Sunday, April 3, 2016

திரும்பிப் பார் -திருப்பூர்-1

எனது இந்திய பயண அனுபவங்களை ஓரு தொடராக எழுதி வருகிறேன். அதன் இணைப்புகள்  பகுதி-1, பகுதி-2, பகுதி-3.

சென்னையிலிருந்து சொந்த ஊரான திருவாரூரில் இருந்து அடுத்தப் பயணம்
திருப்பூர் நோக்கி ரயிலில் .

திருப்பூரில் இறங்கும் போது மணி காலை ஐந்தாகியிருந்தது. முன்பே ஊரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தால்  நான் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன். ரயில் நிலையத்தின் வெளியே வந்த்தும் பார்த்த முதல் சிலை திருப்பூர் குமரனுடையது. இன்று திருப்பூருக்கு அந்தக் குமரனை தாண்டி பல அடையாளங்கள்.

திருப்பூரில் உறவினர் ஓருவரை பார்க்கும்  வேலையிருந்தது. அப்படியே கிடைத்த ஓரு நாளில் ஊரையும் சுற்றிப் பார்த்து விட்டேன்.  திருப்பூர் தொழில் நகரம். பின்னலாடை தாயாரிப்பில் முதலிடம் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

திருப்பூரில் பின்னலாடை எத்தனை வருட பாரம்பரியம் எனத் தெரியவில்லை. ஆனால் அங்குள்ள ஓவ்வோரு வீட்டிற்கும் ஏதோ ஓரு விசயத்தில் இந்தத் தொழில் சம்பந்தப்பட்டிருக்கிறது. நான் சென்ற உறவினர் வீட்டில்கூட மூன்று சகோதரர்களின் முழுநேரத் தொழில் பின்னலாடை ஏற்றுமதியே.

நான் தங்கியிருந்த உறவினர் வீடு  திருப்பூர் நகரின் மையத்திலிருந்து ஏறத்தால ஆறு ஏழு கிலோமீட்டர் ஊருக்கு வெளியே இருந்தது. அந்த வீட்டைச் சுற்றி தோட்டம் , தென்னைகள், மோட்டார், பெரிய கிணறு என குளுமையாக இருந்தது. அங்கே நான் கவனித்த இன்னோரு விசயம் தோட்டத்திலிருந்த சின்ன கோயில். வீட்டின் குலதெய்வமாக இருக்குமா? சரியாகத் தெரியவில்லை. இப்படி ஓவ்வோரு வீட்டிலும் தெய்வம் இருப்பதாகச் சொன்ன ஞாபகம்.

அந்த வீட்டுக்குப் போகும் வழியில் நான் கவனித்த இன்னோரு விசயம் விவசாயம். திருப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்கள் - பம்புசெட், தென்னை, விவசாயம் என இன்னமும் ஊர் நல்ல செழுமையாகத் தான் இருக்கிறது. ஆனால் சாயப்பட்டறைகளால் நீராதாரங்கள் மாசாகி நிலத்தடி நீரும் கெட்டுவிட்டதாக முன்பு எப்போதோ படித்த நினைவு. அப்போது சுத்திகரிப்பு, மறுசுழற்சி என்று பேசிக் கொண்டிருந்தனர். நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த பிரச்சனைக்கு ஓரு நிரந்தரத் தீர்வு கண்டார்களா எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

நகரின் மையப்பகுதியில்  நான் கவனித்த முக்கியமான இன்னோரு விசயம் வெயில். கோவைக்கு அருகில் இருப்பதால் கோவையின் குளிர்ச்சியை எதிர்பார்த்திருந்த எனக்கு மிகுந்த ஏமாற்றமே. அதுவும் நான் அங்கு சென்றது பிப்ரவரியின் தொடக்கத்தில் தான்.

விஷயத்துக்கு வருவோம். நான் தங்கியிருந்த உறவினர் வீட்டை ஓட்டினார் போல் இருந்த ஓரு கட்டிடத்தின் உள்ளே எட்டி பார்த்தபோது நூல் நூற்கும் இயந்திரங்கள் வரிசையாக ஓடிக்கொண்டிருந்தது. இருபத்துநான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த எந்திரங்களை சுழற்சி (shift) முறையில் ஆட்கள் பார்த்துக்
கொள்வார்களாம். அதுபோல இடது புறம் இருந்த ஓரு வீட்டில் நுழைந்த போது அங்கே பனியன்கள் தயாராகிக் கொண்டிருந்தன. அங்கே மிகச் சரியாக 6 பேர் மட்டுமே இருந்தனர். ஓருவர் பனியன் துணியை வெட்டி தையல் இயந்திரத்தில் தைப்பதில் தொடங்கி கடைசியாக அயர்ன் செய்து பெட்டியில் வைப்பது வரை அவர்களே எல்லா வேலைகளையும் கனக்கச்சிதமாகச் செய்துக்கொண்டிருந்தனர்.

அதுபோல உறவினரின் தொழில்நிறுவனம் இயங்குவது கூடஓரு வீட்டில் தான். அந்த வீட்டின் ஹாலில் ஐந்து, ஆறு தையல் இயந்திரங்களை வைத்துக்
கொண்டு ஆர்டர்களை பிடித்து வெற்றிகரமாய் இயங்கிவருகிறார். அங்கே தைப்பதற்கு வந்த பெண்கள் அனைவரும் குடும்பபெண்கள். அனைவரும் பகுதி நேரம் வேலை செய்பவர்கள்.  மணிக்கு ஓரு தொகையை சம்பளமாக பெற்றுக் கொள்ளும் இவர்கள்  வீட்டில் நேரம் கிடைக்கும் போது வந்து இதை செய்து முடிக்கின்றனர்.

இப்படி திருப்பூரில் குடிசைத் தொழிலாகப் பின்னலாடைத் தொழில் நடப்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. கவனித்த மற்றோரு இன்னோரு விஷயம் வேலைவாய்ப்பு.  ஆம், பெரும்பாலான நிறுவனங்களிலும் வீடுகளிலும் வேலைக்கு ஆட்கள் தேவை எனும் பலகையைக் காணமுடிந்தது.

தமிழ்நாட்டில் திருப்பூரில் இருப்பதுபோல இந்த அளவுக்கு வேறு எங்கும் ஆட்கள் தட்டுபாடும் தேவையும் இருக்குமா தெரியவில்லை. இப்படித் தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் ஊராக திருப்பூர் இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.

திருப்பூரிலில் ஓரு தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்த அனுபவத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.  கூடவே திருப்பூர் மண்ணின் மைந்தன் விஜய் டிவி புகழ் கவிஞரை சந்தித்த அனுபவத்தையும் பகிர்கிறேன்.

நீங்கள் யார் அந்தக் கவிஞர் என உங்கள் மனக்குதிரையைக் கொஞ்சம் தட்டிவிடுங்கள். நான் கூடிய விரைவில் வந்து விடுகிறேன்.


தொடருவோம்..

நன்றி; படங்கள்

http://google.com
http://twomaterialgirls.tumblr.com/

1 comment: