Sunday, July 15, 2018

SSS - கோவையில் ஓர் அதிசயம்

இந்த முறை கோயம்புத்தூரில் இருக்கும் "சாந்தி சமூக சேவைகள்" (SSS) எனும் அறக்கட்டளை பற்றி தெரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

சிங்காநல்லூரில் அவர்கள் இயங்கும் இடம் நான் தங்கியிருந்த உறவினர் வீட்டில் இருந்து நடக்கும் தூரம் தான். ஒரு நாள் மாலை அவருடன் போயிருந்தேன்.

மிகப்பெரிய வளாகம். அங்கேயே  மருத்துவமனை, 24 மணி நேர மருந்துக்கடை (வெளி விலையை விட 20%  குறைவாக)அதனுடன் குருதி வங்கி, மருத்துவ லேப்கள், கண் சிகிச்சை மையம் போன்ற பல மருத்துவ வசதிகள் ஒரே இடத்தில்  இருக்கின்றன. அத்தனையும் அனைவருக்கும்  லாப நோக்கின்றி மிக்குறைந்த விலையில் கிடைக்கிறது. அங்கே முழு உடல் பரிசோதனையை
1500 ரூபாய்க்கு முடித்துவிடலாம் என உறவினர் சொன்னதாக நினைவு.

அங்கேயே மருத்துவ சேவையோடு உணவு விடுதி (கேண்டீன்) வசதியும் இருக்கிறது. காலை 7 மணியில் இருந்து இரவு 9;30 வரை இயங்கும் அந்தக் கேண்டினில் உணவு தரமானதாக, சகாயமான விலையில் கிடைக்கிறது. ஒருவருக்கான முழுச் சாப்பாடு 25 ரூபாய் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதே உணவு வெளியே  120 ரூபாய்க்கு குறைவில்லாமல் இருக்கும்.

அதனால் எப்போழுதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இப்படி தினமும்   பல ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறினாலும்
கேண்டினின் பராமரிப்பு அபாரம். மற்ற வணிக நிறுவனங்களை விட
மிக சுத்தமாக, சுகாதாரமாக வைத்திருக்கிறார்கள். சர்வதேச தரம்
என தயங்காமல் சொல்லலாம்.

அதுமட்டுமல்லாமல் வளாகத்துக்குள் பெட்ரோல் பங்குடன், பிள்ளைகள் விளையாட காற்றோட்டமான ஒரு  பூங்காவையும் அமைத்திருக்கிறார்கள்.

கோவை போன்ற பெருநகரத்தில் அதுவும் ஒரு முக்கிய இடத்தில் இதுபோலோரு சேவை அனைவருக்கும் கிடைப்பது அதிசயம் மிக அபூர்வம்.

உண்மையில்  இதெல்லாம் அரசாங்கமும் ஆட்சியாளர்களும்
மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை ஒரு அறக்கட்டளை முன்மாதிரியாக  இங்கே செய்து காட்டிக் கொண்டிருக்கிறது.

கோயில்களிலேயே கொள்ளை அடிக்கும் இந்தக் காலத்தில்  "மனிதகுலத்திற்கான சேவை கடவுளுக்கு சேவை " என்ற குறிக்கோளுடன் செயல்படும் இந்த SSS அமைப்பின் நிறுவனருக்கு எனது  வாழ்த்துகளும் மனப்பூர்வமான நன்றிகளும்.

அடுத்த முறை கோவை போகும் போது வாய்ப்பிருந்தால் ஒருமுறை போய் வாருங்கள். தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.

அவர்களுடைய இணையமுகவரி -  http://www.shanthisocialservices.org/
படங்கள்- நன்றி இணையம்.

2 comments:

  1. நானறிந்த இந்த விடயத்தைப்பற்றி எழுதவேண்டுமென நினைத்திருந்தேன். நீங்கள் எழுதி விட்டீர்கள் நன்றி நண்பரே... - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. நல்ல விடயம் என்பதால் பகிர்ந்தேன். வருகைக்கு நன்றி நண்பரே.

      Delete