Thursday, April 23, 2020

மாயக்குதிரை - எழுத்தாளர் தமிழ்நதி (ஆனந்தவிகடன் சிறந்த சிறுகதைத் தொகுப்பு)

ஒரு பதினைந்து பக்கச் சிறுகதை ஒரு வாசகனைத் தனது கால வாழ்வை, அந்த வாழ்வில் தான் சந்தித்த பல  மனிதர்களை, முக்கியத் தருணங்களைத் திரும்பிப் பார்க்க செய்கிறது என்றால்,  அதைவிட ஒரு சிறந்த சிறுகதைக்கு வேறு என்ன சிறப்பு இருந்துவிட முடியும்.

அந்த வகையில், எழுத்தாளர் தமிழ்நதியின் "மாயக்குதிரை" சிறுகதைத் தொகுப்பில் இன்று "கறுப்பன் என்றோரு பூனைக்குட்டி" சிறுகதையைக் கண்டடைந்தேன்.  அபாராம். அதுபோல, தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு கதை "மலைகள் இடம் பெயர்ந்து செல்வதில்லை".

பொதுவாக, தமிழ்நதியின் எழுத்து அன்பைக் குழைத்து நெஞ்சுக்கு நெருக்கமாய் நின்று உறவாடும் எழுத்து. பெண்களின் மனத்தை, அன்றாடங்களின் யதார்த்தங்களை நுட்பமான மொழியில் கடத்தும் ஆற்றல் கொண்ட உணர்வுப் பூர்வமான எழுத்து. அந்த எழுத்தில்  பல நாட்களுக்குப் பிறகு அவருடைய பார்த்தினியம் நாவலில் கண்ட வானதியை இன்று "கறுப்பனில்.." மனோகரியாகக் கண்டேன்.  

நான் " மாயக்குதிரை"  தொகுப்பில் மேலே சொன்ன இரண்டு கதைகளைத் தேடி கண்டடைந்தது போல நீங்களும் உங்களுக்கான கதைகளைக் தேடிக் கண்டடைய வாய்ப்பிருக்கிறது. வாய்ப்பிருந்தால்  "மாயக்குதிரை"  வாசித்துப் பாருங்கள்.

நூல்:  மாயக்குதிரை (சிறுகதைகள்)
நூலாசிரியர்: தமிழ்நதி
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: 150.00

*************

Sunday, April 12, 2020

கன்னிவாடி - எழுத்தாளர் க.சீ.சிவக்குமார்

என்னுடைய முதல் புதினமான(நாவல்)  "பங்களா கொட்டா" நூல் வெளியீட்டின் போது எழுத்தாளர் எனும் அடைமொழியுடன் எனக்கு அகநாழிகை பொன்.வாசுதேவன்  அறிமுகப்படுத்திய முதல் மனிதர் க.சீ.சிவக்குமார். 

அன்று
சிவக்குமார் எனது நூலை வெளியிட்டு சிறப்பாக  பேசினாலும்,  விழா களேபரங்களாலும் அவருடைய படைப்புகள் எதையும் வாசித்திராத காரணத்தாலும்  முதல் சந்திப்பில் அவரைப் பற்றிய பெரிய மதிப்பீடுகள் எதுவும் இல்லை. நகைச்சுவையாக பேசக்கூடிய நல்ல மனிதர் என்பதைத் தாண்டி வேறு எதுவும் மனதில் பதியவில்லை. அதற்குப் பிறகு முகநூல் தவிர எங்களுக்குள் சொல்லிக்
கொள்ளும்படியாக பெரிய தொடர்புகளும் எதுவும் எதுவுமில்லை.

ஆனால், பிப்ரவரி 2017இல் அவர் தனது வீட்டுமாடியில் இருந்து தவறி விழுந்து பெங்களூரில் உயிரிழந்த செய்தியை அறிந்தபோது அதிர்ச்சியாக
இருந்தது.  எதிர்பாராத மரணம்.  46 வயது என்பது கண்டிப்பாக சாகும் வயதில்லை. 

அவருடைய கன்னிவாடி சிறுகதைத் தொகுப்பை  (தமிழினி-மூன்றாம் பதிப்பு)  இப்போதுதான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  கிராமத்தில் இருந்து பிழைக்க வழியின்றி நகரத்தை நோக்கி தள்ளப்பட்ட வெள்ளந்தியான எளிய மனிதர் பற்றிய சித்திரத்தை வாசிப்பு அழகாக வரைந்து செல்கிறது.  இயல்பான மொழிநடையில் மனதுக்கு நெருக்கமான எழுத்து.

ஒரு பக்கத்தில் சுய எள்ளலோடும் பகடியோடும் நம்மை வாய்விட்டு வெடித்துச் சிரிக்கவைக்கும் மனிதரால் அடுத்துவரும் பக்கங்களில் கண் கலங்கவும் வைக்கக்கூடிய உணர்வுப்பூர்மான எழுத்து. 

ஒரிடத்தில் காலத்தின் நிலையற்ற தன்மையைச் சொல்லும்போது இப்படிச் சொல்கிறார். ...காலம் என்பது பாதத்தின் வடிவமாகவோ அல்லது ஓர் இழைப்புளியின் வடிவமாகவோ இருக்கவேண்டும். இழைப்புளியின் வெளியேற்ற இடுக்கில் நாட்செதில்கள் படலச் சீவல்களாய் காற்றேறிக் கரைகின்றன. ....

எவ்வளவு சத்தியமாக வார்த்தைகள். 
இப்படிக் காலம் கடந்த படைப்புகளைத் தந்துவிடும்  நம்பிக்கையில் தானே ஒவ்வொரு படைப்பாளனும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறான்
என நினைக்கத் தோன்றுகிறது.
சிவக்குமார் இலக்கியத்தைத் தாண்டி திரைப்படம், நடிப்பு என இன்னமும்  பல உயரங்களை அடைந்திருக்க வேண்டியவர் என பக்கத்துக்கு பக்கம் வாசிக்கும் போது தோன்றிக்கொண்டேயிருக்கிறது.

இரண்டாவது படம்- நன்றி இணையம்.





நூல்: கன்னிவாடி (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர்: க. சீ சிவகுமார்
வெளியீடு: தமிழினி

Saturday, April 4, 2020

மெக்ஸிகோ - இளங்கோ (பிரபஞ்சன் நினைவுப் பரிசு 2019)

மனித வாழ்வு என்பது பல உறவுகளின் சங்கமம்.  அந்த உறவுகள் தரும் அனுபவங்களின் வழியாகவே பெரும்பாலும்  ஒருவன்  இந்த உலகைப் புரிந்துகொள்கிறான். அந்த வகையில், காதலில் தொடர்ந்து தோல்விற்று துவண்டிருக்கும் ஒருவன் அழகிய இளம்பெண் ஒருத்தியின் ஊடாக
தன் வாழ்வைப் புதிதாக நுகரும் அனுபவமே எழுத்தாளர் இளங்கோவின் (கனடா) 'மெக்ஸிகோ' நாவலாகி இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் குறித்தான தனியான பார்வை என்று ஒன்று இல்லை என்றே சொல்லாம். பொது புத்தியில் பெண்கள் குறித்தான  ஒரு பார்வையே,  ஒரு சராசரி ஆணின் பார்வையாக இருக்கிறது. அந்தப் பார்வையுடன், ஒரு பெண்ணை நெருங்கும் ஒருவன் அவள் குறித்து தான் அதுவரை உருவகப்படுத்தியிருந்த பிம்பம் உடையும் போது உண்மையில் பேரதிர்ச்சி கொள்கிறான். அந்த அதிர்ச்சி சிலருக்கு காதலிக்கையில் வருகிறது. சிலருக்கு, திருமணத்திற்கு பின் வருகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து ஒருவன்  மீண்டு எவ்வாறு தன்னை வழி நடத்திக் கொள்கிறான் என்பதில்தான் ஒருவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருப்பதாக நினைக்கிறேன்.

அந்த வகையில், தனது உறவுகளை நிலையாக தக்கவைத்துக் கொள்ள இயலாத புலம் பெயர்ந்த ஒருவன் மெக்ஸிக இளம்பெண்ணின் காதலில்
பெரிய திட்டமிடல் எதுவும் இல்லாமல் இயல்பாக விழுவதைக் கவித்துவமாக இளங்கோ சொல்லியிருக்கிறார்.

அதற்காக  நான் இளம் இருளில் இருந்தேன். அந்த இளம் பெண்ணைப் பார்த்தவுடன் ஆயிரம் மின்னலைப் பார்த்தது போல் அதிர்ந்தேன் என்றெல்லாம் மிகைப்படுத்தி எழுதாமல்  அன்பு மலர்வதை மிக இயல்பாக சொல்லியிருக்கிறார்.  "இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் இருக்கும் ஒருவனுக்கு, ஒரேயொரு அணைப்புப் போதும். அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்க்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்". (பக்கம் -50) என்பதைக் கதையோடு வாசிக்கும் போது அந்த அனுபவதை நமக்குக் கடத்துவதில் மிகச் சிறந்த எழுத்தாளராக மிளிர்கிறார். அதுபோல, பல தருணங்கள். ஆசிரியருக்கு வாழ்த்துகள் !

ஆண்களும் பெண்களும் இரு வேறு உலகில் இருந்து வந்தவர்கள். அவர்களுடைய மதிப்பீடுகள் வேவ்வேறாக இருந்தாலும் இருவரும் இணைந்து வாழ்வது சாத்தியமே எனும் நம்பிக்கையை விதைக்கும் நூலாக இதைப் பார்க்கிறேன். நூலில்,  நாயகனின் மன இறுக்கத்தைச் சற்று குறைத்திருக்கலாமோ எனத் தோன்றும் தருணங்களை எல்லாம் "அவள்" தனது ஆளுமையால் இட்டு நிரப்புகின்றாள். அதுபோல, படைப்பில் பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் அழகிய உரையாடல்களால் அழுத்தம் பெறுகின்றன. தொடர்ந்து புலம் பெயர் இலக்கியங்கள் பல எழுதுங்கள் இளங்கோ !

காதலிப்பவர்கள் திருமணத்துக்கு பின் வரும் வாழ்வு குறித்த பெரிய அவதானிப்பு இல்லாமல் அந்தப் பந்தத்தில் நுழைவதும், திருமணபந்தத்தில் இருப்பவர்கள் அதற்கு முன்பான தனது வாழ்வு குறித்து மறந்து போவதுமே (அல்லது தேவையற்றதை நினைவில் வைத்திருப்பதும்) பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.

அந்த வகையில், எழுத்தாளர் இளங்கோவின் இந்தப் படைப்பு  ஆண் பெண் உறவைத்  தன் வழியில் மீட்டுருவாக்கம் செய்திருப்பதால் வாசிக்கவேண்டிய ஒரு படைப்பாகிறது.


நூல் : மெக்ஸிக்கோ
(2019-ல் பிரபஞ்சன் நினைவுப் பரிசு பெற்ற நாவல்)
ஆசிரியர் : இளங்கோ
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
விலை : ₹ 200.00

********************