10 ஆண்டுகளுக்கு முன் தமிழில் முழுமையாக எழுதுவது என இறங்கிய புதிதில் தமிழ் எழுத்துருவை இணையத்தில் எழுதுவது மிகுந்த சிரமமாக இருந்தது. இத்தனைக்கும் நான் தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் தட்டச்சு செய்வதில் ஹையர் (முதுநிலை) வரை படித்தவன். ஒருங்குறி எழுத்துரு எனும் Unicode நடைமுறையில் வந்திருந்தாலும் கூட அப்போது பல தமிழ் தளங்கள் பூச்சி பூச்சியாக தெரிந்தன.
வந்த புதிதில் எனக்கு முதலில் வழங்கப்பட்ட அறிவுரை இதுதான். தமிழில் சரளமாக எழுத உனக்கு ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். அதற்கென இருக்கும் செயலியைப் பயனபடுத்தி தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அச்சடித்து அப்படியே நகல் செய்து ஒட்டு என்றார்கள். அதாவது, ஆங்கிலத்தில் 'anbu' என்று தட்டச்சு செய், செயலிகள் அதை 'அன்பு' என்று மாற்றித்தரும் என்றார்கள்.
ஆங்கிலத்தில் அடித்து அதைத் தமிழாக மாற்றுவதில் எனக்கு முற்றிலுமாக உடன்பாடு இல்லை. சிந்தனைக்கும் எழுத்துக்கும் நடுவில் இன்னொரு ஆள் (ஆங்கிலம்) தேவையில்லை என நினைத்துத் தேடியபோதுதான் இ-கலப்பை (ekalappai) என்ற மென்பொருள் கண்ணில் பட்டது. சிக்கென பற்றிக்கொண்டேன். பலர் இன்று தமிழ் தனிமொழி வடிவத்துக்கு என்.எச்.எம். (nhm) பயன்படுத்துவதாக அறிகிறேன். இந்த மென்பொருள்களை நாம் நேரடியாக தமிழ் டைப்ரைட்டரைப் போல பாவிக்கலாம்.
நான் இ-கலப்பையைக் கணினியில் பயன்படுத்தும் போது தமிழ்-99 எனும் எழுத்துரு (font)-வைத் தேர்ந்தெடுக்கிறேன் (படம் கீழே).
தமிழ் 99 (Tamil99) என்பது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விசைப்பலகை தளவமைப்பு ஆகும்.
இதெல்லாம் பழைய கதை. இன்று, கைபேசிகளில் தமிழ் விசைப்பலகை வந்த பின் வாழ்க்கை மிக எளிதாகி விட்டது. அதில், தேவையான எழுத்துருக்களை மிக மிக எளிதாக 30 பொத்தானுக்குள் அடக்கிவிட்டார்கள்.
அதனால், கூட்டெழுத்துகள் வழியாக எந்தவித சிரமமும் இல்லாமல் அடித்துவிட முடிகிறது. இதைப் பாவிக்க பயனாளர் ஆங்கில தட்டச்சோ இல்லை தமிழ் தட்டச்சோ தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனாலும், இன்னமும் கூட தமிழ் கூறும் நல்லுலகில் ஏனோ தமிங்கிலம் (Tanglish) திமிங்கிலமாக உலாவுவது வருத்தமளிக்கிறது.
இதை முகநூலில் பகிர்ந்த போது, சிலர் செல்லினம் எனும் ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தட்டச்சு செய்ய உதவும் ஒரு மென்பொருள் பற்றி குறிப்பிட்டிருந்தனர். அதுபோல, Gboard எனும் கூகுள் விசைப்பலகையைப் பயன்படுத்தி வாய்வழியாக பேசியே ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் எழுதலாம் என்பதையும் பகிர்ந்திருந்தனர்.
விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்...
ReplyDeleteகணினியில் என்.எச்.எம்.,
ReplyDeleteபழைய தமிழ் தட்டச்சு முறை
அலைபேசியில் கூகுள் இன்புட் கையால் எழுதுதல்
இரண்டுமே சுலபமாக இருக்கிறது.
நானும் தங்களைப் போல்
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தட்டச்சு மேனிலைக் தேர்வில் வெற்றி பெற்றவன்