
கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் இருந்தபோது ஒரு நாள் மாலை போகலாம் என டக்கென முடிவெடுத்து குடும்பத்தோடு போய்
காலா பார்த்துவிட்டு வந்தோம். தலைக்கு டிக்கெட் 120 ரூபாய். நாங்கள் 7 பேர் போயிருந்தோம். மொத்த செலவை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். செலவு கணக்கு பேசும்போதே உங்களுக்குப் புரிந்திருக்குமே.
ஆமாம், படம் ஏமாற்றம்.
இன்னொரு விசயம். காலாவைத் திரையில் பார்ப்பதற்கு முன்பு நான் எந்த விமர்சனத்தையும் வாசித்திருக்கவில்லை, அது குறித்து யாரிடமும்
விவாதிக்கவும் இல்லை. அதனால் படம் குறித்த எந்தவித எதிர்பார்ப்பும் பெரிதாக இல்லை. அதுபோல படத்தில் ரஜினியைத் தவிர வேறு நட்சத்திரங்கள் யாரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால் படத்தைச் சரியாகவே அவதானிக்க முடிந்ததாக நினைக்கிறேன்.

படத்தில் ரஜினியின் அறிமுகமே எனக்கு ஏமாற்றத்தோடு தொடங்கியது. பின் அவருடையக் குடும்பம், அதைத் தொடர்ந்த காட்சிகள் என அறிமுகப்படுத்திய எல்லா கதாபாத்திரங்களும் செயற்கைத் தனமாக மனதிற்கு ஒட்டாமல் நின்றன. அதனால் மனம் தொடக்கத்தில் இருந்து படத்தில் ஒன்ற முடியாமல் திணறியது.
அதுபோல ரஜினி படத்தில் இராவண காவியம் படிக்கிறார். அவருடைய மகன் பெயர் லெனின் போன்ற பிரச்சாரங்களும் துருத்திக் கொண்டு நிற்கின்றன. இதெல்லாம் இயக்குநரின் குறைகள்.
ஆனால் ரஜினி தனக்கு தரப்பட்ட வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார். அவரைப் போல அவருடைய மும்பை மருகளாக வரும் இளம்பெண் நன்றாகவே நடித்திருக்கிறார். அவருக்கு வேறு நல்ல வாய்ப்புகள் அமைய வாழ்த்துகள்.
கபாலி படம் தந்த வெற்றியின் தாக்கமோ என்னவோ இதிலும் வயதான தம்பதிகளின் காதல், சோகப்பாடல் என பயங்கர இழுவை. துரதிஷ்டவசமாக படத்தில் ஒரு பாடல் கூட கவனிக்கும்படியாக அமையவில்லை. ரஜினியின் முன்னாள் காதலி என வரும் நடிகை யாரெனத் தெரியவில்லை. மைதா மாவு போல வரும் அவரையெல்லாம் ஆட, பாட வைத்து இயக்குநர் ஒருவழியாக படத்தின் முதல்பாதியை முடித்திருந்தார்.
இரண்டாம் பாதியில் படம் சூடுபிடிக்கிறது. அதிலிருந்து இருந்தே
படம் பார்க்கவந்திருக்கலாம் எனத் தோன்றும் அளவுக்கு முதல்பாதி படு செயற்கை. இரண்டாம் பாதியில் கூர்மையான வசனங்கள், திருப்பங்கள் என விறுவிறுப்பாக படம் நகர்கிறது.
நாம் இப்போது தானே படம் தொடங்கியிருக்கிறது என நிதானிப்பதற்குள்
டக்கென கிளைமாக்சோடு படம் முடிந்துவிடுகிறது. நல்ல கதைக்கரு. இயக்குநர் அவசரப்படாமல் மெனக்கெட்டிருந்தால் மிகச் சிறப்பாக செய்திருக்கலாம் எனத் தோன்றியது.
அதுபோல படத்தில் எளிய மனிதர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றும் தலைவன் எனும் வேடத்தைச் சிறப்பாக செய்யும் ரஜினி நிஜ வாழ்வில் அதைக் கொஞ்சமேனும் கடைபிடித்தால் பாராட்டலாம்.
மற்றபடி 1987ல் வந்த கமலின் நாயகன் படத்தை 30 வருடங்கள் கழித்து ரஜினிக்காக மாற்றி எடுப்பதில் இயக்குநர் தோல்வி அடைந்திருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.