Saturday, August 1, 2026

பேரவையின் 39-ஆம் ஆண்டு (2026) மலர் - ஒரு பார்வை

கடந்த இரண்டு ஆண்டுகளாக பேரவை விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. அதனால், விழா மலரும் கைவரவில்லை.  ஆனால், அந்த வாய்ப்பு இந்த ஆண்டு நியூஜெர்சியில் கிடைத்தது.

பெட்னா பேரவையின் 39-ஆம் ஆண்டு (2026) மலர் இராசேந்திர சோழன் கடாரம் 1000 வெற்றி ஆண்டு; தனித்தமிழ் இயக்கம்- மறைமலை அடிகள் 150 பிறந்தநாள் எனும் கருப்பொருளோடு வந்திருக்கிறது. ஆண்டு மலர் குறித்த எனது பார்வை. 


இந்த ஆண்டு அட்டைப் படம் தொடங்கி பக்கத்துக்கு பக்கம் செயற்கைத் தொழில்நுட்பத்தின் படங்களால் நிரப்பி புதுமை செய்திருக்கிறார்கள்.  மற்றபடி, ஆழமான சிந்தனையைத் தூண்டும் விதமான கட்டுரைகள் ஒன்றரண்டு மட்டுமே எனது கண்ணல் பட்டன.  பேரவை மலரில் உள்நாட்டினரின் பங்களிப்பு தேவை என்பதை இங்கே புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அது எந்த அளவுக்குத் தேவை என்பது தீர்மானிக்கப்படவேண்டிய ஒன்று.  ஏனென்றால், பேரவை மலருக்கும் மற்ற தமிழ்சங்க மலர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு அதுதான்.

அதுமட்டுமின்றி, மறைமலை அடிகளாரின் 150-ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, மலரின் குறிப்புப் பகுதியில் முக்கால் பக்க அளவிலான சுருக்கமான கட்டுரை ஒன்று மட்டுமே இடம்பெற்றுள்ளது. விழா நிகழ்விலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தப்பட்ட அடிகளார் குறித்த 2-3 நிமிடக் காணொளியைத் தவிர்த்து,  அடிகளாரின்  சிந்தனைகள் குறித்த புதிய பார்வைகளோ அல்லது தீவிரமான ஆய்வுக் கருத்துகளோ முன்னெடுக்கப்படவில்லை என்பது சற்றே ஏமாற்றமளிக்கிறது. மறைமலை அடிகள் குறித்தும் அவருடைய சிந்தனைகள், செயல்பாடுகள் குறித்தும் தமிழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவரிடமோ அல்லது தகைசால் தமிழ் சான்றோர் யாரிடமாவது ஒரு கட்டுரை பெற்று வெளியிட்டிருந்தால்  இன்னமும் செறிவானதாக இருந்திருக்கும். 

இதுபோல,  தமிழின் சிந்தனையாளர்கள், உரத்த சிந்தனையாளர்கள் என பலரிடம்  ஆழமான கட்டுரைகளைத் தேடி பெறவேண்டும் என்ற முயற்சி குறைந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. அதே சமயத்தில், எழுத்துப் பிழைகள் பெரும்பான்மையாகக் களையப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, ஆசிரியர் குழுவின் உழைப்பு பாராட்டத்தோன்றுகிறது.

பெரும்பாலான கட்டுரைகள் கல் தோன்றி, முன் தோன்றி வகையராக்கள். 

அறிஞர் அண்ணா 60-ஆண்டுகளுக்கு முன் மதுரை பல்கல்கலைக் கழக உரையில் (1966) பேசியது போல்  "புலிப்பொறித்தான், கயல்பொறித்தான், கடராம் வென்றான் என்றெல்லாம் புல்லரிக்கும் வரலாற்றைப் படிக்கிறோமே .." என்பதன் நீட்சியாகவே இருந்தது.

ஆனால்,  உலகின் அதிநவீன தொழில்நுட்ப முன்னோடி நாடான அமெரிக்காவில் வாழும் தமிழர்களாகிய நாம், அந்த அனுபவத்தையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக இன்னும் எந்த வகையில் சிறப்பான பங்களிப்பாக மாற்ற முடியும் ? என்பது குறித்தெல்லாம் யோசிக்கும் இடத்தில் பேரவை இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

மலரில்  விதிவிலக்காக "எந்திரம் பேசும்- தமிழ் கேட்குமா ?" எனும் தலைப்பில்  அன்பர் செந்தில்முருகன் வேலுச்சாமி எழுதியுள்ள கட்டுரை அந்த வகையைச் சார்ந்தது.

இனியேனும், தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் இடத்தை உறுதிப்படுத்த அமெரிக்க தமிழர்களாகிய நாம் என்ன செய்தோம் என ஆழ்ந்து சிந்தித்து, ஆக்கப்பூர்வமான முயற்சிகளைச் செய்ய வேண்டும். பேரவை மாநாடு நடக்கும் இந்த அமெரிக்க மண்ணில் இருந்து செயல்படும் உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் தலைவர் சுந்தர் பிச்சை ஒரு தமிழர் என்பதை தனியாக நினைவுபடுத்த வேண்டுமா என்ன ?  தமிழ் வளர்ச்சி என்பது பல்கலைக் கழகங்களும், அரசுகளும் மட்டும் செய்யவேண்டிய ஒன்று மட்டுமல்ல என நினைக்கிறேன். 

புலம்பெயர்ந்தோர் மொழியை அகம் சார்ந்து மட்டும் நுகராமல் புறம் சார்ந்து யோசிப்பது நலம். அதாவது, நமது தமிழ்ச் சங்கங்கள் கொண்டாடுகின்ற தமிழர்விழாக்களில் ஏன் அறிவியலுக்கும், தொழில்நுட்பத்துக்கும் இடமிருப்பதில்லை என்பது  யோசிக்க வேண்டிய ஒன்று. ஒரு மொழி வணிக மொழியாக, அதிகார மொழியாக (குறைந்தபட்சம் தமிழகத்தில்) தொடரும் வரை மட்டுமே அதன் மாண்பு தொடர்ச்சி என்பதெல்லாம்.

இங்கே ஃபெட்னா ஆண்டுதோறும்  உலகத் தமிழ்த் தொழில்முனைவோர் இணைப்புக்கு (FiTEN) என தனியாக ஒருநாள் ஒதுக்கித்தருகிறது என்பதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment