Friday, June 15, 2018

தேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி

எழுத்தாளர் ஷோபா சக்தியின் தேசத்துரோகி  சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன்.

தொகுப்பில் மொத்தமாக 14 சிறுகதைகள். அகதிகளாக வெளிநாடுகளுக்கு குறிப்பாக பிரான்சின் பாரிசுக்கு புலம் பெயரும் ஈழத் தமிழர்களின் வாழ்வியலை இந்தச்  சிறுகதைகளின் வழியாகப் பதிவு செய்திருக்கிறார்.
இதில் பிச்சைக்காரர்கள், விசா ஏஜண்டுகள், ஹோட்டல் அடுப்படியில் பாத்திரம் சுத்தம் செய்பவர்கள்,குடிகாரர்கள் என ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்கிறார்.

தொகுப்பைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சமும் இதுவாகதான் இருக்கிறது. அதாவது தமிழ் எழுத்துலகில் இதுவரை  பதிவுசெய்யப்படாத கதைக்களம், கதைமாந்தர்களைத் தேர்வுசெய்தது. கதைமொழி ஈழத்தின் பேச்சுவழக்கு என நினைக்கிறேன். ஆனால்,  எழுத்துநடையில் தொடர்ந்தார்போல ஒரு மெல்லிய பகடி நடை இருப்பதாலோ என்னவோ ஒரிருக் கதைகளைத் தவிர வேறு எதுவும் என் மனதில் நிற்கவில்லை.

சமீபத்தில் அவருடைய பாக்ஸ் கதைப்புத்தகத்தை வாசித்து வியந்த எனக்கு இந்தத் தொகுப்பு ஏமாற்றமே.  என்னைப் பொறுத்தவரை
சிறப்பாக அமைந்தக் கதைகள் தேவதை சொன்ன கதை, பகுத்தறிவு பெற்ற நாள்.





Monday, June 11, 2018

முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு - அகரமுதல்வன்

டிஸ்கவரி புக்பேலசின் வெளியீடான அகரமுதல்வனின் "முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு"  வழியாக ஈழத்து இலக்கியத்துக்குள் நுழைந்திருக்கிறேன்.

தொகுப்பில் மொத்தமாக பத்து சிறுகதைகள்.  இலங்கை போருக்குப்
பின்னால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் இந்தத் தொகுப்பு முழுவதுமாக
ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடக்கூடும் ரகமில்லை. நின்று நிதானித்து
வாசிக்க வேண்டியது.

ஈழப் போர் கதைகளின் மைய நாதம்.  ஒரு தலைமுறை தாண்டி
நடந்த போர் . அதைஒட்டி ஒவ்வோரு கதையும் மனிதத்தை, மனித வாழ்வின் இருப்பை, அரசியலை வேவ்வேறு அம்சங்களில் பேசும் கனமானதொரு படைப்பு. தொகுப்பு அகத்தையும் புறத்தையும் சேர்ந்து பேசினாலும், அகம் நெகிழச்செய்கிறது.

ஒவ்வொரு கதையிலும் போரின் கொடுமையை, வலியை ஆர்ப்பாட்டமில்லாமல்  எழுத்தின் வழியே வாசகனுக்குக் கடத்திக்கொண்டே இருக்கிறார்.

"...
நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்தாபாவின் சிறிய கண்கள் மூடித்திறக்கின்றன. நினைவுக்கு துன்பம்பற்றிய கவலையில்லை. அது இறந்தக்காலங்களையும் , நிகழ்காலங்களையும் கண்ணீரால் தொடர்புபடுத்துகிறது. ... (பக்கம்-65)"

எனும் வரிகளை வாசிக்கையில் மனதுக்குள் பல உணர்வலைகள் மேலெலும்பி மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது.  வாசிப்பு
தேர்ந்த கவிஞனுடன் கதைசொல்லியும் ஒரே ஒத்திசைவில் கைகோத்து எழுதிய உணர்வைத் தருகிறது.

"திருவாளர் ஞானசம்பந்தன்" கதையில் ஒரு மறக்கமுடியாத ஒரு உரையாடல்

'ஜீவிதா, நாம் தமிழ்மொழி பேசக்கூடிய அகதி இனமா?

இல்லை நந்திதா, நாம் தமிழ்மொழி பேசுவதால் அகதி இனம்'

என்பதில் இருக்கும் உண்மைச் சுடத்தான் செய்கிறது.

அதுபோல போர்வலியை,வாதையை,காதலை என சகலமானதையும் கவித்துவமாக சொல்லவேண்டும் எனும் உணர்வு எதுவுமின்றி  ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டு எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.

"...
நிலத்தின் வெளி முழுவதும் மின்மினிப்பூச்சுகளாய் குண்டுகள்
வெளிச்சத்தோடு பறந்துதிரிந்தன. நம்மைக் காப்பாற்றிய மரங்கள் முறிந்து
விழுந்தபடியிருந்தன. துவக்குகளைப் போல நள்ளிரவுகளும் யுத்ததிற்கானதே. ( பக்-57)
...
"
எனும் வரிகள் வழியாக யுத்தத்தை நம் கண்முன் நிகழ்த்திக்காட்டுகிறார். அமுதைப் பொழியும் நிலவே என இரவை  காதலியுடன் சேர்ந்திருக்க வேண்டிய இளைஞன் போர்முனையில் அவளைப் பிரிந்து துவக்குகளைப் போல நள்ளிரவுகளும் யுத்ததிற்கானதே என்பது சங்ககாலத்தை நினைவுப் படுத்துகிறது.

"...
எனது கையினைப் பற்றியிருந்த அவள் விரல்களில் கசிந்த அன்பின் சங்கதிகள் விரியன்பாம்பைப் போல என்னைக் கொத்துகின்றன.

நான் சாவுக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட உயிரைச் சுமக்கும் உடலைக் கொண்டவன். அவள் உயிரும் என்னிடமே இருக்கிறது. நிலமதி-பக்கம்-57"
"

இதையெல்லாம் வாசிக்கும் போது ஒரு மனிதனுக்குள் இத்தனை உணர்வுகளா? என மலைக்க வைக்கிறார்.

தொகுப்பில் அனுபவங்கள் எழுதப்படுவதால் அதில்  வழமையான
சுவாரசியங்களை எதிர்பார்ப்பது நியாயமில்லை என
என்னை நானே தேற்றிக்கொள்கிறேன். அதுபோல பல சொற்கள்
தமிழாக இருந்தாலும்  ஈழத்து வழக்குச் சொற்களை புரிந்து கொள்வதில்
தமிழ்நாட்டு வாசகர்களுக்கு சிரமங்கள் இருப்பதால்,  அதற்கு  இணையான சொற்களை அந்தந்தப் பக்கங்களில் அல்லது பின்னுரையில் தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஐரோப்பாவில் வசிக்கும் ஈழத்து நண்பர்களின் உதவியால் நான் அறிந்துகொண்ட சில ஈழத்துச் சொற்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

சப்பாத்துக்கால்களால் அடித்தான்  - சூ (கால் பாதணி) அணிந்த கால்களால் அடித்தான்.

துவக்கு என்பது துப்பாக்கி

சன்னங்கள் எனில் ஷெல், துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுகள்

பெடியன் எனில்  ஆண் பிள்ளைப்பசங்க.

குசினி எனில்  சமையலறை (கிச்சன்)

அதுமட்டுமில்லாமல் அகரமுதல்வனின் எழுத்து  மேலோட்டமாக இல்லாமல்
வாசிக்கையில் வாசகனின் கவனத்தை முழுமையாகக் கோரும் எழுத்து.
எனக்கு ஈழத்து எழுத்தின் முதல் பரிச்சயம் என்பதால் கூட அப்படித் தோன்றி இருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தவறவிடாமல் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய தொகுப்பு.

முதல் பதிப்பு என்பதாலோ என்னவோ எனக்குப்  பல எழுத்துப்பிழைகள் கண்களில் பட்டன. அட்டையில்  "முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு" எனச் சரியாக இருக்கும் ஒற்று நூலின் உள்ளே ஓவ்வோரு பக்கத்திலும் விடுபட்டு போனதே ஒரு பதமாக இருக்கும்.


தலைப்பு: முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு
நூலாசிரியர்: அகரமுதல்வன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: 100
பக்கங்கள்:111
ISBN:978-93-8430-210-8

Saturday, June 2, 2018

BOX: கதைப் புத்தகம் (நாவல்) - ஷோபாசக்தி

சமீபத்தில் தமிழில் வாசித்த மிகச் சிறந்த புத்தகம் ஷோபாசக்தியின் BOX: கதைப் புத்தகம் (நாவல்).

எழுத்தாளர்  கதை சொல்லலின் அத்தனை சாத்தியங்களையும் முயன்று பார்த்தது போலொரு அபூர்வ படைப்பு. இதுவே ஷோபாசக்தியின் ஆகச்சிறந்த படைப்பாக இருக்கமுடியும்.

குறுக்கும் நெடுக்குமாக செல்லும் புதிய கதைசொல்லும் யுக்தியில் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை,  சித்திரத்தை வாசகர்களின் முன்வைக்கிறார் ஷோபா.
அதிலிருந்து மீண்டுவரவே எனக்கு சிலநாட்கள் பிடிக்கும் என நினைக்கிறேன்.

புத்தகம்  கிண்டிலில் கிடைத்ததால் வார இறுதியில் எந்தவொரு எதிர்பார்ப்புகளும், முன் முடிவுகளும் இல்லாமல் ஈழம் குறித்தானது என்ற புரிதலுடன் மட்டும் நுழைந்து வாசித்து முடித்தேன். கண்டிப்பாக ஏமாறவில்லை. வாய்ப்பிருப்பவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்.

கதையைப் பற்றியும் அதுபேசும் ஈழஅரசியல் பற்றியெல்லாம் நான் இங்கே
பகிர,விவாதிக்கப்போவது இல்லை. அதுவே அந்தப் படைப்பாளனுக்கு செய்யும் மிகபெரிய மரியாதையாக இருக்கும்.

கடந்த ஒரு மாதமாக பல ஈழ எழுத்துகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இந்தப் புத்தகம் சரளமான நடையோடு, எளிய மொழியில்
அனைவரும் வாசிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும், நாம் மறந்துபோன கைவிட்ட பல தமிழ் வார்த்தைகளை மீள்அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

நான் வாசிக்கையில் குறிப்பெடுத்த தமிழ் வார்த்தைகள் உங்களுக்காக.
( சான்று-சென்னைப் பழ்கலைக்கழக தமிழ்ப்பேரகராதி)

சன்னதம்-கடுங்கோபம்.
வலைஞன்-;மீன்பிடிப்போன் (Fisherman)
முள்ளி- முள்ளுள்ள செடி
வளவு- வீட்டுப்புறம்
பம்பல்- பைம்பல்-களிப்பு, பொலிவு
சப்பளித்தல்-தட்டையாக்குதல்
அரை- இடை
மரை வற்றல் - ஒருவகை மானினத்தின் காய்ந்த இறைச்சி
அமசடக்கம் - அமைதி
சீவியம்-  சீவிதம்,உயிர்வாழ்க்கை
சமர்-போர்
கிடுகு-ஓலைக்கீற்று
குரக்கன்-கேழ்வரகு
கிடாரம்-கொப்பரைவிசேடம் (boiler)
வாவி-நீர்நிலை

Don't judge a book by its cover என ஆங்கிலத்தில் சொல்வது போல புத்தகத்தின் அட்டைப்படத்தை மட்டும் வைத்து எந்த முடிவும் செய்யாமல் கண்டிப்பாக வாசியுங்கள்.

Friday, June 1, 2018

போர்னியோ தீவின் குரங்குகள்

படத்தில் நீங்கள் பார்க்கும் தீவு போர்னியோ (Borneo).  இந்தத் தீவின்
வளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை விளக்கும் ஒரு ஒப்பீட்டுப் படத்தை மலேசிய நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். போர்னியோ பற்றிய தெரியாதவர்களுக்காக..

போர்னியோ-  வஞ்சனையில்லாமல் இயற்கை எழில் கொஞ்சும் தீவு.
முழுமையும் பசுமையான மழைக்காடுகள். மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கும் இந்தத் தீவை இந்தோனேசியா, மலேசியா, புரூணை போன்ற மூன்று நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன. இது  உலகின் மூன்றாவது பெரிய தீவும் கூட (முதல், இரண்டாம் இடத்தில் முறையே கிரீன்லாந்து, புதிய கினியாவும் இருக்கின்றன)

போர்னியோவின் சிறப்பம்சம் அங்கிருக்கும் பழமையான மழைக்காடுகளில் வாழும் "ஓராங் ஊத்தான்" எனும் மனிதக் குரங்குகள். ஆங்கிலத்தில் "ஒராங்குட்டான்" (orangutan) . செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்தக் குரங்குகள் மிகவும் சுறுசுறுப்பானவை. பழங்கள், மரப்பட்டை, இலைகள் இதன் உணவு.

துரதிஷ்டவசமாக மற்ற கிழக்காசிய நாடுகளைப் போலவே மலேசியாவும், இந்தோனேசியாவும் போட்டி போட்டு பல்லாண்டுகளாக இத்தீவின்  இயற்கை வளங்
களைச் சூரையாடி வருகின்றன. அதனால்,  தங்கள் வாழ்வாதரத்தை இழந்த பல லட்சம் ஒராங்குட்டான் குரங்குகள் செத்து மடிந்துகொண்டிருக்கின்றன.


எனது வனநாயகன் நாவல் பேசும் அரசியலும்  அதுதான்.   புத்தகத்தின்  அட்டைப்படத்தில்  இருப்பதுகூட இந்த "ஒராங்குட்டான்" குரங்கு தான்.
தங்கள் இருப்பிடத்தை விட்டு விரட்டப்பட்டு, வேட்டையாடப்படும் இந்தக் குரங்குகள் படும்பாட்டை கதையோட்டத்தோடு சொல்லி இருப்பேன். சர்வதேச அளவில் அழிந்து வரும் அரியவகை விலங்காக இவை அறிவிக்கப்பட்டிருந்தாலும் மனித அட்டூழியங்கள் தொடரத்தான் செய்கின்றன. அதன் உச்சமாக இந்தக் குரங்குகள் இந்தோனேசியா போன்ற நாடுகளில் விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்படுகிறன போன்ற அதிர்ச்சிகர தகவல்களும் அதில் உண்டு.

***
"வனநாயகன்-மலேசிய நாட்கள்"  வாங்க

வனநாயகன்  இப்போது கூகுள் புக்ஸிலும் கிடைக்கிறது
https://books.google.com/books?id=QqfVCwAAQBAJ&printsec=frontcover&dq=%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjOr_emlbLbAhXP21MKHV9WCLUQ6AEIKTAA