Sunday, March 20, 2016

எனக்கு நோ சொன்ன அந்த நடிகை (தொடர்ச்சி)

எனது கடந்தமாத சென்னை பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்காதவர்களுக்காக. பதிவு-1 மற்றும் பதிவு-2.

கடந்த பதிவில் என்னுடன் புகைப்படம் எடுக்க மறுத்த நடிகை யார் ? என்ற கேள்விக்கான விடையை நண்பர் துளசி சரியாக மீனா என ஊகித்திருந்தார். அவருக்கு வாழ்த்துக்கள்!!!.

ஆம். அந்த நடிகை வேறு யாருமல்ல. அது நடிகை மீனா தான்.   மீனா - பெரிதான அறிமுகம் தேவையில்லாதவர்.

ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே பரவலாக கவனிக்கபட்ட அவர் அடுத்ததாக ரஜினியின் எஜமான் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.  ரஜினியில் தொடங்கி எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.


90களில் இருந்து கடந்தசில வருடங்கள் வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தன் அழகாலும், குடும்பபாங்கான  முகத்தோற்றதாலும் சிறந்த நடிப்பாலும் தமிழ் மக்கள் மனத்தில் தனி இடம்பிடித்தவர்.


எஐமான் வெளியான வருடமான 1993ல் மீனாவிற்கு வயது 17 தான்.
அப்போழுது அவருடைய உடல் பூரிப்பை கண்ட பத்திரிகைகள் அவர் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு  ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டார் என பரபரப்பாக எழுதின. அப்போதேல்லாம் என்னைப்போன்ற பதின்மவயதுக்காரர்களின் கனவுக்கன்னி மீனா. அந்த தெத்துப் பல் அவருக்கு மிகப்பெரிய பிலஸ் என நினைக்கிறேன்.

பெங்களூரில் வசிக்கும் கம்யூட்டர் இன்ஜீனியரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.  அதன்பின் கொஞ்சநாட்கள் சின்னத்திரையில் பார்த்த ஞாபகம்.

மீனாவை நான் பார்ப்பது எனக்கு இது முதல் முறையல்ல. பத்து வருடங்களுக்கு முன் நான்  சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்ற விமானத்தில் மீனாவும் வந்திருந்தார். 

அன்று விமான நிலையத்தில் தன் பெண் குழந்தையுடன் அவருடைய அம்மாவும் உடனிருந்தார். நடிகைகளுடன் அவர்களின் அம்மாக்கள் நிழலாக பின் தொடர்வார்கள் என்பதை நான் கண்கூடாக பார்த்தேன். மீனாவின் அம்மா 
மல்லிகாவும் கூட முன்னாள் நடிகை என எங்கோ படித்த நினைவு.

அவருடைய அம்மா எனக்கு மிக அருகில் பெட்டிகள் வைத்திருந்த வண்டியைத் தள்ளியபடி நடந்து வந்துக் கொண்டிருந்தார். அந்த வண்டியில் அவர் பேத்தியும் (மீனாவின் மகள்) உட்காந்திருந்தாள்.  அவருக்கு கொஞ்சம் முன்னால் நடிகை மீனா தனியாக ஓரு வண்டியைத் தள்ளியபடி சென்றுக் கொண்டிருந்தார்.

விஷயத்திற்கு வருவோம். எனக்கு 'நோ' சொல்லாமல் அவர் என்ன சொன்னார் என நீங்கள் ரொம்ப யோசிக்கத் தேவையில்லை.

'போட்டோ எடுத்துக்க நான் என்ன  பெரிய ஆளா ? ' என்பது போல ஏதோ சொல்லி அவர் மறுத்துவிட்டார்.

'நான் பரவாயில்லை ' என ஆங்கிலத்தில் உற்சாகம் குறையாமல் சொன்னேன். எனக்கு பெரிதான ஏமாற்றமில்லை. ஆனால், உள்ளே வளைத்து வளைத்து ஜெயம் ரவியை போட்டோ எடுத்தவர்கள் ஓருவர்கூட மீனாவைக் கண்டுகொள்ளாதது துரதிஷ்டம். தமிழ்திரையுலகில் ஓரு நடிகைக்கான இடம் இதுதானா. மார்க்கெட் இழந்து அதுவும் ஓரு சிறுமிக்குத் தாய் எனும்போது சீண்டுவாரில்லையா? . அவர் வேண்டாம் என மறுத்ததற்கு அந்த ஏமாற்றம் கூட ஓரு காரணமாயிருக்கலாம். தெரியவில்லை.

நான் உடனிருந்த அவருடைய அம்மாவிடம் பேத்தியை பற்றி விசாரித்தபடியே நடந்தேன். அவர் மிகச் சோர்வாகத் தெரிந்தார். பயணக்களைப்பாய் இருக்குமென நினைத்துக் கொண்டேன்.  தன் பேத்தியின் பெயர் நைநிகா என்றார். பேத்தியை பற்றி பேசும்போதுகூட  அவர் முகத்தில் பெரிதாக உற்சாகமில்லை. ஓரு நொடிக்கு குறைவான நேரத்தில் என் கண்களை அவர் கண்கள் வந்து சந்தித்து திரும்பின.

நாங்கள் பேசியபடி விமான நிலையத்தின் வெளியே வரும்போது யாரும் நடிகை மீனாவை அடையாளம் கண்டது போல் தெரியவில்லை.   நான் வெளியே கூட்டத்தில் என் தம்பியை அவசரமாக கண்களால் துலாவிக் கொண்டிருந்தேன். அதற்குள் அவர்கள் என்னை விட்டு சற்று தூரம் நடந்திருந்தனர்.

நான் அவர்களை உற்றுபார்த்துவிட்டு விலகி கூட்டத்தை  நோக்கி நடக்கத் தொடங்கினேன். அந்த மங்கலான ஓளியில் இருபத்தைந்தாண்டுகள் உடன் நடந்த சோர்வு அந்த அம்மாவின் நடையில் இருப்பதாக எனக்குத் தெரிந்தது.

விமான நிலையத்துக்கு வெளியே இன்னமும் விடிந்திருக்கவில்லை.

தொடருவோம்..

நன்றி; படங்கள்
google.com

No comments:

Post a Comment