Saturday, February 24, 2018

வனநாயகன் - டிவி சீரியல் ?

கடந்த டிசம்பரில்  அந்தத் திரைப்பட இயக்குநரை கோபாலபுரத்தில் இருக்கும் அவருடைய வீட்டில்  பார்த்துப் பேசினேன்.  அவர்  1970 களின் இறுதியில் சிவாஜி நடித்த படங்களில் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர். பின் தனியாக இயக்கி 1980களின் இறுதியில் வரிசையாக இரண்டு வெள்ளிவிழா படங்களைத் தந்தவர்.

இரண்டு தொடர் வெற்றிகளைத் தந்தாலும், குடும்ப பிரச்சனை போன்ற தனிப்பட்ட சில காரணங்களால் கொஞ்சகாலம் ஒதுங்கி இருந்துவிட்டு
இப்போது உதவி இயக்குநர், திரைக்கதை, சின்னத்திரை என  இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அது பரபரப்பு அடங்கிய ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை. எங்கள்  பேச்சு
பெரும்பாலும்  திரைத்துறை சம்பந்தமாகதான் இருந்தது.   திரைத்துறையில் அவர் வேலைசெய்த பெரிய இயக்குநர்களின் கஞ்சத்தனம்.
அதில் கல்யாணமண்டபம் ,  ரெக்கார்டிங் தியேட்டர் கட்டி செட்டில்
ஆனவர்கள். தொடர் தோல்விப்படங்கள் கொடுத்து போண்டி
ஆனவர்கள்.  அதுபோல ஒரு புகழ்பெற்ற இசை அமைப்பாளரை கன்னத்தில்
அறைந்துவிட்டு நடையைக் கட்டிய இயக்குநர் என விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.

அன்று மதியம் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் நடந்த ரகளை, அதன் உள்ளரசியல்,  எடுத்தப் படத்தை திரையிட அரங்குகள் கிடைக்காத அவலம் என இந்தகால சினிமா வரை சுமார் இரண்டு மணிநேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்.

பேச்சுனுடே எனது வனநாயகன் நாவல் பற்றியும் பேசினார்.
' நாவல்ல ஒரு படத்தை விட ஒரு டிவி சீரியலுக்கான மேட்டர் நல்லா வந்துருக்கே. லோகேசன் மலேசியாவ வச்சு எடுத்தா அருமையா வரும். புரடியூசர் பார்போமா  ? '  என்றார்.

சுஜாதா தனது  நாவல்கள் திரையில் கொத்து பரோட்டா போடப்பட்டதாக சொன்ன புலம்பல்கள் நினைவுக்கு வந்தாலும் அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம் என நினைத்து தலையாட்டி விட்டு வந்திருக்கிறேன்.

விடைபெற்றுக் கிளம்பும் போது  'நல்லா எழுதி, பெரிய ரைட்டாரா சினிமாவுல வரனும் ' என வாழ்த்தினார். தர்மசங்கடமாக இருந்தது.  ' ஐயையோ, அதையெல்லாம் நான் கேட்கவே இல்லீங்களே'  என மனதுக்குள் நினைத்தபடி சிரித்துவைத்தேன்.

டிவி சீரியலுக்கு ஏற்ற கதை எனச் சொன்ன இரண்டாம் நபர் இவர்.
பார்ப்போம்.

#வனநாயகன்

Sunday, February 18, 2018

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை

நேற்று தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகள் பற்றிய கட்டுரையை  "தமிழாற்றுப்படை" எனும் தலைப்பில் வைரமுத்து வாசிக்கும் காணொலியைப் பார்த்தேன்.

இன்றைய இளைய தலைமுறையை தமிழை நோக்கி ஆற்றுப்படுத்த (வழிச்செலுத்த) தமிழாற்றுப்படை எனும் தலைப்பைத் தேர்ந்தேடுத்ததாக குறிப்பிட்டு பேச்சைத் தொடங்குகிறார்.

பேச்சில் தாய்மொழியின் முக்கியத்துவம்,  இன்றைய அன்றாட வாழ்வில் தமிழ்,   அது முன்னிலைப் படுத்தப்படவேண்டியதன் தேவை, உலகமயமான இன்றையச் சூழலில் முன்பு எப்போது இல்லாத வகையில் அச்சுறுத்தப்படுத்தப்படும் பிராந்தியமொழிகள் என பல விசயங்களைத் தொட்டிருக்கிறார்.  பேச்சில் ஆதித்தமிழன் பிறந்த இடம் லெமோரியாக் கண்டம் எனும் விவாதத்துக்குரிய விசயத்தையும் தொட்டிருக்கிறார்.

இது வைரமுத்துவின் கவித்துவமான மேடைப் பேச்சு என்பதைத் தாண்டி "தமிழ் எங்கள் அதிகாரம்!, தமிழ் எங்கள் உரிமை!" என முழங்கும்  உணர்ச்சிகரமான பேச்சு. 45 நிமிடங்கள் நீடிக்கும் உரையை நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

காணொலி
https://www.youtube.com/watch?v=tlbcznLzaNw

முழுமையான கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.
http://tamil.thehindu.com/opinion/columns/article22748491.ece

Tuesday, February 13, 2018

(A House for Mr Biswas) எ ஹவுஸ் ஆப் மிஸ்டர் பிஸ்வாஸ் - எஸ். நைப்பால்

வி. எஸ். நைப்பால் ( V. S. Naipaul) வெஸ்ட் இன்டீஸ்- டிரினிடாடில்  பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற நைப்பாலின் 'A House for Mr Biswas'  (எ ஹவுஸ் ஆப் மிஸ்டர் பிஸ்வாஸ்- திருவாளர் பிஸ்வாசுக்கு ஒரு வீடு) வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

கதைக் களம் அவர் பிறந்த டிரினிடாட் (Trinidad). அங்கே ஒரு பிராமணக்  குடும்பத்தில் கையில் ஆறு விரல்களுடன், மாலை சுற்றிப் பிறக்கும் ஒரு ஆண் பிள்ளையைத் துரதிஷ்டம் பிடித்தவன் என ஒதுக்குகிறார்கள். அவனால் அவனுடைய அப்பா, அம்மா உயிருக்கு ஆபத்து வரும் என அஞ்சி வெறுக்கிறார்கள். சந்தர்பத்தால் அது அவனுடைய அப்பா விசயத்தில் உண்மை ஆகியும் விடுகிறது. இப்படி விதிவசத்தால் குடும்பத்தால், சமூகத்தால் மூச்சுமுட்ட அழுத்தப்படும் ஒருவன் தட்டுத்தடுமாறி மேலுழும்பி வருவதுதான் கதை.

1961ல் எழுதப்பட்ட இந்தக்கதை  நைப்பாலின் தந்தையின் வாழ்க்கைப் பின்னனியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் வழியாக
காலனித்துவ நாடுகளில் இந்தியச் சமூகங்களின் வாழ்வியல் நிலைபாடுகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியதோடு,  அந்தகால இந்திய டிரினிடாட் வம்சாவளியினரின் வாழ்வியலையும் இதில் பதிவுசெய்திருக்கிறார்.

டைம் பத்திரிக்கை 1923 முதல் 2005 வரையான சிறந்த ஆங்கில புதினங்களில்
("TIME 100 Best English-language Novels from 1923 to 2005")  ஒன்றாக 'A House for Mr Biswas ' தேர்வு செய்திருக்கிறது.  

நிதானமாகவும், நுணுக்கமாகவும் கதைசொல்லும் இவருடைய எழுத்து
நம்மூர் கரிசல் மன்னன் கீராவை (கி.ராஜநாராயணன்) எனக்கு நினைவூட்டியது. அந்த வகையில் கீரா சமகாலத்தில்  வாழ்ந்துகொண்டிருக்கும் மகா கலைஞன். கொண்டாடப்படவேண்டியவர். 

நைப்பால் இப்போது லண்டனில் வாழ்கிறார். இவரைப் போல மேற்குநாடுகளுக்கு எழுதுபவர்கள் எளிதாக கண்டுகொள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய நல்ல எழுத்துகள் அடையாளம் காணப்படுகின்றன.  ஆனால், நம்மூடை மூத்த தமிழ் எழுத்தாளர்களுக்குக் கூட உலக அங்கீகாரம்  என்பது இன்னமும் கானல்நீராக தொடர்வது அவலம்.

#AHouse_forMrBiswas

Thursday, February 1, 2018

வாரத்துல ஐஞ்சு நாள் ஜெயில், மத்த இரண்டு நாள் பெயில்

'பெண்ணின் பிரசவத்துக்கு உதவிக்கு வந்தோம்',  இல்லை   'கோடை விடுமுறையை பேரப்பிள்ளைகளுடன் செலவழிக்கிறோம்'. 'ஊரைச் சுத்திப்பாக்க வந்தோம்' என  ஏதோ காரணத்துக்காக அமெரிக்கா வரும்
பல பெற்றோர்களிடம் பேசிப் பழகி இருக்கிறேன். ஒவ்வோரும் ஒரு ரகமாக இருப்பார்கள். ஒவ்வோருவரிடமும்  ஏதோ ஒரு கதை இருக்கும்.

சிலர் ஆள் கிடைத்தால் போதுமென கிடைப்பவர்களிடம்
பேசி தீர்த்துவிடுவார்கள். சிலர் ' நேத்து பிரதோசம். ஊருல இருந்தா கோயிலுக்கு போயிருக்கலாம், இங்க வந்து வசமா மாட்டிகிட்டேன் ' என்பார்கள். சிலர்  'என்ன அருமையா ரோடு போட்டுருக்கானுங்க..'
என பரவசப்படுவார்கள். 'பரவாயில்ல  இங்க எங்க பாத்தாலும்  கியூ பாலோ பண்ராங்க.'  என சிலாகிப்பார்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் இப்படி என்னதான் வெளிநாட்டைச் சிலாகித்துப் பேசினாலும் இறுதியில் 'எவ்வளவுதா இருந்தாலும் நம்ம ஊர் போல வருமா? நீங்களே சொல்லுங்க ' என்பார்கள்.

இதுபோல சொந்த ஊரை விட்டு வெளிநாடு வரும் பல பெற்றோர்களுக்கு முக்கியப் பிரச்சனை நேரப்போக்கு. பெரும்பான்மையானவர்கள் வந்த இடத்தில் கம்யூட்டர்,வீடியோ கேம்ஸ் போன்ற சமாச்சாரங்களைக் கற்றுக்கொண்டு பொழுதைப் போக்கிவிடுகிறார்கள். சிலர் பேரப் பிள்ளைகளோடு பெரும்பான்மை நேரத்தைச் செலவிடுகிறார்கள். சிலர் நாய்கள் தொந்தரவில்லாமல் வாக்கிங் போக பழகிவிடுகிறார்கள். சமீபத்தில் இப்படிதான் ஊரிலிருந்து வந்த நண்பரின் அப்பா வாக்கிங் போகும் போது பேசிப் பழகி  பாப் வெட்டிய அமெரிக்க பெண்மணிகளிடம் மாலை நேரத்தில்  உலக அரசியல் பேசிக் கொண்டிருந்தார்.

சிலர் வழக்கம் போல் இங்கு வந்தும் டிவியை கட்டிக்கொண்டு அழுகிறார்கள். இப்படி  இணையம்,டிவி, வாக்கிங்,கோயில் என எப்படியோ பொழுதைக் கழித்தாலும்  அவர்கள் ரொம்ப வருத்தப்படும் ஒருவிசயம்  'போற இடமெல்லாம் ரொம்ப ஜனங்களே இல்லையே ?' என்பதாக தான் இருக்கும். 

அவர்கள் சொல்லி வருத்தப்படும் இன்னோரு விசயமும் இருக்கிறது.
அது போக்குவரத்து.  இங்கே யாருடைய ( நியூயார்க் போன்ற ஒரு சில நகரங்களைத் தவிர்த்து ) துணையுமில்லாமல் வெளியே போக முடியாது என்பது அவர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருக்கும்.

அதுபோல வீடு சுத்தம் செய்வது,  துணி துவைப்பது, அயர்ன் செய்வது என எல்லா வேலைகளையும் (இயந்திரங்கள் இருந்தாலும்) அவர்களாகவே செய்து கொள்வதும் கொஞ்சம் சிரமமாக இருக்கும் என நினைக்கிறேன். மற்றபடி அவர்கள்  ஊரில் ஆள்,அம்பு படை பலத்துடன் பெரிய மனிதராக இருப்பார்கள்.  இல்லை பெரிய அதிகாரியாக கூட இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் ஒரங்கட்டிவிட்டுதான் அவர்கள் வெளிநாட்டுக்கு விமானம் ஏற வேண்டியிருக்கும் என்பதே நிதர்சனம்.

இப்படி இந்தியாவில் இருந்து  இங்கு வரும் பெரும்பான்மையான
பெற்றோர்களின் நிலை என்பது "வாரத்துல ஐஞ்சு நாள் ஜெயில், மத்த இரண்டு நாள் பெயில்" என்பதாக இருக்கிறது.