Tuesday, December 27, 2022

வனநாயகன் குறித்து-25 (வசீகரமான தலைப்போடு அறுசுவை)

வனநாயகன்(மலேசிய நாட்கள்) குறித்து தனது வாசிப்பனுவத்தைப் பகிர்ந்த தோழர் அப்துல் காதர் (சென்னை) அவர்களுக்கு மிக்க நன்றி !

//

வாழ்க வளமுடன்.

அன்புத் தோழர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்களின் வசீகரமாக வனநாயகன் வாசித்தேன். சிறப்பான நாவல்.இது குறித்தான கருத்துப் பறிமாற்றம் செய்ய போதுமான அவகாசம் கிட்டவில்லை.

நாவல் வாசித்து நாட்கள் பலவாகி இருந்தாலும், அலுப்பு தட்டாத உங்களின் மொழிநடையாலும், இதுவரை நான் அறியாத பணி களத்தை விவரித்த அழகில், சுஜாதா( ரங்கராஜன்) க்குப் பிறகு சிலிக்கான் தொழில்நுட்ப பணிகளில் இப்படியும் வகையுண்டா? எனும் ஆச்சரிய மேலீட்டாலும், அத்துடன் கலகலப்பான க்ரைம் கலந்து விறுவிறுப்பு கூட்டியதாலும், இரண்டே நாள் அவகாசத்தில் படித்து முடித்து விட்டேன் என்றாலும், தொலைதூர அலுவலகப் பணிகளாலும், விடுமுறை; ஓய்வு எனும் அடிப்படையில் இங்கு வந்ததாக மனைவியும் மகளும் கருதியதாலும் விட்டு விட்டு பயணங்கள் என பொழுது கழிந்ததால், பொருத்தமான கால அவகாசம் கிட்டவில்லை.


ஒராங் உட்டான்(ஓராங் ஊத்தான்) என சாதாரணமாக அறியப்பட்டுள்ள ஓர் உயிரினத்தின் வலிகளையும், அதனைத் தமிழ்ப்படுத்தி வசீகரமான தலைப்பிட்டதிலும் தொடங்கி, துறை சார்ந்த குறிப்புகள் அதனுடன் பின்னிப் பிணைந்த தொழிற்போட்டிகள், எல்லாவற்றையும் மீறிய அரசியல் குறுக்கீடுகள் அல்லது தலையீடுகள் அத்துடன் அளவான ரசபாசமான காதல் உணர்வுகள் என கலந்துகட்டி அறுசுவை விருந்து படைத்து விட்டீர்கள். வாழ்த்துகள்.

பயணக்கட்டுரை போல் இல்லாமல், கதைகளத்தின் ஊடே மலேசிய சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தி அவற்றைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள். நல்லவேளையாக இந்நாவலை என் மனைவி படிக்கவில்லை. படித்து முடித்தால், லிஸ்டில் மலேசியாவும் சேர்ந்து விடும்.(ஏற்கனவே சிங்கப்பூர் லிஸ்டில் உள்ளது)...

//

வனநாயகன் – மலேசிய நாட்கள் (நாவல்)
ஆரூர் பாஸ்கர்,

கிழக்கு பதிப்பகம்,
பக்கங்கள் 304, விலை ரூ.275

No comments:

Post a Comment