Wednesday, December 9, 2015

2015 தீபாவளி கலை நிகழ்ச்சி -டண்டனக்கா


இங்கே அமேரிக்காவில் தென் ஃபுளொரிடா நிலப் பரப்பில் மிகப் பெரியது தான். ஆனால் தமிழர்களின் அடர்த்தி எனப் பார்த்தால் குறைவே.  அட்லாண்டா,சான் ஃபிரான்ஸிஸ்கோ போன்றவற்றுடன் எண்ணிக்கையில் ஓப்பிட்டால் மிகச் சொர்ப்பம் தான். நான் வசிக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குஜராத்தவர்கள் தான் அதிகம்.

சரி, விஷயத்துக்கு வருவோம். கடந்த வாரம் சனிக்கிழமை தென் ஃபுளொரிடா தமிழ்ச் சங்கம் நடத்திய 2015ம் ஆண்டுக்கான தீபாவளி கலை நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம்.   கடந்த வருடத்தை விட இந்த வருட நிகழ்ச்சிகளில் பல மாற்றங்களை பார்க்க முடிந்தது. அதிலிருந்து சில துளிகள்.

ஆங்கிலத்தில் சொல்வது போல முதலில் நல்ல விசயங்கள் (Good things First).

* கடந்த வருடம் போல இந்த வருடமும் சுதாகர் அருமையாக பாடி எல்லோர் மனங்களையும் வென்றார்.  அவருக்கு இணையாக இந்த வருடம் ராதாகிருஷ்ணனும்,  அனிதா ஜோசபும். வாழ்த்துக்கள்!!

* நல்ல இரவு உணவு உபசரிப்பு. குறை ஒன்றும் இல்லை எனச் சொல்லத் தோன்றியது. அதிலும் அந்த இனிப்பு ! ஏதோ, ஹைதெராபாத் வகையராவாம். வாழ்க !

* ஆர்வத்துடன் பலர் கலந்துக் கொண்டனர். மற்றுமின்றி சில பங்கேற்பாளர்களின் கடின உழைப்பு அசர வைத்தன. வாழ்த்துக்கள்! குறிப்பாக, குட்டிப்பையன் ஓருவனின் ஆட்டம் (டண்டனக்கா?) அசத்தல்.

மற்ற முக்கியமான விசயங்களுக்கு வருவோம்.

* முதலாக வரவேற்புரை- வருடத்துக்கு ஓருமுறை நடக்கும் இந்த பெரிய விழாவுக்கு, வழங்கப்பட்ட முன் தயாரிப்பற்ற வரவேற்புரை ஓன்று அல்லது இரண்டு நிமிடங்களைத் கூடத் தாண்ட வில்லை. இங்கே 300 பேர் என்பதே பெரிய எண்ணிக்கை. அப்படி இருக்கும் பட்சத்தில் பார்வையாளர்களின் கவனத்தை வரவேற்புரையில் ஈர்க்கத் தவறிவிட்டனர்.

 *நிகழ்ச்சி ஓருங்கிணைப்பு - அல்லது Coordination. சரியாக தொகுத்து வழங்கப்படாத நல்ல நிகழ்ச்சி கூட பார்வையாளர்களால் கவனிக்கபடுவதில்லை அல்லது அவர்களுக்கு மனநிறைவாய் இருப்பதில்லை.

*இந்த முறை சங்கத்தின் பதவியில் இருக்கும் அனைவருக்கும் பேச, தொகுத்துவழங்க வாய்ப்பு வழங்கியிருந்தார்கள். நல்ல முயற்சி தான். ஆனால் 'நிகழ்ச்சி ஓருங்கிணைப்பு' என்பது ஓரு கலை. அதற்கு நிறைய பயிற்சி தேவை என்பதை இப்போது அனைவரும் புரிந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

*உதாரணமாக, நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் என்பதைத் தாண்டி நிகழ்ச்சி நடக்கும் போது கூட சிறுசுகள் விளையாடியபடியும், பெருசுகள் செல்லில் நோண்டியபடியும் அல்லது பக்கத்தில் பேசியபடியும் இருந்தனர். மேடையில் தோன்றிய நல்ல திறமையான பலரை இதனால் கவனிக்க இயலவில்லை. 

*ஓருங்கிணைப்பு குறைபாடு என மேலே சொன்னதை சுத்தமா ஓதுக்கவும் முடியவில்லை. பெற்றோர்களும் கொஞ்சம் யோசிங்க,  இதே விஷயத்தை வெளியே ஓரு திரை அரங்கில் செய்வோமா?. தமிழ் நிகழ்ச்சின்னு கூடுதல் முன்னுரிமை எடுத்துக் கொள்கிறோமா?

*நிகழ்ச்சி நிரலின் முதல் பக்கத்தில் தப்பான வருடத்தை அச்சடித்ததிலிருந்து பல குளறுபடிகள் இருந்தன. அதன் உச்சமாக நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓரு பெண்கள் குழுவை மேடையில் அறிமுகம் செய்ய, வந்து ஆடியதோ ஆண்கள் குழு.

*விருது வழங்கும் நிகழ்ச்சியில் என்ன போட்டி, எப்போது நடந்தது, யாருக்கு, எதற்காக விருது ? ஓன்றும் பார்வையாளர்களுக்கு புரிந்த மாதிரி தெரியவில்லை. மின்னல் மாதிரி அந்த முக்கிய நிகழ்வு நடந்து முடிந்தது. அந்த நிகழ்வு வென்றவரை வாழ்த்தவும், கலந்து கொள்ளாதவர்களை
ஊக்கப்படுத்துவதாகவும் இருக்க வேண்டாமா. நேரமின்மை என்பதால்... 

*நிகழ்ச்சியில் சென்னை அடர் மழை நிவாரணத்துக்கு நிதி சேகரிப்பதாக அறிவிப்பு செய்தார்கள். அதற்காக ஓரு விண்ணப்பத்தையும் கூட வாசலில் வைத்திருந்தனர். ஆனால், விழா முடிந்ததும் பலர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை என்ன செய்வது , யாரிடம் கொடுப்பது எனத் தெரியாமல் குழம்பி அதை வெறுமனே அங்கேயே வைத்துச் சென்றதைப் பார்க்கையில் மனது வலித்தது.

ஓருவரை பொறுப்பாளராக நியமித்திருந்து, நிகழ்ச்சியில் சரியான முறையில் followup செய்திருந்தால் ? 300 பேர் ஓன்றாகக் கூடிய இடம். We lost a golden opportunity to raise the fund. for sure!!. ஆங்கிலத்தில் எழுதினால் நேரடியாக போய் சேராதா என்ற சின்ன ஆசைதான்.

இதேல்லாம் நடந்து, எழுதிக்கொண்டிருக்கும் நேரத்திற்கு முன்பே அதாவது கடந்த சனிக்கிழமை அன்று காலையிலேயை  மத்திய ஃபுளோரிடா முத்தமிழ்ச் சங்கத்தின் நிவாரணப் பொருட்கள் சென்னை மக்களுக்குச் சென்று சேர்ந்திருந்தது. நன்றி, வாழ்த்துக்கள் ஃஓர்லாண்டா மக்களே! அந்த படம் இங்கே. ( நன்றி : நண்பர் விஜய செந்தில்)

காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - யாரோ சொல்லக் கேள்வி.


*நான் கேட்டவரை மொத்தமாக திட்டமிடப்பட்ட  20 நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தவிர்த்து வந்த 'நீல மயில் மீது' எனும் முருகன் பக்திப்பாடல் மட்டுமே சினிமா சம்பந்தப்படாதது.

 *தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் பத்திரிக்கைகளிலும், டிவியிலும் திட்டமிட்டு பரப்பப்படும் சினிமா. கடல் தாண்டி வந்ததில் ஓன்றும் ஆச்சர்யமில்லை தான். ஆனால் அதுவும் அனைத்தும் 'குத்து' பாட்டு ரகமாகத்தான் இருக்க வேண்டுமா ?

*அந்த பாடல்களிலிருக்கும் சில வரிகள் தாங்க முடியவில்லை. 'பல்லாவரம்..' ன்னு ஏதோ ஓரு பாட்டுக்கு ஆடினாங்க. அதுல ஓரு வரி வருது 'நாளேல்லாம் தண்ணியடி'ன்னு. பக்கத்துல விவரம் புரியாம விசாரிச்சா. சென்னையில தண்ணி கஷ்டமா இருக்கச்ச எழுதியிருப்பாங்கன்னாரு. 'சரி' ங்கறதா இல்ல 'சிரி'க்கிறதான்னு புரியல.

*சிறுவர்களை தவிர்த்து விட்டு பார்த்தாலும் நடனமாடிய குடும்ப பெண்களும் அந்த மாதிரியான பாடலைதான் தேர்வு செய்திருந்தனர்.  அவர்களின் உழைப்பு ஆபாசமற்ற அந்த நடனத்தில் தெரிந்தது.  கண்டிப்பாக அதை எதாவதோரு தமிழ் நாட்டுப்புற பாடலுக்கு பயன்படுத்தியிருக்கலாம்.

அமேரிக்காவில் இருக்கும் குழந்தைகளுக்கு நாமாவது நல்ல விஷயங்களை அறிமுகப்படுத்துவோமே. குத்துப் பாடலுக்குதான் சூப்பரான பல சிங்கர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களே. தமிழ் நாட்டுப் பாடலும் துள்ளலிசையே, அது எந்த விதத்திலும் குத்துப் பாடல்களுக்கு குறைந்ததில்லையே.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன,  என்று நினைத்துப் பார்க்கிறேன். தமிழர் பண்பாட்டை,பெருமையை காக்கும் நிகழ்ச்சியா என்றால் கண்டிப்பாக இல்லை. ஆடிப் பாடி, மகிழத்தான் இந்த கொண்டாட்டங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், முன்பேல்லாம் திபாவளி, பொங்கல் போன்றதோரு  கொண்டாட்டங்களில் இந்த 'துக்கடா' க்கள் ஓன்று, இரண்டு கண்டிப்பாக இருக்கும். சமீபகாலங்களில் ? எல்லாமே வா ?

ஆங்கிலத்தில் சொல்வது போல் இதுதான் New Normal ?? அதற்கு தமிழ் சங்கங்கள் துணைதான் போக வேண்டுமா ?  நிர்வாகத்தினர் சிந்திக்க வேண்டும்.

மற்ற அமேரிக்க தமிழ்ச் சங்கங்கள் எப்படி இதை எதிர்க் கொள்கிறார்கள் ? பிரத்தியேகமாக Item Songs நிகழ்ச்சி? தெரிந்தவர்கள் உங்கள் கருத்துகளை பதிலிடுங்கள்.

கடந்த வருட நிகழ்வின் போது எழுதிய  இந்த பதிவில் பழசு இப்படி எழுதியிருந்தேன்.

"நிகழ்ச்சி நடந்த இடம் என் வீட்டில் இருந்து சுமார் 80 மைல், ஏறக்குறைய 130 கி.மீ. ஆனால் கலைநிகழ்ச்சிகள்  தந்த உற்சாகத்தில் திரும்பி வருகையில் நள்ளிரவிலும் பயணம் களைப்பின்றி இருந்ததென்னவோ உண்மை."

துரதிஷ்டவசமாக, இந்த வருடம் நான் மிகக் களைப்பாக உணர்ந்தேன்.

குறிப்பு:: இது நான் பார்த்து, சிலர் சொல்லக் கேட்ட என்னுடைய சொந்த கருத்து மட்டுமே. நம்முடைய பங்குக்கு ஓரு சிறு கல்லை நகர்த்த முயற்சிக்கலாம் என்று . :)

No comments:

Post a Comment