இலக்கியத் தளத்தில் பல வருடங்கள் தொடர்ச்சியாக நூற்றுக்கும் மேலான புத்தகங்களை எழுதியுள்ளார். புதினம், சிறுகதை, கட்டுரைகள் தாண்டிய பன்முகத்தன்மை உடையவர். சர்வதேச இலக்கியம், அயல்சினிமா, சிறுவர் உலகம் என பல துறைகளை பற்றிப் பேசியும் எழுதியும் வருபவர்.
இவர் சமீபத்தில் தன்னுடைய வலைதளத்தில் புகைப்படக்கலைஞர்
ஆனி லெய்போவிட்ச் (Annie Leibovitz) பற்றி 'ஒளியிலே தெரிவது' எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை வாசித்ததும் ஆனி பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது.
அடித்து பிடித்து மாவட்ட பொது நூலக வலைதளத்தில் புத்தகங்களைத் தேடி Hold செய்திருந்தேன். மூன்றாம் நாள் எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் நூலகத்திற்கு புத்தகஙகள் வந்து சேர்ந்தாக மின்னஞசல் வந்தது.
இங்கே அமெரிக்க நூலகங்கள் இயங்கும் விதம் பற்றி ஒரு தனி வலைப்பதிவே எழுதலாம். நான் மொத்தமாக 3 புத்தகங்களை ஆர்டர் செய்திருந்தேன்.
புத்தகங்ளை எடுக்கப் போன இடத்தில் எனக்கு ஒரு சிறிய அதிர்ச்சி காத்திருந்தது. மற்ற புத்தகங்களை போல அல்லாமல் இந்த புத்தகங்கள் மிக பெரிய அளவில் இருந்தன. ராட்ச வடிவில் இருந்தன என சொன்னால் பொருத்தமாக இருக்கும். எடையும் சுமார் பத்து கிலொவுக்கு மேலாக இருக்கும்.
a) Photographs Annie Leibovitz 1970-1990 b) A photographer's Life 1990-2005 c) Annie Leibovitz Photographs என்ற 3 புத்தகங்கள்.
அந்த புத்தகங்களை பார்த்து வீட்டில் என்னை மேல கீழ பார்த்தது வேற கதை. :)
புத்தகங்களை பற்றி பேசும் முன்பு முன் புகைப்படக்கலைஞர் ஆனி பற்றி கொஞசம் பார்ப்போம்.
ஆனி லெய்போவிட்ச் அமெரிக்காவின் புகழ்பெற்ற மிக முக்கிய பெண் புகைப்படக்கலைஞர். 1949 அக்டோபர் 2-ந்தேதி அமெரிக்காவில் வாட்டர்பரி, கனெக்டிகட்டில் பிறந்தவர்.
புகழ்ப்பெற்ற ரோலிங் ஸ்டோன் இதழில் புகைப்படக்கலைஞராகப் பணியாற்ற துவங்கியவர் ஆனி. நாற்பது வருஷங்களுக்கும் மேலாகப் புகைப்படக்கலையில் தீவிரமாக இயங்கி வருபவர்.
ஆனியின் அழகான முன்னுரையுடன் தொடங்கும் இந்தப் புத்தகங்கள், அவரின் அரிய புகழ்பெற்ற புகைப்படங்களின் பொக்கிசம். ஆனி புகைப்படக்கலையை நேசிப்பதற்கு முக்கியத் தூண்டுகோலாக இருந்தவர்கள் இரண்டு புகைப்படக்கலைஞர்கள், Robert Frank மற்றும் Henri Cartier-Bresso என்று அவர் குறிப்பிடுகிறார். இருவருமே உலகப்புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர்கள்.
இவரது புகைப்படங்கள் நகர வாழ்க்கை, கிராம வாழ்க்கை, இயற்கை என பல படி நிலைகளைக் கொண்டிருந்தாலும் மனிதர்களை மிக அழகாக படம்பிடித்திருக்கிறார்.
புகழ்பெற்ற நடிக நடிகைகள், பாடகர்கள்,எழுத்தாளர்கள், முக்கியப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சாலையோர மனிதர்கள் என வாழ்வின் பலதரப்பட்டவர்களை அக உணர்ச்சிகளுடன் படமாக்கியிருக்கிறார்.
கருப்பு வெள்ளை மற்றும் வண்ணத்தில் பக்கத்திற்கு ஒன்றாக அந்த புகைப்படங்கள் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளன.
மனிதர்ளை கருப்பு மற்றும் வெள்ளையில் நாம் எடுக்கும் புகைப்படம், அவர்களின் ஆன்மாக்களை எடுக்கும் புகைப்படம் என எங்கோ படித்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்படி தனித்துவத்துடன் படம் எடுத்திருக்கிறார். தீவிரமாக உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் ஒளியமைப்பும் அடர்வண்ணங்களை முதன்மைபடுத்துவது ஆனியின் சிறப்பு.
மைக்கேல் ஜாக்சன், டெமி மூர் , அர்னால்ட் ,பில் கேட்ஸ், பில் கிளின்டன் என அவர் படமெடுத்த புகழ்பெற்றவர்களின் பட்டியல் வளர்கிறது.
படம் பிடிக்கையில் பெரும்பாலான பிரபலங்கள் தானாக முன்வந்து தங்கள் உடைகளை களைய தயாராக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே இவற்றில் சில வயது வந்தோர் மட்டும் படங்கள் இருக்கிறது என சொல்லத் தேவையில்லை.
பல உலக புகழ்பெற்ற விளம்பர படங்களையும் எடுத்திருக்கிறார். குறிப்பாக டிஸ்னியின் பிரத்தியேக புகைப்படகலைஞர் இவர்.
இந்த புகைப்படங்களைப் புரிந்து கொள்ள தனிப்பட்ட உள்ளார்ந்த பார்வை எதுவும் அவசியமில்லை என்றே நினைக்கிறேன். Photography/நிழற்படக்கலை என்றால் என்ன என்பதற்கு ஆனி 'அது லென்ஸ் ஊடான வாழ்க்கை' என ஒற்றை வரி விளக்கம் தருகிறார். இதை தவிர வேறு ஒரு சிறப்பான விளக்கம் இருப்பதாக தெரியவில்லை.
ஆனி தனித்துவமிக்கப் புகைப்படக்கலைஞர், அவரது படங்களை காணத்தவறாதீர்கள். நீங்கள் இவர் புத்தகங்களை பெற முடியவில்லை என்றால், Annie Leibovitz: Life Through a Lens என்ற ஆவணப்படத்தை YOUTUBEல் பார்க்க முடியும். இணையத்திலும் அவரது புகைப்படங்களை பார்க்கலாம்.
அந்த 3 புத்தகங்கள் இங்கே படத்தில்.
ஆனியை எனக்கு அறிமுகப்படுத்திய எஸ்.இராமகிருஷ்ணனுக்கு அவர்களுக்கு நன்றிகள் பல.
No comments:
Post a Comment