Google+ Followers

Sunday, March 6, 2016

பங்களா கொட்டா - நூல் வெளியீட்டு விழா

அன்றும் இன்றும் காதலர் தினமெல்லாம் எனக்கு மற்றுமொரு நாள் போலத்தான். ஆனால் இந்த வருட காதலர் தினம் முக்கியமாகிவிட்டது. அதற்கு காரணம் எனது புத்தகவெளியிட்டு விழா.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் எனது முதல் புதினம் (நாவல்) "பங்களா கொட்டா" வெளியிடப்பட்டது.

நூலை வெளியிட்டவர் கவிக்கோ ஞானச்செல்வன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டவர்கள் எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மற்றும் வான்மதி (ஆசிரியர்-பாவையர் மலர்)

அந்த அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு:
விழாவினை பற்றி பார்க்கும் முன் நாவலை பற்றிக் கொஞ்சம் -  (பின் அட்டையில் இருந்து) வாழ்க்கையில், வாழ்வதும், தாழ்வதும் இரு வேறு துருவ நிலைகள். ஒன்றுக்கொன்று எதிரான இந்நிலைகளை ஒரு வாழ்க்கையில் தன்னிச்சையாகச் சந்திக்க நேர்வது துயரம். அது, செழித்து வளர்ந்த நிலம் வறண்டு வெடிப்புற்றுப் பாளம்பாளமாகப் பிளந்து கிடப்பதைப் பார்ப்பதற்கு ஒப்பானது. ஒரு பெரும் கனவை நனவாக்கிவிடத் துடித்து, வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவனின் கதைதான் ‘பங்களா கொட்டா’. இந்த நாவலின்  கதைக் களம் தஞ்சை மண்.


பங்களா கொட்டாவிற்கு பிரான்சில் வசிக்கும் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அற்புதமானதொரு அணிந்துரை தந்துள்ளார்.

நூலை வெளியிட்டவர் கவிக்கோ ஞானச்செல்வன். முதல் பிரதியை பெற்றுக் கொண்டவர்கள் எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மற்றும் வான்மதி (ஆசிரியர்-பாவையர் மலர்)

விழாவில் இருந்து சில துளிகள்:

மாலை 6 மணி என அறிவித்திருந்தாலும், சென்னைப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு 7 மணி அளவில் விழா துவங்கியது.(மேலே படத்தில் இடமிருந்து டிஸ்கவரி வேடியப்பன், அகநாழிகை பொன் . வாசுதேவன், கவிகோ, ஆரூர் பாஸ்கர், எழுத்தாளர் சிவகுமார், ஆசிரியர் வளர்மதி)

எழுத்தாளர்  க.சீ.சிவகுமார் அகநாழிகை மூழம் எனக்கு அறிமுகமானவர்  ‘கன்னிவாடி’ உள்ளிட்ட பல சிறுகதை நூல்களின் ஆசிரியர். இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவருபவர்.

பாவையர் மாத இதழை தொடர்ந்து வெற்றிகரமாக வெளியிட்டுவரும் ஆசிரியர் வான்மதியும் அகநாழிகை மூழம் எனக்கு அறிமுகமானவர்தான்.

கவிக்கோ  ஞானச்செல்வன் அவர்கள் எனது மேல்நிலைப்பள்ளி இறுதி வகுப்பில் தமிழாசிரியர். 'பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!' எனத் தொடர்ந்து பேசியும், ஊடகங்களில் எழுதியும் வருபவர். அவரை பற்றி தனியாக ஓரு பதிவு எழுதுமளவுக்கு பல்லாண்டுகளாக அரும் தமிழ்ப் பணி ஆற்றிவருபவர்.

சிவக்குமார் கதைச் சுருக்கத்தையும் அதன் முக்கிய நிகழ்வுகளையும் தொட்டுக் காட்டினார். எனக்கு சிவக்குமார் நேரடியாக அறிமுகம் இல்லாவிடினும்,  நாவலில் ஓரு ஆன்மா இருப்பதை உணர்ந்தேன் என அவர் குறிப்பிட்டது நல்ல உணர்வாக இருந்தது.

கவிக்கோ அவர்கள் நூலை வெளியிட்டு  அருமையான  மதிப்புரை செய்தார். கவிக்கோ அவர்கள் பாராட்டியது வசிஷ்டர் வாயால் வாழ்த்து பெற்றது போல இருந்தது. அவர் பேச்சினுடே சில பிழைகளையும் சுட்டிக்காட்டினார். திருத்திக் கொள்வோம்.

கவிக்கோவின் மாணவன் எனச் சொல்லிக் கொள்வதே பெருமை. அதிலும் அவர் கரங்களால் எனது நூல் வெளியிடப்பட்டது என்பது  'ராஜபாட்டை ' போல. அவருக்கு நன்றிகள் பல.

விழாவின் நிறைவாக எனது ஏற்புரையில்  'அந்த காலம் நன்றாக இருந்தது ' எனும் கவிஞர் மகுடேஸ்வரனின் கவிதையை மேற்கோள் காட்டி, இந்த நாவலின் பின்புலத்தைப் பற்றி பேசினேன்.

விழாவில் கவிகோ, எழுத்தாளர் சிவகுமார் மற்றும் பொன். வாசுதேவன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டபோது எடுத்த படங்கள் கீழே.

கவிகோ - இந்த எழுத்தாளருக்கு (!)  பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தபோது.


விழாவில் கலந்துக் கொண்டுச் சிறப்பித்த அனைவரும் எனது நெஞ்சார்ந்த நன்றிக்குரியவர்கள்.

இரண்டு எழுத்தாளர்களை எனக்கு அறிமுகம் செய்து விழா ஏற்பாடுகளையும் மிகக் குறுகிய நேரத்தில் செய்த அகநாழிகை பொன்.வாசுதேவனுக்கு மனமார்ந்தநன்றிக்குறியவர்கள்.

இதுப் போல பல நூல் வெளியீடுகளைத் தொடர்ந்து டிஸ்கவரி புத்தக நிலையத்தில் செய்கிறார்கள். வாய்ப்பு உள்ளவர்கள் முடிந்தால் எட்டிப் பார்க்கலாம். ஏதேனும் ஓரு உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் அல்லது பிரபல கவிஞர்களைப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

விழாவிற்கு சென்னையிலிருக்கும் நண்பர்களை  மட்டும் அழைத்திருந்தேன். இலக்கியவிழா என யோசிக்காமல் பெரும்பான்மையானவர்கள் தைரியமாக வந்திருந்து சிறப்பித்தனர். ஓரு இலக்கிய விழாவிற்கு போதுமானதோரு கூட்டமாக இருந்தது. அவர்கள் வாழ்க!.

இந்த புத்தகம் சென்னை கே.கே நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது. வாய்பில்லாதவர்கள் ஆன்லைனிலும் வாங்கலாம். புத்தகத்தை அமேரிக்காவில் இருந்தும் வாங்கலாம்.

முடிந்தால் இதன் முகநூல் (Facebook) பக்கத்திலும் உங்கள் விருப்பத்தை (LIKE) இடுங்கள்.

பங்களா கொட்டா நாவல் தலையணை அளவு எனப் பயப்படத் தேவையில்லை. மொத்தமாக 128 பக்கங்கள் தான். தொடர்ச்சியாகச் சில மணி நேரங்களில் வாசித்துவிட இயலும். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். நன்றி.

No comments: