Friday, July 31, 2020

எண்ணும் இளம் பெண்ணும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்திருந்த போது நடந்த ஒரு சம்பவம்.  என் நினைவு சரியாக இருந்தால் அது  எழும்பூர் இரயில் நிலையம் என நினைக்கிறேன்.  அதிகாலை சுமார் 5 மணி இருக்கும். இருள் பிரியும் அந்த வேளையில் இரயிலில் நிலையத்துக்கு  வெளியே  ஆட்டோவுக்குக் காத்திருந்தேன்.

அப்போது தீடிரேன  "ஐயோ... அம்மா போயிடுச்சேமா..." எனும் பெருங்குரல் குரல்  வந்த திசையில் திரும்பினேன்.  சற்று தூரத்தில்
மங்கலான மஞ்சள் ஒளி கசிந்த மின்கம்பத்துக்கு கீழே  15-16 வயதுமதிக்கத்தக்க இளம் பெண்.  பாவாடை சட்டை 
போட்டிருந்தாள். கூடவே  கையில் மூட்டை முடிச்சுகளுடன் அவளுடைய  அப்பா, அம்மா. ரொம்ப வசதியானவர்களாக  தெரியவில்லை. ஊரில் இருந்து வந்திருப்பார்கள் போல. 

அந்த இளம்பெண் செல்போனை அந்த பஸ்டாப்பில் தொலைத்து விட்டாள் போல. வேறு பஸ்சில் திரும்பி வந்து தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை போல.  ."இங்க தானே மா வச்சிட்டு இருந்தேன்... ஐயோ அம்மா.. எல்லாம் போச்சே மா...."  என செல்போன் தொலைந்து விட்ட துயரம் தாங்காமல் வாய்விட்டு அழத்தொடங்கினாள். 

அந்த அழுகை  "ஐயோ ராசா எங்கள விட்டுட்டு இப்படி போயிட்டியே..."  என செத்த வீட்டில் துக்கம் தாளாமல் நெஞ்சில் அடித்துக்கொண்டு 
அழுவது போல மரண ஓலம் எழுப்பினாள்.  நெருங்கிய குடும்ப உறவை இழந்தது  போன்ற உணர்வுப்பூர்வமாக அவளுடைய அழுகை 
பொங்கி பொங்கி கண்ணீராக வழிந்து ஓடி கன்னங்களை நனைத்துக் கொண்டிருந்தது.

அவளுடைய அம்மா, அப்பாவும் எதுவும் பேசாமல்  யாரோ எவரோ என்பதுபோல் நின்றிருந்தார்கள். அவர்கள் அவளைச் சமதானபடுத்த எந்த முயற்சியும்  செய்ததாக தெரிய வில்லை.  சும்மா ரோட்டை 
வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். அவர்களைய உடல் மொழி இது உன்னோட தவறுதானே அனுபவி என்பது போல இருந்தது.

அந்த பெண் கூட செல்போன் தொலைந்ததால் திரும்ப வாங்க வேண்டுமே என கவலைப்பட்டதாக தெரியவில்லை.  
மாறாக,  அவள்  "என்னோட பிரென்ட்ஸ்ச எப்படி நான் தேடி புடிப்பேன்...  இனிமே நான் எப்படி பேசுவேன்..." என சொல்லி வாய்விட்டு கதறிக்கொண்டிருந்தாள்.

பொது இடத்தில் நிற்கிறோம், ஒரு செல்போனுக்காக வாய்விட்டு அழுகிறோம் என்ற எந்தவித பிரக்ஞையும் இ்ல்லாமல் அன்று அவள் ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தது இன்று வரை மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது.

அவளைப் போல இளைய தலைமுறைக்கு நாம் நண்பர்கள் எனச்சொல்லி வெறும் எண்களை அறிமுகம் செய்துவிட்டோமோ என 
இன்று நினைத்துக்கொள்கிறேன். நீங்கள் ?

——

Sunday, July 19, 2020

அது என்ன இன்ஸ்டாகிராம் ?

இன்ஸ்டாகிராமில் பெயருக்காக ஒரு  கணக்கு தொடங்கி வைத்ததோடு சரி.  மற்றபடி அந்தப்பக்கம் பெரிதாகப் போவதில்லை .  பெரும்பாலும்   ஃபேஸ்புக்கில் தான் குடித்தனம்.

இன்ஸ்டாகிராம் (instagram.com) பற்றித் தெரியாதவர்களுக்கு - இன்ஸ்டாகிராம்
உலகளவில் 6வது பிரபலமான சமூக வலைத்தளம். பெரும்பாலும்
அங்கே   புகைப்படம், வீடியோக்கள் மட்டுமே பகிரப்படுகின்றன. இதற்கும் முதலாளி பெரியண்ணன் பேஸ்புக் தான்  .

இன்று கிடைத்த கொஞ்ச நேரத்தில், சும்மா  அங்கு என்னதான் நடக்கிறது என எட்டிப் பார்த்தால் ஆச்சரியம்.  கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் பல்லாயிரக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன.

இன்ஸ்டாகிராமில் நமக்கு யாரையும் பெரிதாக தெரியாது என்பதால் சும்மா குருட்டாம் போக்கில் தெரிந்த தமிழ்ப் பெயர்களைத் தேடினால், "priyabhavanishankar" என்பவருடைய கணக்கு வந்தது. சரி அவர் யாரேன கூகுள் செய்தால்,  "பிரியா பவானி சங்கர்"  ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தமிழ் திரைப்பட நடிகை என்றது. "கடைக்குட்டி சிங்கம்" என்ற படத்தில் நடித்திருக்கிறாராம்.  அவருடைய படங்களுக்குப் பல இலட்சம் லைக்குகள்.

அவர் சும்மா "Because it’s been a while!" என ஒரு புகைப்படத்தைப் போட்டிருக்கிறார். அதை 2 இலட்சம் பேர் மிகச் சாதாரணமாக லைக் செய்திருக்கிறார்கள். ஆமாம், இரண்டு இலட்சம் பேர் கை வலிக்க வலிக்கப் பொத்தானை அழுத்தி இருக்கிறார்கள்.

இப்படி இளமை பொங்கி வழியும்  இன்ஸ்டாகிராமத்தில், 18-30 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக குடியிருப்பதாகத் தெரிகிறது. 

கூகுளில் இன்ஸ்டாகிராமைப் பற்றி இன்னொரு தகவலும் கிடைத்தது.
இன்ஸ்டாகிராமை உலக அளவில் ஆண்களை விடப்  பெண்கள்தான் 
அதிகமான பயன்படுத்துகிறார்களாம்.  இன்ஸ்டாகிராமில், பின்தொடர்பவர்களின் (Followers) எண்ணிக்கையில் பிரபல போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் முதல் இடத்தில் (230 மில்லியன் பேர்) இருக்கிறார்.

இந்தியாவில் செல்லப்பிள்ளை கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு முதலிடம் (50 மில்லியன்).  தமிழ்நாட்டில் .. ?  ...சமந்தா அக்கினேனி  


#இன்ஸ்டாகிராம்

Wednesday, July 8, 2020

இனி எம்சிஏ (MCA) 2 ஆண்டுகள்

பல தனியார் பொறியியல் கல்லூரிகள்  ஒரு மாணவரைக் கூட சேர்க்க முடியாமல் தவித்து வருகின்றன எனபது மாதிரியான செய்திகளை 
இன்று நாம் பரவலாகப் பார்க்க முடிகிறது.

ஆனால், தமிழகத்தில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்  பொறியியல் கல்விச் சூழல் என்பது முற்றிலும் வேறாக இருந்தது. அதாவது, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும்,  அரசு பொறியியல் கல்லூரிகள் மட்டும் கோலோச்சிய இருந்த அந்த நாட்களில்
தொழிற்கல்வி எனும் ஃபுரொபசனல் படிப்பு என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக BE Computer Science படிப்பை எல்லாம் நெருங்க முடியாமல் இருந்தது. 

அந்த நாட்களில் +2 (பஃர்ஸ்ட் குரூப்)-க்கு பிறகு பொறியில் கல்லூரிகளில் இடம் கிடைக்காத என்னைப் போன்ற பலருக்குக் கலைக் கல்லூரிகளில் சேர்ந்து அறிவியல் அல்லது கணிதத்தில் இளங்கலை படிப்பதைத் தவிர பெரிதாக வேறு வழி இருக்கவில்லை என்பதே உண்மை. அப்போது கூட, ஒருசிலர் பொறியியல் சேர்ந்தே ஆக வேண்டும் என விடாப்பிடியாக நின்று  ஓர் ஆண்டு காத்திருந்து "இம்ப்ரூவெமெண்ட்"  எல்லாம் கூட எழுதி பார்த்தார்கள். ஆனால்,  பெரும்பான்மையானவர்களின் தேர்வு என்பது கலைக்கல்லூரிகளாகத் தான் இருந்தது.

அப்படிக் கலைக்கல்லூரிகளில் படித்துக்கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கு வரப் பிரசாதமாகவும், கடைசி நம்பிக்கையாகவும் இருந்தது எம்சிஏ (MCA) எனப்படும் மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் படிப்பு. இளங்கலையில் நல்ல மதிப்பெண்களோடு கணிதத்தை ஒரு பாடமாகப் படித்திருந்தால் போதும் எனும் தகுதியோடு சில கலைக் கல்லூரிகளில் செயல்பட்டு வந்த எம்சிஏ படிப்பு பலருடைய தொழிற்கல்வி கனவை அன்று நனவாக்கியது. முன்பு, இளங்கலைக்குப் பிறகு  3 ஆண்டுகள் என்றிருந்த எம்சிஏ படிப்பு இனி 2 ஆண்டுகள் என மாற்றி
நேற்று அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அறிவித்திருக்கிறது.

மற்ற மாநிலங்களின் நிலவரம் சரியாக தெரியவில்லை. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இது ஒரு விதத்தில் காலங்கடந்த அறிவிப்பாக தோன்றுகிறது. ஏனென்றால், இன்ஜினியரிங் கல்லூரிகள் மலிந்துவிட்ட இந்த நாட்களில் தமிழகத்தில் எம்சிஏ படிப்புக்கு எந்த அளவு வரவேற்ப்பு இருக்கிறது என்று தெரியவில்லை.