Sunday, January 25, 2015

அடித்து பிடித்து ஒரு வேலைக்கு போனதுக்கு அப்புறம்?

கடந்த மாதம் ஒரு திட்ட தலைவர் அல்லது  Project Leader பதவிக்கு நேர்காணல் நடத்தினேன்.   அவர் படித்தது சென்னையில் உள்ள பெயர் பெற்ற பொறியியல் கல்லூரியில். பிறந்து வளர்ந்தது கூட சென்னையில் தான். பள்ளி இறுதி தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள்.

ஆனால் அவரால் தன் கருத்துகளை சரியாக தெளிவாக, ஒழுங்குபடுத்தி சொல்லத் தெரியவில்லை. தொழில்நுட்பம் அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது.  இந்த பதவிக்கு தேவையான பகுப்பாய்வு, முடிவெடுக்கும் திறமை போன்ற தகுதிகள் தொழில்நுட்பம் தாண்டியவை.

ஆங்கிலத்தில் உரையாடுவதலே ஒருவரை இந்த பதவிக்கு தகுதி பெற்றுவிடுவதில்லை. இவரைப் போல எத்தனையோ பொறியாளர்கள் நம்மிடையே என்பதுதான் இன்றைய எதார்த்தம்.

இவரை குற்றம் சொல்வதைவிடுத்து நமது கல்வி முறையை முழுமையான பார்ப்பது இங்கே நல்லது என நினைக்கின்றேன்.

அரசு பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி மற்றும் அதன் தரத்தை பற்றியும் நண்பர் வா மணிகண்டன்கூட கடந்த வாரம் எழுதியிருந்தார்.  அந்த இணைப்பு இங்கே.

பயிற்றுமொழி  விவாதம் , கிரீமிலேயர் மாணவர்கள் போன்ற விவாதங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.

ஆனால் தமிழ் மற்றும் ஆங்கில வழி தாண்டி தமிழகத்தில்
பெரும்பான்மையோர் பயிலும் கல்வியின் பொதுவான தரம் பற்றியது இந்த பதிவு.

இங்கே தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை ஏலம் விடுவதைப்போல மார்க்கெட்டிங் மூலம் மாணவர் சேர்க்கை செய்கின்றனர்.  500க்கு 490, மாவட்ட அளவில் முதல் இடம் போன்ற விளம்பரங்கள் மிகச் சாதாரணம்.

தனியார் கல்லூரிகளும் தங்கள் பங்கிற்கு 'காம்பஸ் செலக்சனை'  காட்டி கல்லா கட்டுகின்றனர்.  பெற்றோர்களும் கடன் வாங்கியாவது மாணவர்களை அங்கே தள்ளி விடுகின்றனர்.

பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெறுவது அல்லது வேலை வாய்ப்பு என்பதோடு கல்வி நிறுவனங்களின் கடமை முடிந்து விடுகிறது. அதைத் தாண்டி மாணவர்களின் திறன் மற்றும் தரம் குறித்த கேள்வி எழுப்படுவதில்லை.

அந்த மாணவன் அடித்து பிடித்து ஒரு வேலைக்கு சென்றபின் நிஜத்தில் அங்கே நடப்பது என்ன?

தற்போது பெரும்பாலானோர் எந்த பொறியியல் துறை படித்தாலும் கடைசியில் தேர்தெடுப்பது IT துறையை தான். அங்கே வேலையில் நுழைந்தபின் அவர்களுக்கு தரப்படுவது தொழில்நுட்பம் (Technical) சார்த்த வேலை. இதுவரை அவர்கள் கல்லூரியில் கற்காத விசயம் அது. கற்றதையும் அப்படியேவும் பயன்படுத்தவும் முடியாதது.  இப்போது பாடத்‌திட்டதுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கும்.

நடைமுறைக்குரிய Programming போன்ற சூட்சுமங்‌களை அறிந்து  அந்த நிறுவனத்தில் தங்களை நிலை நிறுத்த குறைந்தது ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாகின்றன. பெரும்பாலானவர்களுக்கு இதுவரை பெரிய சிரமங்கள் இருப்பதில்லை.

ஆனால், அவர்கள் அங்கிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்வது மிகச் சவாலானது. அதற்கு காரணம், சில ஆண்டுகளுக்கு பிறகு வேலையில் Technical அல்லது தொழில்நுட்ப சமாச்சாரங்கள் மட்டுமே உதவுவதில்லை.

அங்கே மேலாண்மை, வழிநடத்துதல், ஆளுமை மற்றும்  தகவல் தொடர்பு திறன்  போன்ற  மென் திறன்கள் அல்லது Soft Skills கட்டாயம் தேவைப்படுகின்றன. அதில் சிலருக்கு சாதாரண ஒருங்கிணைப்பு திறன் கூட  இல்லாமல் இருப்பது துரதிஷ்டமே.

இது, வருட கணக்கில் இடது கை ஆட்டக்காரராக இருந்தவரை உடனே வலது கை ஆட்டக்காரராக மாறி சதம் அடிக்கச் சொல்வது போலாகும்.  இங்கேதான் நம்முடைய நடைமுறை கல்வி முறை கைகொடுப்பதில்லை.

பெரும்பாலான  சராசரி கல்வி பெற்ற மாணவர்கள் கடுமையாக திணறுகிறார்கள்.   சராசரி என நான் குறிப்பிடுவது மதிப்பெண் மட்டுமே பிரதனமாக கொண்ட கல்வி முறை. சில நிறுவனங்கள் இவற்றை வேலை செய்பவர்களுக்கு பயிற்சிக்க முயன்றாலும் பெரும்பாலானோர் தோல்வியடைகின்றனர் என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை.

ஒருபுறம் தங்களை விட குறைந்த சம்பளத்தில் தங்கள் வேலையை  செய்ய ஒரு கூட்டம்.  மறுபுறம் குடும்பம். இவற்றை தாண்டி இந்த திறமையையும் கற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயம் என இவர்கள் கடுமையான அழுத்ததிற்கு ஆளாக நேரிடுகிறது.

இந்த நேரத்தில் அவர்களுக்கு திருமணம் முடித்து சிலருக்கு குழந்தைகள் கூட இருக்க வாய்ப்புள்ளது  எனபதையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.
அதே சமயத்தில் CBSE போன்ற  மத்திய அரசு பாடத் திட்டத்தில் பயின்றவர்களுக்கு இந்த சவால் பெரிதாக இருப்பதில்லை என்பது நிதர்சனம்.

இவற்றையெல்லாம் நமது பள்ளிப் பாடத்திட்டம்  புரிந்துகொண்டதாக இல்லை என்பது என் எண்ணம். மதிப்பெண் தவிரவும் மற்ற திறன்களை பள்ளிகளும் பெற்றோரும் கண்டு கொள்வதில்லை. உதாரணமாக வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பவரே, வகுப்பு தலைவனாகிறார். அப்பறம் எங்கே போய் தலைமைத்துவ பண்புகளை ஊக்குவிப்பது ?

படித்து முடிக்கும் வரை எத்தனை Presentation, Viva Voce, Group Discussion போன்றவற்றில் பங்கேற்கிறார்கள் ? உதாரணமாக ஒரு விளையாட்டு அணியில் இருப்பது கூட ஒரு குழு மனப்பான்மையை வளர்க்க கூடியதே. சொந்தமாக எழுதுவது மற்றும் போட்டிகளில் கலந்து கொள்வது கூட படைப்பாற்றலை வளர்ப்பதுதானே. அவ்வாறு செய்ய நாம் எங்கே அவர்களுக்கு அவகாசம் அல்லது சந்தர்ப்பம் தருகிறோம் ?

நம்முடைய அகராதியில் அவையெல்லாம்   'தேவையற்றவை' அல்லவா ? குதிரை முன்னால் உள்ள கேராட்டாக 'மார்க்' மட்டுமே உள்ளது.

மாணவர்களுக்கான பொதுவான ஒழுங்குபடுத்தப்பட்ட Internships திட்டம்
கூட நம்மிடம் இருப்பதாகவும் தெரியவில்லயே?

படைப்பாற்றலை வளர்க்கும் அல்லது வெளிக்கொண்டுவரும், முழுமையான மற்றும் நடைமுறைக்கு உகந்த கல்வி என்பதே இன்றைய தேவை. அதை பள்ளியில் இருந்து தொடங்குவதே நலம்.

மதிப்பெண் என்பது One of the indicator அன்றி வேறில்லை. என்ற தெளிவு எத்தனை பேரிடம் உள்ளது ?

2 comments:

  1. சரியாய் சொன்னீர்கள் அண்ணே ! அவனவன் வருடாவருடம் கல்விமுறையை மாற்றியமைத்துவருகிறான் . இன்னும் மெக்காலேவின் கல்விசாசனத்தைக்கட்டி அழும் நம்மை என்னவென்று கூறுவது ?

    ReplyDelete
    Replies
    1. @megneash, வாங்க, சரிதான். மனப்பாடத்‌தை விட்டு வெளியே வருவதுதான் முதல் படி

      Delete