Google+ Followers

Sunday, May 8, 2016

சின்னு முதல் சின்னு வரை - வண்ணதாசன்

நண்பர்களே,

கவிதைப் போலோரு ஓரு குறுநாவலை (குறுபுதினத்தை) சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை எழுதிய கவிஞர் யாராக இருக்கும் என ஊகிக்க முடிகிறதா ?


அவர் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர் தான். அவர் வேறுயாருமல்ல, கவிதையுலகில் கல்யாண்ஜி எனும் பெயரில்  புகழ் பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் தான்.  "புதிதாக எழுத வருபவர்கள் அனைவரும் வண்ணதாசனை வாசிக்க வேண்டும்" என சுஜாதாவால் பெருமைபடுத்தப்பட்டவர்.

வண்ணதாசன் நவீனக் கவிதையுலகில் தனக்கென ஓரு பாணியை அமைத்து அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். எந்த ஓரு சர்ச்சையிலும் சிக்காத அமைதியான இலக்கியவாதி. அவரை இலக்கியவாதி என்பதைவிட நல்ல மனிதர் எனலாம். நமக்கு நெருக்கமான உறவினரோ அல்லது பாசமான தந்தையோ தோள் மீது கைபோட்டபடி உரையாடுவது போன்றதோரு நல்லதோரு வாசிப்பனுவத்தை தரக்கூடியவர்.

இவர் கண்ணில் ஓரு சிறு கல் பட்டால் கூட கவிதையாய் முளைத்துவிடும். எனக்கு பிடித்த அவருடைய ஓரு ஆகச்சிறந்த கவிதை ஓன்றை நீங்களே பாருங்கள்.

"தினசரி வழக்கமாகிவிட்டது 
தபால்பெட்டியைத் 
திறந்துபார்த்துவிட்டு 
வீட்டுக்குள் நுழைவது. 
இரண்டு நாட்களாகவே 
எந்தக் கடிதமும் இல்லாத 
ஏமாற்றம். 
இன்று எப்படியோ 
என்று பார்க்கையில் 
அசைவற்று இருந்தது 
ஒரு சின்னஞ்சிறு 
இறகு மட்டும் 
எந்தப் பறவைஎழுதியிருக்கும் 
இந்தக் கடிதத்தை. "

- கல்யாண்ஜி, 'அந்நியமற்ற நதி' தொகுப்பிலிருந்து.

இப்படி நாம் அன்றாட வாழ்வில் எளிதாய் கடந்து போகும் விசயங்களில் அழகியலைக் காண்பவர்.

எனக்கு பிடித்த அவருடைய இன்னோருக் கவிதை

"அடிக்கடிப் பார்க்க முடிகிறது யானையைக் கூட
  மாதக் கணக்காயிற்று மண் புழுவைப் பார்த்து" 

என மண்புழுவுக்காகக் கூட ஆதங்கப்படும் ஜீவன் அவர்.

அவருடைய சின்னு முதல் சின்னு வரை எனும் குறுநாவலை சமீபத்தில் வாசித்து முடித்தேன். இதுவரை அவர் எழுதிய ஓரே குறுநாவல் இதுதான் என்பது கூடுதல் தகவல். 1991ல் முதல் பதிப்பாக வந்த இந்த புத்தகத்தை சந்தியா பதிப்பகம் 2014ல் மூன்றாம் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.


கதை சின்னு என்கிற ஶ்ரீநிவாச லட்சுமி எனும் பெண்ணின் அழகைச் சிலாகிப்பதில் இருந்து தொடங்குகிது. பின்பு அவள் வீட்டுக்குத் துக்கம் கேட்க தன் மனைவி மற்றும் மகளுடன் கதைச்சொல்லி செல்கிறார். நாவலின் இறுதியில் அவர்  சின்னுவைப் பார்த்தாரா? அவளுடைய நிலை என்னவாக இருந்தது? என்பதைக் கதையின் முடிவில் அறியலாம்.

இது நம் அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஓரு சாதரணமான ஓரு சம்பவம். ஆனால் இந்த நாவலின் சிறப்பம்சம் இப்படி நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும் நிகழ்வுகளையும், காணும் மனிதர்களையும், உறவுகளையும் அவர்களின் உணர்வுகளையும் நுட்பமாக பதிவு செய்வதே.

வாழ்ந்து முடிந்த ஓரு தலைமுறைக்கு இந்தச் சமூகம், உறவுகள் பற்றிய புரிதல்கள். வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற இந்த தலைமுறையின் நடைமுறைபுரிதல்கள். அதுபோல வாழப் போகும் அடுத்தத் தலைமுறையின் சிக்கல்கள் எனக் கதை பல தளங்களை தொட்டுச் செல்கிறது.

கதையில் திருநெல்வேலி வீடுகளையும், தெருக்களையும், மனிதர்களையும் நம் கண் முன் கொண்டு வருகிறார். கதையின் ஊடாகக் கதைசொல்லி பல தத்துவங்களை அழகாகப் பகிர்ந்துச் செல்கிறார்.

துக்கவீட்டுக்குச் செல்லும் கதைசொல்லியின் மனநிலை இங்கே

"யாருடைய துக்கத்தை யார் அகற்றிவிட முடிகிறது. அப்படியெல்லாம்
நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். சின்னுவை இப்படி ஓடி ஓடி , இத்தனை ஆள் தாண்டிப் பார்க்கப் போகிறோம். இது சின்னுவின் துக்கத்தை அகற்றவா ?எங்களுடைய துக்கத்தை அகற்றவா?  (பக்கம்-42)"

எனும் போது மனதைத் தொடுகிறார்.

இலக்கியத் தனமானதோருப் படைப்பு  இது. அதாவது பாலுமகேந்திராவின் "வீடு" படத்தை ஸ்லோமோஷனில் பார்பது போல. பரபரப்பான வணிக எழுத்தல்ல இந்தப் புத்தகம்.  அதனால் வாய்ப்பும், ஆர்வமும் இருந்தால் வாசிக்கவும்.

தலைப்பு: சின்னு முதல் சின்னு வரை
வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: வண்ணதாசன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381343937
பக்கங்கள்: 80
விலை: 60

5 comments:

 1. "இன்று எப்படியோ
  என்று பார்க்கையில்
  அசைவற்று இருந்தது
  ஒரு சின்னஞ்சிறு
  இறகு மட்டும்
  எந்தப் பறவைஎழுதியிருக்கும்
  இந்தக் கடிதத்தை. "
  இப்படி எழுத ஒரு கல்யாண்ஜிதான் முடிகிறது/

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி விமலன்!!

   Delete
 2. அருமை
  அவசியம் படிப்பேன் நண்பரே
  நன்றி

  ReplyDelete