Friday, September 1, 2017

கேலிச் சித்திரங்கள்

நூலகத்தில் கண்ணில் பட்ட " Cartooning for Kids" எனும் புத்தகத்தை
சமீபத்தில் வீட்டுக்கு எடுத்து வந்தேன்.

கோடை விடுமுறையில்  இருந்த இரண்டு மகள்களுமே (5,10 வயது) ஆர்வமாக போட்டி போட்டு போதும் போதும் எனும் அளவுக்கு வரைந்துவிட்டார்கள் (படத்தில்).

எனக்கும் சின்ன வயதில்  இந்தக் கார்டூன்களின் எனும் கேலிச்சித்திரங்களின் மீது ஒரு
கிறுக்கு இருந்தது உண்மைதான். செய்தித் தாள்களில் வரும்
படங்களைப் பார்த்து சதா கிறுக்கிக் கொண்டிருப்பேன்.


கார்டூனிஸ்டுகளுக்கு மக்களிடம் பெரும் மதிப்பு இருந்த காலம் அது ( தமிழில் ஆனந்த விகடன்  மதன் பெரிதும் சிலாகிக்கப்பட்டது போல ). அப்போது ஆங்கில  ஹிந்துவின் காட்டூனிஸ்டுகளான சுரேந்ரா, கேசவ் போன்றோரின் பரம ரசிகன் நான். குறிப்பாக சுரேந்ரா. அப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமை மட்டும் வீட்டில்  ஹிந்து வாங்குவோம். வாங்கியவுடன் எனக்கு முதல் வேலை கார்டூன் கார்னர் பக்கத்தைத் திருப்புவதுதான்.

அரசியல் கார்டூன்களில் அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையில்  அவர் படங்களின் மேல்  எனக்கு ஒரு தீராத காதல் இருந்தது. என்னைப் பொறுத்த வரை அவருடைய கார்டூன்கள் கூர்மையானவை. அதே சமயத்தில் அதில் எப்போதும்  மெலிதான ஒரு நகைச்சுவை இருந்துக் கொண்டேயிருக்கும் (சமீபத்தில் கண்ணில் பட்ட ஒரு கார்டூனை கமெட் பகுதியில் பார்க்கவும்).

பதின்மவயதில் அவருடைய கிறுக்கல் கையெழுத்தைப் பார்த்துதான் எனது கையெழுத்தை வடிவமைத்துக் கொண்டேன் எனச் சொன்னால் அது பொய் இல்லை. உண்மை. இதில் என்னுடையது பெரியக் கிறுக்கல், அவருடையது சின்னக் கிறுக்கல்.
அவ்வளவுதான். பெரிதாக வித்தியாசமில்லை.  கிறுக்கல் கையெழுத்தில் சின்னக் கிறுக்கல், பெரிய கிறுக்கல் என்றெல்லாம் இருக்கிறதா என்ன ? :)

அதெல்லாம் வேறு பொழுதுபோக்கு எதுவும் இல்லாமல்
நாளிதழ்களை வரிவரியாக ஒன்று விடாமல் வாசித்த நாட்கள். இன்று,  இணைய செய்திகள், வாட்ஸ் அப் அதில் வரும் வீடியோக்களும், மீம்சுகளும் பிரபலமாயிருக்கும் இந்த அவசரச் சூழலிலும் நிதானித்து கார்டூன்களை கலை நுணுக்கத்துடன் ரசித்து சிலாகிக்கும் ஒரு சிறிய கூட்டம் இன்றும் இருக்கிறதா என்ன?

4 comments:

  1. கார்டூன்களை கலை நுணுக்கத்துடன் ரசித்து சிலாகிக்கும் ஒரு சிறிய கூட்டம் இன்றும் இருக்கிறது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே !!

      Delete
  2. வாழ்த்துகள் தொடருங்கள் பிள்ளைகள் கலைத்திறமை பெருகட்டும்

    ReplyDelete