Tuesday, December 30, 2014

சிறகுகள் - பற பற!!

கடந்த வாரம் "சிறகுகள் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை" தமிழ்நாட்டில் அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.

என்னுடய "என் ஜன்னல் வழிப் பார்வையில்"   கவிதை தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருந்த கல்வி அறக்கட்டளை இதுவே.  புத்தக விற்பனையிலிருத்து திரட்டப்படும் நிதி இந்த அறக்கட்டளைக்கே நன்கொடையாக வழங்கப்படும்.

சிறகுகள் பற்றி அறிய விரும்பும் அன்பர்களுக்கான ஒரு பிரத்தியேகமான நேர்காணல் இங்கே :)


சிறகுகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்:

சுற்றுச்சூழக்காக மரஙகள் நடுவது வரை சட்ட அனுமதியிருந்தாலும்,
சிறகுகளின் இப்போதய தலையாய நோக்கம் வசதி வாய்ப்பற்ற மற்றும் கிராமப் புற மாணவர்களின் கல்விக்காக உதவி செய்வது.

இதற்கான எண்ணம்: 

இதற்கான எண்ணம் மிக நாட்களாக இருந்தாலும்,  நண்பர்கள் மற்றும் உறவினர்கள்  தந்த தொடர் ஊக்கமும் நம்பிக்கையும் தான்  இதைத் தொடங்க தெம்பு வந்தது.

ஆனாலும் குடும்பம், வேலை என கடமைகளை தாண்டி இதற்காக  ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். தவிர அறக்கட்டளை தொடங்குவதின் ஆழத்தையும் தேவையான மேலாண்மையும் நன்றாக யோசித்தேன்.

கடைசியில் நல்லது நடந்தால் நல்லது என செயல்படுத்த துணிந்து விட்டேன். இதற்கு அவசரப்படாமல்  கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டேன். என் எழுத்து, எங்கோ தேவைபடும் ஒருவருக்கு உதவும் எனில் அதை தவிர வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும். சொல்லுங்கள்!


சிறகுகள் எனும் பெயரை தேர்வு செய்தது எப்படி?

தெளிவுடன், தன்னம்பிக்கை, வலுவுடனும் சமூக வானில் பறக்க தேவையான சக்தியை தரவல்லது  கல்வி எனும் சிறகே.

அந்த சுதந்திர சிறகுகளின் நினைவூட்டலாகவே இந்த பெயர்.

"பசியால் வாடுபவனுக்கு ஒரு வேளை உணவு கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால்,  வாழ்நாள் முழுவதும் அவன் நிம்மதியாக சாப்பிடுவான்...' எனற பழமொழி நீங்கள் அறிந்தது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ.அப்துல்கலாமின்  'அக்னி சிறகுகள்' நூலும் ஒரு தூண்டுதல்.

இதற்கான தற்போதய தேவை என்ன ?

தாராள மயமாக்கப்பட்ட இந்தியாவில் தமிழ் நாட்டின் தலைஎழுத்து முற்றிலும் மாற்றி எழுதப்பட்டுவிட்டதாக ஒரு தவறான எண்ணம் பலரிடம் ஏற்பட்டுள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்திற்கு கல்வியை தர முயற்சி செய்துகொண்டிருக்கிறனர். அங்கே பெற்றோர்கள் கடன் வாங்கியாவது தரமான கல்விக்காக தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை நுழைத்து விடுகின்றனர்.

ஆனால் வாய்ப்புகள் அற்ற சிறு நகரங்களிலும், கிராமப் புறங்களிலும் பயிலும் மாணவர்களின் நிலையில் பெரிய மாற்றமில்லை.

அவர்கள் அரசுப்பள்ளிகளையோ அல்லது அரசுமேலாண்மை பள்ளிகள் எனப்படும் Management Schools யை நம்பி இருக்கவேண்டிய சூழல். அங்கே நிதி மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தவிர உள் கட்டமைப்பின்மை என பல சிக்கல்கள்.

தவிர நகரங்களை போன்று சரியான கல்வி வழிகாட்டுதாலோ அல்லது வாய்ப்புகளோ பலருக்கு அங்கே கிடைப்பதில்லை. அந்த மாணவர்களுக்கு  நிதி உதவி மற்றும் வழிகாட்டுதலுக்கு 'சிறகுகள்' முயற்சி செய்யும்.

மேலும், நம்மில் உதவி  செய்ய நிறையப்பேர் தயாராக இருக்கிறார்கள்.  அதை சரியான பயனாளிகளிடம் கொண்டு சேர்க்க  ஒரு அறக்கட்டளை தேவையானதாக இருந்தது.


எப்படி செயல்படுத்த திட்டம்?

என்னை தவிர மேலும் நான்கு பேர்  'சிறகுகளில்' உறுப்பினர்களாக உள்ளனர். நான் அமெரிக்காவில் வசித்தாலும், அவர்களின் உதவி மற்றும் ஓத்துழைப்புடன்  இதை செயல்படுத்துவதாகத் திட்டம்.

அதில் ஒருவர் பள்ளி ஆசிரியர், இன்னொருவர் மனித வள மேம்பாட்டுதுறையில் பணி புரிபவர். மேலாக அனைவருக்கும் நல்ல உதவும் உள்ளம் உள்ளது.

வரும் நாட்களில், நீங்கள்  யாருக்கேனும் உதவ வேண்டும் என நினைத்து பணம் அனுப்பி வைத்தாலும் பெற்றுக் கொள்வதாக உத்தேசம்.

குறைந்த பட்சம் ஓவ்வொரு காலாண்டுக்கேனினும் ஒரு செயலைச் செய்து முடிப்பது  இப்போதய  திட்டம்.

முதல் கட்டமாக எனது கவிதை நூல் விற்பனையின் முழு தொகையும் சிறகுகளுக்கு வழங்கப்படுகிறது.

அடுத்தது என்ன ?


திருவாருர்க்கு அருகில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு நூலக உபகரணங்களும், புத்தகங்களும் வழங்க ஆசிரிய நண்பர் ஒருவர் மூலமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். மேலும் சொல்கிறேன்.

இது ஒரு சிறு தொடக்கமே, கடந்து போக வேண்டிய பாதை அதிகம். ஆனால்,நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

No comments:

Post a Comment