Wednesday, August 22, 2018

விமானத்தில் பொழுதுபோக்கு

விமானப் பயணங்களில் பயணியர்களை மகிழ்விக்கும் வகையில்
அளிக்கப்படும் பொழுதுபோக்கு  (Inflight Entertainment)  சமீப காலங்களில் வெகுவாக முன்னேறி இருக்கிறது.

ஆமாம். 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்தபடியே  வீட்டில்
இருக்கும் மனைவி, பிள்ளைகளுடன் ஜாலியாக பேஸ் டைம் செய்யமுடிகிறது. அதுவும் இலவசமாக என்றால் நம்பமுடிகிறதா ?   அதுபோல, இந்த இலவச WiFi வசதி (குறிப்பிட்ட நேரத்திற்கு) இருப்பதால் விமானத்தில்  இருந்தபடியே அலுவலக வேலைகளைக் கூட  முடித்துவிட முடிகிறது.

அதுபோல பெரும்பாலான சர்வதேச விமானங்களில் பயணிகள் படம் பார்க்க வசதியாக முன் இருக்கையில் தொடுதிரை பொருத்திவிட்டார்கள். அதனால், இனி  சின்ன செங்கல் போன்ற ரிமோட் கண்ரோலோடு அல்லாட வேண்டியதில்லை. கூடவே  ஹாலிவூட் திரைப்படங்களோடு  பல புதிய பிராந்தியப் படங்களும் கொட்டிக்கிடக்கின்றன. சிறுவர்களுக்கென பிரத்தியோகமான படங்கள், டிவி சீரியல்கள், கேம்ஸ்களும் வரிசை கட்டி நிற்கின்றன.  அதுபோல வயதானவர்களையும் இசைப் பிரியர்களையும் திருப்தி செய்ய  லைவ் டிவியோடு பாரம்பரிய மற்றும்  சமகால டிஜிட்டல்  இசையும் வழிந்தோடுகிறது.

இப்படியெல்லாம் செய்து விமானப் பயணங்களில் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கும் சொற்பமானவர்களையும் தடுமாறச் செய்து
அந்தப் பக்கம் இழுத்துவிடுவார்கள் போலிருக்கிறது.

#விமானப்பயணம்



Monday, August 13, 2018

சென்னையில் ஜிபிஎஸ்

சென்னை போன்ற பெருநகரங்களின் போக்குவரத்து நெரிசலில் கார், பைக் ஓட்டுவது என்பது ஒரு தனிக் கலை. சிறுநகரங்களில் வண்டிகளை ஓட்டிப் பழகியவர்கள் ஆரம்பத்தில் கண்டிப்பாக திணறிதான் போவார்கள்.

குறுகிய சாலைகளில் வகை தொகையின்றி விரையும் வாகனங்கள் ,
கொளுத்தும் வெயிலில் சிக்னல்கள் என நெரிசலான போக்குவரத்தில் ஒரு இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

அதனால் முன்பெல்லாம் சென்னையை நன்றாக தெரிந்தவர்கள் தான்
டாக்சி, ஆட்டோ டிரைவர்களாக இருந்தார்கள். ஆனால்,  இப்போது
சென்னையில் ஜிபிஎஸின் கை ஓங்கியிருக்கிறது. பலர்
ஜிபிஎஸ் கையில் இருக்கும் தைரியத்தில் நகரில் பலர் டாக்ஸி டிரைவர்களாகி விட்டார்கள். குறிப்பாக ஓலா டிரைவர்கள். ஓலா வண்டி ஓட்ட  தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து புதிதாக வேலைக்கு வந்திருக்கும் டிரைவர்கள் ஜிபிஎஸ்ஐ மட்டுமே நம்பியே பிழைப்பை ஓட்டுகிறார்கள்.

இவர்களில் பலருக்கு சென்னையின் முக்கிய இடங்கள், பிரபலங்களின் வீடுகள் ஏன் கிழக்கு மேற்கு கூட சரியாக தெரிவதில்லை. ஜிபிஎஸ் இருக்கும் அலட்சியத்தால் புதிதாக வந்திருக்கும் நகரை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை போல. அதனால் லோக்கல் நாலேஜ் எனும் உள்ளூர் ஞானம் அறவே இல்லாமல் திணறுகிறார்கள்.

இந்தியாவின் முகவரிகள் இன்னமும் முற்றிலும் துல்லியமாக ஜியோ கோட் (Geocoding) செய்யப்படவில்லை. (ஜியோ கோடிங் என்பது நம்முடைய இருப்பிட முகவரியை கணினி புரிந்துகொள்ளும் வகையில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளாக (latitude and longitude)  மாற்றுவது). அதனால் இப்போது ஒரு முகவரியை மிகச்சரியாக ஜிபிஎஸ்-ல் கண்டுபிடிப்பது என்பது லாட்டரி அடிப்பது போல் குருட்டு அதிஷ்டம் தான். நம்மூர் முற்றிலுமாக டிஜிட்டாலாகும் போது (It is a transition period) இந்தக் குழப்பங்கள் களையப்படும். அதுவரை நாம் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

லேண்ட் மார்க் போன்ற அடையாளங்களை வைத்து போகவேண்டிய இடங்களைக்  கண்டுபிடித்து பழக்கப்பட்ட நம்மில் பலருக்கு இதெல்லாம் புது அனுபவம்.  கூடவே பழைய எண், புதிய எண் குழப்பங்கள் வேறு.  என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த 15 வருடங்களாக ஒவ்வொரு வருடமும்  சென்னை வரும்போது திருவல்லிக்கேணி காசிவிநாயகா மெஸ்-க்கு போய் சாப்பிட்டுவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.  ஆனால்,  என்னை யாராவது தெருவில்  நிறுத்தி  'காசிவிநாயகா மெஸ் அட்ரசைச் சொல்லு' என சட்டையைப் பிடித்தால் திருதிருவென முழிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். சொல்லுங்கள் !? :)

#கஸ்டமர்_கஷ்டங்கள்

Thursday, August 9, 2018

கம்யூனிசம்- ஒரு பார்வை

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள்.  ஆனால், கம்யூனிசம் இல்லை
என ஒருமுறை ஆனந்தவிகடனில் மதன் எழுதியதை வாசித்ததாக நினைவு.

அதிலிருந்து கம்யூனிசம் (பொதுவுடைமை) தொடர்பான ஒரு விரிவான புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன். ஆனால், நூறு பக்கங்களில் மேலெலுந்தவாரியாக கம்யூனிசம் குறித்து பேசும் சிறிய புத்தகம்
தான் கிடைத்தது.

இது ஐரோப்பாவில் முதலில்  கம்யூனிசம் எனும் சிந்தனை எப்படி  உருவாகி ஒரு தத்துவமாக நிலைபெற்றது. அது பின் அந்தத் தத்துவம் எப்படி ஒரு மக்கள் இயக்கமாக மாறி இரஸ்யாவில் அரசமைத்தது. பின் அங்கிருந்து எப்படி மற்ற நாடுகளுக்கு பரவியது போன்ற வரலாற்று விசயங்களைப் பேசுகிறது. புத்தகத்தில் இருந்து .....

நாம் கூட்டாக  வீழ்வதில்லை  (we don't collectively  fail) அல்லது ஒன்றுபட்டால்
உண்டுவாழ்வு எனும் அரிஸ்டாட்டிலின் தத்துவத்தில் தொடங்கிய அந்த
விதை ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில்
வளர்த்தெடுக்கப்படுகிறது. 

பின்  முதலாளி- பாட்டாளிகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி முதலாளிவத்தை ஓழிக்க  காரல் மார்க்சு, பிரெட்ரிக் எங்கெல்சால் (Friedrich Engels) ஆகியோரால் மார்க்சியம் முன்மொழியப்படுகிறது. 

அதன்பின் 1917ல்  மக்கள் புரட்சி மூழம் ரஸ்யாவின் ஜார் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியினை ஓழித்த லெனின் தலைமையில் உலகின் முதல் கம்யூனிஸ்ட் நாடாக ஒன்றிணைக்கப்பட்ட சோவியத் ஒன்றியம் ( USSR ) உருவாகிறது.

பொதுவுடமை (Communism) சில நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
போல இந்தக் காலகட்டத்தில் பல நாடுகளில் சமூகவுடைமை (Socialism) ஏற்றுக்கொள்ளப்படுகிறது

இரஸ்யாவில் பொதுவுடமை தத்துவம் அரசமைக்கும் போது பல சீர்த்திருத்தங்கள் முன்மொழியப்படுகின்றன. மார்க்சியத்தில் இருந்து தழுவி லெனின் நிலைநிறுத்திய கொள்கைகள் பின் நாளில் "லெனினிசம்" (Marxism–Leninism) என்று பிரபலமாகிறது

கம்யூனிசம் எனும் கொள்கை நிலைப்பாடு நிர்வாகம், பெருளாதாரம் போன்றவற்றிற்காக பல மாறுதல்களைப் பெறுகிறது. அந்த மாறுதல்களுடன் இரஸ்யாவில் தொடங்கி  சிறிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள், வியட்நாம், சீனா, கியூபா, வட கொரியா என பல நாடுகளுக்கு காட்டுத்தீயாகப் பரவுகிறது.

இப்படி பெருவாரியான மக்கள் ஆதரவுடன் அரசமைத்த கம்யூனிச அரசாங்கங்கள் செய்த பல குழறுபடிகளால் மக்கள் செல்வாக்கை இழந்து பலமிழந்துக் கொண்டிருந்தச் சமயத்தில் 1989ன் இறுதியில் கிழக்கு ஜெர்மனியையும் (கம்யூனிஸ்ட்), மேற்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் மக்களால் தகர்த்தெரியப்படுகிறது.

அந்தச் சுவரின் வீழ்ச்சிக்குப் பின் படிபடியாக அதிகாரமிழந்து  1991ல் சோவியத் யூனியன் ("USSR")  சிதறுண்டது நாம் அனைவரும் அறிந்த வரலாறு.

உலக அரசாங்கங்கள்-கம்யூனிசம் சூ வெண்டர் ஹூக் (Sue Vander Hook)
Title-Communism (Exploring World Governments)-Sue Vander Hook
  • ISBN-13: 978-1617147890
  • Publisher: Essential Library (January 1, 2011)

Thursday, August 2, 2018

மை இயர் ஆஃப் மீட்ஸ் (My Year of Meats) - ரூத் ஓஸ்ஸ்கி (Ruth Ozeki)

 உலகம் முழுவதும் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மாமிசம் போன்ற தொழில்களில் பரவலாக நடக்கும் முறைகேடான சர்ச்சைக்குரிய விசயங்கள் பொதுவாக வெளிப்படையாக பேசப்படுவதில்லை. அது
குறித்து எழுதப்பட்ட புனைவுகளும் குறைவு என்றே நினைக்கிறேன்.

அந்த விதத்தில் நான் சமீபத்தில் படித்த புத்தகம் "மை இயர் ஆஃப் மீட்ஸ்"
(My Year of Meats) "மாமிசத்துடன் எனது ஒரு வருட வாழ்க்கை". எழுதியவர் ரூத் ஓஸ்ஸ்கி (Ruth Ozeki). முதல் பதிப்பு 1998.  இரண்டு ஜப்பானிய  பெண்களின் பார்வையில் சொல்லப்படுவதாக எழுதப்பட்ட கதை. ஒருவர் ஜப்பானில்
வாழும்  இளம்  பெண். அவர் குழந்தையின்மையால் கணவனால் கொடுமைப்படுத்தபட்டு அலைகழிக்கப்படுகிறார். இன்னொருவர்
ஜப்பானிய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த  அமெரிக்க இளம்பெண். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர். அவர் தனது வேலையில் பல
பிரச்சனைகளையும் சவால்களையும்  எதிர்கொள்கிறார்.
ஒருவருட காலகட்டத்தில் நடக்கும் இந்தக் கதையின் இறுதியில் இரு பெண்களும் ஒரு புள்ளியில் சந்திப்பதாக கதை முடிகிறது.

கதையில் மனைவியை வெறும்  பிள்ளை பெறும் எந்திரமாக நினைக்கும் படித்த கணவன். அது நடக்காது எனத் தெரிந்தவுடன் அவன் செய்யும் பாலியல் வன்முறைகள் போன்ற விசயங்கள் நேர்த்தியாக வந்திருக்கிறது.  அதுபோல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரின் வழியாக அமெரிக்காவின் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மாமிசம் போன்ற தொழிலில் நடக்கும்
பல முறைகேடான சர்ச்சைக்குரிய விசயங்களை அழுத்தமாகவே பேசியிருக்கிறார்.

Diethylstilbestrol (DES)  எனும் செயற்கை எஸ்ட்ரோஜன் கலப்பால் இயற்கையான
மனித ஹார்மோன்கள் கெடுவது. அதன் தொடர்ச்சியாக சிறுபிள்ளைகள் பூப்படைவது போன்றவற்றைத் தொட்டிருக்கிறார்.

எழுதியது பெண் எழுத்தாளர் என்பதால் இரண்டு பெண்களின் மனஓட்டத்தையும் அழகாக படம்பிடித்திருப்பதாக நினைக்கிறேன்.
வாசிக்கையில் பல இடங்களில் தொய்வு இருப்பது போல தோன்றினாலும் வாசிக்கலாம். மோசமில்லை. இல்லை என்னைப்போல ஆடியோவாகவும் கேட்கலாம்.

எழுத்தாளர் ரூத் ஓஸ்ஸ்கி சமூகம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், உலகளாவிய கலாச்சாரத்துடன் தொடர்புடைய கருப்பொருள்களை
மையப்படுத்தி எழுதிவருபவர். எழுதப்பட்ட காலகட்டத்தை ஒப்பிடும்
போது நாவல் பேசும் விசயங்கள் பழசாக தெரிந்தாலும் இன்றும்
நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு அவசியம் தேவை என்றே நினைக்கிறேன்.

#மை_இயர்_ஆஃப்மீட்ஸ்