Wednesday, January 24, 2018

அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டுமா?

டீசல் விலை உயர்வு, பராமரிப்புச் செலவு எனப் பல காரணங்களைச் சொல்லி அரசு பேருந்துக் கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது. அதைக் கண்டித்து தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடப்பதாக அறிகிறேன்.
அதுகுறித்து..

கடந்த டிசம்பரில்  அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு  பல கோடிகள் (தொகை சரியாக நினைவில் இல்லை)  நட்டம் என்ற தகவலை  செய்தித்தாளில் வாசித்தேன்.  அன்று மாலையே எனக்கு சென்னையில் அரசு பேருந்தில் போகக் கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

அன்று பேருந்தில் அதிகக் கூட்டம் இல்லை. பின் சீட்டில் அமர்ந்திருந்த
நடத்துனர் சுறுசுறுப்பான இளைஞராக தெரிந்தார். சொந்த ஊர் மதுரை பக்கம் என அறிமுகம் செய்துகொண்டார். அவரிடம் பேச்சு கொடுத்தபடி நட்டக் கணக்குப் பற்றி விசாரித்தேன். அவர் சொன்னக் காரணங்கள் அரசாங்கம் சொல்வது போல் இல்லாமல் வேறு மாதிரியாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை

*துறையின் உயர் அதிகாரிகள் பொருத்தமில்லாமல் அதிக சம்பளம் பெறுகிறார்கள்

*துறையில் ஊழல் மலிந்திருக்கிறது. (எ.கா) பேருந்துகளுக்கு போடப்படுவ
தாகச் சொல்லப்படும் டீசல் போன்ற எரிபொருள்களின் கணிசமான அளவு வேறெங்கோ மடை மாற்றப்படுகிறது.

*பேருந்துகளின் பராமரிப்பைத் திட்டமிட்டு நிராகரித்து, அதன் ஆயுளைக் குறைக்கிறார்கள். அதன் மூலம் புதிய பேருந்துகள் வாங்குவதை
மறைமுகமாக ஊக்குவித்து அதிலும் வருமானம் பார்க்கிறார்கள்.

*இது பேருந்துகளை தனியார் மயமாக்கும் ஒரு முயற்சி

இப்படி பல காரணங்களை அடுக்கியவர் , கடைசியாக '  ஊரூ பூரா ஓடுற ஷேர் ஆட்டோ, கேப்ல பாதி யாரோடதுன்னு நீங்க நினைக்கிறீங்க ??'  என
அதிரடியாக என்னைக் கேட்டு முடித்துக் கொண்டார்.

இப்படி அரசுத் துறை என்றால் மெத்தனம், நிர்வாகத் திறமையின்மை, சீர்கேடு எனும் நிலை முற்றிலுமாக மாறினால் கட்டணஉயர்வில்லாமல் துறையை சிறப்பாக நடத்த வாய்ப்பிருக்கிறது ?

#தமிழ்நாடு2017

Saturday, January 20, 2018

திருடன் மணியன்பிள்ளை - ஜி. ஆர். இந்துகோபன்

"திருடன் மணியன்பிள்ளை"  (மலையாளத்தில் இருந்து  மொழிபெயர்ப்பு
செய்யப்பட்டது) வாசித்துக் கொண்டிருக்கிறேன். அங்கே திருட்டு, இங்கே திருட்டு எனக் கேட்டு, படித்து எளிதாக கடந்துபோகும் நாம்  ஒரு திருடனின் பார்வையில் இருந்து உலகைப் பார்ப்பது,  அவனுடைய
அந்தரங்கத்தை அறிந்து கொள்வது புதிய அனுபவமாயிருக்கிறது.

திருடனின் வாழ்க்கையில் அப்படி என்ன இருக்கும்
என்று கேட்பவர்களுக்காக....  (நூலில் இருந்து)

//
லாட்டரிச் சீட்டு கிறுக்கன்களைப் போல்தான் திருடன்களும். லாட்டரியில்
ஆபத்தில்லை. இதில் இருக்கிறது
...
பொற்குவியலைக் கனவு கண்டு திரியும் பித்தன்தான் திருடன். இந்த உலகத்திலுள்ள மிகப் பெரிய செல்வந்தனின்  தங்கமும் பொருளும் தனக்காகவே காத்திருப்பதாக அவன் நினைத்துக் கொண்டிருப்பான். ஒவ்வோரு திருட்டையும் நடத்தி முடிக்கும்போதெல்லாம் அவனுக்கு
ஏமாற்றமாகவே இருக்கும்...
//

நூலில் திருடனின் மனைவி குறித்த சமூகத்தின் பார்வை, போலீஸ் அத்துமீறல், அதிகார வரம்புமீறல் என பல சாட்டைகளை சமூகத்தின் மீது சொடுக்குகிறார். அதுபோல நிறைய சம்பவங்களை அவர் நகைச்சுவையாக கடந்துபோனாலும் அதன் உள்ளூடாக மெல்லிய சோகமும் இருப்பதாகவே உணர்கிறேன்.

"திருடன் மணியன்பிள்ளை"  பற்றி பலர் எழுதிவிட்டார்கள். அதனால், விரிவான கருத்துகளை பதிவிடப் போவதில்லை. ஆனால்,  வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் வாசியுங்கள்.

மூலம்: ஜி. ஆர். இந்துகோபன்
தமிழில் மொழிபெயர்ப்பு: குளச்சல் மு. யூசுப்
வெளியீடு - காலச்சுவடு
இணைய முகவரி - https://ta.wikipedia.org/s/4tg9

Monday, January 15, 2018

1000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மூதூரின் வரலாறு

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓர் ஊருக்கு வருகிறார்.  அவருடையக்  காரையும் சேர்த்து மொத்தமாக 3 கார்கள்
ஊருக்குள் வருகின்றன. அவர்  கூட்டம் முடிந்தபின் பயணியர் விடுதி எனும்
டிபியில் தங்குகிறார். அவருக்கு உணவாக 'ஐயா, உப்புமா இருக்கிறது' என்கிறார்கள். அவர் 'அதெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா, இட்லியும், கோழிக்குழம்பும் கிடைக்குமா ?' என்கிறார்.

அவர்கள் தேடிப்பிடித்து இரண்டையும் கொண்டுவந்து கொடுக்கிறார்கள்.
திருப்தியாக சாப்பிட்டவர், சட்டைப் பையில் இருந்து காசு எடுத்துக் கொடுக்கிறார். உணவு கொடுத்தவர்கள் அதை வாங்க மறுத்துவிடுகிறார்கள்.

இது நடந்த மாநிலம் தமிழ்நாடு. 1960 களில் இந்தச் சம்பவம் நடந்த  அந்த ஊர் சங்கரன் கோவில். அந்த முதல்வர் காமராசர்.

நண்பர்கள் இன்றையச் சூழலில் இதுபோன்றதோரு நிகழ்வைப் பொருத்திப்பார்த்துக் கொள்ளுங்கள். "சங்கரன் கோவில் - 1000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மூதூரின் வரலாறு"  நூலில் இருந்து.

இதன் ஆசிரியர்  நண்பர் எழுத்தாளர் அருணகிரி.
அவர் ஒவ்வோரு சாமானின் வாழ்க்கை வரலாறும் ,  அவனுடைய ஊரின் வரலாறும் கட்டாயம் பதிவுசெய்யப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

Friday, January 12, 2018

வாசிப்புப் பழக்கம் தேவையா ?

சென்னை புத்தகத் திருவிழா சமயத்தில் வழக்கம் போல் தமிழகத்தின் வாசிப்பு குறித்தான விவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கிறது.

நாம் பொத்தாம் பொதுவாக இங்கே யாரும் வாசிப்பதில்லை, புத்தகங்கள் விற்பனையாவதில்லை எனக் குற்றஞ்சாட்டிவிட்டு நகர்வதை விடுத்து
ஏன் வாசிப்பு இல்லை என்பதைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

பெரும்பான்மையான நாடுகளில் வாசிப்பு என்பது சிறுவயதில் பள்ளிகளில்
வளர்த்தெடுக்கப்படுகின்றது. துரதிஷ்டவசதாக நமது கல்விச்சூழல் வேறாக இருக்கிறது. நமது பள்ளிகளில் படிப்பு என்றால் பாடப் புத்தகங்களை தேர்வுக்காக படிப்பதாகவே இருக்கிறது. உண்மையில் வாசிப்பு என்பது ஒரு அனுபவம். அதைப் பாடத்திட்டத்திற்கு வெளியேதான் நாம் பெறவேண்டியிருக்கிறது. பாடத்திட்டத்திற்கு வெளியே என்றால்
அது அவசியமற்றது, வாழ்க்கைக்கு உபயோகமற்றது எனும் மனநிலை
தவறானது. அது மாறவேண்டும் என நினைக்கிறேன்.

அமெரிக்கப் பள்ளிகளில் பாடத்திட்டத்திற்கு வெளியே தினமும் மாணவர்களுக்கு 30 நிமிட வாசிப்பு என்பதை  பரிந்துரைக்கிறார்கள். பாடத்திட்டத்திற்கு வெளியே மாணவர்களின் வாசிப்பை உற்சாகப்படுத்துகிறார்கள். நான் வசிக்கும் புளோரிடாவில் கல்வித் துறை மாணவர்களிடம் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக சன்ஷைன் ஸ்டேட் ரீடர்ஸ் அவார்ட் புரோகிராம் (Sunshine State Young Readers Award (SSYRA) Program) எனும் ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். அதன்படி ஒவ்வொரு கல்வி ஆண்டும் இலக்கிய மதிப்பு,பாடத்திட்டத் தொடர்பு, பன்முகக் கலாச்சார பிரதிநிதித்துவம் கொண்ட 20 புத்தகங்கள் கொண்ட ஒரு பட்டியலை வெளியிடுகிறார்கள். அந்தப் புத்தகங்களை விருப்பமுள்ள மாணவர்கள் நூலகத்தில் எடுத்து வாசிக்கலாம். மாணவர்கள் அதை வாசித்ததை ஒரு சிறிய கேள்விபதில் மூலம் உறுதிசெய்தபின் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு "சன்ஷைன் ஸ்டேட் ரீடர்ஸ் அவார்ட்" எனும் சான்றிதழ் தந்து சிறப்பிக்கிறார்கள்.

புதிய சொல்லாடல்கள், அனுபவங்கள் என்பதைத் தாண்டி இது  மாணவர்கள் சுயமாக,சரளமாக வாசிப்பதை உறுதி செய்வதாக சொல்லும் அவர்கள் இது மாணவர்களுக்கு வாசிப்பு இன்பத்தையும் தருவதாகச் சொல்கிறார்கள்.

அந்த வகையில் ஒருவருக்கு முழுமையான   வாசிப்பு அனுபவம் அவசியமானது. தனித்துவமானது. அது நமக்குள் தரும் திறப்புகள் வாழ்க்கைக்கு முக்கியமானது.  அதை இன்றைய கல்விச் சூழல் அனுமதிக்காத பட்சத்தில் பெற்றோர்கள் வாசிப்பை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வேலையைச் செய்யவேண்டும்.அவர்கள்  வாசிப்பை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு முன் அவர்களுக்கு  வாசிப்பு குறித்து இருக்கும் சந்தேகங்களையும், குழப்பங்களையும்  களையவேண்டும்.

எந்த மாதிரியான புத்தகங்களைப் படிப்பது, எந்த மொழியில் படிப்பது ,
எப்படி நேரம் ஒதுக்குவது போன்ற கேள்விகளுக்கு என்னுடைய பதில் கட்டுரையோ,அறிவியலோ, புனைவோ உங்களுக்கு மகிழ்ச்சி தரும் ஏதோ ஒன்றை ஆர்வத்தோடு வாசியுங்கள். நேரம் தானாக தேடிவரும். அதுபோல உங்கள் பிள்ளைகளையும் வாசிக்க உற்சாகப்படுத்துங்கள். முடிந்தால் அவர்கள் வாசித்தது குறித்து நேரம்கிடைக்கும் போது உரையாடுங்கள். அதுபோல நீங்கள் வாசித்ததில் சுவையான செய்திகளை அவர்களுடன் பகிருங்கள்.

நான் எனது மகளுடன் சேர்ந்து அவளுடைய பல சிறார் நாவல்களை வாசித்து
அது குறித்து அவளுடன் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன்.நீங்களும்
முயன்றுபாருங்கள். உண்மையில் அது ஒரு சுகானுபவம்.

#வாசிப்பு

Monday, January 8, 2018

"வனநாயகன் உருவான கதை" -வீடியோ நேர்காணல்

தினமலர் குழுமத்தின் நூல்வெளி தளத்தில் (noolveli.com) என்னுடைய வீடியோ நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்பினார்கள்.   அந்தப் ஃபோன் வந்தபோது சென்னை எக்மோரில் இன்னொரு வேலையாக இருந்தேன்.  

அவர்களிடம் அலுவலகம் குறித்து விசாரித்தேன். ஸ்பென்சர் பிளாசா அருகில் இருப்பதாகச் சொன்னார்கள். ஸ்பென்சர் எக்மோரில் இருந்து கூப்பிடு தூரமென்பதால் வருவதாக சம்மதித்தேன். அது மட்டுமில்லாமல் 
அன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி தென்காசி போவதாக வேறு திட்டமிருந்தது. அலுவலகத்தில் எழுத்தாள நண்பர் கார்த்திக் புகழேந்தியைச் சந்தித்தேன். முகநூலில் முன்பே அறிமுகமாகி இருந்ததால் 
உடனே பழக தடையேதுமில்லை.

அவர் எந்தவொரு தயாரிப்போ, ஒத்திகையோ இல்லாமல் நேர்காணல்
இயல்பாக பேசுவதுபோல் இருக்கட்டும் என உற்சாகப்படுத்தி பேசச் சொன்னார். கேள்விகளை அவர் கேட்டார். அவர் கேட்டதும், நான் சொன்னதும் இணைப்பில் ("வனநாயகன் உருவான கதை" எனும் தலைப்பில்)

//

தொழில்நுட்பக் கல்வி கற்று, மலேசிய வங்கிகளில் பணியாற்றி, தற்போது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் எழுத்தாளர் ஆரூர். பாஸ்கர். வேலைவாய்ப்புக்காக மலேசியா சென்று அங்குள்ள வங்கிகளில் பணிபுரிந்த காலகட்டத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், ஐ.டி துறையின் வேலைவாய்ப்பின் ஸ்திரத்தன்மைகள் குறித்தும், பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த மலேசியாவின் சூழல்களையும் முன்வைத்து எழுதிய நாவல் ‘வனநாயகன்’. கிழக்கு பதிப்பக வெளியீடாக கடந்த ஆண்டில் வெளியானது. முன்பாக தனது கிராமத்து வாழ்க்கையை ‘பங்களா கொட்டா’ என நாவலாக எழுத, அகநாழிகைபதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து இவ்வாண்டு செப்டம்பரில் ப்ளோரிடாவை சமீபத்தில் தாக்கிய ‘இர்மா’ புயலின்போது,  தனது குடும்பத்தினருக்கு நேர்ந்த இடர்பாடுகளையும் அனுபவங்களையும் கொண்டு, தனது மூன்றாம் நாவலை எழுதிவரும் ஆரூர் பாஸ்கர் நூல்வெளி.காம்-ற்கு அளித்த நேர்காணல்..  

//

http://noolveli.com/detail.php?id=397

பேசும்போது ஆங்கிலச் சொல்லாடல்களைத் தவிர்த்திருக்கலாம். அதுபோல எனது அறக்கட்டளை, தமிழ்ப்பள்ளி பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம் என 
நேர்காணல் முடிந்தபின் நினைத்துக்கொண்டேன். எழுத்து கைவர பயிற்சி தேவைப்படுவதுபோல் திரைக்கும்  பயிற்சி தேவைப்படுவதாக உணர்ந்த தருணம் அது.

அந்த 15- 20 நிமிட உரையாடலை, அபாரமாக   எடிட் செய்து 10 நிமிடங்களாக வெளியிட்டிருக்கிறார்கள். நேர்காணல் செய்த கார்த்திக்,
பதிப்பகத்தார், நூல்வெளியின் மொத்த தொழில் நுட்பக் குழுவுக்கும் நன்றி. 
நூல்வெளி குழு ஒரு அட்டகாசமான இளைஞர் பட்டாளம். அவர்களுக்கு 
எனது வாழ்த்துகள்.

Thursday, January 4, 2018

2017 வாசிப்புப் பட்டியல்

நண்பர்களுக்கு,  2018- புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லும் இந்த வேளையில் கடந்த ஆண்டின் எனது வாசிப்புப் பட்டியலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

தமிழ் - புதினங்கள் (நாவல்கள்)

*மெர்குரிப் பூக்கள் - பாலகுமாரன்
*கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்
*இரும்பு குதிரை- பாலகுமாரன்
*18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்
*வாசிங்டனில் திருமணம் -எழுத்தாளர் சாவி
*இரவல் காதலி- செல்லமுத்து குப்புசாமி
*கரிசல் கதைகள் (தொகுத்தவர். கி.ராஜநாராயணன்)
*விசுவாசமின் சகவாசம் - விசு
*திருடன் மணியன்பிள்ளை - ஜி. ஆர். இந்துகோபன்
*பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா


ஆங்கிலம்

* நினைவில் நிற்காதவை (Everything I don't Remember) -   ஜோன்ஸ் ஹேசன் கேமிரி (Jonas Hassen Khemiri) நாவல்
* த மேன் இன் ஹைய் கெசில் (The Man in the High Castle,1962) -நாவல்
எழுத்தாளர். பிலிப்.கே.டிக் (Philip K. Dick)
* வடகொரிய அடாவடிகள் (The Girl with Seven Names, 2015) -நாவல்
* Love, Loss and What We Ate  (autobiographical book)- "டாப் செஃப்" புகழ் பத்மா லட்சுமி
* The Return of the Dancing Master -Henning Mankell
* ISAAC's STORM - ERIK LARSON-நாவல்
* Confessions of an Economic Hit Man (partly autobiographical book) -Book by John Perkins
* Skipping Christmas (a comedy novel) by John Grisham-நாவல்
* உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன்-நாவல்
* The War That Saved My Life- Kimberly Brubaker Bradley (சிறார்-நாவல்)
* Save Me a Seat - Sarah Weeks and Gita Varadarajan (சிறார்-நாவல்)
* I Survived Hurricane Katrina - Lauren Tarshis 2005  (சிறார்-நாவல்)

#2017_வாசிப்பு_பட்டியல்