Wednesday, May 31, 2023

வீரப்பன் - தீதும் நன்றும்

மிழில் சினிமா, அரசியல் இரண்டும் யூ-டியூபின் இரண்டு கண்கள் என்றால் மூன்றாவது கண் வீரப்பன் விவகாரமாகதான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு தினமும் மக்கள் பரபரப்போடு இணையத்தில்  இதைக் கவனிக்கிறார்கள். வீரப்பன் மரணமடைந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்பும் மவுசு குறைந்ததாக தெரியவில்லை.


'வீரப்பனாரு'க்கு சமைத்தவர், வீரப்பனைத் தூரத்தில் நின்று பார்த்தவர், கடந்து போன பின் காலடித்தடத்தைப் பார்த்தவர், சந்தேக வழக்கில் சிக்கியவர், வீரப்பனின் ஒன்றுவிட்ட சித்தாப்பாவின் பேரன், அங்காளி, பங்காளி ஊர்க்காரர், உறவுக்காரர், சலவைக்காரர் என சகலமானவர்களையும் காடுகளுக்குள் புகுந்து நேர்காணல் எடுத்து போடுகிறார்கள். அந்த  அளவுக்கு மக்களிடம் வரவேற்பு. 

ஏன், பொன்னியின் செல்வன் படத்துக்கு பின் தமிழில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைச்சித்திரம்‘வீரப்பன் வாழ்க்கை’ வரலாறாக இருக்கும் போல. நெப்போலியனின் ‘சீவலப்பேரி பாண்டி’ சக்கைபோடு போட்டதை இங்கே நினைத்துப் பாருங்கள். (வீரப்பன் தொடர்பான  40-50 ஆண்டுகால நிகழ்வுகளை  சமூகபார்வையில் அணுகி ஏன் உருப்படியான ஓர் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்கக் கூடாது ?).

இதெல்லாம் போதாதென்று, சிலர் வீரப்பன் காட்டு பழங்குடியினருக்கு உதவுகிறோம் பேர்வழி என பணம் வசூலித்து மோசடி செய்வதாகவும் சொல்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், வீரப்பன் மறைவுக்கு பின் வெளியாட்கள் பலர் தைரியமாக காடுகளுக்குள் நுழைந்து ஆழ்துளை கிணறு, நீர்முழ்கி மோட்டார் என சகட்டு மேனிக்கு நீரை  உறிஞ்சி இயற்கைக்கு புறம்பான விவசாயம் செய்கிறார்களாம்.

அதுபோல, வீரப்பன் மறைந்து வாழ்ந்த காட்டை மையப்படுத்தி  சுற்றுலா கொண்டுவரும் திட்டம் வேறு சிலருக்கு இருக்கிறதாம். அப்படி, ஏதாவது வந்தால் உல்லாசப் பயணம் என்ற போர்வையில் வெளியாட்கள் உள்ளே புகுந்து இன்னமும் இயற்கை வளத்தை அழிப்பார்கள். பாவம் அங்கே எஞ்சி நிற்கும் உயிரினங்கள்.

இப்படிச் சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர் அழித்த காடுகளின் பரப்பளவு ஒன்பது சதவிகிதம் எனில் மீதமுள்ளதை அழித்துக் கொண்டிருப்பது நாமே.

#தீதும்நன்றும்

படம் நன்றி- இணையம்.


Thursday, May 4, 2023

அபிதா- எழுத்தாளர் லா.சா.ராமாமிருதம்

'அபிதா' என்ற பெயரைப் பார்த்தவுடன் நடிகர் விக்ரம் நடித்த 'சேது' படத்தின் பாதிப்பில் யாரோ எழுதிய புத்தகம் போல என பலர் நினைக்க வாய்ப்புண்டு. ஆனால்,  உண்மையில் நடந்ததோ வேறு.  1960-களில் லா.ச.ரா எனப்படும் எழுத்தாளர் லா. ச. ராமாமிர்தம்  எழுதிய அபிதா நாவலின் தாக்கத்திலேயே 'சேது' பட நாயகியின் பாத்திரம் படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏனென்றால், அபித குஜலாம்பாள் அம்மன் பெயரின்  நாமகரணத்தைதான் அபிதா-வாக மாற்றி எழுதியதாக லா.சா.ரா தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அது உண்ணாமுலை அம்மனின் இட்டு அழைக்கும் பெயர். அதைத் தான் பாலாவும் தனது படத்தில் செய்திருக்கிறார்.  இதைத்தாண்டி இரண்டுக்கும் வேறு ஒற்றுமையிருப்பதாக தோன்றவில்லை. ( நாகரிகம் அல்லது 'மார்டன்' என்ற பெயரில் தமிழர்களின் பெயர்கள் மாறி வருவதைப்பற்றி தனியாக எழுதவேண்டும்).

ஆனால், சேது படம் போலவே அபிதாவும் ஒரு காதல் கதைத்தான். உள்ளடக்கம் வேறு. லா.சா.ராவின் 'அபிதா' 100 பக்கங்களுக்குள் எழுதப்பட்ட காதல் கவிதை போன்றதொரு சிறிய நூல்.  அதன் வாசிப்பனுபவம்.



செல்வந்தரின் பெண்ணை மணம் புரிந்தாலும் குழந்தையில்லாமலும், மணவாழ்வில் நிம்மதியில்லாமலும். வெற்று வாழ்க்கை வாழும் ஒருவன் தனது கடைசி காலத்தில் மனைவியோடு சொந்த ஊருக்கு வருகிறான்.   
அவனது சொந்த ஊர் கரடிமலை.  அந்த ஊரில் இவன் இல்லாத நாட்களில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்து விடுகின்றன.  குறிப்பாக, அவனுடைய முன்னாள் காதலி சகுந்தலை மரணமடைந்து அவளுடைய குடும்பத்தில் மகள் அபிதா மட்டும் பிழைத்திருக்கிறாள் என்பதை அறிகிறான்.

மகள் அபிதா இளமை பொங்கும் அழகோடிருக்கிறாள். அவளுடைய அழகில் தாய் சகுந்தலையைக் காணும் அவன் அவள் மீது மையல் கொள்வதாக செல்லும் கதை இது.

மகள் இடத்தில் வைத்திருக்கவேண்டிய பெண்ணை பெண்டாள நினைப்பது சரியா ? எனும் தர்கத்தில் இறங்காமல் வாழ்வில் அனைத்தும் சாத்தியம் என எண்ண வைக்கும் இந்த புனைவில் குறிப்பிட்டுச் சொல்ல சில இருக்கத்தான் செய்கின்றன. அது லா.சா.ரா. வின் மொழிநடை. 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடை. இன்றைய குமுதம் படிப்பவர்கள் வாசிக்கமுடியாத, நேரடியான மொழிநடையில் இல்லாத, ஆர்வம் கொள்ள செய்யாத ஒரு நடை.

கதைச்சொல்லியின் நனவோடை உத்தியில்  அமைந்த  இந்தக் கதை
பெரும்பாலும் அக உணர்ச்சியின் வெளிப்பாடாக கவித்துவத்தோடு நகர்கிறது.

எ.டு.

"சக்கு (சகுந்தலை) நீ என்றுமே ஒரு இருண்ட கேள்வி ! . அபிதாதான் உன் வெளிச்சமான பதிலோ ?. 
அபிதா, உன் வெளிச்சம் கண் கூசுகிறது."

"யாக குண்டத்திலிருந்து எழுந்த அக்னி தேவன் கையில் ஏந்திய வெள்ளி பாயசக் கிண்ணம் போல, அறை ஒரு விநாடி மின்னலில் பளீரிட்டு, அறையில் முன்னிலும் காரிருள் கவிந்து சூழ்ந்து கொண்டது". என்பது மாதிரியான சின்ன வாக்கிய அமைப்புகள்.

இது அடர்ந்த மொழி என்பதைத் தாண்டி தத்துவ விசாரணைகளை எழுப்புவதாலே  நாவல் இலக்கிய அந்தஸ்து பெறுவதாக நினைக்கிறேன்.


எ.டு. "அன்பிட்டவர்களின் குறைகளே, அவர்களிட்ட அன்பின் விசேச ருசி.
எப்பவுமே பசிக்காகவா சாப்பிடுகிறோம் ? சமைத்ததற்காகவா சாப்பிடுகிறோம் ?",  "வாசனைகளில்தான் உயிர் வாழ்கிறோம்".

அதுமட்டுமல்லாமல் தன்மை நிலையில் கதை எழுத நினைப்பவர்கள்  பயிற்சிக்காக வாசிக்க வேண்டிய நூல். பட்சி, ஜலம், ரகஸ்யம் என்பது போல எண்ணிலடங்காத வடமொழி சொற்கள் கலந்து எழுதப்பட்டிருகிறது. ஏன், ஆங்கிலமும் கலந்துதான்.  "I don't care". "High class picture ஸார்". என்று கூட அன்றே எழுதப்பட்டிருக்கிறது. இருந்தாலும்,  சில நல்ல தமிழ் சொற்களும் இருக்கத்தான் செய்கின்றன.

நிரை என்பது மந்தை என்ற பொருளில் வந்திருப்பதைக் கவனித்தேன். அதுபோல மின்னல்களின் பொளிசல் என்பது பொளிதல் என்பதன் பேச்சுவழக்கு எனப் புரிந்துகொள்கிறேன் (பிளத்தல்) . 

100 பக்கங்கள் என்றபதால் மிக எளிதாக வாசித்துவிடக் கூடிய நூல் நேரமிருந்தால் பாருங்கள்.


நூல்: அபிதா
ஆசிரியர்: லா.சா.ராமாமிருதம்
வெளியீடு: எழுத்து பிரசுரம்
விலை: ரூ.100