Sunday, April 24, 2016

திரும்பிப் பார் -திருப்பூர்-3

திருப்பூர் பற்றிய என்னுடைய முந்தியப் பதிவுகளை பகுதி-1 , பகுதி-2 ல் பார்க்க.

திருப்பூரில் காலை,மதியம் என தொடர்ந்து தொழிற்சாலைகளை சுற்றிப் பார்த்தாலும் நாங்கள் சோர்ந்துபோய் விடவில்லை.

எனக்கு அன்று இரவில்தான் ரயிலில் டிக்கெட் எடுத்திருந்ததால் மாலையில் வெளியில் போக முடிவுசெய்தோம். பார்க்க பல இடங்களை பற்றி பேசி கடைசியில் திருப்பூரில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதாக முடிவுசெய்தோம்.

'கரும்பு தின்ன கூலியா கேட்போம் ?,' தயக்கமின்றி ஓத்துக் கொண்டேன். சென்னையில் மட்டும் வருடத்துக்கோரு முறை புத்தகக் கண்காட்சி எனும் நிலை மாறிவிட்டது.  இப்போழுது வருடம் முழுவதும் தமிழ்நாட்டிலுள்ள எல்லா இரண்டாம், மூன்றாம் தரவரிசையிலுள்ள நகரங்களில் புத்தகக் கண்காட்சி என்பது வரவேற்கத்தக்கது. கீழே கண்காட்சியில் நானும் எனது உறவினர் (மச்சினர்) திரு. ஆறுமுகம் அவர்களும்.

அந்த வரிசையில் திருப்பூர் புத்தகக் கண்காட்சி சிறப்பாக ஏற்பாடாகியிருந்தது.  எல்லா பெரிய பதிப்பாளர்களையும் அங்கே பார்க்க முடிந்தது. எல்லா புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி அறிவித்திருந்தார்கள். அது வேலைநாளாக இருந்தாலும் கண்காட்சியில் நல்ல கூட்டமாக இருந்தது. நான் சென்ற அன்று சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

கண்காட்சியில் நிறைய குடும்பப் பெண்கள் தங்களுடைய பள்ளியில் படிக்கும் மகன், மகளுடன் வந்திருந்ததைக் கவனிக்க முடிந்தது. அப்புறம் நான் வெகுநாட்களாகத் தேடிக் கொண்டிருந்த இந்த புத்தகத்தை நியூ செஞ்சுரி புக்ஸில் கண்டுபிடித்து வாங்கினேன். 



தமிழர் நாட்டுப் பாடல்கள் என்ற தலைப்பில் வானமாமலை தொகுத்த இந்த நூலை, சுஜாதா தனது கரையெல்லாம் செண்பகப்பூ நாவலில் மேற்கோள் காட்டியிருப்பார். 

நான் வாங்கிய இன்னோரு புத்தகம் பாரதி தம்பி எழுதிய கற்க கசடற விற்க அதற்குத் தக. வெளியீடு விகடன்.  பின்பு ஓரு சந்தர்பத்தில் இரண்டையும் படித்து எழுதுகிறேன்.

கண்காட்சியில் வழக்கம் போல ஜோசியம், பக்தி, தன்னம்பிக்கை, சமையல் புத்தகங்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. இந்த லிஸ்டில் இயற்கை உணவு,நவதானியங்கள், இயற்கை விவசாயம் போன்றவை தற்பொழுது சேர்ந்துள்ளன. இவற்றை ஆனந்த விகடன் போன்ற வெகுஜன ஊடகங்கள் தங்களின் பதிப்பகங்களின் மூழம் நன்றாக அறுவடை செய்கின்றன.

நானும் எனது அம்மாவிற்கு  இயற்கை உணவு சம்பந்தமாக இரு புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.  அதுபோல சிறுவர்களுக்கான ஓளி,ஓலி தட்டுகள், புத்தகங்களை அதிகம் பார்க்க முடிந்தது.

புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்த போது நாங்கள் எதிர் பார்காத ஓன்று நடந்தது. அது கவிஞர் மகுடேஸ்வரனின் சந்திப்பு. படம் கீழே.


அவருடைய 'அந்தக் காலம் நன்றாக இருந்தது! ' கவிதையை சிலாகித்து பேசினேன். பரஸ்பர நலவிசாரிப்புக்கு பின் பேச்சு அமேரிக்காவில் வாழும் தமிழர்களைப் பற்றி திரும்பியது. தன் கவிதைகளுக்கு அமேரிக்க தமிழர்களிடையே முகநூல் வழி நல்ல வரவேற்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். பின்பு சற்று நேரத்துக்கெல்லாம் ஏதோ அவசர வேலை என தன் நண்பருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

திருப்பூர் புத்தக்க் கண்காட்சிக்குச் சென்றதும் அங்கு மண்ணின் மைந்தர் கவிஞர் மகுடேஸ்வரனைச் சந்தித்த்தும் மனதுக்கு நல்ல நினைவாயிருந்தது.

இதுவரை எழுதிய திருப்பூர் பயண அனுபவங்கள் இத்துடன் நிறைவடைந்தது.
தொடர்ந்து வாசித்து உற்சாகபடுத்திய நண்பர்களுக்கு நன்றி !!

Wednesday, April 20, 2016

தினமலரில் பங்களா கொட்டா

அன்பர்களே,
தினமலர் நாளிதழில் எனது "பங்களா கொட்டா" நாவல் பற்றிய மதிப்புரை வெளியாகியுள்ளது. அதற்கான இணைப்பு இங்கே.
தினமலர் நாளிதழ் மற்றும் அறிமுகம் செய்த அன்பான உள்ளங்களுக்கு எனது நன்றியும் வணக்கங்களும். ‪#‎பங்களா‬கொட்டா #‎bunglawkotta‬

பங்களா கொட்டா
விலைரூ.130
ஆசிரியர் ஆரூர் பாஸ்கர்
வெளியீடுஅகநாழிகை
பகுதிகதைகள்
ISBN எண்-
Rating
    
பிடித்தவை
வாய்ப்பிருந்தால் படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லவும். 

முன்பே குறிப்பிட்டது போல- இந்த நூலின் விற்பனையில் வரும் நிதி முழுமையும் சிறகுகள் கல்வி அறக்கட்டளை வழியாக ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

இந்த புத்தகம் சென்னை கே.கே நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது. வாய்பில்லாதவர்கள் ஆன்லைனிலும் வாங்கலாம். 

அமேரிக்காவில் ஆன்லைனில் வாங்க  Paypal வசதி உள்ளது.  ஆர்டர் செய்யும்போது "Note to seller" பகுதியில் உங்கள் முகவரியை தவறாமல் குறிப்பிடவும். அதற்கான இணைப்பு இங்கே.

முடிந்தால் இதன் முகநூல் (Facebook) பக்கத்திலும் உங்கள் விருப்பத்தை (LIKE) இடுங்கள்.

Sunday, April 17, 2016

எங் கதெ - இமையம்

தனது முதல் புதினத்தில் (நாவல்) இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்ற எழுத்தாளர்கள் மிகக்குறைவு. அப்படிப் பரவலான கவனம் பெற்றவர் எழுத்தாளர் இமையம் என எங்கோ படித்த நினைவு.

அவர் தனது முதல் படைப்பான கோவேறு கழுதைகள் (1944)ளுக்குப் பின் தனித்துவத்துடன் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவருபவர். அவருடைய  "எங் கதெ" யை சமீபத்தில் வாசித்தேன்.

முதல் நூல் என்பதால் எழுத்தாளர் பற்றிய எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிக்கத் தொடங்கினேன். இந்த புத்தகத்தில் இரண்டு அம்சங்கள் குறிப்பாக கவனத்தைக் கவர்ந்தன. ஓன்று அவரின் மொழி நடை. இரண்டாவது அவர் எடுத்துக் கொண்ட கதைக்கரு.

நூலின் பெயரே "எங் கதெ" எனப் பேச்சு வழக்கில் இருந்ததால் அந்த எதிர்பார்ப்புடனே உள்ளே நுழைந்தேன்.  கடலூர் மாவட்ட பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன், கி.ரா போன்றவர்களின் வழியாக மற்ற பேச்சுவழக்கு நூல்களை வாசித்து பழக்கப்பட்டிருந்தாலும் இந்த மொழிநடை எனக்கு முற்றிலும் புதுமையான வாசிப்பனுபவம்.  இந்தப் பேச்சு நடை கொஞ்சம் அழுத்தம் திருத்தமாக இருப்பது போல் தோன்றுகிறது.

"கள்ளக் காதலனைக் கொன்ற காதலி கைது". "பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால், கல்லைத் தூக்கிபோட்டுக் கொன்ற கள்ளக் காதலன் கைது". இது போன்ற  தலைப்புகள் செய்தித்தாள்களில் அன்றாடம் நாம் எளிதாகக் கடந்து செல்லும் விஷயம். ஆனால் "எங் கதெ" அது மாதிரியான ஓரு நிகழ்வை உற்றுப் பார்க்கிறது. அப்படியானதொரு வாழ்க்கையை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடக்கம் முதல் முடிவு வரை நம்மை பயணிக்கவைக்கிறது.

ஆம். இதன் கதைக்கரு மற்ற நூல்கள் பெரும்பாலும் பேசாத அல்லது பேசத்தயங்கும் விசயமான ஆண் பெண் கள்ள உறவைப் பற்றியது. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான  “கமலா” என்கிற 28 வயது இளம் விதவை பெண்ணுக்கும் முதல் தலைமுறையாகப் படித்துவிட்டு வேலை தேடும் 33 வயது "விநாயகம்" என்பவருக்கும் ஏற்படுகின்ற உறவை பேசுகிறது.

இந்தக் கதை முழுமையும் சம்பந்தப்பட்ட விநாயகத்தின் மன ஓட்டத்தில் , பார்வையில் சொல்லப்படுகிறது. விநாயகத்தின் மனம் கமலாவை விரும்புவது, அவளுக்காக தன் குடும்பத்தை உதறிவிட்டு  நகரத்துக்கு குடிப்பெயர்வது, பத்தாண்டுகளுக்கு பின் அவர்களின் உறவில் நுழையும் மூன்றாமவன் என விரிவாகக் கதை சொல்லப்படுகிறது.

புதுமையானக் கதை சொல்லல் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஓன்று.

"இது எங் கதெ. பத்து வருசத்துக் கதெ. என் ரத்தம். என் கண்ணீர்." என முதல் வரியே உணர்ச்சிப்பூர்வமாய்த் தொடங்கி வாசகனை உள்ளிழுத்துக் கொள்கிறது. - பக்கம்-1

தேவையற்ற இழுவைகளில்லாமல் அடுத்தப் பக்கத்திலேயே கமலாவின் அறிமுகம்.

"நல்ல பாம்பு வர்ற மாரி சரசரன்னு வந்தா. போன் பேசினா, காச விட்டெரிஞ்சா. வந்த மாரியே சரசரன்னு போயிட்டா. அடுத்த நாளு வந்தா. அப்பறம் சனி,ஞாயிறு வரல."

இப்படிப் பேச்சு நடையில் கதை நகர்த்தல் பாய்ச்சலாய் இருக்கிறது. - பக்கம்-2

எழுத்து நடை வேகமாக இருக்கும் அதே சமயத்தில் விநாயகத்தின் மன ஓட்டம் வாசகனுக்கும் தொற்றிக் கொள்கிறது- பக்கம்-75

"பத்து வருசமா அவதான் எனக்குக் காத்து. தண்ணி, சூரியன், சோறு. எனக்கு அப்படித்தான் காலம் ஓடிப் போச்சி. அவ கேக்கல.நானா கொடுத்தன். மனச. அவ சொல்லல. நானா அவ காலுல மண்டியிட்டன்."

அதுபோல கதையினுடே வரும் நிகழ்வுகள்  நாம் குடும்பங்களிலும், சமூகத்திலும் பார்த்து வளர்ந்த எதார்தத்தை சொல்லிச் செல்கிறது.

கமலாவின் மீதான தனது அதீதக்காதலுக்கான நியாயத்தை இதைவிட எளிமையாக சொல்லமுடியுமா தெரியவில்லை- பக்கம்-48.

"பணம் சம்பாதிக்கிறத்துக்காக எத வேணுமின்னாலும் செய்யுற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுகாடுன்னு சேக்கிற பைத்தியம் இருக்கு. பொட்டசிவுளுக்கு விதவிதமா நக வேணும். சீல வேணும்.. ...

நான்தான் நாட்ட திருத்தப்பொறன்னு ரயிலுக்கு குண்டு வைக்கிறவன் இருக்கான்... சாமி இருக்குன்னு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லன்னு தீச்சட்டிய ஏந்திகாட்டுற ஆளும் இருக்கு. இப்பிடி ஓலகத்திலெ இருக்கிற ஓவ்வொருத்தனுக்கும் ஓரு பைத்தியம். இந்த மாரி பைத்தியம் புடிக்காதவன் பொணந்தான். ஓலகமே பைத்தியமாத்தான் இருக்கு. எனக்கு கமலா பைத்தியம்.என முடிக்கிறார்.

கமலாவும் தன் பங்கிற்கு தன் அப்பா, அம்மா மற்றும் முன்னாள் கணவரை கட்சி பைத்தியங்கள் என்கிறார். அவர்கள் கட்சி பேப்பரை மட்டும் படிக்கிறார்கள், கட்சிக்காக கைகாசை செலவுசெய்கிறார்கள். தேர்தல் வேலை செய்கிறார்கள். கட்சிக்கல்யாணம் செய்வதுக் கொள்கிறார்கள். தன் பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை வைக்கிறார்கள். அவர்களை மெட்ரிகுலேசன் பள்ளியை தவிர்த்து அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.

இப்படி வாழும் போது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏதோ ஓரு கட்சிக்காக உழைத்து உழைத்து தன்னலமின்றி தன்னையும்  தன் வாழ்க்கையையும்  கட்சிக்காக அர்பணிப்பவர்களுக்கு கடைசியில் கிடைப்பது போகும்போது பிணத்தின் மீது போர்த்தப்படும் கட்சிக்கொடி மட்டுமே என்கிற எதார்த்தம் முகத்தில் அறைவது போல சொல்லப்படுகிறது.

நகர்மயமாதலிலும், உலகமயமாதலிலும் காணாமல் போன சிவன் கோயில்கள் அதை ஓட்டிய அக்ஹாரங்கள் பற்றிய குறிப்பு. அங்கிருந்த அடுத்த தலைமுறை அய்யர்கள் அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துச் சென்றுவிட்டார்கள் என்பதையும் போகிற போக்கில் தொட்டுச் செல்கிறார் (பக்கம் 90).

இந்தக் கதையில் பல வாய்ப்புகள் இருந்தும் வரம்பு மீறப்படவில்லை.  கதை முறை தவறி நடக்கும் மகனை தடுக்க வழியின்றி தவிக்கும் குடும்பம், வேலை சூழலில் இளம் விதவைகளைப் பார்க்கும் கண்ணோட்டம், கிராமத்திலிருந்து வேலைக்காகவும், பிழைப்புக்காகவும் நகரத்திற்கு இடம்பெயரும் மனங்கள் எனப் பல தளங்களில் பயணிக்கிறது.  அது போல, பெண் படித்துப் பதவியில் இருந்தாலும், மன ரீதியாக, உடல் ரீதியாக ஆணின் உடமையாக்கப்படுகிறாள் என்பதை பட்டவர்த்தனமாகச் சொல்கிறது "எங் கதெ".

ஆனால், இவ்வளவு நடக்கும்போதும் கமலா மௌனம் காக்கிறாள். இப்படித் தடம்மாறும் கமலாவின் மன ஓட்டம் என்னவாக இருக்கும் என வாசகர்களால் கொஞ்சமும் அறிந்துகொள்ள முடியவில்லை.

 ஆண் பெண் உறவு , கணவன்-மனைவி எனும் பந்தத்தில் நுழையாத பட்சத்தில் ஏற்படும் வாழ்வியல் சிக்கலாகவே நான் இந்தக் கதையை அணுகுகிறேன்.

முடிவில் மனைவியைப் போல் கமலாவை பாவித்து வாழும் விநாயகத்தின் வாழ்வில் மூன்றாமவன் நுழைகையில் அவனுடைய கோபம், குரோதத்தின் வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பது "எங் கதெ" யின் முடிவு.

எளிமையானவர்களின் கதையைச் சொல்லும் அழுத்தமானதொருப் படைப்பு. வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக வாசியுங்கள்.

தலைப்பு :எங் கதெ
எழுத்தாளர்: இமையம்
பதிப்பகம்: க்ரியா
ISBN : 978-93-82394-15-0
பக்கங்கள்: 112
விலை : ரூ.125

குறிப்பு :  இந்த அறிமுகம் ஆம்னி பஸ் தளத்தில் சில திருத்தங்களுடன் வெளியாகியிருக்கிறது.
http://omnibus.sasariri.com/2016/04/blog-post.html

Sunday, April 10, 2016

திரும்பிப் பார் -திருப்பூர்-2

திருப்பூர் பற்றிய என்னுடைய முந்தியப் பதிவு  பகுதி-1 ல் பார்க்கவும்.

கடந்த பதிவில் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் எப்படி குடிசைத் தொழிலாக மக்களுடன் வலுவாகப் பின்னிப் பிணைந்திருப்பதைப் பற்றி பார்த்தோம்.

அன்று மதியமே அங்கு இயங்கும் ஓரு தொழிற்சாலைக்குச் செல்லும் ஓரு வாய்ப்பு எற்பட்டது. அந்தத் தொழிற்சாலை எனது உறவினர் வேலை செய்யும் இடம்.

அவர் அங்கே முக்கியமானதொரு பதவியில் இருப்பதால் அவர்கள் தொழிற்ச்சாலையை முழுமையாகப் பார்வையிட எந்தக் கட்டுபாடுமின்றி தாராளமாக அனுமதித்தனர். அது ஆயிரம் பேருக்கு குறைவில்லாமல் வேலை செய்யும் இடம்.  அது புதிதாக தொடங்கப்பட்டிருந்ததால் எல்லா வசதிகளுடனும் நவீன கட்டமைப்புடன் இருந்தது.

அங்கே ஆண்கள், பெண்கள் டீசெர்ட்டுகளைத் தாண்டி சிறுவ,சிறுமியர்களின் ஆயத்த ஆடைகள் அதிகம் தயாராகின்றன. அவை நூலில் தொடங்கி, உடையாக கடைசியில் பெட்டிகளில் பேக் செய்யப்படுவது வரை நேரில் பார்த்தேன்.







அங்கே எனது அனுபவங்கள்

(*) உலகம் முழுவதும் மக்களால் விரும்பி அணியப்படும் பல பிராண்டுகள் இங்கே திருப்பூரில் நம் தொழிலாளர்களின் கைகளால் தயாராகின்றன

(*) இந்த தொழிற்சாலைகள் பெரும் முதலீடு கொண்டவை. அவை உலகத் தரமான பல இயந்திரங்களையும் உள் கட்டமைப்பையும் கொண்டுள்ளன

(*) ஆண்களை போல பெண்களும் அதே எண்ணிக்கையில் ஏன் கூடுதலாகக் கூட எல்லா தொழிற்சாலைகளிலும் பணி செய்கின்றனர்

(*) தமிழ்நாட்டு இளைஞர்கள் அளவுக்கு வடநாட்டு ஆண்களையும் பணிச்சூழலில் பார்க்க முடிந்தது. அதுபோல மணமான வடநாட்டு பெண்களும் தங்கள் கணவர்களுடன் வேலை செய்கிறார்கள்.

குறிப்பு- இது போல குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் வடஇந்தியக் குடும்பங்களின் நிலை பற்றிய விரிவான விவாதங்கள் இன்றையச் தமிழ் சூழலில் தேவை என்பதை இங்கே அடிக்கோடிட விரும்புகிறேன்.

(*) 45-60 நிமிடங்கள் மதிய இடைவேளையாக அவர்களுக்கு தரப்படுகிறது. அந்த நேரத்தில் பலர் உணவுக்குப் பின் அங்கேயே படுத்துக் குட்டித் தூக்கம் போடுவதைப் பார்க்க முடிந்தது.

(*) அங்கே பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் இரவு பகலாக (24 X 7) இயக்கப்படுகின்றன.அதற்கு தொழிலாளர்கள் சுழற்சி முறையில் வேலைக்கு வருகிறார்கள்.

இந்த தொழிலாளர்களின் நலம், மனித உரிமைகள் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் போன்றவை அரசாலும் தொழில் நிறுவனங்களாலும் பேணப்படுவதாகவே நம்புகிறேன்.

(*)  கவனித்த இன்னோரு விஷயம், குவாலிட்டி இன்ஸ்பெக்‌ஷன் (Quality Inspection). தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்ய ஓரு தனி பிரிவு  இயங்குகின்றது.

அவர்களின் வேலை உற்பத்தியான டீசெர்டுகளின் தரத்தை உறுதி செய்வது. கண்ணுக்கு புலப்படாத நுண்ணிய அழுக்கை கூட அவர்கள் சுத்தம் செய்தே அனுப்புகின்றனர். தரம் குறைவான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து திருப்பி அனுப்பபடும் அபாயம் இருப்பதால் இந்த முன்னேர்ப்பாடு

(*)  ஆர்கானிக் உணவு என்ற விஷயத்தைப் போல ஆர்கானிக் ஆடை இப்போழுது வளர்ந்த நாடுகளில் விரும்பப்படும் ஓன்று.

(*) ஆச்சர்யமூட்டும் இன்னோரு விஷயம் -  இத்தனை நவீன ஆடைகள் திருப்பூரில் தயாரானாலும், திருப்பூரில் ஆண்கள் விரும்பி அணியும் ஆடை சட்டை என்பதை மறுக்க இயலாது. அதைப் பற்றி உள்ளூர் வாசிகளிடம் கேட்ட போது அதில் உண்மையிருப்பதை ஓத்துக் கொண்டார்.

நாம் சாதாரணமாக கடையில் பெருத்த எதிபார்பின்றி வாங்கி அணியும் டீசெர்டுகளுக்கு பின் இத்தனை பேரின் உழைப்பும் நேரமும் செலவிடப்படுவதைக் காணும்போது பிரமிப்பாகவும் மலைப்பாகவும் இருந்தது.

உலகமயமான இந்தச் சூழலில் இதுபோன்ற நமது தொழிற்சாலைகளுக்கும் அதன் தொழிலாளர்களும் உலக அரங்கில் கம்யூனிச சீனர்களுடன் தொழில் முறையில் போட்டியிடுகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

Friday, April 8, 2016

பங்களா கொட்டா - கரந்தை ஜெயக்குமாரின் அறிமுகம்

எனது  "பங்களாகொட்டா " புதினத்தை (நாவல்) என் பதிவுலக நண்பர் கரந்தை ஜெயக்குமார் தனது தளத்தில் கடந்த மாதம் அறிமுகம் செய்துள்ளார். அதை அப்படியே இங்கே பதிப்பித்துள்ளேன். 

நான்கெழுத்து "கரந்தை"க்கு இந்த மூன்றேழுத்து "ஆரூர்" மூன்றேழுத்தில் சொல்லுவது "நன்றி". 
(தேர்தல் சூட்டில் கொஞ்சம் மேடைப் பேச்சில் எழுதிவிட்டேன்).

நீங்கள்  கரந்தை ஜெயக்குமாரின் அறிமுகத்தை தொடரும் முன். நான் முன்பு சொல்ல மறந்த தகவல் ஓன்று . அது அறக்கட்டளைப் பற்றியது. இந்த புத்தகத்தின் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி முழுமையும் தமிழ்நாட்டிலிருந்து செயல்படும் சிறகுகள் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் (இணைப்பு .





     அது ஒரு தனி உலகம். பூமிப் பந்தில், இந்திய வரைபடத்தில், தனியே புள்ளி வைத்துக் காட்ட அவசியப்படாத ஊர்.

     வேலங்குடி.

     அன்றைய கீழத் தஞ்சை மாவட்டம்.

     இன்றைய திருவாரூர் மாவட்டம்.

     மேலே அண்ணாந்து சூரியனைப் பார்த்து சரியாக மணி சொல்லும் மனிதர்கள். வேட்டி துண்டைத் தாண்டி, மேல் சட்டை போடுவதையே ஆடம்பரமாக நினைப்பவர்கள்.

     மரம், சொடி, கொடிகளைத் தாண்டி, மண்ணோடும் மாடுகளோடும் பிழைப்பவர்கள். அது வயலுக்கு உரமாக சாணமும், சாம்பலும், எருவும் தழையும் கலந்து போட்ட காலம்.

      இயந்திரங்கள் இல்லாத இயற்கையோடு கலந்த விவசாயம். பருவம் தவறாமல் மழையும், பனியும் செய்து விவசாயம் செழித்திருந்த நாட்கள் ….

     நண்பர்களே, நமது பதிவுலக நண்பர், இப்படித்தான் தொடங்குகிறார் கதையை.

     இது இவருக்கு முதல் நாவலாம்.

     நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது.

    ஒரு தேர்ந்த எழுத்தாளரின், கிராமிய மணம் வீசும் எழுத்து நடை. கிராமத்துத் தெருக்களில், புகுதி படிந்த மண்ணில், நெஞ்சில் ஈரம் மிகுந்த மனிதர்களோடு, தோளில் கைபோட்டபடி, நடைபோடும் ஓர் உணர்வு.

       அமெரிக்க மண்ணில் காலடி பதித்து, வருடங்கள் பலப் பல கடந்துவிட்ட போதிலும், தன் சொந்த மண்ணின் மொழியை, சொந்த கிராமத்து மண்ணின் நறுமனம் வீசும் மொழியை, தன்னுள் உயிர்ப்போடு, அடைகாத்து, இவர் போற்றிப் புரந்து வருவது புரிகிறது.

பங்களா கொட்டா.

    ஒரு மாபெரும் கனவை நனவாக்கிடத் துடித்துத் துடித்து, அதற்காகத் தன் வாழ்க்கையினையே அடகு வைப்பவனின் கதை.

நகமும் சதையுமாய் இருந்த உறவுகள் கூட பங்காளியாகும் போது, கோர்ட் கேசு என அலைந்து கொண்டிருப்பதை தினமும் பார்க்கிறார். எவ்வளவோ குடும்பப் பிரச்சனைகளுக்குப் பொண்ணும், மண்ணுமே அடிநாதமாய் இருப்பதென்பதே நிதர்சனம்.

      இன்றைய வாழ்வியலை, இன்றைய வாழ்வியல் யதார்த்தத்தை நூலின் ஒவ்வொரு பக்கமும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.


ஒவ்வொரு ஷெட்யூல்தாரரும் விவசாயம் செய்ய, ஒருவருக்கொருவர் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ள தண்ணீர் விட வேண்டியது. ஜல பாகத்தை எந்த காரணத்தைக் கொண்டும் தடுக்கவோ, மறைக்கவோ கூடாது.

       பெரியவரின் உயிர் பிரிந்தபின், உயிர் பெற்ற உயிலின் வாசகங்கள் நம்மை நெகிழச் செய்கின்றன.

    வயலினைப் பிரித்துக் கொடுத்த போதும், வாய்க்கால் வழி வழிந்தோடும் நீரைப் பொதுவில் வைக்கும் பாங்கு நம்மை வியப்படையச் செய்கிறது.

       நாவலின் ஒவ்வொரு பக்கமும், தெளிந்த நீரோடை போல், தங்கு தடையின்றி, இயல்பாக, வெகு இயல்பாக நகர்ந்தோடுகிறது.

எதற்காக வாழறோம் என்னும் கேள்வியையே பல பேர் கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் எத்தனை பேருக்கு பதில் தெரியும்….. லட்சியமில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? அது இல்லாமல் மனிதனாகப் பிறந்ததற்கே அர்த்தம் இல்லையே.

     இலட்சியத்தோடு வாழும் ஒரு மனிதனின் கதை.

பங்களா கொட்டா.

     உயிர்ப்பின்மையோடு இயங்கும் உலகில், விவேகத்தோடும், முதிர்ச்சியோடும், தன் சுயத்தை தக்க வைத்துக் கொள்ளப் போராடும் ஒரு மனிதனின் கதை.

பங்களா கொட்டா.

   இதை எழுதியர் யார் தெரியுமா?

   நமது நண்பர்.

   வலைப் பூவில் வலம் வருபவர்.

நானும் என் முன்னோர்களும் நூறாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த வாழ்க்கையின் மௌன சாட்சி எங்கள் கிராமம்.

அந்த கிராமம் என் கண் முன்னே மாறிக் கொண்டிருக்கிறது.

வெகுவேகமாய் நகரமயமான இலட்சக் கணக்கான இந்திய கிராமங்களில் எங்கள் கிராமமும் ஒன்று என்று சொல்லிக் கொள்வதில், எனக்குப் பெருமை ஒனறுமில்லை.

நகரமயமாதல் என்னும் சூறாவளியில் சிக்கி, கிராமங்கள் தன் சுய அடையாளங்களை இழந்து, சிதிலங்களுடன் இன்று உள்ளன.

அங்கே வாழ்ந்த மனிதர்களின் தடயங்கள் முற்றிலும் அழிந்துவிடும் முன், கொஞ்சமேனும் மிச்சம் இருக்கும், கிராமிய மணம் காற்றில் கரைந்து போகும் முன், அந்த நினைவுகள் நிறமிழந்து போகும்முன், என் இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்கும் முயற்சி இந்நூல்.

     இவ்வாறுதான் தன் முதல் நாவலை அறிமுகப் படுத்துகிறார் ஆரூர் பாஸ்கர்.

   சுட்டெரிக்கும் வெயிலில் நாள் முழுதும் அலைந்து, களைத்து வீடு திரும்பும் பொழுது, ஒரு குவளை குளிர்ச்சியான மோர் குடித்தால் எப்படியிருக்கும், அப்படி ஒரு மன நிறைவைத் தருகிறது இவரது நூல்.



பங்களா கொட்டா.

படித்துப் பாருங்கள் நண்பர்களே.

       அன்பு நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள், ஒரு அன்பு வேண்டுகோள்.

      மீதமிருக்கும் கிராமத்து நினைவுகளை எல்லாம், நினைவிருக்கும் பொழுதே, நேரமிருக்கும் பொழுதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாய், வெள்ளைத் தாளில் இறக்கி வையுங்கள்.

அடுத்தமுறை தமிழகம் வரும்பொழுது.
திரு ஆரூர் வரும் பொழுது
எழுத்துக்களைச் சுமந்த தாட்கள்
புத்தகமாய் பிரசவிக்கட்டும்.
நினைவுப் பெட்டகமாய் மலரட்டும்.


வெளியீடு
அகநாழிகை பதிப்பகம்,
26,ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு -613001.
அலைபேசி 99 94 54 10 10

விற்பனை உரிமை
டீஸ்கவரி பேலஸ்,
கே.கே.நகர் ( மேற்கு) சென்னை-78
தொலைபேசி 044 – 6515 7525, அலைபேசி 99 40 44 66 50

விலை ரூ.130

Sunday, April 3, 2016

திரும்பிப் பார் -திருப்பூர்-1

எனது இந்திய பயண அனுபவங்களை ஓரு தொடராக எழுதி வருகிறேன். அதன் இணைப்புகள்  பகுதி-1, பகுதி-2, பகுதி-3.

சென்னையிலிருந்து சொந்த ஊரான திருவாரூரில் இருந்து அடுத்தப் பயணம்
திருப்பூர் நோக்கி ரயிலில் .

திருப்பூரில் இறங்கும் போது மணி காலை ஐந்தாகியிருந்தது. முன்பே ஊரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தால்  நான் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன். ரயில் நிலையத்தின் வெளியே வந்த்தும் பார்த்த முதல் சிலை திருப்பூர் குமரனுடையது. இன்று திருப்பூருக்கு அந்தக் குமரனை தாண்டி பல அடையாளங்கள்.

திருப்பூரில் உறவினர் ஓருவரை பார்க்கும்  வேலையிருந்தது. அப்படியே கிடைத்த ஓரு நாளில் ஊரையும் சுற்றிப் பார்த்து விட்டேன்.  திருப்பூர் தொழில் நகரம். பின்னலாடை தாயாரிப்பில் முதலிடம் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

திருப்பூரில் பின்னலாடை எத்தனை வருட பாரம்பரியம் எனத் தெரியவில்லை. ஆனால் அங்குள்ள ஓவ்வோரு வீட்டிற்கும் ஏதோ ஓரு விசயத்தில் இந்தத் தொழில் சம்பந்தப்பட்டிருக்கிறது. நான் சென்ற உறவினர் வீட்டில்கூட மூன்று சகோதரர்களின் முழுநேரத் தொழில் பின்னலாடை ஏற்றுமதியே.

நான் தங்கியிருந்த உறவினர் வீடு  திருப்பூர் நகரின் மையத்திலிருந்து ஏறத்தால ஆறு ஏழு கிலோமீட்டர் ஊருக்கு வெளியே இருந்தது. அந்த வீட்டைச் சுற்றி தோட்டம் , தென்னைகள், மோட்டார், பெரிய கிணறு என குளுமையாக இருந்தது. அங்கே நான் கவனித்த இன்னோரு விசயம் தோட்டத்திலிருந்த சின்ன கோயில். வீட்டின் குலதெய்வமாக இருக்குமா? சரியாகத் தெரியவில்லை. இப்படி ஓவ்வோரு வீட்டிலும் தெய்வம் இருப்பதாகச் சொன்ன ஞாபகம்.

அந்த வீட்டுக்குப் போகும் வழியில் நான் கவனித்த இன்னோரு விசயம் விவசாயம். திருப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்கள் - பம்புசெட், தென்னை, விவசாயம் என இன்னமும் ஊர் நல்ல செழுமையாகத் தான் இருக்கிறது. ஆனால் சாயப்பட்டறைகளால் நீராதாரங்கள் மாசாகி நிலத்தடி நீரும் கெட்டுவிட்டதாக முன்பு எப்போதோ படித்த நினைவு. அப்போது சுத்திகரிப்பு, மறுசுழற்சி என்று பேசிக் கொண்டிருந்தனர். நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த பிரச்சனைக்கு ஓரு நிரந்தரத் தீர்வு கண்டார்களா எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

நகரின் மையப்பகுதியில்  நான் கவனித்த முக்கியமான இன்னோரு விசயம் வெயில். கோவைக்கு அருகில் இருப்பதால் கோவையின் குளிர்ச்சியை எதிர்பார்த்திருந்த எனக்கு மிகுந்த ஏமாற்றமே. அதுவும் நான் அங்கு சென்றது பிப்ரவரியின் தொடக்கத்தில் தான்.

விஷயத்துக்கு வருவோம். நான் தங்கியிருந்த உறவினர் வீட்டை ஓட்டினார் போல் இருந்த ஓரு கட்டிடத்தின் உள்ளே எட்டி பார்த்தபோது நூல் நூற்கும் இயந்திரங்கள் வரிசையாக ஓடிக்கொண்டிருந்தது. இருபத்துநான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த எந்திரங்களை சுழற்சி (shift) முறையில் ஆட்கள் பார்த்துக்
கொள்வார்களாம். அதுபோல இடது புறம் இருந்த ஓரு வீட்டில் நுழைந்த போது அங்கே பனியன்கள் தயாராகிக் கொண்டிருந்தன. அங்கே மிகச் சரியாக 6 பேர் மட்டுமே இருந்தனர். ஓருவர் பனியன் துணியை வெட்டி தையல் இயந்திரத்தில் தைப்பதில் தொடங்கி கடைசியாக அயர்ன் செய்து பெட்டியில் வைப்பது வரை அவர்களே எல்லா வேலைகளையும் கனக்கச்சிதமாகச் செய்துக்கொண்டிருந்தனர்.

அதுபோல உறவினரின் தொழில்நிறுவனம் இயங்குவது கூடஓரு வீட்டில் தான். அந்த வீட்டின் ஹாலில் ஐந்து, ஆறு தையல் இயந்திரங்களை வைத்துக்
கொண்டு ஆர்டர்களை பிடித்து வெற்றிகரமாய் இயங்கிவருகிறார். அங்கே தைப்பதற்கு வந்த பெண்கள் அனைவரும் குடும்பபெண்கள். அனைவரும் பகுதி நேரம் வேலை செய்பவர்கள்.  மணிக்கு ஓரு தொகையை சம்பளமாக பெற்றுக் கொள்ளும் இவர்கள்  வீட்டில் நேரம் கிடைக்கும் போது வந்து இதை செய்து முடிக்கின்றனர்.

இப்படி திருப்பூரில் குடிசைத் தொழிலாகப் பின்னலாடைத் தொழில் நடப்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. கவனித்த மற்றோரு இன்னோரு விஷயம் வேலைவாய்ப்பு.  ஆம், பெரும்பாலான நிறுவனங்களிலும் வீடுகளிலும் வேலைக்கு ஆட்கள் தேவை எனும் பலகையைக் காணமுடிந்தது.

தமிழ்நாட்டில் திருப்பூரில் இருப்பதுபோல இந்த அளவுக்கு வேறு எங்கும் ஆட்கள் தட்டுபாடும் தேவையும் இருக்குமா தெரியவில்லை. இப்படித் தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் ஊராக திருப்பூர் இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.

திருப்பூரிலில் ஓரு தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்த அனுபவத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.  கூடவே திருப்பூர் மண்ணின் மைந்தன் விஜய் டிவி புகழ் கவிஞரை சந்தித்த அனுபவத்தையும் பகிர்கிறேன்.

நீங்கள் யார் அந்தக் கவிஞர் என உங்கள் மனக்குதிரையைக் கொஞ்சம் தட்டிவிடுங்கள். நான் கூடிய விரைவில் வந்து விடுகிறேன்.


தொடருவோம்..

நன்றி; படங்கள்

http://google.com
http://twomaterialgirls.tumblr.com/