Tuesday, October 30, 2018

என் பெயர் லோலோ...

ஒருநாள் மதிய உணவுக்குப்பின் லேசாக கண் அசரும் சமயத்தில் வந்த
அந்தப் போனை பதறியடித்து எடுத்துப் பேசினேன். உடைந்த ஆங்கிலத்தில்
ஒரு பெண் குரல். மெக்சிகன் உணவகத்தில் இருந்து பேசுவதாகச் சொன்னாள்.

நடந்தது இதுதான் . கடந்த வாரம் நான் அங்கே போயிருந்த போது
எனது கிரெடிக்கார்டு ரசீதில் ஒரு சின்னக் குளறுபடி செய்துவிட்டார்கள்.  அதாவது அசலான தொகைக்கு பதிலாக இரண்டு மடங்கு எடுத்துக் கொண்டார்கள். இத்தனைக்கும் அது ருசியும், தரமும் இல்லாத உணவு.  மாத இறுதியில் அது எப்படியோ எத்தேர்சையாக என் கண்ணில் பட, நல்ல சாப்பாட்டுக்கு கொடுத்தாலும் பரவாயில்லை, இவர்களுக்கு எதற்கு? அநியாயம் என நினைத்து அவர்களை  இரண்டு முறை அழைத்து  புகார் சொல்லியிருந்தேன்.

அதற்காக அழைத்தவள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாள். ' பராவாயில்லை, அடுத்து நடக்கவேண்டியதை சொல்லுங்க'  என்றேன்.
' உங்க கிரெடிக் கார்ட் நம்பரைக் கொடுங்க'  என வாங்கி கொண்டவர்கள், பாக்கியை திரும்ப அனுப்பிவிடுவதாக சொன்னார்கள்.

பிறகு  கொஞ்சம் தயக்கத்தோடு, 'நடந்த தவறுக்கு நீங்களும் ஒரு
காரணம்' என்றாள். நான் குழப்பத்தோடும், கடுப்போடும் 'புரியலயே' என்றேன்.  'உங்க போனுக்கு ரசீதின் நகலை அனுப்பியிருக்கேன், பாருங்க 'என்றாள். பார்த்த பிறகு புரிந்தது. 'டிப்' என்ற இடத்திலும், 'மொத்தத் தொகை' என்ற இரண்டு  இடங்களிலும் '$20' என எழுதியிருக்கிறேன்.

வேறு வழியில்லாமல். ' ஓ.. ஓகே... என வழிந்துவிட்டு , இவ்வளவு நல்லா இங்கிலீஸ் பேசும் உங்க பேரு என்ன ?'  எனக் கேட்டு சமாளித்தேன்.

' தேங்யூ ' என வெட்கப் புன்னகை பூத்தவள். ' லோலோ' என்றாள்.

#கஸ்டமர்_கஷ்டங்கள்

Wednesday, October 17, 2018

பிரிக்க முடியாதது - காதலும் .... ?

முன்பெல்லாம் காதலர்கள் ரகசியமாக கடிதங்களைப் பரிமாறிக்கொள்ள
வேண்டியிருந்தது. மற்றவர்களைக் குழப்பவேண்டும் என்பதற்காக  "காதலிக்கிறேன்" என்பதை "ன்றேகிக்லிதகா"  என்றெல்லாம் பின்புறமாக  எழுதி நம்மைத் தலைசொறிய வைத்தார்கள்.

ஆனால், இப்போது  பிரிக்க முடியாதது காதலும் ரகசியமும் என்றிருந்த காலமெல்லாம் கடல் ஏறிப் போய்விட்டது. இமெயிலும், கைதொலைபேசியும் தாராளமாகப் புழக்கத்தில் இருப்பதால் காதலர்கள்  ரகசியமாகச் செய்திகளை அனுப்ப ரொம்ப அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை.

ஆனால், இன்றும்  கிரிப்டோகிராஃபி எனும் ரகசிய எழுத்துக்கலை
ராணுவத்தில் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. அதுவும் போர் நடக்கும் சமயங்களில் எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ரகசியமாக செய்தி பரிமாறுவது அதி முக்கியம். அதுவே போரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியது. சமீப காலமாக  இந்தத் துறை உலகம் முழுவதும் கணினிகளின் கைகளுக்குப் போய்விட்டது. அதனால் ரகசிய செய்திகளை வழிமறித்தாலும் குறியீடுகளை உடைப்பது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு  மிகச் சவாலாகியிருக்கிறது. அப்படியும் கூட  விக்கிலீக்ஸ் புகழ் ஜூலியன் அசானாஜ் போன்ற ஹேக்கர்கள் வென்று கொண்டுதானிருக்கிறார்கள்.

இதுதொடர்பான ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
முதன்முதலாக ரகசியச் செய்திகளை ஸ்பார்டன்கள் எனும் கிரேக்கர்கள் தான் மறையாக்கம் (Encryption) செய்தார்களாம். மறையாக்கம் என்பதை மலையாக்கம் எனப் படித்தால் அதற்குக் கம்பெனி பொறுப்பல்ல. அதாவது சாதரணமான  மூலச்செய்தியை ரகசிய குறியீட்டு உதவியால் மற்றவர்களுக்கு எளிதில் புரியாத வகையில் மாற்றுவதை மறையாக்கம்
என்கிறார்கள். அப்படிப் பரிமாறிக்கொண்ட செய்தியை மீண்டும்
அசலான செய்தியாக மாற்றிப் புரிந்துகொள்வதை மறைவிலக்கம் (Decryption) என்கிறார்கள். எளிதாகச் சொல்வதென்றால் "ஐ லவ் யூ" என்பதை "143" எனச் சுருக்கமாக சொல்வதைப் புரிந்து கொள்வதுகூட ஒருவித ரகசியச் செய்தி பரிமாற்றம் தான்.

பழங்காலத்தில் ரகசியச்செய்தி பரிமாற்றத்திற்குப் பெரிதாகச் சிரமப்பட்டது போலத் தெரியவில்லை. எளிதாகதான் இருந்திருக்கிறது. ரோமானிய மன்னர் சீசரின் காலத்தில் கூட DOG எனும் சொல்லை ITL என மறையாக்கம் செய்திருக்கிறார்கள். அதாவது Dயில் இருந்து ஐந்தாவது எழுத்து  I, Oவில் இருந்து ஐந்தாவது  T எனப் போகிறது. இந்த 5 எனும் எண்ணை அடுத்தநாள் 9 என மாற்றியிருந்தாலும் இதெல்லாம் வெறும் ஜூஜூபி சமாச்சாரங்கள்.

இந்தத் துறையில் படிப்படியாக முன்னேறி அமெரிக்காவில் சிவில் வார் எனும் உள்நாட்டுப் போர் நடைபெற்ற சயமயத்தில் சுழலும் தகடுகள் (Rotating Disks) எனும் எந்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் அகர வரிசையில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சிறிதும் பெரிதுமாக இரண்டு வட்டுகள் இருந்தன. வெளிவட்டம் சுழலும் வகையில் இருந்திருக்கிறது. அதன் உதவியால் பயனர் செய்தியை மறையாக்கம் செய்து அனுப்பிவிடுவார்.
சுழலும் தகடுகள்
அதாவது (படம்) உள்வட்டத்தில் இருக்கும் A எனும் எழுத்துக்கு நேராக வெளிவட்டத்தில்  Dஐ பொருத்தி செய்தி அனுப்புவதாக முடிவெடுத்துவிட்டால்
GOD எனும் சொல்லை JRG என மறையாக்கம் செய்திருப்பார். எதிர்முனையில் இருப்பவருக்கு A to D எனும்  இந்தச் சேர்க்கை தெரிந்தால்
இன்னொரு எந்திரத்தின் உதவியால் ரகசியச் செய்தியைப் புரிந்துகொள்ளலாம். நிகழ்தகவின் (Probability theory) எனும் கணிதக்கோட்பாட்டின் உதவியால் இதையெல்லாம் எளிதாகப் பிரித்து மேய்ந்துவிடலாம். இன்று இதைச் சிறுவர்கள் விளையாட்டு பொருளில் சேர்த்துவிட்டார்கள்.

பின்னாள் வந்த நாட்களில் தொலைபேசி, மோர்ஸ் குறியீடு போன்ற விசயங்கள் வந்துவிட்டன. முதன்முதலில் ஜெர்மனிய
எனிக்மா
ராணுவம்  ரகசியச் செய்திகளை அனுப்ப
நவீன இயந்திரங்களைப் பயன்படுத்த தொடங்கினர்.  அவர்கள் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்திய  எனிக்மா (Enigma) எனும் எந்திரம் புகழ்பெற்றது.


அதனால் ஜெர்மனிய ராணுவத்தின் ரகசியத் தகவல் போக்குவரத்தை முறியடிக்க இங்கிலாந்து படாதபாடு பட்டிருக்கிறது. லண்டன் நகரின் மையத்தில் யாருக்கும் தெரியாமல்
கணித நிபுணர்கள், தேர்ச்சி பெற்ற
புதிர் விர்ப்பணர்கள் என
10,000 நிபுணர்களைப் பிலெல்பி பார்க்
பிலெல்பி பார்க்
பகுதியில் தங்கவைத்து  இரவுபகலாக பல வருடங்கள் போராடி இருக்கிறார்கள் . அவர்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மரக் குடிசைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தார்களாம். அப்போது மரக்குடிசை எண் 8ல் தங்கியிருந்த அலன் டூரிங் (Alan Turing) , ஒரு செஸ் விளையாட்டு வீரரின் உதவியுடன் பாம்பீ (Bombe) எனும் எந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார். அது ஜெர்மனியர்களின் எனிக்மாவின் ரகசியசெய்திகளின் சூட்சுமத்தை வெற்றிகரமாக முறியடித்துவிடுகிறது. அதன் பிறகு நடந்தது வரலாறு.

அந்த பாம்பீயைக் கண்டுபிடித்த அலன் டூரிங்கைக் "கணிப்பொறியியலின் தந்தை" என்கிறார்கள். அவருடைய டூரிங் எந்திரத்தைதான் இன்றைய கணினிகளின் முன்னோடி என்கிறார்கள்.

உலகப்போரின் போதும் போர் முடிந்தபின்பும் பிலெல்பி பார்க் விவகாரம்
ரகசியதாகவே இருந்திருக்கிறது. வெளியுலகுக்கு ஏன்அங்கு வேலைசெய்தவர்களின் குடும்பங்களுக்குக் கூட அந்த விசயம் மறைக்கப்பட்டிருக்கிறது. போர் முடிந்த உடன் அப்போதைய இங்கிலாந்தின் பிரதமர் சர்ச்சிலின் உத்தரவின் பேரில் பிலெல்பி பார்க் தொடர்பான எல்லா ஆவணங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. பல ஆண்டுகளுக்குப்பிறகு பிலெல்பி பார்க் விவகாரம் வெளிவுலகுக்குத் தெரியவந்த பின் அனைவரும் ஆச்சர்யப்பட்ட ஒருவிசயம் அங்கே வேலைசெய்த 10,000 பேர்களில் 75% சதவீதத்தினர் பெண்கள் என்பதுதானாம். அதுசரி பெண்களிடம்
ஜெர்மானியர்கள் என்ன, யாரால் தான் ரகசியத்தை மறைக்க முடியும் !?.

படம் - நன்றி இணையம் , https://bletchleypark.org.uk

Friday, October 5, 2018

கவிஞர் மு.மேத்தா - ஒரு சந்திப்பு

விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்.

எனும் கவிதையால் கல்லூரி நாட்களில் அறிமுகமாகி மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞர் மு.மேத்தா வை சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது சென்னையில் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன்.

"புதுக்கவிதையின் தாத்தா-மேத்தா" என வலம்புரி ஜான் அவர்களால் செல்லமாக பாராட்டப்பட்டவர் .சென்னை மாநிலக் கல்லூரியில்  35 ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியர். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.


ஆனால், நேரில் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் மிக எளிமையாக பழகினார்.
தற்போதைய தமிழ் கவிதைப் போக்கு,  தமிழக அரசியல் பற்றி
எந்தவித தயக்கமும் இன்றி மிகச் சரளமாக மனம் திறந்து பேசினார்.
ஒர் ஆசானுக்குரிய கண்டிப்பையும்,
ஒரு தந்தைக்குரிய பாசத்தையும் அவர் பேச்சில் காணமுடிந்தது சிறப்பு.

என்னுடைய வனநாயகனை கவிஞரிடம் வழங்கியபோது எடுத்தபடம் இங்கே உங்களுக்காக.

"ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம்.." எனும் பாடல் மூலம் நம்மை வசீகரித்த கவிஞர் வசிப்பது சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராஜராஜன் தெரு என்பது இங்கே கூடுதல் தகவல்.

#மு.மேத்தா