Friday, October 20, 2017

Love, Loss and What We Ate - நடிகை பத்மா லட்சுமி

பெரிய பின்புலம் எதுவும் இல்லாமல் புலம்பெயர்ந்த நாடுகளில் 
தங்களின் சொந்தத் திறமையால் நிறம், இனம்,மதம் போன்ற தடைக்கற்களை உடைத்து விருட்சமாக உயர்ந்து நிற்பது பெரும் சவாலான விசயம். அதைக் தினம் தினம் கண்கூடாக பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்.

அந்த வகையில், சென்னையில் ஒரு மத்தியதர வர்கத்தில் பிறந்து,
தந்தையைப் பிரிந்தச் சிறுமியாகத் தன் தாயோடு அமெரிக்காவில் குடியேறி வெற்றிபெற்ற "டாப் செஃப்" புகழ் பத்மா லட்சுமியின் வாழ்க்கை முக்கியத்துவம் பெறுகிறது.

பத்மா- முழுப்பெயர் "பத்மா பார்வதி லட்சுமி வைத்தியநாதன்" சுருக்கமாக "பத்மா லட்சுமி" (பிறப்பு-1970)  .  இவர் எழுத்தாளர், நடிகை, மாடல், டிவி தொகுப்பாளர், தயாரிப்பாளர்,தொழிலதிபர் என பலதளங்களில் இயங்குபவர்.

சமீபத்தில் நான் அவருடைய சுயசரிதையான "Love, Loss and What We Ate "ஐ வாசித்தேன் (ஓலி வடிவில்).

எழுத்தாளர் சல்மான் ருஸ்டியுனான காதலில் இருந்து நமக்குக் கதை சொல்லத் தொடங்கும் பத்மா 2016 ஆண்டு வரையான தனது வாழ்க்கையை  " Love, Loss and What We Ate  " எனும் மூன்று அம்சங்களில் சுவையுடன் பகிர்ந்திருக்கிறார்.

முதலில் சல்மானிலிருந்து தொடங்கினாலும், தனது சிறுவயது இந்திய பால்ய நினைவுகள், பள்ளி, கல்லூரி வாழ்க்கை,மாடலிங், சமையல்,  திருமணம், விவகாரத்து என  முன்னும் பின்னுமாகத்  தனது நினைவுகளை நகர்த்தி நாம் ரசிக்கும்படி பகிர்ந்திருக்கிறார்.

தான் ஒரு பிரபலம் எனும்  மனத்தடையின்றித் தனது காதல், திருமணம், விவாகரத்து என்பதைக் கடந்து தனது
அந்தரங்கங்களையும் வெளிப்படையாக சொல்லியிருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

மாடலிங் துறையில் நுழைந்த புதிதில் தனக்கு "கோட்" (Coat) என்பதற்கும் "ஐக்கெட்" (Jacket)  என்பதற்குமான வித்தியாசம் கூட தெரிந்திருக்கவில்லை  என்பதைப் பட்டவர்தமாக போட்டு
உடைத்திருப்பார்.

அதுபோல வாழ்வின் உச்சங்களை எட்டும்போதெல்லாம் தனது மத்தியதரவர்கச் சிரமங்களை நினைத்துப் பார்த்தேன் என்கிறார்.

தன்னை வெளிப்படையாக  ABCD (American-Born Confused Desi)  என அறிவித்துக் கொண்டாலும்,  இந்திய, அமெரிக்க வாழ்வியல் நம்பிக்கைகளுக்கு இடையேயான தனது நிலைபாட்டை பத்மா குழப்பமின்றித் தெளிவாக எடுத்துவைக்கிறார். அதே சமயத்தில் தனது குழந்தைக்கு மலையாள முறைப்படி  'அன்னபிரசன்னம்' எனும்  சோறு ஊட்டும் நிகழ்வுக்கு முன்பாக மாமிச சூப் தந்த நிகழ்வைக் குற்ற உணர்வோடு ஒப்புக்கொள்கிறார்.

அப்படியே போகிற போக்கில் மாடலிங்,   அதில் இருக்கும் நுண்அரசியல்,  பிரபலமாக இருப்பதன் சிரமங்கள்,  தனது ஐரோப்பியப் பயணஅனுபவங்கள்,  உலகசமையல் என பல விசயங்களைத் தொடுகிறார்.

நாய், பூனை போன்ற சில மிருகங்கள் பிரசவத்திற்குபின் அகோர பசியின் காரணமாக அவை ஈன்ற சில குட்டிகளை தானே தின்றுவிடும் எனக் கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால், பிரசவித்த பெண்கள்  Placenta எனும்  தங்களது நஞ்சுக்கொடியை உண்பதை
நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

ஆமாம்,  மேற்கு உலகில், குழந்தைபிறந்த பின் தாய்மார்கள் ( உடல்நலம் பேண ) தங்களது நஞ்சுக்கொடி எனும் Placentaவை உண்ணும் விநோத வழக்கம் இருக்கிறதாம்.  அதை பத்மாவும் முயன்று பார்த்திருக்கிறார்.  சிறுவயதில் சைவ பின்புலத்தில் பிறந்து வளர்ந்த பத்மா இதைச் செய்திருப்பதை நாம் ஆச்சர்யத்தோடுதான் பார்க்கவேண்டியிருக்கிறது.

அதுபோல அவருடைய  வலதுகை தழும்பு தன் வாழ்க்கையில்
ஏற்படுத்தித் தந்த திருப்பம், தனது தாயின் கணவர்கள், தனக்கு வந்த
நிர்வாண புகைப்பட வாய்ப்பு எனப் பல ஆச்சர்யங்களைச் சொல்கிறார்.

ஆண் பெண் உறவு, கடவுள் நம்பிக்கை, கல்வி என பலதளங்களில் புலம்பெயர்ந்தவர்களின் மனச்சிக்கல்களை அழகாக படம்பிடித்திருக்கிறார்.

பத்மா சென்னையில் பிறந்து உலகபிரபலமானவர் என்ற மேலோட்டமான அறிமுகத்தோடு கேட்கத் தொடங்கிய எனக்கு இறுதியில் அவரைப் பற்றி வேறுவிதமான பிம்பம் கிடைத்தது எனக் கண்டிப்பாகச் சொல்லலாம்..

இந்தச் சுயசரிதையை அவருடைய பார்வையில்,அவருடைய சொந்தக் குரலில் ஒரு நெடுங்கதைப் போலக் கேட்க சுவாரசியமாக இருக்கிறது. குறிப்பாக  அவருடைய இளவயது சென்னை அனுபவங்களை சிலாகித்து உணர்வுபூர்வமாக மனநெகிழ்ச்சியோடு பகிர்ந்ததையும் ரசித்தேன்.

ஒரு நெருங்கிய நண்பியிடம் கதைகேட்கும் மனநிலையை
தரும் அதே நேரத்தில் விசயத்தைப் போரடிக்காமல் நகர்த்தும் உத்தியையும் தெரிந்து வைத்திருக்கிறார்.  வாய்ப்பிருந்தால்
இந்தப் புத்தகத்தை வாசியுங்கள் அல்லது கேளுங்கள்.

நூல் - "Love, Loss and What We Ate"
ISBN-13: 978-0062202611
ஆசிரியர்-  பத்மா லட்சுமி
இணையதளம் - https://www.amazon.com/Love-Loss-What-We-Ate/dp/0062202618
விலை - $ 9.50 (Paper back)


படங்கள் இணையம்  நன்றி -
http://wmeimgspeakers.com/speaker/padma-lakshmi
https://en.wikipedia.org/wiki/Padma_Lakshmi

Tuesday, October 10, 2017

சுமோக்கி மலை - பயண அனுபவங்கள்-2

' இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஸ்மோக்கி மலை' என்றவுடனே கண்டிப்பாக டிரக்கிங் செய்வோம்  (மலை ஏறவேண்டும் )  என உடன்வந்திருந்த ஐந்து நண்பர்களையும் விடாப்பிடியாக இழுத்துக்கொண்டு போயிருந்தேன்.

மலையெல்லாம்  நம்மால ஏற முடியாது எனத் தயங்கியவர்களை,
 'வருசத்துல 365 நாள்ல, ஒரு நாளையாவது இயற்கையோட செலவு பண்ணுங்களேப்பா ' என்றெல்லாம் அறிவுரை செய்ய வேண்டியிருந்தது.  கூடவே, 'பாதி வழியில் முடியலனா ஒன்னும் பிரச்சனையில்லை. அப்படியே திரும்பிடலாம் ' என நம்பிக்கை தந்ததால் ஒத்துக்கொண்டார்கள்.

மலையில் இயற்கையாக வழிந்தோடிக்கொண்டிருக்கும் ஒர் அருவியை டிரக்கிங் செய்து பார்த்துவிட்டுத் திரும்புவது எங்கள் நோக்கமாக இருந்தது. நாங்கள் தேர்ந்தேடுத்திருந்த மலை தரைமட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரம். போகவர மொத்தமாக  6 மைல்கள். இப்படி அந்த  மலையைப் பற்றி தேவையான அளவு தகவல்களைத் திரட்டியிருந்ததால் நான் மனதளவில் தயாராகவே இருந்தேன். ஆனாலும், சமமான பகுதியில் நடப்பதைவிட மலைப்பகுதியில் நடப்பது சற்று கடினம் என்ற உண்மை எங்களுக்குத் தெரிந்தே இருந்தது.

ஒருவழியாக ஆளுக்கொரு  பிரட் சன்விட்ச், தண்ணீர் ,  எனர்ஜி டிரிங்க் பாட்டில்கள் சகிதமாக முதுகில் ஆளுக்கொரு பையுடன் களம் காணகிளம்பிவிட்டோம்.

போகும் வழியெங்கும் கரடுமுரடான ஒத்தையடிப் பாதை, இரண்டு பக்கமும் அடர்ந்தக் காட்டில் நெடிந்து வளர்ந்த காட்டு மரங்கள் என ஆரம்பத்தில் உற்சாகமாகதான் போய்கொண்டிருந்தது.

ஆனால், ஒரு மைல் முழுதாகக் கடக்கும் முன்னரே 'வேல் வேல்' என உற்சாகமாகக் கிளம்பியவர்கள் கொஞ்சம் சுணங்கினார்கள்.
காரணம்.  நாங்கள் கிளம்பிய நேரம் நல்ல மதியம், சூரியன்
வேறு மரங்களின் வழி ஊடுருவி எங்களை இம்சித்துக்
கொண்டிருந்தான். கூடவே ஏற்ற இறக்கங்களுடனான பாதை. சிலருக்கு உயரத்தால் காதுகள்வேறு அடைத்தது போலிருந்தது. 

ஆக்ஸிஜன் குறைந்ததால் (?!) லேசாக மூச்சிரைப்பு வேறு. தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்த செல்போன்களும்  தன் பங்குக்கு ஊமையாகியிருந்தன. இப்படித் தயங்கி நின்ற எங்களை ஒர் அமெரிக்க குடும்பம் வேகமாகக் கடந்து சென்றது. அதில் ஒர் இளம்பெண் பனிச்சறுக்குச் செல்லும் ஆயத்தத்துடன் இரண்டு குச்சிகளை வைத்திருந்தாள். நான் உடனே அவர்களைக் கைகாட்டி  ' அவங்க போறாங்க, ஒய்
நாட் வீ,  லெட்ஸ் பாலோ தேம் ...  ' என்றெல்லாம் உற்சாகப் படுத்தவேண்டியிருந்தது. கூடவே, மலை ஏறும்போது நாம் கவனிக்க வேண்டிய இன்னோரு நுட்பத்தையும் மக்களுக்குச்  சொன்னேன்.

அதாவது,  கற்களின் மேல் நடந்து செல்லும்போது கால்களை அகலமாக எட்டி   வைத்து அந்த இடத்தை வேகமாகக் கடக்க முயற்சி செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் "குறைந்த விலை- நிறைந்த தரம்" எனும் திநகர் கடைகளின் விளம்பரம் போல," குறைந்த அடிகள்- அதிக தூரம்".  அதுபோல, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் முக்கியம் என்பதையும் சொன்னேன்.

அப்படியே பாதி தூரம் நடந்துவந்தவர்கள் இனி திரும்பி கீழேபோக வேண்டாம் என முடிவெடுத்து முன்னே
நடக்கத்தொடங்கினார்கள். ஏற முடியவில்லை எனில் பாதியில் திரும்பிவிடலாம் என அதுவரை மனத்துக்குள் நினைத்திருந்த நான் கூட வேறுவழியில்லாமல் அவர்களைத் தொடர வேண்டியதாயிற்று.

போகும் வழியில் ஒரிரு சிற்றோடைகளைக் கடந்து சென்றோம்.
ஆனால்,  வழியில் ஸ்மோக்கி மலையின் தனிச்சிறப்பான  "கிரிஸ்லீ கரடி"யை எதிர்பார்த்திருந்த நாங்கள் அங்கே ஒடிய ஒரு பாம்பை அலட்சியத்தோடுதான் கடந்துபோனோம்.

நடக்கையில் எதிரே வந்துகொண்டிருந்த ஒரிருவரிடம் மேலே அருவி இருப்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். மலையில் தவறான வழியில் நடப்பதைப்போலொரு முட்டாள்தனம் இருக்கமுடியுமா என்ன ?

பேச்சுவாக்கில் தமிழகக் காட்டுக்குள்  30 வருடங்கள் ராஜாங்கம் நடத்திய வீரப்பன் பற்றிய பேச்சு வந்தது. காட்டில்  எங்கேயோ ஒரு குருவி கத்துவதை வைத்து காட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கணித்துவிடும் அவனது அசாதரண திறமை. இரவு பகலெனப் பாராமல் போலீசுக்குப் பயந்து சரியாகத் தூங்க முடியாமல் ஜாகையை மாற்றிக்கொண்டு திரிந்தது. அவனது அரசியல் தொடர்புகள்,சந்தன மரம், யானை தந்தங்கள் எனப் பேசியபடியே வெகுதூரம் வந்துவிட்டதை  அங்கு அடித்த குளிர்காற்று காட்டிக்கொடுத்தது.

ஆமாம், அருவியை நெருங்க நெருங்கக் காற்றில்
சில்லெனும்  குளிர்ச்சியை உணர்ந்தோம், கூடவே தண்ணீர்
' ஹோ'வென விழும் சப்தம் எங்கள் களைப்பைப் போக்கியிருந்தது.

ஒருவழியாக அடர்த்தியான பசும் மரங்களுக்கு இடையே பெரும் பாறையிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த கிரோட்டோ அருவியை ( Grotto Falls) தரிசித்தோம்.  குதுக்காலத்தோடு வழிந்தோடிக் கொண்டிருந்த நீரை முகத்தில் அடித்துக் கொண்டோம். சில்லென்றிருந்தது. அதை
எதிர்பார்த்திருந்ததுபோல
அப்போது லேசாக மழை தூரத் தொடங்கியது.   'வாழ்க்கையில ஒருநாள் மழையில நனைஞ்சு பாக்கலாம்பா  ' எனும் குரல் கேட்டது.  வேறு வழி ?   அதன் குளுமையையும் சில நிமிடங்கள் சேர்த்து அனுபவித்தோம்.

மழை விட்டபின் அருவியோடு போட்டிபோட்டு நிழற்படங்களை எடுத்துபின் சான்விட்சைக் கலோரியாக மாற்றிவிட்டு இறங்கத் தொடங்கினோம்.

நினைத்தது போல மலைஏறும்போது இருந்த சிரமம் இறங்கும் போது
கண்டிப்பாக  இல்லை. ஆனால், அதிகக் கவனம் தேவைப்பட்டது. ஒற்றையடிப் பாதையிலிருந்த சறுக்கங்கள் ஆளை முன்னால் தள்ளும் வல்லமைக் கொண்டது. அங்குக் கிடைக்கும் மரக்கு
ச்சிகளை  ஊனுகுச்சியாகப் பயன்படுத்துவது உத்தமம்.

மலையிலிருந்து கீழே இறங்கியபோது மணிபார்த்தேன். சரியாக நான்கு மணிநேரமாகியிருந்தது.


உடல் உழைப்பைக் கோரும்
ஒரு சவாலை முறியடித்திருந்தோம்.  வரும் நாட்களில் நாங்களும் டிரக்கிங் செய்திருக்கிறோம். அதுவும் கடல்மட்டத்திலிருந்து ஏறக்குறைய 4000 அடி, 6 மைல்கள் என எங்களால்
பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.

கீழே காரில் ஏறும் சமயத்தில், ' நமக்கு இன்னைக்கு ராத்திரி கைகால் வலி பின்னிடும். யாரும் ஒய்ஃப் கிட்ட சண்டை போட்டுறாதீங்கப்பா.   அவங்க தயவு நமக்கு வர்ர இரண்டு நாளைக்குத் தேவ.. ' என ஒரு குரல் கேட்டது.

அந்த அறிவார்த்தமான குரலுக்குச் சொந்தக்காரன் கண்டிப்பாக நானில்லை. ;)


சில படங்கள் இணையம். நன்றி - SmokyMountains.com

Friday, October 6, 2017

மா(ற்)றுவார்களா?

தமிழ்நாட்டில் இருந்து வந்த இரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை வைத்து
இங்கே பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன்.

பாடத்திட்டம் பற்றி பெரிதாக குறை எதுவும் இல்லை. பாடல்கள், கதைகள், ஏன் பயிற்சிகள் கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால், கண்களை உறுத்தும் ஒரு
விசயம் புத்தகத்தில் அவர்கள் பயன்படுத்தியிருக்கும் சில படங்கள். அவை
நம் சூழலுக்கு முற்றிலும் அன்னியமாக படுகிறது.

அந்தப்  புத்தகத்தின் முதல்பாடத்தையே எடுத்துக் கொள்வோமே.
"தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு" எனும் பாடலுக்கு கீழே ஒரு பசுவையும் கன்றையும் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பசுவும் கன்றும் கண்டிப்பாக தமிழ்நாட்டு பசு இனம் அல்ல. அது திமில் இல்லாமல் வெளிநாட்டு வகையாரா போலிருக்கிறது. கொஞ்சம் உற்றுப்பார்த்தால் டெக்சாஸ் வகை பசுபோல பக்கவாட்டில் பெரிய கொம்புகளுடன் இருக்கிறது.

அதுபோல "மீனவர் மீன் பிடிக்கிறார்" எனச் சொல்லிவிட்டு ஒரு தாய்லாந்து
இல்லை சீன மீனவர் தலையில் தொப்பியுடன் இருக்கும் படத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படி நமது சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத பலவிசயங்கள் புத்தகத்தில் இருக்கின்றன. ஒரிடத்தில் யானை எனச் சொல்லி ஆப்பிரிக்க யானை. குரங்கு எனச் சொல்லி பனிக்குரங்கைப் போட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் சின்னவிசயம் என என்னால் ஒதுக்கிவிட முடியவில்லை.

அதுபோல "குழந்தை சிரிக்கிறது" எனச் சொல்லி ஒரு சைனீஸ் குழந்தையின் படத்தை போடுவதை விட ஒரு அசட்டுத்தனம் இருக்க முடியுமா என்ன ?
சரி, அவை  பாடத்திட்டங்களுக்கு படம் தேர்வு செய்த ஒரு கோமாளி இணையத்தில் திருடிய படங்கள் என்றால் இதையெல்லாம் மேற்பார்வை செய்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?.

பிள்ளைகள் நேரடியாக அன்றாட வாழ்வில் நேரடியாக பார்க்கக்கூடிய,உணரக்கூடிய விசயங்களை கல்வியாளர்கள் பாடத்திட்டங்களின் வழியாக சரியாக கொண்டுசேர்க்கவேண்டாமா ? ஒரு படம் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் எனச் சொல்வார்களே. ஆரம்பக் கல்வி வாயிலாக குழந்தைகளுக்கு  நுட்பமான ஒரு விசயத்தை சொல்கிறோம் எனும் பிரக்ஞைகூட அவர்களுக்கு இல்லையா.
இல்லை, "நாய்" எனச் சொல்லி பிள்ளைகளுக்கு லேப்ரடார் (labrador) வகை நாய்களை வளர்க்கச் சொல்லி மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறார்களா ? புரியவில்லை.

இதற்கு வேறு சாயங்கள் பூசாமல் நேரடியாகவே கேட்கிறேன். லண்டனில்
படிக்கும் ஒரு குழந்தையின் பாடத்தில் "காய்" எனச் சொல்லி முருங்கைக் காயின் படத்தை போடுவார்களா ? இல்லை "விளையாட்டு" எனச்
சொல்லி கபடி ஆடும் படத்தைதான் போடுவார்களா என்ன ?  சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா ?

*************
இது புதிய தலைமுறை கல்வி இதழில், "மா(ற்)றுவார்களா?" எனும் தலைப்பில் வெளியான கட்டுரை.

#அலட்சியம்

Sunday, October 1, 2017

இரக்கமில்லா இரவுப்பணி

கடந்த வாரம் வேலைக்காக தொடர்ச்சியாக 12 மணி நேரத்துக்கு மேல் இரவில் விழித்திருக்கவேண்டியதொரு சூழல். இரவு 8 மணியில் இருந்து காலை 8  மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

வெளியில் இருந்து பார்ப்பவர்கள் 24 மணி நேரத்தில்,  12 மணி நேரம் மட்டும் வேலை மிச்ச நேரமெல்லாம் ஓய்வு தானே ? இதிலென்ன பெரிய பிரச்சனை ? என எளிதாகக் கேட்டுவிடுவார்கள்.  ஆனால், உண்மையில் இரவு பணி ஒரு பெரிய இம்சை என்பது அனுபவத்தவர்களுக்கு நன்றாக தெரியும். 

இரவில் கொட்ட கொட்ட  ஆந்தைபோல்
கண் விழித்துவிட்டு பகலில்  வீட்டுக்கு வந்து படுக்கையறையில் 
தூக்கமில்லாமல் புரண்டுகொண்டிருப்பதைப்போல் கொடுமை வேறில்லை.
அப்படியே  அசதியில் கண்மூடினாலும்  மிஞ்சிப் போனால் இரண்டு அல்லது 3 மணி நேரம் தூங்குவது பெரிய விசயமாயிருக்கும்.

நாம் பிறந்ததிலிருந்து நம் உடலை இரவில் தூங்குவதற்கு பழக்கப்படுத்தியிருக்கிறோம்.  இதை ஆங்கிலத்தில் "பையாலஜிகல் கிளாக் (Biological clock)" என்கிறார்கள். அதை ஒரே வாரத்தில் டக்கெண பல்டி அடித்து மாற்றிக்கொள் என்றால் கேட்பதற்கு  அது ஒன்னும் துணை முதல்வர் இல்லையே.  

நமக்கு உடல் ஒரு பிரச்சனை என்றால் வெளியில் இருந்து வரும் பிரச்சனை ஒருபுறம். ஆமாம், இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வரும்  நமக்கு மட்டும்தான் அந்தப் பகலில் ஓய்வு தேவை.   மற்றவர்களுக்கு  சாதாரண பகல் தானே. அவர்கள் டிவி, அரட்டை எனக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். துரதிஷ்டவசமாக எனது வீடுபோல பிள்ளைகள் இருக்கும் வீடாக இருந்தால் வேறு வினையே தேவையில்லை. உலகத்தில் இருக்கும் விளையாட்டையெல்லாம் அப்போதுதான் உற்சாகமாக விளையாடி கடுப்பேற்றுவார்கள்.

அதனால் பெரும்பாலும் நமக்குக் கிடைப்பதெல்லாம் குட்டி தூக்கம்தான். இதற்கு நடுவில் மதிய உணவுக்கு வேறு எழுந்திரிக்கவேண்டும்.  அதற்கு பின்பு தூக்கமெல்லாம் வெறும் கனவுதான். அப்படியே அடித்துப் பிடித்து தூங்கினாலும் இரவில் நிம்மதியாக தூங்குவதைப் போலோரு உற்சாகத்தை கண்டிப்பாக பெற முடியாது. 

எனது குழுவில் மேத்(Matt) எனும் அமெரிக்கன் இருக்கிறான். பொடியன்.
இந்தவருடம் கல்லூரி முடித்தவனை  வேறு எப்படி சொல்வதெனத் தெரியவில்லை.  ஷிப்டிற்கு  கையில் பேஸ்ட், பிரஸ், சோப்பு சகிதமாக தயாராய் வந்துவிடுவான்.  ஆனால், ஷிப்டின் மூன்றாவது
நாளில் அவன் முகத்தை  நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே. முகமெல்லாம் எக்டரா லார்ஜாக வீங்கி பார்க்க சகிக்கவில்லை. பாவம். அடுத்த நாளே அவனை பகல் ஷிப்டில் வரச்சொல்லிவிட்டேன். 

எப்படியோ ஒரு வழியாக இரவெல்லாம் தாக்குபிடித்து  தூக்கத்தைக் கட்டுப்படுத்தி விட்டாலும் காலை 7 மணிக்கு கண் சொக்கும் பாருங்கள். அப்பப்பா..

என்ன தான் சொன்னாலும் இப்படி தொடர்ச்சியாக இரவில் தூங்காமல் விழித்திருப்பதைப் போலோரு துரோகத்தை நம்மால் உடலுக்கு செய்துவிடமுடியுமா எனத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அசதி. கூடவே கண்கள் சிவந்து,  பசியெல்லாம் மறத்துபோய், பூதகணம் போல் சுற்றிக்கொண்டிருப்பது உண்மையில் தண்டனை.

அதனால் இரவு பணி செய்யும் அத்தனைப் பணியாளர்களும் நமது
பாராட்டுக்கும், வாழ்த்துக்குரியவர்கள் என்று நினைக்கிறேன்.

எது எப்படியோ அலுவலக வேலை இந்தவாரம் முடிந்துவிட்டதால் , குழுவிற்கு இரவு பணியில் இருந்து விடுதலை அளிக்க முடிவெடுத்துவிட்டோம். அப்பாடா..