Sunday, September 20, 2015

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருந்த
'சாய்வு நாற்காலி' நாவலை கடந்த வாரம் வாசித்து முடித்தேன்.

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கிளாசிக் நாவல் வரிசையில் அறிமுகப்படுத்திய நாவல்களில்  இதுவும் ஓன்று.  1997 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் இது.

இதை எழுதியவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்.   மலையாளப் பின்னணி உடைய இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்லாண்டுகளாக இயங்கிவருபவர்.

ஓரு வரியில் நாவலின் கதையைச் சொல்வதெனில் வாழ்ந்துக் கெட்ட ஓரு குடும்பத்தின் கதை.  இதைப் படிக்கும் போது ஜல்சாகர் எனும் பெங்காளி படம் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க  முடியவில்லை.

நீங்கள் ஜல்சாகர் (The Music Room) பார்த்திருப்பீர்களா தெரியவில்லை. புகழ்பெற்ற திரைப்பட மேதை  சத்யஜித் ராய் இயக்கிய பெங்காளி படம் (1958). அதில் வரும் ஜமீந்தார் தனது குடும்பத்தின் வறட்டு கௌரத்துக்காக வீட்டின் கடைசி சொத்தையும் விற்று இசை நிகழ்ச்சி நடத்துவார்.

இந்த நாவலில் முஸ்தபாகண்ணு கதை நாயகன்.  உழைக்காமல் சோம்பேறித் தனமாக பழம் பெருமை பேசியபடி சொத்துகளை விற்றுத் தின்கிறார்.

முஸ்தபாகண்ணுவின் மன ஓட்டத்திலேயே இந்தக் கதை நகர்கிறது. முஸ்தபாகண்ணு சாய்ந்து காலாட்டியபடியே வாசம் செய்யும் சாய்வு நாற்காலியும் பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அவருடைய அதபு (ஓழுக்கம்) பிரம்பும் கதையின் முக்கிய பாத்திரங்கள்.

இதைத் தாண்டி  ஓரு  தலைமுறையின் பெண் சுகம், வெட்டி கௌரவம், ருசி கொண்டு அடங்காத நாக்கு,  குடும்பப் பந்தம் என பல தளங்களில் இந்த கதை பயணிக்கிறது.

கதையில் குடும்பத்தின் இருநூறு ஆண்டு கால வரலாற்றை அஞ்சு தலைமுறை மூலம்  ஆசிரியர் சொல்கிறார்.  இந்த கதையை ஒரு குடும்ப வாழ்வினுடைய வீழ்ச்சி என மட்டும் பார்க்காமல் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் தொடரும் மன ஓட்டத்துக்கான புரிதலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் முழுமையாக வட்டாரமொழி வழக்கில் நாவல் எழுதப்பட்டிருப்பதால் தங்குதடையின்றி வாசிப்பது கேள்விக்குறியே !.

உதாரணமாகக்  கதையில் முஸ்தபாகண்ணு தனது காலை திடுமெனப் பிடிக்கும் வேலைக்காரனை "நீயாடா, கிறாத்லெப் பெறந்தப் பயலெ" என்கிறார். இதை வாசிக்கும் வாசகன் என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வது ? எதோ திட்டுகிறார் என வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் விவரம் தெரிந்தால் கடைசி பக்கத்தில் கொடுத்துள்ள பொருளைத் தேடலாம். கடைசிப் பக்கத்தில் விளக்கம் இருக்கும் விவரத்தை முன்கூட்டியாவது சொல்லித் தொலைத்திருக்கலாம்,  அல்லது மிக எளிமையாக ஓவ்வொரு பக்கத்தின் கீழேயும் விளக்கம் கொடுத்திருக்கலாம். (பதிப்பகத்தார்- கவனிக்க).  நானும் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடி தேடிப்பார்த்து களைத்தே போய்விட்டேன்.


கடைசியாக, இந்த நாவலை படித்து முடித்தபின்  சோம்பலில் ஓரு விதமான 'மதமத'ப்பை நான் உணர்ந்தேன். அதுவே , இந்த புத்தகத்தின் வெற்றி என்று நினைக்கிறேன்.

நேரம் அனுமதித்தால் படிக்கலாம்.தலைப்பு :சாய்வு நாற்காலி
எழுத்தாளர்: தோப்பில் முஹம்மது மீரான்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9788189359423
பக்கங்கள்: 344
விலை : ரூ.275

No comments:

Post a Comment