Thursday, May 24, 2018

கொடிவழி

மேற்கு நாடுகளில் family bible எனும் பெயரில் குடும்ப வரலாறு எழுதும் வழக்கமிருக்கிறது.

அதாவது ஒரு குடும்பத்தினர் வழிவழியாக தங்கள் குடும்பத்தின் வரலாற்றை
எழுதி ஆவணப்படுத்தி அடுத்தத் தலைமுறைக்கு பயன்படும்
வகையில் விட்டுச் செல்கிறார்கள்.

இப்படிச் செய்வதால் ஒரு குடும்பத்தின் மரபு,  பழக்க வழக்கங்கள்,வட்டார மொழி,  உணவு, உடை, முக்கிய நிகழ்வுகள்,
அன்றைய வாழ்க்கைமுறை போன்ற பல அரியதகவல்கள்  நூற்றாண்டுகள் கடந்து அடுத்தத் தலைமுறைக்குச் சென்றுசேர வாய்ப்பிருக்கிறது.

நம்மில் பலருக்கு நாம் ஏன் வரலாற்றை  அறிந்துகொள்ள வேண்டும் எனும் கேள்வி எழுவது  இயல்பான ஒன்றுதான். ஆனால்,  உண்மையில் வரலாறு சமூக, அரசியல் மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்கும், நம் சமூகம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.

இப்படிச் சேகரிக்கப்படும் முன்னோர்களின் பழைய புகைப்படங்கள், அவர்கள் குறித்த செய்தித்தாள் கத்தரிப்புகள், அவர்களின் கடிதத் தொடர்புகள், அவர்களைப் பற்றிய குறிப்புகள், பயன்படுத்தியப் பொருட்கள்  போன்றவைகூட தலைமுறைகளை இணைக்கும் பாலங்களாகவும்  அவர்களுடைய நினைவுகளைக் கிளரிவிடும் தூண்டியாகவும் இருக்கின்றன.

இதுகூட ஒருவகையில் டைரி எழுவதுவது போலதான். குடும்ப டைரி.
ஆனால், உண்மையில் அந்தத் தகவல்கள் அடுத்தத் தலைமுறைக்கு ஒரு பொக்கிசமாக இருக்கும்.

இப்படிச் சமூகத்தால் சிறிது சிறிதாக எழுதி கட்டமைக்கப்படும் எழுத்து ஒருநாள் ஒன்றுசேர்ந்து பேரிலக்கியமாக எழுந்து நிற்கும். முதல், இரண்டாம் உலகப் போரின் போது எளிய மனிதர்களின் கடிதப் போக்குவரத்து, டைரிக்குறிப்புகள், புகைப்படங்கள் போன்றவை கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆவணங்களாக இன்று  மேற்குலகில் எழுந்து நிற்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் போது நாஜி படைகளுக்கு அஞ்சி வீட்டில்
மறைந்து வாழ்ந்து இறந்த ஆன் பிராங்க் எனும் சிறுமி எழுதிய நாட்குறிப்புகள் உலகப்புகழ் பெற்றவை. அந்தத் தொகுப்பு உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  வாய்ப்புள்ளவர்கள் நெதர்லாந்தில் இருக்கும் அவருடைய வீட்டைச் சென்று பார்க்கலாம்
இல்லை அந்தத் தொகுப்பையாவது முடிந்தால் வாசித்துப் பார்க்கலாம்.
மனித உணர்வுகளின் ஆழம் புரியும்.

"நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டால், நீங்கள்
எங்கே போகவேண்டும் என்பதற்கு வரம்புகளே இல்லை " என்கிறார்
அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் பால்ட்வின் .

நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு மூன்று தலைமுறை தாத்தா, பாட்டி பெயர்களைச் சொல்லமுடிந்தால் பெரியவிசயம்.  அதையும்  மூதாதையர்களின் பெயர்களை அடுத்தத் தலைமுறைக்கு வைக்கும் வழக்கம் நம்மில் இருந்ததால்தான் சொல்லமுடிகிறது. மற்றபடி நமக்கு எதையும் ஆவணப்படுத்துவதில், பாதுகாப்பதில் எல்லாம் பெரிய ஆர்வமோ ஈடுபாடோ சுத்தமாக கிடையாது. நம் முன்னோர்களுக்குத் தரப்பட்ட கல்வி,
அன்றையச்  சூழல் கூட ஒருவிதத்தில் இதற்கு காரணமாக இருக்கலாம்.

இப்படி நமது வம்சாவளியைப் பற்றி பதிவு செய்வதை ஆங்கிலத்தில் ‘Geneological Tree’  என்றும்  தமிழில் "கொடிவழி" என்றும் சொல்கிறார்கள். இதுகுறித்து எழுத்தாளர் அருணகிரி "கொடிவழி" என்றோரு புத்தகமே எழுதியிருக்கிறார். கிடைதால் வாசித்துப் பாருங்கள்.

இந்தக் குடும்ப வரலாறு, கொடிவழி, வேர்களைத் தேடுவதெல்லாம் எல்லாம் ஒருபுறம். நமக்கு பல நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடங்களையும், வீடுகளையும் ஏன் வரலாற்றுச் சின்னங்களையும் கூட  எந்தவோரு குற்றவுணர்வும் இல்லாமல் இடிக்கவும் சிதைக்கவும் செய்யும் மனநிலைதான் இருக்கிறது. தமிழகம் முழுக்க பயணிக்கும் போதெல்லாம் இதை மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடெல்லாம் இருப்பதுபோலத் தெரியவில்லை

தனிநபர் என்றில்லாமல் அரசாங்கமே இதுகுறித்து  எந்தவொரு பிரக்ஞையும் இல்லாமல் இருப்பது துரதிஷ்டம்.  நம்முடைய அரசு  ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய கோயில்களையும் அங்குள்ள சிற்பங்களையும் பராமரிக்கும் விதத்தைப் பார்த்தால் இரத்தக் கண்ணீர் வடிக்கத் தோன்றுகிறது.

ஆனால், மேற்கு நாடுகளில் நிலை வேறாக இருக்கிறது. அங்கே எந்தவொரு சிறு பொருளையும் அதனை ஒரு வரலாற்றுச் சான்றாக மதித்துப் பாதுகாக்கும் மனப்பக்குவம்  மக்களுக்கே இருக்கின்றது. ஆனால், நமக்கோ அவை பற்றிய வருத்தமோ, கவலையோ ஏன் சிந்தனையோ துளிகூட இல்லை என்பது தான் உண்மை.

#மரபு_குடும்பவரலாறு

Saturday, May 19, 2018

அது என்ன ஜீ ?

சென்னையில் இருந்து வேலைசெய்யும் ஒரு தம்பிக்குக் கடந்தவாரம் வேலையில் கடைசி நாள். அதனால் மரியாதைக்காக பேசுவோம் என்று
அழைத்திருந்தேன்.

பேச்சுனுடே,  'திடீரென வேலைய விட்டு போறீங்க, என்ன விசயம் ?' என்று விசாரித்தால் புலம்பித்தள்ளிவிட்டார்.

அவருக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை.  வீட்டில்தான் பெண் பார்த்திருக்கிறார்கள்.  ஜாதகத்தைக் கேட்டுப் பொருத்தம் பார்த்த பெண் வீட்டார்.  'ஜாதகம் எல்லாம் பொருந்தி வருது.  ஆனால், அவரோட எக்ஸ்பீரியசுக்கு சம்பளம் குறைவா இருக்குனு பொண்ணு நினைக்கிறா.  வேற வேலை தேடிக்கிட்டால், மேல பேசலாம்' எனச் சொல்லி இருக்கிறார்கள்.

அந்தப் பெண்ணுக்கும் மென்பொருள் துறையில்தான் வேலையாம்.
தம்பிக்கும் பெண்ணைப் பிடித்திருந்ததால், அவர்கள் சொன்னபடியே ஒரே மாதத்தில் அலைந்துத் திரிந்து சென்னையிலேயே வேறு வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறார். இப்போது பெண் வீட்டை அனுகினால், பெண் இப்போது கல்யாணம் வேண்டாம் என்கிறாள் எனத் தட்டிக் கழித்துவிட்டார்களாம்.

'சும்மா இருந்த என்னை வேலை மாறவைச்சு இம்சை பண்ணிட்டாங்க ஜீ ' என்றார்.

'அது என்ன ஜீ ?' என்றேன்

'எல்லாரும் சொல்லாங்க. அதனால சொல்லிச் சொல்லி பழகிட்டுங்க'.

கொஞ்சம் கண்டிப்பாக 'அதெல்லாம் தமிழ்ல வழக்கம் இல்ல. சொல்லாதீங்க' 

'அது தமிழ் இல்லைங்களா ?.....' என இழுத்தவர், 'அப்ப சரிங்க இனிமே சொல்லல..' என்றார்.

பெண் வீட்டுக்காகப் புது வேலையைத் தேடிக் கொண்டவர். நாம் சொல்வதால் ஜீ போடுவதையும் நிறுத்திக் கொள்வார் என நம்புவோம்.

#அதுஎன்னஜீ

Tuesday, May 15, 2018

எழுத்தாளர் பாலகுமாரன்

எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு.

நமது சமகாலத்தில் வாழ்ந்த எழுத்துலக ஆளுமை பாலகுமாரனின் மறைவு வருத்தமளிக்கிறது.

அவருடைய படைப்புகளை முழுமையாக வாசித்தவன் இல்லை. ஆனால்,  இரும்புக் குதிரை, மெர்குரிப்பூக்கள், என்றேன்றும் அன்புடன்..
சில சிறுகதைகள் என நான் வாசித்தவரை பெண்களை, பெண்மையைக் கொண்டாடும் எழுத்து அவருடையது.

மயக்கமில்லாத கூர்மையான எழுத்துக்குச் சொந்தக்காரர்.  தன் படைப்புகளின் வழியாக வாழ்க்கையை  எழுதி பெண்மையின் தரிசனத்தை எழுத்தில் காட்டியவர்.   என்னைப் பொறுத்தவரை பாலகுமாரன் போல பெண்களை, பெண்மையைக் கொண்டாடி தமிழில் எழுதியவர்கள் யாருமில்லை எனலாம்.

ஒரு நல்ல மனிதராக தமிழில் எழுத்தை முழுநேர பணியாக எடுத்துக் கொண்டு  கம்பீரமாக நம்முன் வாழ்ந்துகாட்டியவர்.   தலைமுறைகள் கடந்து நிற்கும் அவருடைய எழுத்துக்குத் தமிழ் உலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.


படம்- நன்றி இணையம்.

Friday, May 11, 2018

முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு-அகரமுதல்வன்

டிஸ்கவரி புக்பேலசின் வெளியீடான அகரமுதல்வனின்முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு”  வழியாக ஈழத்து இலக்கியத்துக்குள் நுழைந்திருக்கிறேன்.
தொகுப்பில் மொத்தமாகப் பத்து சிறுகதைகள்இலங்கைப் போருக்குப்பின்னால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் இந்தத் தொகுப்பு முழுவதுமாக ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடக்கூடும் ரகமில்லை. நின்று நிதானித்துவாசிகப் பட வேண்டிய ஒன்று.
ஈழப் போர் கதைகளின் மைய நாதம்ஒரு தலைமுறை தாண்டிநடந்த போர். அதைஒட்டி ஒவ்வோரு கதையும் மனிதத்தை, மனித வாழ்வின் இருப்பை, அரசியலை வெவ்வேறு அம்சங்களில் பேசும் கனமானதொரு படைப்பு. தொகுப்பு அகத்தையும் புறத்தையும் சேர்ந்து பேசினாலும், அகம் நெகிழச்செய்கிறது.
ஒவ்வொரு கதையிலும் போரின் கொடுமையை, வலியை ஆர்ப்பாட்டமில்லாமல்  எழுத்தின் வழியே வாசகனுக்குக் கடத்திக்கொண்டே இருக்கிறார்.
"நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்தாபாவின்சிறிய கண்கள் மூடித்திறக்கின்றன. நினைவுக்கு துன்பம் பற்றியகவலையில்லை. அது இறந்த காலங்களையும் , நிகழ்காலங்களையும் கண்ணீரால் தொடர்புபடுத்துகிறது. … (பக்கம்-65)
எனும் வரிகளை வாசிக்கையில் மனதுக்குள் பல உணர்வலைகள் மேலெழும்பி மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறதுவாசிப்புதேர்ந்த கவிஞனுடன் கதைசொல்லியும் ஒரே ஒத்திசைவில் கைகோத்து எழுதிய உணர்வைத் தருகிறது.
திருவாளர் ஞானசம்பந்தன்கதையில் ஒரு மறக்கமுடியாத ஒரு உரையாடல்
ஜீவிதா, நாம் தமிழ்மொழி பேசக்கூடிய அகதி இனமா?
இல்லை நந்திதா, நாம் தமிழ்மொழி பேசுவதால் அகதி இனம்என்பதில் இருக்கும் உண்மை சுடத்தான் செய்கிறது.
அதுபோலப் போர்வலியை, வாதையை, காதலை எனச் சகலமானதையும் கவித்துவமாகச் சொல்லவேண்டும் எனும் உணர்வு எதுவுமின்றி  ஏதோ ஓர் உணர்வு ஆட்கொண்டு எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.
“…
நிலத்தின் வெளி முழுவதும் மின்மினிப்பூச்சுகளாய்க் குண்டுகள் வெளிச்சத்தோடு பறந்துதிரிந்தன. நம்மைக் காப்பாற்றிய மரங்கள் முறிந்து விழுந்தபடியிருந்தன. துவக்குகளைப் போல நள்ளிரவுகளும்யுத்ததிற்கானதே. ( பக்-57)
எனும் வரிகள் வழியாக யுத்தத்தை நம் கண்முன் நிகழ்த்திக்காட்டுகிறார். அமுதைப் பொழியும் நிலவே என இரவை  காதலியுடன் சேர்ந்திருக்க வேண்டிய இளைஞன் போர்முனையில் அவளைப் பிரிந்து துவக்குகளைப் போல நள்ளிரவுகளும் யுத்தத்திற்கானதே என்பது சங்ககாலத்தை நினைவு படுத்துகிறது.
“…
எனது கையினைப் பற்றியிருந்த அவள் விரல்களில் கசிந்த அன்பின் சங்கதிகள் விரியன்பாம்பைப்போல என்னைக் கொத்துகின்றன.
நான் சாவுக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட உயிரைச் சுமக்கும் உடலைக் கொண்டவன். அவள் உயிரும்என்னிடமே இருக்கிறது. நிலமதிபக்கம்-57″
இதையெல்லாம் வாசிக்கும் போது ஒரு மனிதனுக்குள் இத்தனை உணர்வுகளா? என மலைக்க வைக்கிறார். தொகுப்பில் அனுபவங்கள் எழுதப்படுவதால் அதில்  வழமையான சுவாரசியங்களை எதிர்பார்ப்பது நியாயமில்லை என என்னை நானே தேற்றிக்கொள்கிறேன். அதுபோலப் பல சொற்கள் தமிழாக இருந்தாலும்  ஈழத்து வழக்குச் சொற்களை புரிந்து கொள்வதில் தமிழ்நாட்டு வாசகர்களுக்குச் சிரமங்கள் இருப்பதால்அதற்கு  இணையான சொற்களை அந்தந்தப் பக்கங்களில் அல்லது பின்னுரையில் தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஐரோப்பாவில் வசிக்கும் ஈழத்து நண்பர்களின் உதவியால் நான் அறிந்துகொண்ட சில ஈழத்துச் சொற்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
சப்பாத்துக்கால்களால் அடித்தான்  – சூ (கால் பாதணி) அணிந்த கால்களால் அடித்தான்.
துவக்கு என்பது துப்பாக்கி
சன்னங்கள் எனில் ஷெல், துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுகள்
பெடியன் எனில்  ஆண் பிள்ளைப்பசங்க.
குசினி எனில்  சமையலறை (கிச்சன்)
அதுமட்டுமில்லாமல் அகரமுதல்வனின் எழுத்து மேலோட்டமாக இல்லாமல்வாசிக்கையில் வாசகனின் கவனத்தை முழுமையாகக் கோரும் எழுத்து.
எனக்கு ஈழத்து எழுத்தின் முதல் பரிச்சயம் என்பதால் கூட அப்படித் தோன்றி இருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தவறவிடாமல் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய தொகுப்பு.
முதல் பதிப்பு என்பதாலோ என்னவோ எனக்குப்  பல எழுத்துப்பிழைகள் கண்களில் பட்டன. அட்டையில்  “முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவுஎனச் சரியாக இருக்கும் ஒற்று நூலின் உள்ளே ஓவ்வோரு பக்கத்திலும் விடுபட்டு போனதே ஒரு பதமாக இருக்கும்.
இந்தக் கட்டுரை வல்லமை இதழில் வெளியாகி இருக்கிறது.
http://www.vallamai.com/?p=84751

*****
தலைப்பு: முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு
நூலாசிரியர்: அகரமுதல்வன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: 100
பக்கங்கள்:111
ISBN:978-93-8430-210-8