Thursday, April 27, 2017

வனநாயகன் குறித்து(5) - அம்ருதாவில் சுரேஷ் கிருஷ்ணன்

கலை இலக்கிய விமர்சகர்  "சுரேஷ் கிருஷ்ணன்" நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய ஆளுமை. அவர் வனநாயகன் குறித்து
"காங்கிரீட் வனத்தில் ஒரு யுத்தம்" எனும் தலைப்பில்  எழுதிய கட்டுரை அம்ருதா – மார்ச் 2017 இதழில் வெளியாகியுள்ளது. வாய்ப்புள்ள நண்பர்கள் வாசியுங்கள்.


அவருடைய முகநூலில் இருந்து..

//
சமீபத்தில் நான் வாசித்த சுவாரசியமான புதினம் – வனநாயகன்.
நண்பர் ஆரூர் பாஸ்கரின் இரண்டாவது நாவல். ஐ.டி பின்னணியில் நிகழும் ஒரு திரில்லர். களம் மலேசியா. திரில்லரின் பாவனையில் இயங்கினாலும் மலேசியாவின் கலாசாரம் உள்ளிட்ட பற்றிய பல்வேறு விதமான விஷயங்கள் நாவலின் இடையில் உறுத்தாமல் பதிவாகியிருக்கின்றன.
இந்தப் புதினத்தைப் பற்றி அம்ருதா – மார்ச் 2017 இதழில் ஒரு மதிப்புரை எழுதியுள்ளேன்.
**
ஆரூர் பாஸ்கரின் முந்தைய நாவலைப் பற்றி ‘அலமாரியில்’ நான் அத்தனை சிலாக்கியமாக எழுதவில்லை. ஆனால் அதற்காக பாஸ்கர் என்னை எதிரியாக கருதிக் கொள்ளவில்லை, வசை பாடவில்லை. ‘இதோ அடுத்ததில் நிரூபிக்கிறேன்’ என்று ஒரு பாய்ச்சல் காட்டியிருக்கிறார். படைப்பாளிகள் கொள்ள வேண்டிய நேர்மறையான எதிர்வினையும் உத்வேகமும் இதுவே.
பாஸ்கர் இன்னமும் மேலே முன்னே நகர என் வாழ்த்துகள்.

//

மனம் நிரம்பிய நன்றிகள்- சுரேஷ் கிருஷ்ணன்.

Friday, April 14, 2017

வாசிங்டனில் திருமணம் -எழுத்தாளர் சாவி

எழுத்தாளர் சாவி எழுதிய வாசிங்டனில் திருமணம் நாவலை வாசித்தேன்.  வாசித்தேன் எனச் சொல்வதை விட வரிக்குவரி சிரித்தேன் எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.  வாசகர்களை சிரிக்க வைக்காமல் விடமாட்டேன் என கங்கணம் கட்டி நகைச்சுவை ஒன்றைமட்டுமே பிராதனமாக எடுத்துக் கொண்டு கதையை எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.

இந்தக் கதை வழக்கமான விறுவிறுப்பான தொடர்கதை
எனும் வரையரைக்குள் எழுதப்படாமல் நகைச்சுவையாகத் தன்போக்கில் போய்கொண்டிருக்கிது. 

ஒரு தென்னிந்தியத் திருமணத்தை அதன் ஆச்சாரம் மாறாமல் அமெரிக்காவில் நடத்தினால் எப்படி இருக்கும் என்பதன் கற்பனை வடிவம் தான் கதை.

அமெரிக்காவின் ராக்பெல்லர்  குடும்பம்  ஒரு தென்னிந்திய திருமணம் ஒன்றை வாசிங்டன் நகரில் நடத்திப் பார்க்க
ஆசைப்படுதாகவும் அந்தத் திருமணம் நடத்திடத் தேவைப்படும் அனைத்துச் செலவுகளையும் அவர்களே செய்வதாக கதையமைத்திருக்கிறார்.  அந்தத் திருமணம் எப்படி நடத்தது என்பதனை சாவி நகைச்சுவையாக எழுதியிருக்கிறார்.

"வாசிங்டனில் திருமணம்" எனும் தலைப்பில் இருக்கும் "வா" வில் 
தொடங்கி "ம்" வரை மொத்தமாக 11 அத்தியாயங்களுக்குத் தலைப்பிட்டு ஆனந்தவிகடனில் தொடர்கதையாக எழுதியிருக்கிறார்.  

இருபது வருடங்களுக்கு முன்பு "ஜீன்ஸ்" படத்தில் டைரக்டர் சங்கர்
நடிகை லட்சுமியை அமெரிக்காவின் டிஸ்னிலாண்டில் கோலம் போட வைத்து, வடை சுட்டு, ஜின்ஸ் போட்டு, ஆட வைத்தார் நினைவிருக்கிறதா ? அதையெல்லாம் வெகுநாட்களுக்கு முன்பே சாவி இதில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

இந்தக் கதை எழுதப்பட்ட வருடம் சரியாகத் தெரியவில்லை.
ஆனால், கதையில் வரும் குறிப்புகளைப் பார்க்கையில் 1960-70 களில் இருக்கலாம் என நினைக்கிறேன். அமெரிக்கா எனும் தூராதேசத்துக்கு  டிரங்க் கால் புக் செய்து காத்திருந்து பேசிய
அந்தக் காலத்தில், தென்னிந்திய திருமணங்கள் 2-3 நாட்கள்
அதன் கட்டுக்கோப்புடன் நடந்த காலகட்டத்தில் எழுதியிருக்கிறார்.

தஞ்சாவூர் மாமா வாசிங்டன் நதியில் இறங்கிக் குளித்துவிட்டு
அதன் கரையிலேயே வேட்டியைக் காயவைத்துத் கட்டிக்கொள்கிறார் என்பது போல,   அந்தக் காலத்து  மாமா, மாமிகளின் கண்டோட்டத்தில் அமெரிக்காவைப் பார்த்து ஹாஸ்யமாக எழுதியிருக்கிறார்.

அப்போதேல்லாம்,  கல்யாணத்துக்கு சொந்தமாக வீட்டிலேயே அப்பளம் அவர்களே போடுவார்கள் போல. அதனால்
அப்பளம் மாவு இடிக்க உரல்,உலக்கை, உளுந்துக்கு என ஒரு விமானம் அமெரிக்கா வருகிறது. அப்புறம், அப்பளம் போடும் பாட்டிகளுக்கு ஒரு தனி விமானம் என வாய்விட்டுச் சிரிக்கவைக்கிறார்.

விமானத்தில் வந்திரங்கிய இங்கிலீஸ் தெரியாத அந்தப் பாட்டிகளிடம்  ' ஹவ் டு யூ டு ? ' என ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி  விசாரிக்க,  அவர்கள் முழிக்க,  அப்போது ஒரு மாமா குறுக்கிட்டு 'ஓ தே டு ஒண்டர்புல் அப்ளம்ஸ் !' எனச் சொல்லி நம்மையும் சிரிக்க வைக்கிறார்.

இப்படி வரிக்கு வரி நகைச்சுவைக் கரைபுரண்டோடுகிறது. நகைச்சுவையில் லாஜிக் பார்க்காமல் படிப்பவராக இருந்தால்
கதையை நீங்கள் ரசிக்கலாம்.

அப்புறம், அப்பளம் போட கிணத்துத் தண்ணீர் வேண்டுமென அமெரிக்காவில் கிணறு வெட்டுகிறார்கள், வெட்டிய கிணற்றில்
கட்டிய ராட்டினத்தில் வரும் ஒலியை சங்கீதம் என அமெரிக்கர்கள் வியக்கிறார்கள் என நான்ஸ்டாபாக பூந்து விளையாண்டிருக்கிறார்.

சேமியா பாயசத்தை  பற்றி வெள்ளைக்காரருக்கு  நம்மூர்காரர்
விளக்கும் விதம்  ரசிக்கவைத்தது.  இப்படி வெளிநாடு வரும் எல்லா இந்தியர்களும் வெளிநாட்டவருக்கு நம்முடைய உணவு இல்லை நமது  பழக்க வழக்கங்களை விளக்குகிறேன் பேர்வழி ஏதோ ஒரு தருணத்தில் அதுமாதிரி திணறியிருப்பார்கள் என்பது உண்மை.

மாப்பிளை வரவேற்பில் (ஜானவாச ஊர்வலம்) காஸ்
லைட்டுகளைத் தூக்க வரவைக்கப்பட்ட  நரிக்குறவர்களைக் கிண்டலிக்கும் தோணியில் எழுதியிருப்பது இன்றைய
காலகட்டத்தில் ரசிக்கும்படியில்லை.

எழுத்தாளர் சாவி ஒரு நல்ல பத்திரிக்கை ஆசிரியர் என்பதைத் தாண்டி அபார நகைச்சுவை உணர்வுள்ளவர் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

பெரும்பாலான நகைச்சுவைத் துணுக்குகள் மொழிபெயர்ப்பு சம்பந்தப்பட்டவையாக இருக்கிறது. சட்டென நினைவுக்கு வருவதைச் சொல்லி விடுகிறேனே.

"பத்துப் பாத்திரம் தேய்க்கிறவங்கன்னா யாரு ? " எனக் கேட்டாள் மிஸ்ஸ் ராக்ஃபெல்லர்.  "டென் வெஸ்ஸல்ஸ் தேய்கிறவா " என மொழிபெயர்கிறார் ஒருவர். "10 என்ன 100 வேணுமானாலும் தேய்க்கட்டுமே ! பிரச்சனையே இல்லை" என்றாள் மிஸ்ஸ் ராக்ஃபெல்லர்.

அடுத்ததாக ,  'உங்க ஊர் டாக்ஸ் வாய்ஸ் எப்படி இருக்கும் ? ' எனக் கேட்டவருக்கு  'ரொம்ப பிரமாதம். ஆனால் கொஞ்சம் நாய்ஸா இருக்கும் அவ்வளவுதான்'.   என்பதுபோன்ற பல ' கடி' களும்
கதையில் உண்டு.

தென்னிந்தியத் திருமண சங்கடங்களை இல்லை மன்னிக்கவும்
திருமண சடங்குகளை விரிவாக இதற்குமுன் யாரேனும் எழுத்தில்
பதிவு செய்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை.  சாவி இந்தக் கதையில் அதை நகைச்சுவையாக தெளிவாக பதிவு செய்திருக்கிறார்.

இன்று அமெரிக்கா இந்தியாவுக்கு கொல்லைப்புறமாக மாறி
உலகமே கைபேசியில் அடங்கிவிட்ட காலத்திலும் இந்தப் புத்தகத்தைப் படிப்பது புதிய அனுபவமாகதான் இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் இந்தக் கதையை ஒட்டி  ஒரு அமெரிக்க மாப்பிளைக்கும் தென்னிந்தியப் பெண்ணும் கல்யாணம் செய்வதுபோல ஒரு திரைப்படம் எடுப்பது கூட ஒரு நல்ல
முயற்சியாக இருக்கும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

கதையில் கல்யாணம் அமெரிக்காவில் பல வேடிக்கைகளுக்கு நடுவே நடந்தாலும் 50 ஆண்டுகளுக்கு முன்  நடந்த ஒரு வைணவ கல்யாணத்திற்கு போய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி வயிராறக் கல்யாண சாப்பாடு சாப்பிட்டு வந்த திருப்தியைக் கதை வாசகனுக்குத் தருகிறது. நேரமிருந்தால் கண்டிப்பாக வாசியுங்கள்.
மின்னூல் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அப்புற மென்ன?  ஜமாயுங்கள்.

Wednesday, April 12, 2017

ரஜினி, மலேசியப் பிரதமர் - சில ஸ்கோர்கள்

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மலேசிய பிரதமர் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று சந்தித்தார்"  எனும் தலைப்புச் செய்தியை  சமீபத்தில் நீங்கள் மேலோட்டமாக எங்கேனும்  வாசித்திருக்கலாம்.  இல்லை  "சென்னையில் விழா ஒன்றில் கலந்துக் கொண்ட மலேசிய பிரதமர் செல்லும் பாதைகள் முழுதும் அவரின் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன" எனும் செய்தி கண்ணில்பட்டிருக்கலாம்.

ரஜினியின் சந்திப்பு குறித்து கொஞ்சம் விசாரித்தால் , கபாலி படபிடிப்பிற்கு மலேசிய அரசு தந்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தேன்.  இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு
என ரஜினி  சொல்லியிருப்பார்.

ஆனால்,  ஒரு நாட்டின் பிரதமர் நடிகரை அவருடைய வீட்டில் போய் சந்திப்பது என்பதை ஒரு சாதாரண நிகழ்வாக  நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  இந்தச் சந்திப்பின் மூலம் ரஜினிக்கு என்ன லாபம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால், மலேசியப் பிரதமர் ரஜினியின் சந்திப்பால் சொந்த நாட்டில் சில ஸ்கோர்களைப் பெற்றிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

கடந்த ஆண்டு வெளியான "கபாலி "திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் மலேசிய 
தேசிய மொழியான பாஹாசா மலேசியாவிலும் வெளியானது உங்களுக்கு
நினைவிருக்கலாம்.  இப்போது ரஜினி மலேசியர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு நடிகராகிவிட்டார். அதனால்  இந்தச் சந்திப்பு மலேசிய ஊடகங்களில் கண்டிப்பாக
முக்கியத்துவம் பெற்றிருக்கும். முக்கியமாக அவருடைய அரசின் மேல் அதிருப்தியில் இருக்கும் மலேசியத் தமிழர்களிடமும் அரசு பற்றிய ஒரு நல்லெண்த்தை ஏற்படுத்தியிருக்கும். 

அதுமட்டுமல்லாமல், இந்த சந்தர்பத்தில் மலேசியர்களுக்கான இந்திய விசா கட்டணம் 145 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ள விவகாரமும்  அப்படியே அமுங்கிப்போகவும் வாய்ப்புள்ளது.  கூடவே, மலேசிய இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையிலான 'புளூபிரிண்ட்'  ஒன்றை தொடங்கப்போவதாக அவர் சென்னையிலிருந்து அறிவித்ததில் கூட அரசியல் இருக்கலாம். பார்க்கலாம்.

அதுபோல தமிழகத் திரைத்துறைக்கும் மலேசியாவுக்குமான தொடர்புகள் மிகநீண்டது. அது சம்பந்தமான சில விசயங்களை எனது வனநாயன் நாவலில் லேசாகத் தொட்டிருப்பேன். அதைப் பற்றி இன்னோரு சந்தர்பத்தில் எழுதுகிறேனே.

Wednesday, April 5, 2017

டெல்லியில் போராடும் விவசாயிகள் கோமாளிகளா?

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடடிருக்கும் தமிழக
விவசாயிகள் சிலர் கையில் மண்டைஒடு ஏந்தியபடி நிற்பது
போன்றதோரு படத்தை சிலர் முகநூலில் பகிர்ந்திருந்தனர்.

கூடவே அந்த விவசாயிகள்  கோமாளி கூத்தடிப்பதாக கருத்து தெரிவித்திருந்தனர். விவசாயிகளின் உணர்வுப்பூர்மான
போராட்டத்தை இப்படிக் கொச்சைபடுத்துபவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.

இந்தத் தருணத்தில் பரம்பரையாக விவசாயம் செய்துவரும் எங்கள் வீட்டில் பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

விவசாயத்திலும் சீசன் சமயங்கள் உண்டு அப்பொழுதெல்லாம்
வயலில் நிறைய ஆட்கள்  வேலை செய்வார்கள். அதற்கென
பற்றாக்குறையால் ஒரு அவசரத்துக்கு பக்கத்து வீடுகளில் கடப்பாறை, மண்வெட்டி போன்ற சாமான்களை இரவல் வாங்கும் பழக்கம் எங்களிடம் இருந்தது.

ஒருநாள் அப்படி இரவல் வாங்கிவர வீட்டில் வேலைபார்த்த ஒர் ஆளை அனுப்பினோம். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும்  நினைவில் இருக்கிறது.

"என்னங்க பொல்லாத சீசன்,  நம்ம வீட்டு வேலைக்கு நம்மகிட்ட சாமான் இல்லாம,  அடுத்தவீட்டுல போய் கையெந்துறது நல்லவா இருக்கு சொல்லுங்க ?.  அவங்க வீட்டுலயும் ஆளு தேளு வேலைபாக்காதா என்ன ? நாம கேட்டு, அவங்க இல்லனு சொன்னா என்ன பண்றது? நாம சுயம்பு மாதிரி தனிச்சு நிக்கனுங்க"

எனச் சொல்லி, "நீங்க என்ன வேணா நினைச்சுக்கோங்க, நா இரவல் கேக்க யார் வீட்டுக்கும் போக மாட்டங்க" என அழுத்தம் திருத்தமாக
சொல்லிவிட்டார்.

எங்களுக்கு பொட்டில் அறைந்தது போலிருந்தது.    அடுத்த நாளே நாங்கள் தேவையான உபரி சாமான்களை வாங்கிவைத்தோம் என்பது வேறு விசயம்.

அந்த அளவுக்கு நம்மூர் விவசாயிகள் தன்மானம் மிக்கவர்கள். எளிதாக சொல்வதென்றால் மானம், ரோசமுக்கவர்கள். யார் தயவும் இல்லாமல் விண்ணையும் மண்ணையும் மட்டும் நம்பும்
அசாத்திய தைரியசாலிகள். எதற்கும் துணிந்தவர்கள்.

ஆனால் இன்று நெருக்கடி தாளாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.  கடைசியில் அவர்கள் நொந்துபோய் வீதிக்கு போராட இறங்கியதும் துரதிஷ்டம்.

அவர்களை மண்டை ஓடு ஏந்த வைத்த அரசுதான் கோமாளி அரசாக
இருக்கமுடியும்.  அதுபோல அவர்களை  தலைநகர வீதிகளில் பரதேசியாக அலையவிட்ட நாம்தான் வெட்கப்படவேண்டியவர்களே தவிர அவர்கள் இல்லை.

Sunday, April 2, 2017

ஐடி ஊழியர்களைச் சுற்றி பின்னப்படும் குற்ற வலை

"ஐடி இஞ்சினியர்கள் சுத்தமா பொறுமை இல்லாதவனுங்க.
அவனுங்களுக்கு  மனசு கம்யூட்டர் போல வேலை செய்யுது,
வாழ்க்கையே  இண்டெர்நெட் வேகத்துல அவனுங்களுக்கு
தேவைப்படுது" என  ஐடி பெறியாளரகள் குறித்து அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்திருக்கிறார் பெங்களூரின்
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்.

இந்தத் தகவல்  "புளூம்பர்க் பிசினஸ் வீக்" (Bloomberg Businessweek) ல்
இந்தியப் பத்திரிக்கைகளில்  ஐடி பெறியாளர்களின் குற்றங்கள் திட்டமிட்டு  பூதாகரமாக்கபடுவது  தொடர்பான ஒரு கட்டுரையில்
வந்திருக்கிறது.

"இளம் பெண் பெறியாளர் கொலை" ,  "ஐடி ஊழியர் ஒருவர் ஓடும் வேனில் பலாத்காரம்",  "ஐடி துறையில் வேலை செய்த கள்ளக்காதலி"  போன்ற தலைப்புச்செய்திகளை நீங்களும் பார்த்திருக்க வாய்ப்புள்ளது.

இப்படி பெரும்பான்மையான குற்றங்களுக்கு ஐடி துறையை வலுக்கட்டாயமாக இழுப்பதன் உள்நோக்கம் என்ன ? இப்படி ஐடி என்றோ பொறியாளர் என்றோ தனித்துக் குறிப்பிட்டு எழுத
வேண்டியதன் அவசியம் என்ன ? அப்படி எழுதும் உள்ளார்ந்த மனநிலைக்கு என்ன  காரணம் ? என்பதை இந்தக் கட்டுரை அலசுகிறது.

கட்டுரைப் படி, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட  எல்லா இந்திய மாநிலங்களில் வெகுஜன மக்களைத் தாண்டி போலீசுக்கும் ஜடி துறைபற்றி நல்லதொரு அபிப்ராயம் சுத்தமாக இல்லையாம்.

(அவர்களின் பார்வையில்)  பெரும்பான்மையான நேரங்களைக் கணினியுடன் செலவிடும்  ஐடி மக்கள் தங்கள் நிஜ
வாழ்க்கையையும் அதே கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள் என்கிறார்கள்.  துரதிஷ்டவசமாக அவர்களின் விருப்பப்படி
வாழ்க்கை அமையாத பட்சத்தில் கொலைகூடச் செய்யத் தயங்குவதில்லையாம். மேற்கத்திய நாட்டுக் கம்பெனிகளுக்கு வேலைசெய்யும் இவர்கள் அதே சுதந்திர மனநிலையுடன் தனிப்பட்ட வாழ்வை அணுகுவதால் விவகாரத்து போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்களாம்.

சமயங்களில்  அவர்களுக்கு அலுவலகத்தில் இருக்கும் அதிகப்படியான மனஅழுத்தம் கூட இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டுவதாக ஒரு பொதுவான கருத்து மக்களிடம்
பரவலாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

குறைந்த வயதில் கைநிறைய சம்பளம், சொந்த வீடு, கார் என வாங்கிப் பொருளாதாரத்தில் வேகவேகமாக முன்னேரும்  ஐடி துறையினரை வெளியிலிருக்கும் சாமானியர்கள் ஒருவித பொறாமையோடே பார்கிறார்கள். அதன் வெளிப்பாடே மேலேச் சொன்ன பத்திரிக்கைத் தலைப்புச் செய்திகள் என்கிறது இந்தக் கட்டுரை.

இப்படிச் சாமானியர்களுக்கு  ஐடி மக்கள் மீது இருக்கும் ஒருவிதக் காழ்ப்புணர்ச்சியே ஊடகங்களில் ஐடி துறைகுறித்த தவறான சித்திரம் என அந்தக் கட்டுரை முடிகிறது.

இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது எனத் தெரியவில்லை.
ஆனால்,  என்னைப் பொறுத்தவரை ஐடி மக்களை யாரும் தேவதைகள் எனப் புகழவும் வேண்டும். சாத்தான்கள் என விரட்டவும் வேண்டாம். மாறாக  அவர்களையும் சகமனிதனாக நினைத்தாலே போதும்.