Sunday, November 18, 2018

கஜாவுக்குப் பிறகு...

கஜா பேரழிவுக்கு பிறகான பாதிப்பு குறித்த செய்திகள் உள்மாவட்டங்களில் இருந்து மெள்ள வரத்தொடங்கியிருக்கின்றன. புயலுக்கு இதுவரை 45க்கு அதிகமானவர்கள் மரணமடைந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

எங்கள் ஊரில் இருந்து வந்திருக்கும் நிழற்படங்களையும், வீடியோக்களையும் என்னால் முழுதாகப் பார்க்க முடியவில்லை. புயலின் கோரதாண்டவத்தால் ஊரே சூரையாடப்பட்டு முற்றிலுமாக உருகுலைந்து கிடக்கிறது.

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் வீட்டைச் சுற்றி நின்ற முப்பது, நாற்பது வருட மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து அகாலமாக விழுந்துகிடக்கின்றன.  வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி கிளைகள் உடைந்து, மரக்கொப்புகள் விழுந்து, பசுந்தலைகள் கொட்டி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.  வீடியோவில் பறவைகளும், அணில்களும், சில் வண்டுகளும் விடாமல்  தொடர்ந்து அலறி ஏதோ நிகழக்கூடாத அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதைச் சொல்வது போல போரோலி எழுப்பும் காட்சிகள் வயிற்றைப் பிசையவைக்கின்றன.


தோட்டத்தில் மா,பலா, வாழை, தென்னை, பாக்கு, தேக்கு, கொய்யா, வேம்பு, நார்த்தை, எழுமிச்சை என பலநூறு மரங்கள் மல்லாந்து தலைசாய்த்து கிடக்கிறன. பாதிரி, ஒட்டு, பங்கனப்பள்ளி, நீலம் என வகைவகையாக காய்த்துக்கொண்டிருந்த மாமரங்கள் அத்தனையும் ஒன்றுவிடாமல் வேரோடு சாய்ந்துகிடக்கின்றன.

அதுபோல செவ்வாழை, ரஸ்தாளி, பூவன் என குலைதள்ளிய வாழை மரங்கள் நுனி முறிந்து கிடக்கின்றன.
பல்லாண்டுகளாக காய்த்துக்கொண்டிருந்த பலா மரங்கள் சுழல்காற்றில் சிக்கி தலைதிருகி போட்டதுபோல மரணித்துக் கிடக்கின்றன. மரங்களோடு சேர்ந்து மின்கம்பங்களும் விழுந்து கம்பிகள்  அறுந்து கொடிபோல சுற்றிக் கிடைக்கின்றன. அகன்ற கிளைகள் கொண்ட முதிர்ந்த தேக்கு மரங்கள் வேரோடு முறிந்து பாதையில் விழுந்து கிடப்பதால் தோட்டத்தின் உள்ளே முன்னேறி செல்லமுடியாத நிலை.

இப்படி ஊழித் தாண்டவமாமாடிச் சென்றிருக்கும் கஜா இது போல எத்தனையோ லட்ச கிராமமக்களின் வாழ்வாதாரத்தை பறித்துச் சென்றிருக்கிறது.  மண், மரம், பறவை, அணில் என இயற்கையோடு இயைந்து வாழ்ந்த கிராமத்து மனிதர்களின் உயிர்குலையைச் சுத்தமாக அறுத்துவிட்டுச் சென்றிருக்கிறது.

தடைபட்டுள்ள மின்சாரம் வந்து, தகவல்தொடர்பு கிடைத்து அவர்களுடைய இயல்பு வாழ்க்கைத் திரும்ப கண்டிப்பாக சில மாதங்கள் ஆகலாம்.  அவர்கள் தங்கள் வாழ்வின் மிகப்பெரிய பேரழிவை சந்தித்திருக்கிறார்கள். கஜா விட்டுச் சென்றுள்ள இந்த வடு இனி வரும் பல்லாண்டுகளுக்கு அவர்களின்
நினைவை விட்டு அகலப் போவதில்லை.  நேற்றுவரை மற்றவர்களுக்கு உணவளித்த அந்த வெள்ளந்தி மனிதர்கள் இன்று உதவிக்கு நிவாரண முகாம்களில் கையெந்தும் நிலை.

புயலுக்குப் பின்  சாலைகளில் கிடக்கும் மரங்களை அகற்றும் வேலையை அரசாங்கம் உடனடியாக செய்து தருமே தவிர விளைநிலங்களையும், மரங்களையும், கால்நடைகளையும், வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிற்பவர்களுக்கு  அரசு நிவாரணம் உடனே கிடைத்துவிடும் என நான் நம்பவில்லை.

புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற
அத்யாவசியங்கள் உடனடியாக தேவை. பல இடங்களின் விவசாயிகளின்
வீடுகளைச் சுத்தப்படுத்தவும் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தக் கூட ஆட்கள் கிடைக்காது என்பதே உண்மை அப்படியே கிடைத்தாலும் செலவு செய்யமுடியாத சூழல். அதனால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நமது உதவி உடனடியாகத் தேவைப்படுகிறது. அவர்கள் வாழ்வாதாரத்தை மீட்பது நமது கடமையும் கூட.


படங்கள். நன்றி - இணையம். (கடைசி படம்)

No comments:

Post a Comment