Sunday, February 28, 2016

விசாரணை - விமர்சனம்

சில வாரங்களுக்கு முன் சென்னையில் நான் பார்த்த படம்  விசாரணை.
படத்துக்குள் போகும் முன் என்  கவனத்தைக் கவர்ந்த சில-

வித்யா  தியேட்டர்- தாம்பரம் பஸ்டாண்டில் இருந்து நடக்ககூடிய தூரம்தான். இந்த விஷயம் தெரியாமல் நான் தியேட்டர் விஜயா என ஆட்டோ நண்பரிடம் சொல்ல அவர்  என்னை தாம்பரம் விஜயா மருத்துவமனையில் இறக்கிவிட. கடைசியில் ஓருவழியாக வித்யாவைக் கண்டுபிடித்தோம்.

அது மஞ்சள் சுண்ணாம்பு அடித்த ஓரு பழைய கட்டிடம்.  ஓரு காலத்தில் கண்டிப்பாக கட்அவுட்டுகள், பாலாபிஷேகங்கள், பிளாக் டிக்கெட்டுகள் என நல்ல பரபரப்பாக இருந்திருக்கும். இன்று, பொலிவிழந்து, காற்றுவாங்கியபடி சீண்டுவாரின்றி இருக்கிறது.

படம் போடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்புவரை அங்கே ஜனநடமாட்டமில்லை. கடைசி 10-15 நிமிடங்களில்தான் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்தது.


முன்பெல்லாம் ஓரு தியேட்டரில் ஓரு படம் ஓடும். மிஞ்சினால் பகல் காட்சியில் இன்னோருபடம் ஓட்டுவார்கள். இப்போழுது 3 காட்சியிலும் 3 வெவ்வேறு படங்களை ஓட்டுகிறார்கள்.  2015ல் மட்டும் 200க்கும் அதிகமான படம் வந்திருக்கிறன. இப்படி, வருடத்துக்கு இத்தனைப் படங்கள் வந்தால் என்னதான் செய்வார்கள் ? சொல்லுங்கள்.

 இரண்டு வகையான டிக்கெட்கள் மட்டுமே தந்தார்கள், முதல் வகுப்பு 100 ரூபாய். பால்கனி 150 ரூபாய். முதல் வகுப்பு முழுமையாக நிரம்பியது. அதிலும் படம் பார்க்க என்பது வயது முதியவர்கள் கூட வந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

அப்புறம், படத்துக்கு வரும் ரசிகர்களையும் அவர்களின் உடமைகளையும் சுத்தமாக சோதனை செய்துதான் உள்ளே அனுப்புகிறார்கள். விசாரித்தால் ரசிகர்கள் வெளியிலிருந்து புகை பொருட்கள், மது போன்றவற்றை கொண்டுவருகிறார்களாம். கொடுமைடா சாமி!..

ரசிகர்கள் தங்களுக்குத் தரப்பட்ட டிக்கெட் எண்ணுள்ள சீட்டில்தான் அமர வேண்டுமாம். அதனால் படம் ஆரம்பித்தபின் வந்தவர்கள் இருட்டில் தட்டுத்தடுமாறி இருக்கைகளை தேடி அமர்ந்தனர். உதவிக்கு நிர்வாகத்திலிருந்து யாரும் வந்தமாதிரி தெரியவில்லை. ம்ம்..

ஆனால், தற்போதைய மல்டி பிலக்‌ஸ் தியேட்டர்கள் போலில்லாமல் உள்ளே நிறைய இட வசதியோடு தாராளமாய் இருந்தது.  அதுபோல பழைய தியேட்டராக இருந்தாலும் டிஜிட்டல் ஓலி தொழில் நுட்பத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள்.

தியேட்டர் புராணம் போதும். படத்தை பற்றி பார்ப்போம். விசாரணை  -தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனின் படம். நடிகர் தனுஷ் தயாரித்திருக்கிறார்.

இது எழுத்தாளர் சந்திரமோகன் எழுதிய 'லாக்கப்' எனும் உண்மை புதினத்தை தழுவியது. ஆங், தமிழ்ல புதினம்னா நாவல்ங்க. அப்புறம் இதுவோரு யதார்த்த வகை திரைப்படம். அதாங்க கம்பியூட்டர் விளையாட்டு, பரந்து பரந்து சண்டை, பாட்டேல்லாம் கிடையாது.


படத்தில் முதல்பாதி - தமிழ் இளைஞர்கள் நான்கு பேர். ஆந்திரா போலிஸ் அங்கே பிழைக்க வந்த அவர்களை செய்யாத குற்றத்தைச் சுமத்தி அதை ஏற்றுக்கொள்ளச் சித்திரவதைகள் மூலம் நிர்ப்பந்திக்கிறது. அப்போது ஆந்திரா வரும் ஓரு தமிழக போலிஸ்காரர் ஓருவர் (சமுத்திரகனி) அவர்களை அங்கிருந்துக் காப்பாற்றி தமிழகத்துக்கு அழைத்து வருகிறார்.

இரண்டாம் பாதி- தமிழகம் வரும் நான்கு பேரில் ஓருவர் சொந்த ஊருக்குச் செல்கிறார். மீதமுள்ள மூவரும் தமிழக போலிஸீன் கட்டுப்பாட்டில் கடைசில் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் முடிவு.

முதல்பாதி போலிஸ் சித்திரவதை என கொஞ்சம் தொய்வடைவது போல தோன்றினாலும் இரண்டாம் பாதியில் விட்டதை பிடிக்கிறார் இயக்குனர்.

படத்தில் சமுத்திரகனி வரும் சில காட்சிகளில் விசில் பரந்தது. தமிழ்நாட்டில் ரசிகர்களுடன் படம் பார்ப்பது ஓரு அனுபவம் தான். நடிகர் சமுத்திரகனி திரையுலகில் இன்னும் பல சாதனைகள் செய்வார் என எதிர்பார்க்க வைக்கிறார். பார்க்கலாம்.

படத்தைப் பற்றி நிறைய விமர்சனங்கள் இணையத்தில் இருப்பதால் ரொம்ப எழுதத்தேவையில்லை. குறிப்பாக படம் பார்த்துவிட்டு வரும்போது நாம் எந்தமாதிரியான பாதுகாப்பற்ற ஓரு சமூகத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வி நம் மனதை அழுத்துகிறது. அதுதான் படத்தின் வெற்றியா? - தெரியவில்லை. நீதி, தனி மனித உரிமைகள், விசாரணைகள் இவற்றில்  வெளிப்படைத் தன்மை என இந்தியா கடக்க வேண்டிய தூரம் கண்களுக்கே புலப்படவில்லை.

அப்புறம் படம் வெளிவந்ததிலிருந்து பல பாராட்டுகளை பெற்றிருக்கிறது. வெனீஸ் திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பிரிவில் விருதுபெற்றிருக்கிறது.  அந்த விருதை எழுத்தாளர் சந்திரமோகன் பெறுவதை படத்தில் கடைசியில் காட்டுகிறார்கள். நல்ல அங்கிகாரம், நல்ல கெளரவம்.

ஆனந்த விகடன் வார இதழ் கூட பல வருடங்களுக்கு பின் இதற்கு நிறைய மதிப்பெண் வழங்கியிருக்கிறதாம். இந்த மிடியாக்களின் மதிப்பெண்கள் மீதேல்லாம் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை.

ஆனால், இந்தப்படம் தமிழ்திரையில் ஓரு மைல் கல். ஐந்து பாட்டு, மூன்று சண்டை எனும் வட்டத்திலிருந்து வெளியே வந்து நிற்கும் படம். நம்பிக்கையுட்டுகிறது. முக்கியமாக டாக்குமெண்டரி போலில்லாமல் மக்கள் ரசிக்கும் கலைப்படைப்பாக இருக்கிறது. கண்டிப்பாக பாருங்கள்.!

படம் நன்றி;
http://www.google.com

1 comment:

  1. நீங்க தாம்பரத்தை சேர்ந்த ஆளா?

    ReplyDelete