Sunday, November 13, 2016

பருக்கை - வீரபாண்டியன்

சமீபத்தில்  2015ல்  சாகித்ய அகாதமியின்   'யுவ புரஷ்கார்'  விருது பெற்ற வீரபாண்டியனின்  "பருக்கை" நாவலை (புதினம்)வாசித்தேன்.

தமிழில் மறக்கப்பட்டுவரும் பல வார்த்தைகளில் ஒன்றான "பருக்கை" என்பதையே புதினத்தின் தலைப்பாக வைத்தமைக்காகவே வீரபாண்டின் முதலில் பாராட்டுக்குரியவர்.

சரி புதினத்துக்குள் வருவோம். ஊர் பக்கத்திலிருந்து கல்விக் கனவுகளுடன் சென்னை போன்றதோரு பெருநகருக்கு வரும் ஏழை மாணவர்கள் தங்களின் உணவுக்கு,  தங்குமிடத்துக்கு, கல்விக்கட்டணத்துக்கு  என  எதிர்க்கொள்ளும் பல அவலங்களைத் தோலுரிக்கும் கதை.


படிக்க வரும்  அவர்கள்  கையில் காசில்லாததால் படிப்புச் செலவுக்காகவும் நல்ல சாப்பாட்டிற்காகவும் சென்னையில் "கேட்டரிங்" எனும் உணவு பரிமாறும் வேலை செய்கிறார்கள். அங்கே நேரும் அவமானங்கள் , அனுபவங்கள் எனக் கதை விரிகிறது.


கல்யாணவீடுகளில் நாம் எளிதாகக் கடந்தபோகும்  அந்தச் சாமானிய மனிதர்களின் உள்ளக்குமுறலை எந்தவித பாசாங்கமும் இல்லாமல் ஆசிரியர்  பதிவு செய்திருக்கிறார்.  கதையுனுடே இந்த நகரச்சூழலில் அந்த இளைஞர்கள்  எதிர் கொள்ளும்  பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், காதல், வர்க்கப்பிரிவினை, பண்பாட்டுச் சிக்கல்கள் எனும் பல தளங்களைத் தொட்டுச் செல்கிறது.
  
கதை பெரும்பாலும் பெரிய வர்ணனைகள் இல்லாமல் இயல்பான உரையாடல்களால் நகருகிறது. இயல்பான அன்றாட பயன்பாட்டிலிருக்கும் சாமானியனின் மொழி கதைக்குப் பலம்.

"ஏய்யா.. உங்களுக்லாம் அறிவில்ல ? வேலை செய்யிறதுக்குதான வந்திங்க.. டைம் ஆச்சில்ல எலயப் போடாம வடைய எடுத்துத்
தின்றிங்க. ...." (பக்கம்-153)

இதில் பட்டினி வயிறோடு பந்தியில் ஒடியாடி உணவு பரிமாறுபவனை ஒரு சகமனிதனாக மதிக்காமல் நோகடிக்கும் சமூகத்தை நமக்குக் காட்டுகிறார்.

".. (நீ ) இங்க  மெட்ராஸுக்கு வந்து படிக்கிறன்னு உங்கப்பன் அங்க ஊருபுல்லா பெருமையடிச்சிட்டுக் கெடக்குறான்.  நீ இன்னானா இங்க டீய வித்துங் கெடக்குற. இதுக்குதான் உங்கொப்பன் உன்ன படிக்க அனுப்ச்சானா ? ..." (பக்கம்-239)

ஒரு கிராமத்து மனிதரின் ஆற்றாமையான உள்ளக் குமுறல் அது.

கதையில் கல்யாண மண்டபங்களின் திரை மறைவு விசயங்கள், கல்யாண வீட்டுச் சமையல், அங்கே சமைப்பவர்கள், பரிமாறுதல் போன்ற விசயங்கள் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வரும் பல நுண்விவரங்கள் வியக்கவைக்கின்றன.

"சாப்பிடுகிறவர்கள் பாராட்டுகிற மாதிரி சாம்பார் ஊற்றுவது ஓரு சாதனை. அந்தப் பாராட்டுதல் அவர்கள் முகத்திலேயே தெரியும். ஒரு தலை ஆட்டுதலிலோ, ஒரு தேங்ஸ்-லோ, விழிகள் விரிய அவர்கள் தரும் சிறு புன்னகையோலோ.. அது தெரியக்கூடும். ஒரு சுருங்கிய முகம் சாம்பார் ஊற்றியதில் மயங்கி மலர்வதிலோ அது தெரியக்கூடும்......  " (பக்கம்-132)

".. சோறு கட்டியாக இல்லாமல் உடைத்து தயார் நிலையில் வைத்திருந்தால் ரசம் ஊற்றுவது சுலபம். ரசத்தை ஒரே இடமாக ஊற்றாமல், சோற்றுக்குள் வட்டமாக ஊற்ற வேண்டும். தோசை ஊற்றும் போது மாவை வட்டமாகத் தேய்ப்பது போல ரசத்தை ஊற்றினால்,.....  " (பக்கம்-133)

ஒடியாடி பரிமாறிக் களைத்து போய் விரும்பிய உணவு தீர்ந்து, பசியெல்லாம் சுத்தமாய் அடங்கி, ஆறியச் சாப்பாட்டைக் கடைசியில் சாப்பிடும் அவலத்தைச் சொல்லும்  இந்தக் கதையில் பசி எனும் உயிர்ப்பு கடைசி வரை தொடர்கிறது. அதுவே எழுத்தாளரின் வெற்றியாக நினைக்கிறேன்.

இளமையில் வறுமை எனும்  துயரம் அனுபவித்தால் தெரியும் என்பதை வாசகர்களுக்குக் கடத்துவதிலும் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது கதையில் வரும் எழுத்தாளரின்
ரசிக்கும் படியான சில சொந்தக் கவிதைகள்

"பெண்கள் குனியும் போதெல்லாம்
கும்மாளம் போடாதீர்கள்
உங்கள் மனைவிக்கும்
தண்டுவடம் தாழாமலிருக்காது.. " (பக்கம்-149)

இயல்பான நகைச்சுவைக் கதையில் ஒடுவதும் நல்ல அம்சம். அதுபோல, கதையில் ஆங்காங்கே வெளிப்படும் சமூகவிமர்சனங்களுடன் அமைந்த உரையாடல்களும் கவனிக்கத்தக்கது.  குறிப்பாக அரசு விடுதிகளின் சீர்கேடுகள், உடன் படிக்கும் கண் பார்வையற்றவரின் சிரமங்கள் எனப்  பல மெத்தனங்களுக்குச் சமூகம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

விருது பெற்ற நாவல் எனும் எதிர்பார்ப்புடன் வாசிக்கும் வாசகர்களுக்கு ஏமாற்றங்களும் உண்டு. 

முதல் படைப்பென்பதால் பெரிதாகத் திட்டமிடல் இல்லாமல் எழுதப்பட்டது போலுள்ளது.  உதாரணமாக.  கதைசொல்லியின் நண்பர்களை எந்தவோரு தனித்தன்மையுடன் படைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  கதை நகர்த்தலிலும் அவர்களின் பங்கு பெரிதாக வெளிப்படவில்லை.   நடுவில் வரும்
முழுமை பெறாத  பெண் நண்பியின் கதாபாத்திரம் இப்படிப் பல.

நண்பியிடம் காதலைச் சொல்ல முடியாத தருணத்தில் தனது மனநிலையைக் கதைச்சொல்லி இப்படிப் பதிவுச் செய்கிறார்.

"..அவள் பேசினாலும் 'லவ் பண்றதுலாம் பிடிக்காது ' என்பது மட்டுமே என் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. மனைவி இறந்து குழந்தை பிறந்த மனநிலையோடு நின்றேன். (பக்கம்-67)"

ஒர் இளம் பெண்ணுடன்  தனிமையில் இருக்கும் மணமாகாத இளைஞனுக்கு இதுபோன்றதோரு  மனநிலை என்பது செயற்கைத் தனமாக எழுதப்பட்டதாகத் தோன்றியது.

சமீபத்தில் பட்டமேற்படிப்பு முடித்த வீரபாண்டியனின் முதல் படைப்பு இது. அந்த வகையில் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே வரும் ஒரு மாணவன் அந்த வாழ்பனுவத்தை ஒரு புனைவாக எழுதுகிறார். அதை ஒரு பதிப்பகம் வெளியிட்டு அந்தப் படைப்பு மத்திய அரசின்  உயரிய விருது பெறுவது என்பதைத் தமிழ் எழுத்துலகில் நல்லதோரு தொடக்கமாக நினைக்கிறேன். இளம் எழுத்தாளர்களுக்குக் கண்டிப்பாக நல்ல உத்வேகத்தைத் தரும் நிகழ்வு.

அதுபோல ஆசிரியருக்கு இது முதல் புத்தகம் என்பதால் இந்தப் படைப்பு எவர் கண்ணிலும் படாமல் போயிருக்கவே வாய்ப்புகள் அதிகம். தமிழ் எழுத்துலகில் அதுதான் நிதர்சனம்.  அதிஷ்டவசமாக   இந்தப் படைப்பு இலக்கிய உலகின்  உயரிய விருதால்  நல்ல கவனம் பெற்றிருக்கிறது. எழுத்தாளர் வீரபாண்டியன் விருது தந்த இந்த வெளிச்சத்தை வரும் காலங்களில் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதுவரை எந்தத் தமிழ்படைப்பாளியும் தொட்டதாக நினைவில் இல்லாத மாதிரியான ஒரு கதைக்களன்.  இதை கதைக்கட்டமைப்பு, செவ்விதழ் இலக்கியம் என்றேல்லாம் கறாராகச் சீர்தூக்கிப் பார்க்காமல்  சாமானியர்களின் கதைக்கரு என்பதை மட்டும் கருத்தில் கொண்டால் நிச்சயம் இது ஒரு புதுமையான படைப்பு.   

வீரபாண்டியனை வாழ்த்தும் அதே நேரத்தில் ஆசிரியர் புகழ்பெறாதவர் என ஒதுக்காமல் அவரின் நூலை வெளியிட்ட பரிசல் புத்தக நிலையத்துக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!

பருக்கை 
வீரபாண்டியன்
பரிசல் புத்தக நிலையம், எம்.எம்.டி.ஏ. காலனி, சென்னை-106
விலை : ரூ.160
கைப்பேசி : 9382853646 


இந்தக் கட்டுரை சொல்வனம் இணைய இதழில் வெளியாகி உள்ளது.

http://solvanam.com/?p=47204


2 comments: