கழுத்தை நெரிக்கும் அன்றாட லெளதீக இடைஞ்சல்களைத் தாண்டி கலை, இலக்கியம், எழுத்து எனப் பொதுவெளியில் செயல்படுவது என்பது சவாலான ஒன்று. அதை ஒரு வேலையாக, ஒரு பாரமாக நினைத்துப் புலம்புபவர்களுக்கு மத்தியில் முழுமனதோடும், தன்முனைப்போடும் தொடர்ந்து செயல்படுபவர்கள் யாராவது கண்ணில் பட்டால் அவர்களைப் பாராட்டுவதே சரியாக இருக்கும்.
அந்த வகையில் அமெரிக்காவின் அட்லாண்டா மாநகரில் இருந்து பல ஆண்டுகளாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர் ஜெயா மாறன். முகநூல் வழியாக எனக்கு அறிமுகமான ஜெயாவின் சொந்த ஊர் மதுரை. தொழில் முறையில் ஜார்ஜியா டெக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி செய்கிறார்.
பகுதி நேரமாகத் தமிழாசிரியர், மேடைப் பேச்சாளர், கவிஞர், நாடகக் கலைஞர் என தமிழின் பல தளங்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வரும் ஜெயாவின் பரந்துபட்ட ஆர்வம் ஆச்சர்யம் தருகிறது. அவருடைய நிகழ்ச்சிகளின் தொகுப்பு JeyaMaran என்னும் YouTube சேனலில் இருக்கிறது. நேரம் கிடைத்தால் பாருங்கள்.குறிப்பாக, சிறுவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் அவர் உணர்வோட்டத்தோடு கதை சொல்லும் நேர்த்தி அபாரம். உலகத்தரம்.
கையில் எடுத்த ஒன்றுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்த ஒருவரால் மட்டுமே இந்த அளவுக்குச் சிறப்பாக செய்யமுடியும். அந்த வகையில் ஜெயா மாறன் நம் பாராட்டுதல்களுக்கு உரியவர். வாழ்த்துகள் ஜெயா ! தொடர்ந்து இயங்குங்கள்.
நேரமில்லை.. நேரமில்லை.. எனப் புலம்பாமல் அவர் ஒளவையாரின் மூதுரையை ஜென் கதையோடு இணைத்து அழகாக சொல்லும் 3 நிமிட காணோலியைக் கீழே தருகிறேன் பாருங்கள்.