Friday, May 29, 2015

சிறகு முளைத்த விரல்கள் - ஆருர் புதியவன்

கடந்த முறை இந்தியா சென்றிருந்த போது பாசத்துடன் தனது  "சிறகு முளைத்த விரல்கள்" கவிதை தொகுப்பை நண்பர் ஆருர் புதியவன் கொடுத்திருந்தார்.



அதை கடந்த வாரம்தான் முழுமையாக படித்து முடித்தேன். புத்தகம் பற்றிய எனது பார்வை இங்கே.

கவிப்பேரரசு, கவிக்கோ, மேத்தா என என்னுடைய ஆதர்சன கவிஞர்களின் முன்னுரையுடன் அருமையான தொடக்கமாக இருந்தது.

ஆசிரியர் தன் கல்லூரி காலங்களில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. எழுதப்பட்ட காலத்தை கணக்கில் கொண்டு, இது காதல் கவிதைகளின் தொகுப்பாக மட்டுமே இருக்கும் என கணக்கு போட்டிருந்தேன்.  வழக்கம் போல அது தப்பாகவே இருந்தது.  ஆம், காதலுக்கு அப்பால் சமுகம்,  இயற்கை என எல்லா சோலைகளிலும் இவரது கவிதை சிறகு முளைத்து பறக்கிறது.

ஆசிரியர் ஆருர் புதியவன்  எனது  பள்ளி தோழர்.   கல்லூரி பேராசரியர் , முனைவர் , கவிஞர், எழுத்தாளர் , சமூக ஆர்வலர் என்று பன்முகம் கொண்ட  வார்த்தைகளின் வித்தகர். பள்ளி  நாட்களிலேயே மேடை பேச்சுகளின் நாயகர்.  அந்த வேகத்தை கவிதைகளின் வீச்சில்  என்னால்  உணர முடிகிறது.

'சாதிப் - போர் மேனாட்டில் இல்லை, அங்கே
சாதிப்போர் மிக அதிகம், நமது மண்ணில்
பாதிப்பேர் இயற்பெயரே சாதிப் பேர்தான் '

என்ன ஒரு  திறமையான வார்த்தை விளையாட்டு !!.  வெண்பா  மற்றும் விருத்ததையையும் அவர் விட்டுவைக்கவில்லை.

குறிப்பாக அவரின் அனுபவக் கவிதைகளை பல முறை வாசித்து,  சிலாகித்து மகிழலாம்.

உதாரணமாக குற்றாலத்தின் அழகை பற்றிச் சொல்லும்போது

ஒரே புகை மூட்டம்
ஒ... இது.. அழகின் சமையல் கூடமா ..?

என்ன ஒரு அருமையான கற்பனை.

'கலந்தன கண்கள்
பிறந்தது காதல்
ஒ.. விழிப்புணர்ச்சி'

என்பதையும் ரசித்தேன். இவற்றில் பல கவிதைகள்  மாநில மற்றும் கல்லூரிப் போட்டிகளில் பரிசு பெற்றதில் வியப்பில்லை.

சில கவிதைகளின் பின்குறிப்பாக அதன் பின்புலத்தை சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார். அது போன்ற குறிப்புகளை எல்லா கவிதைகளுக்கும் கொடுத்திருந்தால் மேலும் சுவையாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

மரம் செய்ய விரும்பு எனும் தலைப்பில்
'மேகக் கப்பலிகளிருந்து
மழையை
இறக்குமதி செய்யும்
துறைமுகங்கள்'

எனும்போது 'கவிக்கோ' வினை நினைவுபடுத்துகிறார்.
...
'கண்களை மேயாத கலைகள் தேவை
கடைசிமூச் சுள்ளவரைக் கவிதை தேவை'

கவிஞர் ' தேவை' எனும் தலைப்பில் எழுதியதை வாசிக்கையில்
'சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும். என் சாம்பலும் தமிழ் மணத்து வேக வேண்டும்' எனச்சொன்ன பாரதிதாசனை நினைவுபடுத்துகிறார்.

பூடகமின்றி எளிய நடையில் உள்ள நல்ல தொகுப்பு,  சிறகு முளைத்த விரல்கள் - இறக்கை கட்டி பறக்குது. ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது  நிச்சயம் வாசிக்கவும்.

நுால்; சிறகு முளைத்த விரல்கள்
ஆசிரியர்: ஆரூர் புதியவன்
வெளியிடு : நேஷனல் பப்ளிஷர்ஸ், 2011

No comments:

Post a Comment