ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் இங்கே சிறுவர்களுக்கான செஸ் வகுப்புகள் நடக்கின்றன. இன்று எட்டு வயது மகள் அம்முவை கூட்டிப்போக வந்திருந்தாள்.
நேராக முதல் தளத்தில் இருந்த அந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கே வரிசைக்கு நான்கு வீதம் இரண்டு வரிசையாக டேபிள்கள் போடப்பட்டிருந்தன.
ஒவ்வொரு டேபிள்களிலும் இரண்டு சிறுவர்களாக அமர்ந்து அமைதியாக விளையாடிக்கொண்டிருந்தனர்.
செஸ் ஒரு யுத்த தந்திர விளையாட்டு, அவர்களுக்கான ஆடுகளத்தில் தங்கள் தந்திரங்களை கையாண்டு கொண்டிருந்தனர். இங்கே யாரும் பெரும்பாலும் அதிர்ந்து பேசியதாக நினைவில் இல்லை. கடைசி வரிசையில் அம்முவின் தலை தெரிந்தது.
அனைவரையும் கடந்து அருகில் சென்றபோது தான், அவளுக்கு எதிரே ஆடிக்கொண்டிருந்த சிறுமி அழுது கொண்டிருந்ததை கவனித்தாள்.
அதிர்ந்தபடி அம்முவிடம் கேட்டாள்.
"என்ன பண்ணின அவ ஏன் அழறா ?"
"நான் ஒன்னும் பண்ல, ஏன்னு தெரியாது"
சிறுமியோ பதிலேதும் பேசாமல் அழுது கொண்டிருந்தாள். கன்னங்களை நனைத்திருந்த கண்ணீர் இப்போது அவளின் பிங்க் நிற சட்டையில்
வழிந்தது.
ஆனாலும், அம்மு ஏதோ சொன்னதால் தான் சிறுமி அழுவதாக முடிவு செய்திருந்தேன்.
அந்த சமயத்தில் அங்கிருந்த செஸ் பயிற்சியாளர் பிங்கியும் என்னுடன் சேர்ந்து நின்று கொண்டார்.
"சாரி சொல்லிட்டு கிளம்பு, நீ விளையாண்டது போதும்"
"நான் ஒன்னும் பண்ல, அப்புறம் ஏன்?" என்றாள் அம்மு.
அப்போது அங்கு வந்த ஒரு வயதான பெண்மணி குனிந்து சிறுமியின் காதோடு சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தாள். அது அவளுடைய பாட்டியாக இருக்கக் கூடும் என நினைத்தேன்.
நிமிர்ந்து எங்களை பார்த்து பேசிய பாட்டி "அவ அம்மாவை நினைச்சு அழறா" என்றாள்.
அழுகையை நிறுத்தி இருந்த சிறுமி
"என்னோட அம்மா என்ன விட்டுட்டு பிலிப்பைன்ஸ் போயிட்டாங்க" என்றாள்.
பிங்கிக்கு என்ன நினைதாரோ, ஆனால் எனக்கு பெரிய நிம்மதியாக இருந்தது.
"அம்மா என்ன வேலை செய்றாங்க? " என அன்பாக கேட்டார் பிங்கி
"அங்க டாக்டரா, நோயாளிகளுக்கு உதவி பண்றாங்க"
"எப்ப போனாங்க?"
"போன மாசம்"
இப்போது தொண்டயை செருமியபடி பிங்கி,
" பெரும்பாலும் வாழ்க்கை சதுரங்கத்தில், எதிராளியின் நகர்த்தலை நாமே முடிவுசெய்து, சொந்த எண்ணங்களில் உறிஞ்சப்படுகிறோம்.
உண்மையில், எதிராளியே இறுதியாக தங்கள் நகர்த்தலை தீர்மானிக்கிறார்கள். "
என்று அனைவரும் கேட்கும்படி அழகாய்ச் சொல்லி முடித்தார். அவர் குரலில் ஓரு உறுதி இருந்தது.
ஓரு முட்டாள்த்தனமாக நகர்வின் குற்ற உணர்வுடன் அம்முவின் கைபிடித்து வாசலை நோக்கி தொடங்கியிருந்தேன்.
வெளியே வரும்போது, வானம் மூட்டமின்றி தெளிவாக இருந்தது. பாவம் அம்முதான் இப்போது அழத்தொடங்கிருந்தாள்.
No comments:
Post a Comment