Sunday, January 25, 2015

அடித்து பிடித்து ஒரு வேலைக்கு போனதுக்கு அப்புறம்?

கடந்த மாதம் ஒரு திட்ட தலைவர் அல்லது  Project Leader பதவிக்கு நேர்காணல் நடத்தினேன்.   அவர் படித்தது சென்னையில் உள்ள பெயர் பெற்ற பொறியியல் கல்லூரியில். பிறந்து வளர்ந்தது கூட சென்னையில் தான். பள்ளி இறுதி தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள்.

ஆனால் அவரால் தன் கருத்துகளை சரியாக தெளிவாக, ஒழுங்குபடுத்தி சொல்லத் தெரியவில்லை. தொழில்நுட்பம் அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது.  இந்த பதவிக்கு தேவையான பகுப்பாய்வு, முடிவெடுக்கும் திறமை போன்ற தகுதிகள் தொழில்நுட்பம் தாண்டியவை.

ஆங்கிலத்தில் உரையாடுவதலே ஒருவரை இந்த பதவிக்கு தகுதி பெற்றுவிடுவதில்லை. இவரைப் போல எத்தனையோ பொறியாளர்கள் நம்மிடையே என்பதுதான் இன்றைய எதார்த்தம்.

இவரை குற்றம் சொல்வதைவிடுத்து நமது கல்வி முறையை முழுமையான பார்ப்பது இங்கே நல்லது என நினைக்கின்றேன்.

அரசு பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி மற்றும் அதன் தரத்தை பற்றியும் நண்பர் வா மணிகண்டன்கூட கடந்த வாரம் எழுதியிருந்தார்.  அந்த இணைப்பு இங்கே.

பயிற்றுமொழி  விவாதம் , கிரீமிலேயர் மாணவர்கள் போன்ற விவாதங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.

ஆனால் தமிழ் மற்றும் ஆங்கில வழி தாண்டி தமிழகத்தில்
பெரும்பான்மையோர் பயிலும் கல்வியின் பொதுவான தரம் பற்றியது இந்த பதிவு.

இங்கே தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை ஏலம் விடுவதைப்போல மார்க்கெட்டிங் மூலம் மாணவர் சேர்க்கை செய்கின்றனர்.  500க்கு 490, மாவட்ட அளவில் முதல் இடம் போன்ற விளம்பரங்கள் மிகச் சாதாரணம்.

தனியார் கல்லூரிகளும் தங்கள் பங்கிற்கு 'காம்பஸ் செலக்சனை'  காட்டி கல்லா கட்டுகின்றனர்.  பெற்றோர்களும் கடன் வாங்கியாவது மாணவர்களை அங்கே தள்ளி விடுகின்றனர்.

பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெறுவது அல்லது வேலை வாய்ப்பு என்பதோடு கல்வி நிறுவனங்களின் கடமை முடிந்து விடுகிறது. அதைத் தாண்டி மாணவர்களின் திறன் மற்றும் தரம் குறித்த கேள்வி எழுப்படுவதில்லை.

அந்த மாணவன் அடித்து பிடித்து ஒரு வேலைக்கு சென்றபின் நிஜத்தில் அங்கே நடப்பது என்ன?

தற்போது பெரும்பாலானோர் எந்த பொறியியல் துறை படித்தாலும் கடைசியில் தேர்தெடுப்பது IT துறையை தான். அங்கே வேலையில் நுழைந்தபின் அவர்களுக்கு தரப்படுவது தொழில்நுட்பம் (Technical) சார்த்த வேலை. இதுவரை அவர்கள் கல்லூரியில் கற்காத விசயம் அது. கற்றதையும் அப்படியேவும் பயன்படுத்தவும் முடியாதது.  இப்போது பாடத்‌திட்டதுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கும்.

நடைமுறைக்குரிய Programming போன்ற சூட்சுமங்‌களை அறிந்து  அந்த நிறுவனத்தில் தங்களை நிலை நிறுத்த குறைந்தது ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாகின்றன. பெரும்பாலானவர்களுக்கு இதுவரை பெரிய சிரமங்கள் இருப்பதில்லை.

ஆனால், அவர்கள் அங்கிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்வது மிகச் சவாலானது. அதற்கு காரணம், சில ஆண்டுகளுக்கு பிறகு வேலையில் Technical அல்லது தொழில்நுட்ப சமாச்சாரங்கள் மட்டுமே உதவுவதில்லை.

அங்கே மேலாண்மை, வழிநடத்துதல், ஆளுமை மற்றும்  தகவல் தொடர்பு திறன்  போன்ற  மென் திறன்கள் அல்லது Soft Skills கட்டாயம் தேவைப்படுகின்றன. அதில் சிலருக்கு சாதாரண ஒருங்கிணைப்பு திறன் கூட  இல்லாமல் இருப்பது துரதிஷ்டமே.

இது, வருட கணக்கில் இடது கை ஆட்டக்காரராக இருந்தவரை உடனே வலது கை ஆட்டக்காரராக மாறி சதம் அடிக்கச் சொல்வது போலாகும்.  இங்கேதான் நம்முடைய நடைமுறை கல்வி முறை கைகொடுப்பதில்லை.

பெரும்பாலான  சராசரி கல்வி பெற்ற மாணவர்கள் கடுமையாக திணறுகிறார்கள்.   சராசரி என நான் குறிப்பிடுவது மதிப்பெண் மட்டுமே பிரதனமாக கொண்ட கல்வி முறை. சில நிறுவனங்கள் இவற்றை வேலை செய்பவர்களுக்கு பயிற்சிக்க முயன்றாலும் பெரும்பாலானோர் தோல்வியடைகின்றனர் என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை.

ஒருபுறம் தங்களை விட குறைந்த சம்பளத்தில் தங்கள் வேலையை  செய்ய ஒரு கூட்டம்.  மறுபுறம் குடும்பம். இவற்றை தாண்டி இந்த திறமையையும் கற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயம் என இவர்கள் கடுமையான அழுத்ததிற்கு ஆளாக நேரிடுகிறது.

இந்த நேரத்தில் அவர்களுக்கு திருமணம் முடித்து சிலருக்கு குழந்தைகள் கூட இருக்க வாய்ப்புள்ளது  எனபதையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.
அதே சமயத்தில் CBSE போன்ற  மத்திய அரசு பாடத் திட்டத்தில் பயின்றவர்களுக்கு இந்த சவால் பெரிதாக இருப்பதில்லை என்பது நிதர்சனம்.

இவற்றையெல்லாம் நமது பள்ளிப் பாடத்திட்டம்  புரிந்துகொண்டதாக இல்லை என்பது என் எண்ணம். மதிப்பெண் தவிரவும் மற்ற திறன்களை பள்ளிகளும் பெற்றோரும் கண்டு கொள்வதில்லை. உதாரணமாக வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பவரே, வகுப்பு தலைவனாகிறார். அப்பறம் எங்கே போய் தலைமைத்துவ பண்புகளை ஊக்குவிப்பது ?

படித்து முடிக்கும் வரை எத்தனை Presentation, Viva Voce, Group Discussion போன்றவற்றில் பங்கேற்கிறார்கள் ? உதாரணமாக ஒரு விளையாட்டு அணியில் இருப்பது கூட ஒரு குழு மனப்பான்மையை வளர்க்க கூடியதே. சொந்தமாக எழுதுவது மற்றும் போட்டிகளில் கலந்து கொள்வது கூட படைப்பாற்றலை வளர்ப்பதுதானே. அவ்வாறு செய்ய நாம் எங்கே அவர்களுக்கு அவகாசம் அல்லது சந்தர்ப்பம் தருகிறோம் ?

நம்முடைய அகராதியில் அவையெல்லாம்   'தேவையற்றவை' அல்லவா ? குதிரை முன்னால் உள்ள கேராட்டாக 'மார்க்' மட்டுமே உள்ளது.

மாணவர்களுக்கான பொதுவான ஒழுங்குபடுத்தப்பட்ட Internships திட்டம்
கூட நம்மிடம் இருப்பதாகவும் தெரியவில்லயே?

படைப்பாற்றலை வளர்க்கும் அல்லது வெளிக்கொண்டுவரும், முழுமையான மற்றும் நடைமுறைக்கு உகந்த கல்வி என்பதே இன்றைய தேவை. அதை பள்ளியில் இருந்து தொடங்குவதே நலம்.

மதிப்பெண் என்பது One of the indicator அன்றி வேறில்லை. என்ற தெளிவு எத்தனை பேரிடம் உள்ளது ?

Monday, January 12, 2015

மெல்லத் தமிழினிச் சாகும் ?

'மெல்லத் தமிழினிச் சாகும்' என்பது பாரதியார் கூற்றாக பல பேரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதுஅந்த தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கவிதை வரி இதோ.

புத்தம் புதிய கலைகள் பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்"
என்றந்தப் பேதை உரைத்தான் -

இந்த வசையெனக் கெய்திடலாமோ
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

இந்தக் கவிதையைப் படித்த பிறகு உங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல வருவது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த உலகமயமாக்கப்பட்ட நூற்றாண்டில் ஆங்கிலம் தவிர
மொழிகளின் மற்ற இடம் தான என்ன? உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. அந்த வழியில் தமிழ் அழியக்கூடிய நிலையில் இருக்கிறதா? இந்த கட்டுரையில் சற்று விரிவாகப் பார்ப்போம்.


ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே சமயத்தில் அழிவதற்கான முகாந்திரங்களை எண்ணிப் பார்க்கையில்,சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தோன்றுகிறது.

பொருளாதார தாரளமயமாக்களில் உலகெங்கும் ஒரே மாதிரியான உணவு வகைகள்,உடை மற்றும் நாகரீகம் என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகவும் வசதியான சூழ்நிலை. இத்தாலியில் ஆய்வு செய்யப்பட்டு, சீனாவில் தயாரிக்கப்படும் பீசா, கும்பகோணத்திலும் நியூயார்க்கிலும் அப்படியே உண்ணப்பட்டால் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம்.

அது போல உலகமக்கள் படிக்கும் புத்தகங்கள், பொழுதுபோக்கு போன்ற அம்சங்களும் ஒரு சில குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட மொழிகளில் இருப்பதும் நிறுவனங்களுக்கு இலகுவாக இருக்கும்.

இதையும் தாண்டி ஆங்கில மொழி ஊடுருவலும் ஆதிக்கம், வட்டாரப் பேச்சு வழக்குகள் மற்றும் இளையத்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவையும் தமிழுக்கான எதிரிகள்.

இதுவரை தாய்மொழி அல்லது தமிழ்வழிக் கல்வி என்ற கோஷம் அற்றுபோய் தமிழ் மொழியும் படியுங்கள் என்ற கோஷம் வலுத்துள்ளது. சில வருடங்கள் வரை உயர்க் கல்வியில் மட்டும் ஆங்கில வழி என்ற நிலை மாறி, இன்று பாலர் பள்ளியிலே ஆங்கில வழி தொடங்கி விட்டது. பட்டி தொட்டி முதல் பெரும் நகரங்கள் வரை இதே நிலை என்பது இன்றைய நிதர்சனம்.

இரண்டாம் மொழியாக கூட தமிழை படிக்காமல், மேட்டுக்குடிமக்கள் என சொல்லக்கூடிய ஒரு பகுதியினர் தமிழை விட்டொழித்து மாமங்கம் பல ஆயிற்று. மத்திய தர வர்க்கம் எனும் பெரும்பான்மை சமூகமும் இந்த தளத்தை நோக்கி நகர தொடங்கி இருப்பது ஒரு பேரிடியாகும்.

தமிழ் ஒரு " செம்மொழி " என தமிழின் பெருமைகளைப் பற்றிப் பேசினால் நம் காதுகளுக்கு இனிமையாகத் தானிருக்கிறது. அதே சமூகத்தில் தான் பேருந்துகளில் எழுதியிருக்கும் ஊர் பெயரைக் கூடப் படிக்கத் தெரியாது என மிகப் பெருமையாகக் கூறிக் கொள்பவர்களும் வாழ்கின்றனர்.

தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் பெருமைகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும் எந்த சமூகமும் தன் தாய் மொழியினை உயர்த்‌திப் பிடிக்கவேண்டியது அதன் கடமை.

இந்த நூற்றாண்டில் அதை தீவிர படுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். முன்னைய தலைமுறையினருக்கு இல்லாத தொலைத்தொடர்பு தொழில் நுட்பங்கள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரபிரசாதமே.

இத்தகைய சூழலில், வெளி நாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாம் செய்யக் கூடியது என்ன.
  • முடிந்தவரை வீட்டில் நமது குழந்தைகளுடன் தமிழில் உரையாடுவோம்
  • சக தமிழர்களிடம் தமிழிலேயே உரையாடுவோம்
  • தமிழில் நம் பிள்ளைகளுக்கு பெயரிடுவோம்
  • தமிழில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிக் கலந்து பேசுவதை முடிந்தவரை தவிர்க்க பழகுங்கள்.
  • நல்ல தமிழ் புத்தகங்களை வாசிக்கவும், பரிசளிக்கவும் பழகலாம்
  • அடுத்த தலைமுறை நல்ல தமிழிலில் பேசுவதையும், எழுதுவதையும் உறுதி செய்வோம்.
  • தமிழர் பண்பாடு மற்றும் வாழ்வியிலை போற்றிக் கொண்டாடுவோம்
தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற நல்ல சிந்தனையை தமிழர்களாகிய நாம் நெஞ்சில் நிறுத்துவோம்.

மேலும், நம் தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு சரியாக கொண்டுசெல்வது நமது தலையாய கடமை என்பதை உணர்வோம்.

தென் புளோரிடாதமிழ் சங்கத்தால் வெளிவரும்  தமிழோசை இதழுக்கு, "மெல்லத் தமிழினிச் சாகும் ? "  எனும் தலைப்பில்  அனுப்பிய கட்டுரை இது. உங்கள் மேலான கருத்துக்களை பகிருங்கள்.

நன்றி,
ஆரூர் பாஸ்கர்.

Wednesday, January 7, 2015

சென்னை புத்தகக் கண்காட்சியும் Mark Zuckerbergம்

 சென்னை புத்தகக் கண்காட்சி இந்த வருடம் ஜனவரி  9- முதல், 21-ம் வரை சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. பொதுவாக ஜனவரி  துவக்கத்தில் சென்னையில் மட்டும் தான் புத்தக  ஜுரம் இருக்கும்.

ஆச்சர்ய படும்படி இவ்வாண்டு இந்த ஜுரம் உலகம் முழுமையும் தொற்றி விட்டது. உபயம் ஃபேஸ் புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்.

புத்தக கிளப் எனும் கான்செப்ட்டை இந்த புது வருடத்‌தில் இருந்து துவங்கி இருக்கிறார். ஒவ்வொரு வாரமும்  அவர் படிக்கும் நூல்களை தன்னுடைய முக நூல் பக்கத்‌தில் பகிரவுள்ளார்.  நீங்கள் செய்ய வேண்டியது அவருடைய வாசிப்பு சவாலை பின்பற்றி அவர் தேர்வு செய்த புத்தகங்களை படிக்க வேண்டும்.

அதன்படி  இந்த ஆண்டின் முதல் புத்தகமாக  "The End of Power" யை தேர்வு  செய்துள்ளார். இப்போ இந்த புத்தகத்‌திற்க்கு மார்கெட்டில் ரொம்ப கிராக்கியாம்.  எல்லாம் மார்க்கெட்டிங் ஸ்டண்டா இருக்கலாம்.  அந்த சரஸ்வதிக்கே வெளிச்சம் .   அவருக்கு தமிழ் படிக்க தெரிஞ்சா நம்ம புக்க கூரியர் பண்ணலாம். :)

அது போகட்டும்.

கண்டிப்பாக வரும் இரண்டு மூன்று வாரங்களுக்கு பெரும்பாலும்  தமிழகம் முழுவதும்  எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் மற்றும் புத்தக வாசிப்பு பற்றிய பேச்சாகதாகத் தான் இருக்கும்.  சாப்பிடாவிடினும் பரவாயில்லை, 'படி' ங்கனு சொல்லுவாங்களே !?

என்னை பொருத்த வரை ஆங்கிலமோ தமிழோ புத்தக வாசிப்பு என்பது ஒரு அனுபவம். யாரோ  சொல்வதால் புத்தகங்களை  பலர் வாங்கலாம்.  ஆனால் மிகச் சிலர் மட்டுமே வாசித்தல், அனுபவம் என அடுத்தக் கட்டத்திற்க்கு
செல்கிறார்கள்.

புத்தகங்களை  வேண்டுமானால் சீசனில் வாங்கலாம் ஆனால் புத்தக வாசிப்பு என்பது  ஓரு சீசனாக இல்லாமல் நம்முடைய தினசரியில் அது ஒன்றி இருக்க வேண்டும். அதை நாம் சிறு வயதில் இருந்தே  வீட்டில் தொடங்குதல் நலம்.  நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் நம்மிடம் வாசிப்பு பழக்கம் மிகக் குறைவு என்பதுதான் உண்மை.

இதற்கு முற்றிலும் பாட புத்தகங்களை மட்டும் சார்ந்து இருக்கும் நமது
கல்வி முறையும் காரணமாக இருக்கலாம். ஆனால்  தயவு செய்து குமுதம்,ஆனந்த விகடன் அல்லது செய்தித்தாள் வாசிப்பை இதனுடன் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

சமீபத்தில் தமிழ் புத்தகங்களின் வாசிப்பு மற்றும் விற்பனை பற்றி ஒரு பதிப்பக நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொல்வதைப் பார்த்தால் தமிழ் புத்தகச் சந்தை இந்த ஜனவரி கண்காட்சியை ஒட்டியே பெரும்பாலும் இயங்குகிறது. உதாரணத்திற்கு  ஒவ்வொரு ஆண்டும் தமிழில் வெளியாகும் புதிய நூல்களில் 90% சதவீதம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மட்டுமே  "சுட சுட"  அச்சிடப்படுகின்றன.

விற்று தீர்ந்த மீதமே பின் வரும் மாதங்களில்  சில்லறை கடைகள், ஆன்லைன் மற்றும் சிறிய நகரங்களில்   புத்தக கண்காட்சி மூலம் விற்பனையாகுமாம்.

தமிழில் சமையல் மற்றும் சாமி  புத்தகங்களை தாண்டி அதிகம் விற்பனையாவது Non fiction எனப்படுகின்ற புனைக்கதை அல்லாதவை. ரஜினியின் பொன்மொழிகள், திரைக்கதை எழுதுவது எப்படி,  Time Management அல்லது நேர மேலாண்மை, ஜெயிப்பது எப்படி, ஆயுளை அதிகமாக்க அக்குபிரஷர்  போன்ற இத்யாதிகள் இதில் அடங்கும்.

இதில் எதற்கேனும் கடைசியிடம் இருக்குமானால் அது கவிதை தொகுப்புகளுக்கு தான். இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் யுவதிகளை ஃபேஸ் புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பிஸியாக  விரட்டிக் கொண்டிருக்கிறார்கள் போல. கவிதைகள் எல்லாம் கொஞ்சம் ஓல்ட் பாஷன். அப்படியே தேவைப்பட்டால் கைவசம் இருக்கவே இருக்கிறது சினிமா பாடல்கள் அப்புறம் என்ன?

கவிதை எனறால் காதல் கவிதைகள் தான் என்ற நியதி ஏனோ தெரியவில்லை.  நல்ல வேலையாக  என்னுடய தொகுப்பில் காதல், இயற்கை, சமூகம் என பலவற்றை வரை தொட முயற்சித்திருக்கிறேன்.

என்னுடைய  'என் ஜன்னல் வழிப் பார்வையில்' புத்தகமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஸ்டால் விவரம்:

a) வீரபாண்டிய கட்டபொம்மன் வீதி, 318-319 ஸ்டால்களில் (ஓவியா பதிப்பகம்) 

b) மகேந்திர பல்லவன் வீதி, 543-544 ஸ்டால்களில்  (டிஸ்கவரீ புக் பேலஸ், Discovery Book Palace) லும் கிடைக்கும்

கண்காட்சியில் எழுத்தாளர்கள் பிரபலங்களின் சந்திப்பு, பலவகையான போட்டிகள், கிராமியக் கலை நிகழ்ச்சிகள், உணவு,சிறப்பு தள்ளுபடிகள் மற்றும்  பல கேளிக்கைகள் உண்டு.  திருவிழா போல ஒரே கொண்டாட்டம் தான் போங்க. ஆம், புத்தக திருவிழா..

வாய்ப்பிருப்பவர்கள் நீங்கள் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம். பிடித்திருந்தால் வாங்கி படித்து உங்கள் மேலான கருத்துக்களைச் சொல்லுங்களேன்.

முன்பு சொன்னது போல புத்தக விற்பனையிலிருத்து திரட்டப்படும் நிதி முழுவதும்  சிறகுகள் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும்.