Sunday, May 30, 2021

திசையெல்லாம் நெருஞ்சி

சுருங்கச் சொல்கிறேன் பேர்வழி எனத் தொடங்கி நான்கு, ஐந்து பக்கங்களாக இருந்த சிறுகதைகள் பிறகு மூன்று, இரண்டு, ஒன்று எனப் படிப்படியாக  இறங்குமுகமாகி பின் தடாலடியாக தூண்டில் கதைகள், சிறுசிறுகதைகள் (சிசிகதைகள்), உடனடிக்கதைகள் (sudden fiction) என வேகமெடுத்து இன்று இரண்டு சொற்களில் வந்து நிற்கிறது.

என்ன இரண்டு சொற்களில் சிறுகதையா ? எனக் கேட்பவர்களுக்காக
சட்டென நினைவில் இருக்கும் ஒரு கதை (தலைப்புடன் சேர்த்து வாசிக்கவும்)

தலைப்பு: 2050இல் குழந்தை
கதை: தங்கச்சின்னா என்னம்மா ?

அதுபோல இன்னொன்று
தலைப்பு: ஆபிஸ்ல எத்தனை ஆம்பளைங்க ?
கதை: முதலிரவில் கேள்வி

இதுபோல சொற்சிக்கனத்துடன் எழுதுபவர்களின் திறமைக்கு சவால் விடும் வகையில் அமைந்த பல கதைகளை எழுத்தாளர் சுஜாதா குமுதத்தில் அறிமுகப்படுத்தியதாக நினைவு. 

வாசிப்பு அரிதாகத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களிலேயே சுஜாதா சுதாரித்து விட்டதாக நினைக்கிறேன்.

இதையெல்லாம் கதைகளா ? தமாஷ்!  எனச் சொல்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், எழுத்தாளர்கள் சமயங்களில் புனைவு எழுதும்போது சிறுகதைக்கும் குறுநாவலுக்கும் இடைப்பட்ட ஒரிடத்தில் சிக்கிக் கொள்வார்கள். அதாவது சிறுகதைபோல சில பக்கங்களில் சொல்லவும் முடியாது பலநூறு பக்கங்கள் வரை இழுக்கவும் முடியாது. சிறுகதைக்கும் குறுநாவலுக்கும் உள்ள அந்த இடைவெளியை (நெடுங்கதை ?) மிகச் சரியாக எழுத்தாளர் சு.வேணுகோபாலன் பயன்படுத்திக்கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

அந்தவகையில் அவருடைய "திசையெல்லாம் நெருஞ்சி" தொகுப்பைப் பார்க்கிறேன். மொத்தமாக மூன்று கதைகள். மூன்றும் இன்றைய
எதார்த்தத்தை அழகாக பதிவுசெய்வதால் நூல்  இலக்கிய அந்தஸ்தைப் பெறுகிறது. குறிப்பாக கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து திடீர் நகரவாசியான மணமகனின் மனவோட்டத்தில் நகரும் "உருமால் கட்டு" கதை மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது. மற்றோன்று "இரட்சணியம்" - பதின்மவயது  விடலை பையனின் குழப்பங்களைப் பதிவு செய்வதாகவும், "திசையெல்லாம் நெருஞ்சி"-  எங்கும் களையாக மண்டிக்கிடக்கும் சாதியகட்டுமானத்தை உடைத்து காட்டுவதாகவும் இருக்கிறது.

இதில் ஏனோ இரட்சணியம் வாசிக்கையில் மட்டும்  சற்று நெருடலாக உணர்ந்தேன். மற்றபடி வாசர்களை அயற்சியடையச் செய்யாத எளிமையான எதார்த்த நடையில் எழுதப்பட்ட கதைகள் இவை. வாய்பிருந்தால் வாசியுங்கள்.

"திசையெல்லாம் நெருஞ்சி" எனும் தலைப்பில்  உள்ள "நெருஞ்சிச் செடி"
ஒரு மூலிகை. நீர்க் கடுப்பைப் போக்கும், ஆண்மை பெருக்கி என்பது மாதிரியான பல நூறு மருத்துவப் பயன்கள் இணையத்தில்
கொட்டிக்கிடக்கின்றன. தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளலாம்.
80களில் முருங்கைக்காய் தமிழ் திரையுலகில் (உபயம்-இயக்குநர் பாக்கியராஜ்) ஒரு வலம் வந்தது
போல இந்த நெருஞ்சி வர வாய்ப்பிருக்கிறதா என்ன? :)

எழுத்தாளர்:சு. வேணுகோபால்
பதிப்பகம்:தமிழினி

Sunday, May 23, 2021

தமிழ் விசைப்பலகை

10 ஆண்டுகளுக்கு முன் தமிழில் முழுமையாக எழுதுவது என இறங்கிய புதிதில் தமிழ் எழுத்துருவை இணையத்தில் எழுதுவது மிகுந்த சிரமமாக இருந்தது. இத்தனைக்கும் நான் தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் தட்டச்சு செய்வதில் ஹையர் (முதுநிலை) வரை படித்தவன். ஒருங்குறி எழுத்துரு எனும் Unicode நடைமுறையில் வந்திருந்தாலும் கூட அப்போது பல தமிழ் தளங்கள் பூச்சி பூச்சியாக தெரிந்தன.

வந்த புதிதில் எனக்கு முதலில் வழங்கப்பட்ட அறிவுரை இதுதான். தமிழில் சரளமாக எழுத உனக்கு ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும்.  அதற்கென இருக்கும் செயலியைப் பயனபடுத்தி தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அச்சடித்து அப்படியே நகல் செய்து ஒட்டு என்றார்கள். அதாவது, ஆங்கிலத்தில் 'anbu' என்று தட்டச்சு செய்,  செயலிகள் அதை 'அன்பு' என்று மாற்றித்தரும் என்றார்கள். 

ஆங்கிலத்தில் அடித்து அதைத் தமிழாக மாற்றுவதில் எனக்கு முற்றிலுமாக உடன்பாடு இல்லை. சிந்தனைக்கும் எழுத்துக்கும் நடுவில் இன்னொரு ஆள் (ஆங்கிலம்) தேவையில்லை என நினைத்துத் தேடியபோதுதான் இ-கலப்பை (ekalappai) என்ற மென்பொருள் கண்ணில் பட்டது. சிக்கென பற்றிக்கொண்டேன்.  பலர் இன்று தமிழ் தனிமொழி வடிவத்துக்கு என்.எச்.எம். (nhm)  பயன்படுத்துவதாக அறிகிறேன். இந்த மென்பொருள்களை நாம் நேரடியாக தமிழ் டைப்ரைட்டரைப் போல பாவிக்கலாம்.


நான் இ-கலப்பையைக் கணினியில் பயன்படுத்தும் போது தமிழ்-99 எனும் எழுத்துரு (font)-வைத் தேர்ந்தெடுக்கிறேன் (படம் கீழே). 


தமிழ் 99  (Tamil99)  என்பது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விசைப்பலகை தளவமைப்பு ஆகும்.

இதெல்லாம் பழைய கதை.  இன்று, கைபேசிகளில் தமிழ் விசைப்பலகை  வந்த பின் வாழ்க்கை மிக எளிதாகி விட்டது. அதில்,  தேவையான எழுத்துருக்களை மிக மிக எளிதாக 30 பொத்தானுக்குள் அடக்கிவிட்டார்கள். 


 அதனால், கூட்டெழுத்துகள் வழியாக எந்தவித சிரமமும் இல்லாமல் அடித்துவிட முடிகிறது. இதைப் பாவிக்க பயனாளர் ஆங்கில தட்டச்சோ இல்லை தமிழ் தட்டச்சோ தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனாலும், இன்னமும் கூட தமிழ் கூறும் நல்லுலகில் ஏனோ தமிங்கிலம்  (Tanglish)  திமிங்கிலமாக உலாவுவது வருத்தமளிக்கிறது.

இதை முகநூலில் பகிர்ந்த போது, சிலர் செல்லினம் எனும் ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தட்டச்சு செய்ய உதவும் ஒரு மென்பொருள் பற்றி குறிப்பிட்டிருந்தனர். அதுபோல, Gboard எனும் கூகுள் விசைப்பலகையைப் பயன்படுத்தி வாய்வழியாக பேசியே  ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் எழுதலாம் என்பதையும் பகிர்ந்திருந்தனர்.

Monday, May 17, 2021

கி.ரா - அஞ்சலி

இலக்கியத்துக்கான நோபல் பெற எல்லா தகுதிகளையும் கொண்டிருந்த மகத்தானதொரு தலைமகனை இழந்திருக்கிறோம். ஆழ்ந்த இரங்கல் ..



Wednesday, May 12, 2021

அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்த கல்லூரி பேராசிரியர்

வெளியூர் பேருந்துகள் அப்போது  திருவள்ளுவர் என்ற பெயரில்  ஓடிக்கொண்டிருந்தன. அந்தப் பேருந்துகளில் ஒட்டுநர் இருக்கைக்குப் பின்புறம் கம்பி போட்ட அடைப்பு ஒன்று இருக்கும். பெரும்பாலும்   அங்கு நிறுத்தித் தான் பிள்ளைகளுடைய உயரத்திற்கு ஏற்றாற் போல அரை டிக்கெட் எடுப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள். ஏனென்றால், நம்மூர் ஆட்களிடம் வயதைக் கேட்டாலோ இல்லை படிக்கும் வகுப்பைக் கேட்டாலோ ஒன்றிற்கு இரண்டு குறைத்தே சொல்வார்கள் என்ற நம்பிக்கை தான். :)

இதை ஓட்டி சமீபத்தில் படித்த ஒரு சம்பவம். இந்தியாவின் சுதந்திரத்துக்கு முன்பு நடந்தது. அவர் ஒரு கல்லூரி பேராசிரியர். அரசாங்க விதிகளை மிகக் கடுமையாகப் பின்பற்றும் பழக்கம் உள்ளவர். அவர் ஒருமுறை தனது மகளுடன் இரயிலில் பயணப்பட்டார். அன்று இரவு அவருடைய மகளுக்கு 12 வயது முடிந்து 13 வயது ஆரம்பித்தது. ஆனால், அவரோ 12 வயதைக் கணக்கில் கொண்டு மகளுக்கு அரை டிக்கெட் மட்டும் எடுத்திருந்தார். இப்போதோ வயது 13. விதிமுறைப்படி அந்த வயதில் பயணிப்பவர்கள் முழு டிக்கெட் எடுத்திருக்க வேண்டும்.

அதனால், இரயிலில் டிக்கெட் பரிசோதகரைத் தேடி இருக்கிறார். எவ்வளவு தேடியும் ஆள் சிக்கவில்லை. ஆனால், தான் விதிமுறை மீறல் செய்வதாக உணர்ந்த அவர் உடனே இரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தார். இரயில் நின்றது. வந்த அதிகாரிகளிடம் தான் இரயிலை நிறுத்த நேரிட்டதை விவரித்தார்.

அதிகாரிகள் அவருக்கு மீதி பயணத்துக்கு முழு டிக்கெட்டு வழங்கினார்கள். கூடவே,  உரிய காரணமின்றி இரயிலை நிறுத்தியதற்குத் தண்டனையாக ரூபாய் ஐம்பது விதித்தார்கள். அவர் அதையும் சேர்த்தே கட்டினார். செலுத்தியபின் சொன்னாராம், 'இனி என் மனசாட்சி உறுத்தாது, மீதி பயணத்தை நான் நிம்மதியாகத் தொடர்வேன்' என்றராராம் அந்த "ரூல்ஸ்" இராமானுஜம்.