Sunday, April 23, 2023

ஜெஸிகா கிங் - குறித்து (7) - நீலப் பறவையின் ஒளி அழகாக இனிமையாக மெல்லப் படர்கிறது

ஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி என்பது தனது படைப்பு பலரைச் சென்று சேர்வது என்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக, அந்தப் படைப்பு அவர்களால் எந்த அளவு புரிந்து கொள்ளப்பட்டது என்பதும் மிக முக்கியமாகும்.

அந்த வகையில் 'ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்' மிகச்சரியாக உள்வாங்கப்பட்டு ஒரு விரிவான கட்டுரையாக இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
இந்த அறிமுகக் கட்டுரையை ஊடகவியளாலர் ப.சரவணவன் அவர்கள் Wow தமிழா தளத்தில் (நூலகம் பகுதி) எழுதியிருக்கிறார். சித்திரைத் திருநாள் பரிசாக ஏற்றுக்கொள்கிறேன். நெஞ்சார்ந்த நன்றி சரவணவன் !!
அந்தக் கட்டுரை கீழே...

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் ஒருவரின் அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கும்? அமெரிக்கக் கனவு இனியதா கொடியதா? அமெரிக்காவும் இந்தியாவும் எந்தெந்த வகைகளில் வேறுபடுகின்றன, எந்தெந்த வகைகளில் ஒன்றாக இருக்கின்றன? இந்தியப் பெருநகரங்களின் வாழ்க்கை எந்தளவுக்கு அமெரிக்க வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது? இந்த எல்லா கேள்விகளுக்குமான பதில்களை ஒரு நெடுங்கதையின் ஊடாகச் சொல்லும் நாவல், ஆரூர் பாஸ்கர் எழுதிய ஜெஸிகா (எ) ஜெஸிகா கிங் நாவல்.

அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவருக்கு அமெரிக்க வாழ் பெண்ணுடன் உருவாகும் காதலும் அதை ஒட்டிய நினைவுகளும் இந்தக் கதையின் களம். இதில் அந்தத் தமிழர் அமெரிக்க நிலத்துடன் எப்படி ஒன்றுகிறார், ஒன்ற முடியாமல் தவிக்கிறார், அமெரிக்கப் பெண்ணுடன் அவரது உறவு எப்படி நிகழ்கிறது, அந்த அமெரிக்கப் பெண்ணின் வாழ்க்கையை இவர் எப்படிப் பார்க்கிறார் என்பன போன்ற பரிமாணங்களில் விரிகிறது இந்த நாவல். வழக்கமான ‘Who done it?’ வகை ஒரு கிரைம் த்ரில்லராக ஆகிவிடக்கூடிய கதையை, நிலம், பண்பாட்டுக் கூறுகள், மனிதரின் இயல்புகள் மற்றும் பிறழ்வுகளைக் காட்டும் நெடுங்கதையாக மாற்றி இருக்கிறார் நாவலாசிரியர்.

புலம்பெயர்ந்த நாட்டில் ஒற்றைப் பெற்றோராக (Single Parent) இருக்கும் இந்தியத் தமிழ் ஆண் ஒருவரும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இன்னொரு ஒற்றைப் பெற்றோரான பெண் ஜெஸிகா கிங்கும் கதையின் முக்கியப் பாத்திரங்கள். இவர்கள் இருவரின் குழந்தைகள், நண்பர்கள் மற்றும் இவர்களுடன் ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசிப்போர் ஆகியோர் இக்கதையின் பிற கதைமாந்தர்கள். இவர்கள் அனைவரும் சமகாலத்தில் வாழ்பவர்கள் என்பதால், இவற்றில் பல கதைமாந்தர்களை நாம் தமிழ்நாட்டில் குறிப்பாகப் பெருநகரங்களில் நம்முடன் வாழும் பலரோடும் பொருத்திப் பார்க்க முடிவது, நம்மைக் கதையுடன் எளிதில் ஒன்றச் செய்கிறது.

குற்றத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை என்றாலும், கிரைம் திரில்லர்களைப் போல் கதையின் முடிவை நோக்கிய வெறும் பரபரப்பை உருவாக்குவதாக இந்நாவலின் கதையாடல் இல்லை. கதையில் இருக்கும் கதைமாந்தர் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பின்னணி, காரணம் மற்றும் கதைக்கான பங்களிப்பு இருப்பதால், விறுவிறுப்பான வாசிப்போடு, கதைமாந்தரின் பண்புகளையும் வாழ்வையும் பற்றிய புரிதல் கதையோடு சேர்ந்து வளர்கிறது.

ஜெஸிகா கிங்க்கும் கதை சொல்லியாக வரும் தமிழருக்கும் இடையிலான காதல்மிகு கணங்களில் காதல் கதையின் பண்புகள் முழுமையாக இருக்கின்றன. கதையில் நிகழும் குற்றத்தை ஆராயும் இடங்களில் கிரைம் த்ரில்லர் வகைமையில் கதை நகர்கிறது. கதையின் முடிவில் உணர்ச்சிகரமான, எதிர்பாராத சில நிகழ்வுகள் இந்த இரு வகைமையில் இருந்தும் மாறுபட்டு திகில் ஜானருக்கு மாறி வியப்பளிக்கிறது. இது வாசிப்பில் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைக்க உதவுகிறது.

அமெரிக்க வாழ் புலம்பெயர் தமிழரின் கதை என்றாலும், பல பாத்திரங்கள் அமெரிக்கர்களாக இருப்பதால் அவற்றின் உரையாடல்களை எப்படி எழுதி இருப்பார் என்ற எண்ணம் கதையை வாசிக்கத் தொடங்கியதும் உருவாகிறது. கதை தமிழரின் பார்வையில் நகர்வதால் பல இடங்களில் உரையாடல்களைத் தமிழில் எழுதி இருக்கிறார். சில இடங்களில் ஆங்கில உரையாடல்களைத் தமிழில் அப்படியே எழுதி, அந்த உடையாடலில் அமெரிக்கத் தன்மை கொண்ட விஷயங்கள் குறித்த பொருளை, பின்புலத்தைத் தமிழில் விளக்கி, இந்த மொழிச் சிக்கலை அருமையாகக் கடந்திருக்கிறார் எழுத்தாளர்.


என்னுடைய கடந்தகால கசப்புகளை ஏணிப்படியாக்கி, உன் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்க்கிறன்னு மட்டும் மட்டும் நீ நினைக்காதே…”, “நிலவொளியில் என் விருட்சத்தில் அமர்ந்து அந்த நீலகண்டப் பறவை விளையாட, இச்சையின் சூட்டில் அன்று இரண்டு வெவ்வேறு நிறங்கள் உருகிப் பொங்கிக் கலந்து வழிந்தோடியது” எனச் சில இடங்களில் கவித்துவம் மிக்க வரிகள் இடம்பெற்று வாசிக்கும் அனுபவத்தை உயர்த்துகின்றன.

பல இடங்களில் காட்சிப் படிமங்கள் நன்றாக விவரிக்கப்பட்டு, அந்தச் சூழலை உணர உதவுகின்றன.

மேலோட்டமாக காதல் கலந்த கிரைம் திரில்லர் போல் தோன்றினாலும் அதையும் தாண்டிப் பல விஷயங்களைப் பேசுகிறது ஜெஸிகா (எ) ஜெஸிகா கிங். மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளால் உருவாகும் மோதல்கள், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் மோதல்கள், மனிதருக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே எற்படும் மோதல்கள், மனிதருக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையே நிகழும் மோதல்கள் ஆகியவை கதையின் ஊடாக அழகாக சொல்லப்பட்டு இருக்கின்றன.

தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்கள் மனித வாழ்வை எப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்றன, இன்றைய பதின்ம வயதினர் தொழில்நுட்பத்தை நுகரும் மற்றும் தொழில்நுட்பத்தால் நுகரப்படும் விதம், மூத்த தலைமுறையினர் அதைப் பற்றி கொண்டிருக்கும் எண்ணங்கள், இந்தத் தொழில்நுட்பங்கள் வாழ்வில் எற்படுத்தும் நல்ல விளைவுகள் மற்றும் கேடுகள் ஆகியவையும் கதையின் ஊடாகப் பேசப்படுகின்றன.

கோவிட் காலத்தில் மானிட இனம் எதிர்கொண்ட பல சிக்கல்களும் நாவலில் விரிவாக பேசப்படுகின்றன.

கதையின் முக்கியக் கதாப்பாத்திரமான ஜெஸிகா, 21ஆம் நூற்றாண்டு பெண்களின் பிரதிநிதியாக இருக்கிறாள். தனது உடல் குறித்து பெருமை கொண்டவளாக இருக்கிறாள். உரிமைகளைக் குறித்து தெளிவு மிக்கவளாக இருக்கிறாள். அவள் எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகள், அன்றாட வாழ்வின் செயல்களுக்கு முரண்படாமல் இருக்கும் அளவுக்குத் தெளிவானவளாக, மன முதிர்ச்சியும் மன உரமும் கொண்டவளாக இருக்கிறாள். சுற்றுச்சூழலைப் பற்றிய ஆர்வமும் அக்கறையும் அறிவும் கொண்டவளாக இருக்கிறாள். இயற்கை மீதான அவளது அன்பு, நாய் பூனை போன்ற வளர்ப்பு விலங்குகளோடு மட்டுமே குறுகிப் போகாமல், அடுக்கு மாடிகளின் வெளிப்புறக் கண்ணாடிகளில் மோதி இறக்கும் பறவைகள், ஏரியில் காணக்கிடைக்கும் நீர்ப்பறவைகள், சூழலுக்குத் தொடர்பில்லாமல் வேற்று நிலத்தில் இருந்து அழகுக்காக மட்டுமே நட்டு வளர்க்கப்படும் மரங்கள் என்று பரந்த தன்மை கொண்டதாக இருக்கிறது.

ஜெஸிகாவின் சொல்லும் செயலும் நிலைப்படும் ஒரே நேர்க்கோட்டில் தெளிவாக இருக்கின்றன. உறவுகள் குறித்த சில முடிவுகள் தவறாகும்போது அவற்றில் இருந்து விலக அவள் தயங்குவதில்லை. அவளது வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வந்தபோதும் நாம் இப்படிப்பட்ட நபராக இல்லாமல் வேறு ஒருவராக இருந்திருக்கலாம் என்று அவள் வருந்துவதில்லை.

தனது உயிருக்கே ஆபத்தாகும் என்ற போதிலும் கொள்கை சார்ந்த தனது முடிவுகளில் இருந்து அவள் மாறவில்லை. எடுத்துக்காட்டாக உயிருக்கே ஆபத்து நேரும் எனும் நிலை வந்தாலும், அமெரிக்க துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக அவள் துப்பாக்கி வைத்துக்கொள்ளாமலே வாழ்கிறாள். ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஆணின் மதிப்பீடுகளை அவள் சார்ந்திருப்பதில்லை.


அவள் மிகவும் திட்டமிட்டு வாழ்க்கையை வாழத் தேவையானவற்றை மட்டுமே செய்யும் Schemer அல்ல. மனம் போன போக்கில் இலக்கற்று வாழ்பவள். எந்தச் சூழலிலும் தனது பொறுப்பை உணர்ந்து, தன்னை அறிந்து செயல்படுபவளாக அதில் தயக்கமோ பயமோ கூச்சமோ அற்றவளாக இருக்கிறாள். சவாலான சூழல்களைத் துணிவுடன் எதிர்கொள்கிறாள். வெற்றிகளை நிதானதோடு அணுகும் பக்குவமான மனமும் தோல்விகளை அஞ்சாமல் எதிர்கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவளாக இருக்கிறாள். அவ்வகையில் ஜெஸிகா, இந்த 21ஆம் நூற்றாண்டு பெண்களின் பிரதிநிதி.

நாவலின் குறிப்பிடத்தக்க இரண்டாவது சிறப்பு, கதை சொல்லிக்கும் ஜெஸிகாவுக்கும் இடையில் முகிழ்க்கும் காதல். எற்கனவே விவாகரத்து பெற்ற ஆணுக்கும் பெண்ணும் இடையில் உருவாகும் இந்தக் காதல், வெறும் உணர்ச்சிப் பொங்கல்களால் ஆனது அல்ல. தனிப் பெற்றோராக (Single parent) இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் இந்தக் காதல் மிகவும் நளினமானதாக, இயல்பானதாக, மெல்ல நிகழ்வதாக உள்ளது. இந்தக் காதல் ஒருவரை ஒருவர் சுரண்டுவதாக இல்லை, அதனால் சுரண்டலின் பொருட்டு உருவாகும் குற்ற உணர்ச்சிகள் இந்தக் காதலில் இல்லை. வெறும் சொல்லால், எண்ணங்களால், இலக்குகளால், கனவுகளால் ஆனது அல்ல இந்தக் காதல், ஆணும் பெண்ணும் இணைந்து செய்யும் செயல்களால் ஆனது. அவ்வகையில், மிகவும் மனமுதிர்ச்சி பெற்ற இருவரின் காதலாக இந்தக் காதல் இருக்கிறது. அந்தக் காதலை உடல் சார்ந்த, உணர்ச்சி சார்ந்த விவரணைகளால் நிரப்பாமல், காதல் மிகும் கணங்களைக் கவித்துவமாக எழுதிக் காட்டி இருப்பது எழுத்தாளரின் சொல்முறையின் சிறப்பு.

நாவலின் தொடக்கத்தில் பரந்த வெளியில் எங்கோ ஓர் நீலப் புள்ளியாகத் தெரியும் ஜெஸிகா, கதையின் போக்கில் நெருங்கி நெருங்கி நீலப் பறவையாகி பிரம்மாண்டம் கொண்டு, ஒவ்வொரு கதாப்பத்திரத்தின் மீதும் வெளிர் நீல ஒளியாகப் படர்கிறாள். நாவலை வாசிக்கும் நம் மீதும் அந்த நீலப் பறவையின் ஒளி அழகாக இனிமையாக மெல்லப் படர்கிறது.

ஜெசி (எ) ஜெஸிகா கிங்
ஆசிரியர்: ஆரூர் பாஸ்கர்
விலை: ₹330
வெளியீடு: எழுத்து பிரசுரம்

ஆன்லைனில் புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

இந்தக் கட்டுரையின் சுட்டி Link

Sunday, April 2, 2023

வனநாயகன் குறித்து-28 (இகோ-டெரரிசத்தையெல்லாம் தொட்டிருக்கிறார்)

அமெரிக்க வாழ் மருத்துவர் மோகன் அவர்களுடைய வாசிப்பனுபவம். 

வணக்கம், தங்களுடைய வனநாயகன்-மலேசிய நாட்கள் நாவல் வாசித்தேன். இரசித்தேன். சைபர் செக்கியூரிட்டி, இன்டெர்நெட், இகோ-டெரரிசத்தையெல்லாம் (Eco-terrorism) தொட்டு எழுதியது சிறப்பு. வாழ்த்துகள் !! 


(மருத்துவர் படத்தில் வலதுபுறத்தில் இரண்டாவதாக நிற்கிறார். நன்றி !)


*நாவல்*      -வனநாயகன்.       மலேசியநாட்கள்

*ஆசிரியர்* -   ஆரூர்பாஸ்கர் 
*பதிப்பகம்*  - கிழக்குப்பதிப்பகம். 
*விலை*   -ரூ. 275.

புத்தகத்தை வாங்க

https://dialforbooks.in/product/9788184936773_/