இது நம்ம ஊரு தைப்பொங்கல் போல ஒரு பண்டிகைனு தப்பு கணக்கு போடாதீங்க இது அதையும் தாண்டி. .. நாம பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைளை டீவி சேனல்கள்கிட்ட அடகு வச்சு ரொம்ப நாளச்சு பாஸ்...
சரி விஷயத்துக்கு வருவோம், இது அமெரிக்காவின் முக்கியமான ஆண்டின் நீண்ட வாரஇறுதி அல்லது Long Weekend. வியாழன் அன்று தேங்க்ஸ் கிவீங் கொண்டாடிவிட்ட களைப்பு தீராமல் மறு நாளை (Black Friday) ப்ளாக் ப்ரைடே எனப்படும் ஷாப்பிங் வெள்ளியை கொண்டாடி மகிழ்கிறது.
ப்ளாக் ப்ரைடே அன்று கிருஸ்மஸ் சீசனை வரவேற்பது போல நிறுவனங்கள் அனைத்து பொருட்களையும் தள்ளுபடி விலையில் விற்று குவிக்கின்றனர். தங்கம் முதல் தகரம் வரை எல்லாத்துக்குமே தள்ளுபடி தான் போங்க. இது நம்ம ஊரு ஆடிக் கழிவையெல்லாம் தூக்கி சாப்பிடக்கூடியது.
இந்த ஆண்டு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவில் பெரிய சில்லறை நிறுவனங்களாகிய வால்மார்ட்,மேஸிஸ்,பெஸ்ட் பை போன்றவை வியாழாக்கிழமை மாலையிலே கடைகளை திறந்து விற்பனையை தொடங்கினர்.
அதனால் எப்போதும் வெள்ளியன்று சூடுபிடிக்கும் ஷாப்பிங் காய்ச்சல் இந்த தடவை வியாழக்கிழமையே தொற்றிக்கொண்டது. இதற்கு அமெரிக்க மக்களிடம் பெருவாரியான ஆதரவு இருக்காது என பரவலாக பேசப்பட்டாலும். வசூல் எதிர்பார்க்கப்பட்டதை தாண்டியதாக தெரிகிறது.
ப்ளாக் ப்ரைடே என்பதை நுகர்வு கலாச்சாரத்தின் உச்சமாகவே நான் பார்க்கிறேன். இந்த ஆண்டில் இருந்து பிரிட்டனிலும் வால்மார்டின் ஆசியிடன் இது தொடங்கியதாக தெரிகிறது. இந்த அமெரிக்க நுகர்வு கலாச்சார புயல் சென்னை போன்ற நகரஙகளை தாக்கும் அபாயம் தூரத்தில் இல்லை. சல்லிசான விலையில பொருள் கிடைச்சா மக்கள் வேண்டாமானா சொல்லப்போறாங்க ?. :)
இந்த விடுமுறையின் முதல் பாகமான நன்றி தெரிவித்தலுக்கு வருவோம், தற்போதய அவசர சூழலில் காலையில் அப்பார்ட்மெண்டில் லிப்ட் கதவை திறந்து விடும் செக்கியூரிட்டியில் தொடங்கி தினமும் இயந்திரத்தனமாக பல தடவை 'Thanks' என்ற வார்த்தையை அவசரகதியிலே உதிர்த்து செல்கிறோம்.
ஒரு வாழ்த்தையோ அல்லது ஒரு நன்றியையோ நம்மில் எத்தனை பேர் உணர்ந்து சொல்கிறோம் என்பது நிஜத்தில் கேள்விக்குரியதே.
தமிழில் நன்றி சொல்ல வார்த்தையின்றி மயங்காமல் மாறுதலுக்கேனும் அடுத்தமுறை 'நன்றி' என எதிரில் உள்ளவரின் கண்களை பார்த்து மனதறிய சொல்லிப் பாருங்கள். பின்பு சொல்லுங்கள், உங்கள் மனதில் மின்சாரம் பாய்ந்ததா என்று. அது உண்மை என்றால், இருவருக்கும் அது பொருந்தும்.
No comments:
Post a Comment