Friday, March 30, 2018

எழுத்தாளர் சாரு நிவேதிதா

நான் எழுத்தாளர்   சாருவுடன் ஒத்துப்போகிற விசயம்
ஒன்று இருக்கிறது என்பதையே இன்று  அவருடைய "கோணல் பக்கங்கள்"
வாசிக்கும் போதுதான் கண்டுகொண்டேன்.

20-25 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டைப் பற்றி அவர்
எழுதியது..

//
இங்கே தமிழ்நாட்டிலேயே தமிழ் பேசுவதற்குக் கூச்சப்படுகிறார்கள்.
வட இந்தியர்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதற்கு சற்றும் கூச்சப்படுவதில்லை. அமெரிக்காவில் வாழும் ஒரு சீக்கியப் பெண் மற்றொரு
சீக்கியப்பெண்ணிடம் பஞ்சாபியில்தான் பேசுகிறாள்.

ஆனால், தமிழருக்கோ ஆங்கிலம்தான். பிரபலங்களாக
இருப்பவர்கள் தங்கள் குழந்தைக்குத் தமிழ் தெரியாது
என் சொல்கிறார்கள். இப்படிச் சொல்ல அவர்கள் கூச்சப்படுவதில்லை. இதுவே ஃபிரான்சாக இருந்தால் 'தயவுசெய்து நீங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள்' எனச் சொல்லி நாடு கடத்திவிடுவார்கள்...

தமிழ் பேசுவது தமிழ்நாட்டிலேயே அகெளரவமாக்க் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் அறிவாளிகள்,உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு இங்கே உள்ளவர்களிடம் இருக்கிறது. இது போன்ற அவலம் வேறு எங்கேனும் இருக்குமா என்று தெரியவில்லை...
//

இன்று முன்பைவிட நிலைமை மோசமாகியிருக்கிறதாகவே உணர்கிறேன்.

#தமிழ்

Tuesday, March 20, 2018

ஆயிஷா - இரா. நடராசன்

தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல், வீதி நாடகம், மொழிபெயர்ப்பு
என பல பிறவிகள் கண்டது  போன்ற பல முகஸ்துதிகளுடன் இணையத்தில்  கிடைத்த  "ஆயிஷா" எனும் ஒரு  படைப்பை எதேச்சையாக வாசித்தேன்.

ஆயிஷா எனும் மாணவியை மையப்படுத்தி அறிவியல் பின்புலத்தில் எழுதப்பட்ட
ஒரு கதை. ஒரு பள்ளி ஆசிரியரின் பார்வையில் இருந்து விரியும் இந்தக் கதை
ஆயிஷா வழியாக  இன்றைய கல்விச்சூழலின்  நிதர்சனத்தைச் சொல்லி அதன் முகத்தில் அறைந்து கேள்வியும் கேட்கிறது. 

குறுநாவல் எனச்சொல்லப்பட்டாலும்  ஒரு சிறுகதை போலிருக்கும் இந்தக் கதையை 15 நிமிடங்களில் வாசித்துவிடலாம்.  இது இலக்கியமெல்லாம் இல்லை. நேரடி கதை சொல்லல் வகை. அதனால் நண்பர்கள் வாசிக்க  பயப்படவேண்டாம். இது இலவச மின்னூலாகவும் கிடைக்கிறது.  http://freetamilebooks.com/ebooks/ayesha/

இதன் ஆசிரியர் இரா. நடராசன்  சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார் என அறிகிறேன். நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள்.

Saturday, March 10, 2018

கானகன்- லட்சுமி சரவணக்குமார்

எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் எழுதி 2016ல் சாகித்ய அகாடமியின் 'யுவா புரஷ்கார்' விருது பெற்ற கானகனை சமீபத்தில் வாசித்தேன்.

****
வனம் ஒரு பெரும் புதையல். அதில் பல்லாண்டுகளாக  புதைந்துகிடக்கும் இயற்கை வளங்கள்,விலங்குகள், அங்கு வாழும் பழங்குடியினர் அவர்களுடைய நம்பிக்கைகள், வாழ்க்கை , வேட்டை என பல விசயங்களைக்
கானகன் பேசுகிறது. குறிப்பாக பளிங்கர் எனும்
பழங்குடியினர் வாழ்க்கை அருமையாக பதிவு செய்யப்படுள்ளது.

உப்பு நாய்கள் மூலமாக  அறிமுகமாகியிருந்த சரவணக்குமாரின் முற்றிலும் வேறுபட்ட கதைக்களத்தில், எழுத்தில் இன்னுமொரு படைப்பு. நல்ல வாசிப்பனுபவம் தந்தாலும் உப்புநாய்களின் மொழி முற்றிலும் வேறானது.

இடப்பற்றாக்குறை, வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் தனது சொந்தத் தேவைகளுக்காக காடுகளை தொடர்ந்து அழித்து பயன்படுத்துவதுமில்லாமல் விளைநிலமாகவும் ஆக்குகிறான். கூடவே வர்த்தக , ஆடம்பர நோக்கிற்காக செல்வந்தர்கள், அரசியல் புள்ளிகளின் கைகளில் காட்டுச் செல்வங்கள் நீண்டகாலமாக நமக்குத் தெரியாமல் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது கதையின் அடிநாதம்.

நாட்டில் நடக்கும் பல ஊழல்களுக்கு ஊடகங்களில் கிடைக்கும் முக்கியத்துவம் ஏனோ  சாமானியர்களின் கண்களுக்குத் தெரியாமல்
காடுகளில் நடக்கும் சுரண்டல்களுக்குக் கிடைப்பதில்லை. உண்மையில்
சந்தனக் கடத்தல் வீரப்பன் இருந்தவரை காடுகளுக்கு கிடைத்த முக்கியத்துவம் இன்று இல்லை என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

மோக்ஸி வெளியீடாக மூன்றாவது பதிப்பாக ஜூலை 2017ல் வந்திருந்தாலும்
புத்தகத்தில் நிறைய எழுத்துப் பிழைகள் கண்களில் தென்படுகிறன.
அடுத்துவரும் பதிப்புகளில் சரிசெய்வார்கள் என நம்புவோம். வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள்.

கானகன்(புதினம்) - லட்சுமி சரவணக்குமார்
மோக்ஸி வெளியீடு, 2017
விலை ரூ-200 ,264 பக்கங்கள்
ISBN இல்லை

Sunday, March 4, 2018

மிதவை - நாஞ்சில் நாடன்

வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களிலும், நாடுகளிலும் வாழும்
எழுத்தாளர்கள் தங்களை எளிதாக பொருத்திப்பார்க்கக் கூடிய ஒருவர் நாஞ்சில் நாடன். 2010ல் சாகித்ய அகாதமி விருது வழங்கி
பெருமைபடுத்தப்பட்ட நல்ல படைப்பாளி. அவருடைய நான்காவது
புதினமான "மிதவை"யை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்புகிடைத்தது.

****
அறுபதுகளின் பிற்பாதி மற்றும் எழுபதுகளின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில்
வேலை கிடைக்காமல் பம்பாய் சென்று பிழைக்கும் தமிழக கிராமப்புற  பட்டதாரி இளைஞனின் நெடுங்கதை மிதவை.

வேலை எனும் பெருங்கனவோடு கிராமத்தில் இருந்து நகரத்துக்கு
இடம்பெயரும் இளைஞர்களுக்கே உரித்தான பயத்தையும், கனவுகளையும்
கச்சிதமாக பதிவுசெய்வதில் தொடங்கி அவனுடைய எல்லா திண்டாட்டங்களையும் வாசகனுக்கு நுட்பமாக  கடத்தியிருக்கிறார். கதை கிராமம், சென்னை, பம்பாய் என பயணித்தாலும். நாம் இதுவரை கேள்விப்பட்டிராத திரைப்படங்களில், ஊடகங்களில் பதிவு செய்யப்படாத
நகரங்களின் இருளடைந்த இடங்களையும் அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வையும் பாசாங்கின்றி பதிவு செய்திருக்கிறார்.

அதுபோல கிராமத்திற்கும், நகரத்திற்குமாக முன்பிருந்த  சாதிய பேதங்கள், அரசியல், சாமானியன் எதிர்கொள்ளும் அலுவலக அரசியல், அந்த காலத்து நெருக்கடியான பம்பாய் என எதையும் ஒளிவு மறைவின்றி எழுத்தில் நம் கண்முன் கொண்டுவருகிறார்.  எ-டு. பம்பாய் போன்ற
பெருநகரத்தில் ஒருவன் அன்றாடம் மலம் கழிப்பதற்கு இருந்த சிரமங்களை
பட்டவர்த்தமாக பதிவுசெய்திருக்கிறார்.  இதெல்லாம் நான் தமிழில் இதுவரை வாசித்திராதவை.

உயிரோட்டமான பல மனிதர்களின் நடமாட்டத்தோடு கதை முழுக்க
நாஞ்சில் நாடனின் எதார்த்த எழுத்து  தெளிந்த நீரோடை போல சீராக ஒடிக்கொண்டே இருக்கிறது.  நாஞ்சில் நாடனின் வழக்கமான பகடி கொஞ்சம் குறைவோ என எண்ணத் தூண்டும்படியாக இருந்தது. ஆனால், தொய்வில்லாமல் வாசிப்பவர்களுக்கு அலுப்புட்டாத நடை, எழுத்தில் உள்ள நேர்மை இந்தப் படைப்பை இத்தனை ஆண்டுகளுக்கு  (முதல் பதிப்பு-1986)
பின்பும் நம்மை ரசித்து வாசிக்கும்படி செய்கிறது.

நற்றிணை பதிப்பகத்தின் மகத்தான நாவல் வரிசையில் பதிப்பித்திருக்கிறார்கள். வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள்.

மிதவை (புதினம்) - நாஞ்சில் நாடன்
நற்றிணை பதிப்பகம், 2014
விலை ரூ-120, 144 பக்கங்கள்
ISBN 978-81-923668-7-6