Thursday, February 1, 2018

வாரத்துல ஐஞ்சு நாள் ஜெயில், மத்த இரண்டு நாள் பெயில்

'பெண்ணின் பிரசவத்துக்கு உதவிக்கு வந்தோம்',  இல்லை   'கோடை விடுமுறையை பேரப்பிள்ளைகளுடன் செலவழிக்கிறோம்'. 'ஊரைச் சுத்திப்பாக்க வந்தோம்' என  ஏதோ காரணத்துக்காக அமெரிக்கா வரும்
பல பெற்றோர்களிடம் பேசிப் பழகி இருக்கிறேன். ஒவ்வோரும் ஒரு ரகமாக இருப்பார்கள். ஒவ்வோருவரிடமும்  ஏதோ ஒரு கதை இருக்கும்.

சிலர் ஆள் கிடைத்தால் போதுமென கிடைப்பவர்களிடம்
பேசி தீர்த்துவிடுவார்கள். சிலர் ' நேத்து பிரதோசம். ஊருல இருந்தா கோயிலுக்கு போயிருக்கலாம், இங்க வந்து வசமா மாட்டிகிட்டேன் ' என்பார்கள். சிலர்  'என்ன அருமையா ரோடு போட்டுருக்கானுங்க..'
என பரவசப்படுவார்கள். 'பரவாயில்ல  இங்க எங்க பாத்தாலும்  கியூ பாலோ பண்ராங்க.'  என சிலாகிப்பார்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் இப்படி என்னதான் வெளிநாட்டைச் சிலாகித்துப் பேசினாலும் இறுதியில் 'எவ்வளவுதா இருந்தாலும் நம்ம ஊர் போல வருமா? நீங்களே சொல்லுங்க ' என்பார்கள்.

இதுபோல சொந்த ஊரை விட்டு வெளிநாடு வரும் பல பெற்றோர்களுக்கு முக்கியப் பிரச்சனை நேரப்போக்கு. பெரும்பான்மையானவர்கள் வந்த இடத்தில் கம்யூட்டர்,வீடியோ கேம்ஸ் போன்ற சமாச்சாரங்களைக் கற்றுக்கொண்டு பொழுதைப் போக்கிவிடுகிறார்கள். சிலர் பேரப் பிள்ளைகளோடு பெரும்பான்மை நேரத்தைச் செலவிடுகிறார்கள். சிலர் நாய்கள் தொந்தரவில்லாமல் வாக்கிங் போக பழகிவிடுகிறார்கள். சமீபத்தில் இப்படிதான் ஊரிலிருந்து வந்த நண்பரின் அப்பா வாக்கிங் போகும் போது பேசிப் பழகி  பாப் வெட்டிய அமெரிக்க பெண்மணிகளிடம் மாலை நேரத்தில்  உலக அரசியல் பேசிக் கொண்டிருந்தார்.

சிலர் வழக்கம் போல் இங்கு வந்தும் டிவியை கட்டிக்கொண்டு அழுகிறார்கள். இப்படி  இணையம்,டிவி, வாக்கிங்,கோயில் என எப்படியோ பொழுதைக் கழித்தாலும்  அவர்கள் ரொம்ப வருத்தப்படும் ஒருவிசயம்  'போற இடமெல்லாம் ரொம்ப ஜனங்களே இல்லையே ?' என்பதாக தான் இருக்கும். 

அவர்கள் சொல்லி வருத்தப்படும் இன்னோரு விசயமும் இருக்கிறது.
அது போக்குவரத்து.  இங்கே யாருடைய ( நியூயார்க் போன்ற ஒரு சில நகரங்களைத் தவிர்த்து ) துணையுமில்லாமல் வெளியே போக முடியாது என்பது அவர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருக்கும்.

அதுபோல வீடு சுத்தம் செய்வது,  துணி துவைப்பது, அயர்ன் செய்வது என எல்லா வேலைகளையும் (இயந்திரங்கள் இருந்தாலும்) அவர்களாகவே செய்து கொள்வதும் கொஞ்சம் சிரமமாக இருக்கும் என நினைக்கிறேன். மற்றபடி அவர்கள்  ஊரில் ஆள்,அம்பு படை பலத்துடன் பெரிய மனிதராக இருப்பார்கள்.  இல்லை பெரிய அதிகாரியாக கூட இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் ஒரங்கட்டிவிட்டுதான் அவர்கள் வெளிநாட்டுக்கு விமானம் ஏற வேண்டியிருக்கும் என்பதே நிதர்சனம்.

இப்படி இந்தியாவில் இருந்து  இங்கு வரும் பெரும்பான்மையான
பெற்றோர்களின் நிலை என்பது "வாரத்துல ஐஞ்சு நாள் ஜெயில், மத்த இரண்டு நாள் பெயில்" என்பதாக இருக்கிறது.

2 comments:

  1. Correct sir,fully agree with you.

    ReplyDelete
  2. Sir, thanks for not posting the important matter that my father shared with you.

    ReplyDelete