Thursday, August 2, 2018

மை இயர் ஆஃப் மீட்ஸ் (My Year of Meats) - ரூத் ஓஸ்ஸ்கி (Ruth Ozeki)

 உலகம் முழுவதும் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மாமிசம் போன்ற தொழில்களில் பரவலாக நடக்கும் முறைகேடான சர்ச்சைக்குரிய விசயங்கள் பொதுவாக வெளிப்படையாக பேசப்படுவதில்லை. அது
குறித்து எழுதப்பட்ட புனைவுகளும் குறைவு என்றே நினைக்கிறேன்.

அந்த விதத்தில் நான் சமீபத்தில் படித்த புத்தகம் "மை இயர் ஆஃப் மீட்ஸ்"
(My Year of Meats) "மாமிசத்துடன் எனது ஒரு வருட வாழ்க்கை". எழுதியவர் ரூத் ஓஸ்ஸ்கி (Ruth Ozeki). முதல் பதிப்பு 1998.  இரண்டு ஜப்பானிய  பெண்களின் பார்வையில் சொல்லப்படுவதாக எழுதப்பட்ட கதை. ஒருவர் ஜப்பானில்
வாழும்  இளம்  பெண். அவர் குழந்தையின்மையால் கணவனால் கொடுமைப்படுத்தபட்டு அலைகழிக்கப்படுகிறார். இன்னொருவர்
ஜப்பானிய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த  அமெரிக்க இளம்பெண். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர். அவர் தனது வேலையில் பல
பிரச்சனைகளையும் சவால்களையும்  எதிர்கொள்கிறார்.
ஒருவருட காலகட்டத்தில் நடக்கும் இந்தக் கதையின் இறுதியில் இரு பெண்களும் ஒரு புள்ளியில் சந்திப்பதாக கதை முடிகிறது.

கதையில் மனைவியை வெறும்  பிள்ளை பெறும் எந்திரமாக நினைக்கும் படித்த கணவன். அது நடக்காது எனத் தெரிந்தவுடன் அவன் செய்யும் பாலியல் வன்முறைகள் போன்ற விசயங்கள் நேர்த்தியாக வந்திருக்கிறது.  அதுபோல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரின் வழியாக அமெரிக்காவின் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மாமிசம் போன்ற தொழிலில் நடக்கும்
பல முறைகேடான சர்ச்சைக்குரிய விசயங்களை அழுத்தமாகவே பேசியிருக்கிறார்.

Diethylstilbestrol (DES)  எனும் செயற்கை எஸ்ட்ரோஜன் கலப்பால் இயற்கையான
மனித ஹார்மோன்கள் கெடுவது. அதன் தொடர்ச்சியாக சிறுபிள்ளைகள் பூப்படைவது போன்றவற்றைத் தொட்டிருக்கிறார்.

எழுதியது பெண் எழுத்தாளர் என்பதால் இரண்டு பெண்களின் மனஓட்டத்தையும் அழகாக படம்பிடித்திருப்பதாக நினைக்கிறேன்.
வாசிக்கையில் பல இடங்களில் தொய்வு இருப்பது போல தோன்றினாலும் வாசிக்கலாம். மோசமில்லை. இல்லை என்னைப்போல ஆடியோவாகவும் கேட்கலாம்.

எழுத்தாளர் ரூத் ஓஸ்ஸ்கி சமூகம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், உலகளாவிய கலாச்சாரத்துடன் தொடர்புடைய கருப்பொருள்களை
மையப்படுத்தி எழுதிவருபவர். எழுதப்பட்ட காலகட்டத்தை ஒப்பிடும்
போது நாவல் பேசும் விசயங்கள் பழசாக தெரிந்தாலும் இன்றும்
நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு அவசியம் தேவை என்றே நினைக்கிறேன்.

#மை_இயர்_ஆஃப்மீட்ஸ்

No comments:

Post a Comment