Saturday, February 18, 2017

எழுத்தாளர் சுஜாதாவும் புலியும்

    நண்பர்களே எழுத்தாளர் சுஜாதாவுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு எனத் தெரிந்துக் கொள்ளும் ஆர்வமாயிருந்தால் தொடர்ந்து படியுங்கள்.

    ஒருமுறை  சுஜாதாவிடம் 'எந்த வட்டாரத்துப் பேச்சுத் தமிழ் உங்களைக் கவர்ந்திருக்கிறது ?' என்ற கேள்விக்கு 'என்னைக் கவர்ந்த பேச்சுத் தமிழ், திருநெல்வேலித் தமிழ்தான் என்றிருக்கிறார். அதோடு விடாமல்  'என்னடே' என்பதே மரியாதைச் சொல். 'புலிய அங்க வச்சுப் பாத்தேன்' போன்ற வசீகரமான  பிரயோகங்கள், எளிய ஜனங்களின் எளிய மனங்களின் வெளிப்பாடு' என சிலாகித்திருக்கிறார்.  இப்போ தொடர்பு புரிஞ்சுதா ? ;)

    நானும் சுஜாதாவின் பதிலோடு இணைந்துப்போவதில் மகிழ்ச்சி. 'சரி, அப்போ இரண்டாவது ? ' என  நீங்கள் கேட்டால் கோவையின் 'ஏனுங்க' வைச் சொல்வேன் என நினைக்கிறேன். இப்படிச் சொல்லுவதால் மற்ற வட்டார வழக்குகள் பிடிக்கவில்லை என நீங்கள் புரிந்துக்கொள்ளத் தேவையில்லை.

    ஆனாலும், திருநெல்வேலி தமிழை புரிந்துக்கொள்ள சில நுட்பங்கள் தேவை. "இந்தா இந்த வாரியலை  வச்சு, வாச தூத்துட்டு வா" என்றால் "என்னது துப்பணுமா ?" எனக் கேட்காமல் துடைப்பத்தால் வாசலை  சுத்தம் செய் எனப் புரிந்துக் கொள்ள வேண்டும். அப்புறம், "ஏன்ல இப்படி படப்பயம் போடுத?" என்றால்" ஏன் இப்படி கூப்பாடு/சத்தம் போடுகிறாய்" எனப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

    அதுபோல "எனக்கு காய்ச்சலடிக்கி" எனச் சொன்னால் "எனக்கு ஜூரம்" எனப் புரிந்துக் கொள்ளவேண்டும்.

    இப்படி வீட்டில் திருநெல்வேலி பாசை பேசிக்கொண்டிருந்த என் அம்மாவையும் கடந்த 40 வருடங்கள் மாற்றிதான் விட்டது. ஆமாம், அவள் பேச்சில் நெல்லை தமிழ் வாடை குறைந்து விட்டது. "வீட்டுல எல்லாரும் சும்மா (சுகமா) இருக்காளா?" எனக் கேட்காமல் "வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா ? " எனக் கேட்க பழகிவிட்டாள். ஆனாலும், இப்போதும் வீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நெல்லை வாட்டார வார்த்தைகள் காதில் விழத்தான் செய்கிறது.

    இங்கே சினிமா, தொலைக்காட்சி, நகர்மயமாதல் தாண்டி உலகமயமாக்கலும் தன் பங்கிற்கு எல்லா ஊர்மக்களையும் தங்களின் வட்டார மொழியை விட்டு வேறு ஏதோ மொழியை நோக்கி திருப்பியிருக்கிறது. "ஸ்கூல் முடிச்சு, காலேஜ்க்கு மெட்ராஸ் போனபோதே திருநெல்வேலி பாசைக்கு நோ சொல்லிட்டேன்" என்கிறான் கலிபோர்னியாவிலிருக்கும் என் உறவினன். இது தான் இன்றைய நிதர்சனம்.

4 comments:

  1. வட்டார வழக்குகள் காப்பாற்றப்பட வேண்டும்

    ReplyDelete
  2. அட நம்ம தின்னவேலி!! தலைவருக்குப் பிடித்த வட்டார வழக்கு! வட்டார வழக்கு நீங்கள் சொல்லுவது போல் உலகமயமாக்கலினாலும் அழிந்து வருவது வருத்தமே!

    கீதா

    ReplyDelete