Sunday, January 24, 2016

அமேரிக்காவில் பெண்கள் வைத்த பொங்கல்

அமேரிக்காவில் பொங்கல் திருநாள் ஓருவழியாக முடிந்தது. தமிழகத்தில் வழக்கத்திற்கு  மாறாக இந்த வருடம் சலசலப்புகளைத் தாண்டி ஓரு பரபரப்பு.

அந்தப் பரபரப்புக்கு காரணம் ஜல்லிக்கட்டு. தமிழில் ஏறுதழுவல். அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் இதற்கு தடை
வாங்கிவிட்டார்கள். ஆனாலும் தடையை மீறி சில இடங்களில் மாடுகளும் மனிதர்களும் ஜல்லிக்கட்டில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. :) நல்ல விஷயம்.

சில வருடங்களுக்கு முன் தமிழ் புத்தாண்டை தை  மாதத்தில் கொண்டாடுவோம் என முதல்வர் கலைஞர் அறிவித்தபோது தமிழர்களிடம் ஓரு சலசலப்பு எழுந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அது தமிழகத்தின் இரு பிரதான  கட்சிகளால் அரசியல் ஆக்கப்பட்டது துரதிஷ்டம். இரு சாராரும் தங்களுக்கு துணையாக பல ஆதாரங்களை காட்டி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினர்.  அப்போது பாரதிதாசனின் இந்தக் கவிதை அதிகம் மேற்கோள் காட்டப்பட்டது.

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு ...
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"

கடைசியில் எல்லாவற்றையும் தாண்டி மக்களின் நீண்ட நம்பிக்கையே வலிமையானது என்று நிருபணமாகிவிட்டது. அந்த சர்ச்சைக்குள் நாம் போக வேண்டாம்.

அப்புறம் பொங்கல் பற்றி ஊரில் ஓருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். "இப்பேல்லாம் யார் சார் பொங்கல் கொண்டாறா? அவனவன் குக்கர்ல பொங்கல் வக்கிறான்.  ஜன்னல் வழியா சூரியனுக்கு காட்டிட்டு, சோபாவில உட்காந்து டிவி பாக்க ஆரம்பிச்சுடுரானுங்க" என அலுத்துக் கொண்டார். அவர் கவலை அவருக்கு.

உலகமயமான இந்த நாட்களில் இது மாதிரியான விழாக்கள் மட்டுமே மக்கள் தங்கள் சொந்த மண்ணின் அடையாளங்களை சில நொடிகளேனும் சிந்திக்க வைக்கின்றன என்பது என் கருத்து. 

நான் சொல்ல வந்த விஷயம் அதுதான் அமேரிக்காவில் கடந்த சனிக்கிழமை (மாட்டுப் பொங்கலன்று)  பொங்கல் கொண்டாடினோம். மேலே அந்த நண்பர் சொன்னதுப் போலில்லாமல் கொஞ்சம் பாரம்பரியத்துடன்.

இந்த வருடப் பொங்கலுக்கு நண்பர் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார்.  நண்பர் இந்த வருடம் புதுவீடு வாங்கிருக்கிறார். அது தனி வீடு,  இரண்டு கார் பார்கிங் வசதி, ஐந்து படுக்கையறைகள், நீச்சல் குளத்துடன்.  சூரியனை பார்த்து பொங்கல் விட கண்டிப்பாக தாராளமான இடம். எங்களைப் போல மேலும் ஐந்து தமிழ் நண்பர்களும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

பொங்கலை பாரம்பரியமாக கொண்டாட  தேங்காய்,மஞ்சள், பூக்கள், கரும்பு, பழம் என அனைத்தையும் தேடி வாங்கி வைத்திருந்தார்கள். அப்புறம், புதுப் பானையில் முறைப்படி திறந்த வெளியில் கிழக்கே சூரியனைப் பார்த்து பொங்கல் எனக் களை கட்டியிருந்தது.  விறகு அடுப்புக்கு பதிலாக கேஸ் அடுப்பு மற்றபடி எல்லாம் பாரம்பரியப்படி. வீட்டில் மாவிலைத் தோரணங்கள் கூடக் கட்டினார்கள் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

வழக்கம் போல ஆணகள் அரட்டையடிக்க, பெண்கள் எல்லா வேலைகளையும் வலிய இழுத்துப்போட்டுச் செய்தனர். நாம செய்றோம்னா யாரு கேக்குறாங்க சொல்லுங்க?  :) இங்க ஓரு பானையில எத்தனை பேரு பொங்கல் விட்டுருக்காங்கனு பாருங்க


இப்பவும் நம்ம பத்திரிக்கைகளில் 'நட்சத்திரப் பொங்கல்'ன்னு நடிகைகள் பொங்கல் வைப்பது போல படம் போடுறாங்கலா?  :)


அன்று சிறுவர்களும்,சிறுமிகளும் ஆனந்தமாய் அங்குமிங்கும் வீட்டில் ஓடியாடி விளையாடி,  வீடு ஓரே கலகலப்பாக இருந்தது. அதிலும் பொங்கல் பொங்கி வழியும் போது "பொங்கலோ..பொங்கலோ" என அவர்கள் மகிழ்ச்சியாக குரலெலுப்பியது ஹைலைட்.

அப்புறம், பொங்கல் என்றால் கடித்து சுவைக்கும் திருநாள் இல்லையா?.  அதனால் அதையும் விடல. ரொம்ப வருசத்துக்கு பின்  கரும்பு தின்னதுகூட அருமைதான். பழைய ஞாபகங்கள்...
  
நான் தமிழ்நாட்டில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி ஓரு மாமாங்கத்துக்கு மேலாகிவிட்டது.  ஆனால் இந்த வருடம்  நண்பர் ராஜேஷு மற்றும் தமிழ்ச்செல்வி  புண்ணியத்தால் மற்ற தமிழ் குடும்பங்களுடன் பொங்கல் நல்ல ஓரு நிகழ்வாயிருந்தது.

ஓரு சிறு இடைவேளை:
          நண்பர்களே, எனது இந்தியப் பயணத்திற்கு  பின் மூன்று வாரங்களில் சந்திப்போம்.

Images:
நன்றி
pixshark.com
www.dinamalarnellai.com

No comments:

Post a Comment