Wednesday, July 8, 2020

இனி எம்சிஏ (MCA) 2 ஆண்டுகள்

பல தனியார் பொறியியல் கல்லூரிகள்  ஒரு மாணவரைக் கூட சேர்க்க முடியாமல் தவித்து வருகின்றன எனபது மாதிரியான செய்திகளை 
இன்று நாம் பரவலாகப் பார்க்க முடிகிறது.

ஆனால், தமிழகத்தில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்  பொறியியல் கல்விச் சூழல் என்பது முற்றிலும் வேறாக இருந்தது. அதாவது, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும்,  அரசு பொறியியல் கல்லூரிகள் மட்டும் கோலோச்சிய இருந்த அந்த நாட்களில்
தொழிற்கல்வி எனும் ஃபுரொபசனல் படிப்பு என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக BE Computer Science படிப்பை எல்லாம் நெருங்க முடியாமல் இருந்தது. 

அந்த நாட்களில் +2 (பஃர்ஸ்ட் குரூப்)-க்கு பிறகு பொறியில் கல்லூரிகளில் இடம் கிடைக்காத என்னைப் போன்ற பலருக்குக் கலைக் கல்லூரிகளில் சேர்ந்து அறிவியல் அல்லது கணிதத்தில் இளங்கலை படிப்பதைத் தவிர பெரிதாக வேறு வழி இருக்கவில்லை என்பதே உண்மை. அப்போது கூட, ஒருசிலர் பொறியியல் சேர்ந்தே ஆக வேண்டும் என விடாப்பிடியாக நின்று  ஓர் ஆண்டு காத்திருந்து "இம்ப்ரூவெமெண்ட்"  எல்லாம் கூட எழுதி பார்த்தார்கள். ஆனால்,  பெரும்பான்மையானவர்களின் தேர்வு என்பது கலைக்கல்லூரிகளாகத் தான் இருந்தது.

அப்படிக் கலைக்கல்லூரிகளில் படித்துக்கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கு வரப் பிரசாதமாகவும், கடைசி நம்பிக்கையாகவும் இருந்தது எம்சிஏ (MCA) எனப்படும் மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் படிப்பு. இளங்கலையில் நல்ல மதிப்பெண்களோடு கணிதத்தை ஒரு பாடமாகப் படித்திருந்தால் போதும் எனும் தகுதியோடு சில கலைக் கல்லூரிகளில் செயல்பட்டு வந்த எம்சிஏ படிப்பு பலருடைய தொழிற்கல்வி கனவை அன்று நனவாக்கியது. முன்பு, இளங்கலைக்குப் பிறகு  3 ஆண்டுகள் என்றிருந்த எம்சிஏ படிப்பு இனி 2 ஆண்டுகள் என மாற்றி
நேற்று அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அறிவித்திருக்கிறது.

மற்ற மாநிலங்களின் நிலவரம் சரியாக தெரியவில்லை. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இது ஒரு விதத்தில் காலங்கடந்த அறிவிப்பாக தோன்றுகிறது. ஏனென்றால், இன்ஜினியரிங் கல்லூரிகள் மலிந்துவிட்ட இந்த நாட்களில் தமிழகத்தில் எம்சிஏ படிப்புக்கு எந்த அளவு வரவேற்ப்பு இருக்கிறது என்று தெரியவில்லை.

 

No comments:

Post a Comment