீர்கள் அர்ச்சனா ?

இன்னமும் 30 ஆண்டுகள் கழித்து அடுத்த தலைமுறையினர் பார்த்தாலும் (தமிழ் வசனங்களுக்கு ஆங்கில சப்டைட்டில் தேவைப்படலாம்) அவர்களையும் வியக்க வைக்கும் ஒரு தரமான படமாக "வீடு" கண்டிப்பாக இருக்கும்.

Thursday, August 20, 2020

தமிழ் என்ன தாடியா, வளர்க்க ? - கவிஞர் வாலி

வாலி- இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நேற்று பார்த்தேன். வாலி வழக்கமான ஓர் இளைஞனுக்கான உற்சாகத்தோடும்  இயல்பான நகைச்சுவையுடனும் பேசினார்.

அதில், கேட்கப்பட்ட  முக்கியமான ஒரு கேள்வி - "சினிமாவில் பாடல் எழுதி மன நிறைவு அடையாமல் தான் வெளியில் புத்தகங்கள் எழுதுகிறீர்களா ? "

அதை இல்லை எனக் கண்டிப்பாக மறுத்தவர்,  தான் சினிமாவுக்குத் தமிழ் வளர்க்க வரவில்லை என்றவர் சற்று இடைவெளி விட்டு  'தமிழ் என்ன தாடியா, வளர்க்க ?' எனக்  கேட்டு குறும்பாகச்  சிரித்தார்.


அதைத் தொடர்ந்து பேசியவர் தான் ஒரு சினிமா கவிஞராக மட்டும் மக்கள் நினைவில் வைத்திருப்பதை விரும்பவில்லை என்றும் தானும் கண்ணதாசன் போல ஓர் இலக்கியவாதியாகவும் அறியப்பட வேண்டும் என விரும்புவதாகச் சொன்னார்.  

அதாவது, திரைத்துறையைத் தாண்டி வெளியில் இலக்கியம் எழுதினால் தான் நல்ல பெயர் வரும். இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் ஓர்
அந்தஸ்து பெற முடியும். அதைப் பெறத்தான் தான் புத்தகங்கள் எழுதுவதாக வெளிப்படையாகச் சொன்னார்.

உண்மையில் தமிழில் இலக்கியவாதிகள் என அறியப்படும் கூட்டம் மிகச் சிறியது.  அதுவும் யாராலும் பெரிதாக கண்டு கொள்ளப்படாத ஒன்று என்பார்கள்.  ஆனால்,  அதில் இணைய வாலி போன்ற புகழ் பெற்ற கவிஞர்களே பிரயத்தனப்பட்டிருப்பது வியப்பே.

யூ-டியூப் இணைப்பு