Thursday, November 22, 2018

கஜா புயலில் கால்நடைகள்

ஆடு, மாடு, நாய், பறவை மட்டுமல்லாமல் பொதுவாகவே விலங்குகளுக்கு புயல்,வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவை.

அவை மனிதர்களைப் போல் இல்லாமல் சூழ்நிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்களை வைத்து அவற்றை முன்கூட்டியே  உணர்ந்து கொள்கின்றன. குறிப்பாக புயல் சமயங்களில் வானிலையில் ஏற்படும் காற்றழுத்த மாறுபாட்டைத் தெரிந்துகொள்கின்றன. அந்தச் சமயங்களில் அவற்றின் போக்கு வழக்கத்திற்கு மாறாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.  பறவைகள் வித்தியாசமாக ஒலி எழுப்பியபடி அவசர அவசரமாக கூட்டுக்குத் திரும்பவதையும், நாய், மாடு, பூனைகளின் கண்களில் தோன்றும் ஒருவித மிரட்சியையும் கவனித்திருக்கலாம்.

அப்போது நாய்கள் குட்டிபோட்ட பூனைபோல நிலையில்லாமல் உலாத்திக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சில நாய்கள்
பயத்தில் வாலை  உள்நோக்கி சுருட்டி வைத்துக் கொண்டிருக்கும். சில வீட்டில் பாதுகாப்பான இடத்தைத் தேடி பதுங்கும். சில வழக்கத்திற்கு மாறாக நம் கால்களைச் சுற்றி சுற்றி வரும்.

இது நாய்கள் வீட்டில்  ஊளையிட்டால் மரணத்தின் சகுனம் என்பது போல நம்பிக்கை சார்ந்த விசயமில்லை. மாறாக மனித செவி உணர இயலாத தாழ்ஒலிகளை விலங்குகளால் உணரமுடியும் என்பது அறிவியல் உண்மை.
இங்கே அமெரிக்காவின் ஃபிளாரிடாவில் ஹரிக்கேன் சமயங்களில் சுறாமீன்கள் முன்கூட்டியே ஆழ்கடல் பகுதிகளுக்குத் தஞ்சம் புகுவதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதுபோல ஆபத்து சமயங்களில் விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் புகுவதும், வெள்ள சமயங்களில் மேடான இடங்களுக்கு கூட்டமாகத் தப்பித்துச் செல்வதும் இயற்கையான நிகழ்வுகளே.

சமீபத்திய கஜா புயலில் சிக்கி பல ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் இறந்துபோனதைப் பார்த்தோம்.  புயலின்போது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாராட்டும் நாம் ஐந்தறிவுள்ள விலங்குகளுக்கு என்ன
செய்துவிட்டோம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இயற்கைப் பேரிடருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துரிதமாகச் செயல்பட்டு  மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பினோமா ?  அப்படி அனுப்பியிருந்தால் அதே அளவு கரிசனத்தை நம்முடைய கால்நடைகளுக்கும் காட்டியிருக்க வேண்டாமா ? 2004இல் வந்த சுனாமி போல எந்தவொரு முன்னறிவுப்புமின்றி ஒரு பேரழிவு
வரும்போது விலங்குகளைத் தவிக்கவிட்டு மனிதர்களாகிய நாம் தப்பிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், முன்னெச்சரிக்கையோடு கஜா போன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளும் போது ?

எல்லா மாவட்டங்களிலும்  இயற்கைப் பேரிடர்களின் போது மக்களைப் பாதுகாப்பாக தங்க வைக்க இடம் இருப்பது போல விலங்குகளுக்கு
இருக்க வேண்டியது அவசியம் தானே. எல்லா மாவட்டங்களிலும்
இல்லாவிட்டாலும் கால்நடைகள் அதிகமுள்ள கடலோர மாவட்டங்களிலாவது செய்திருக்கலாமே. அதிகம் வேண்டாம் புயலின் கண் (cyclone eye) நேரடியாக தாக்கப் போகிற வேதாரண்யம், கோடியக்கரை கடலோரப் பகுதிகளில் இதுமாதிரியான முன்னெச்சரிக்கைகளைச் செய்திருந்திருக்கலாமே.

சரி, நாகை மாவட்டத்தின் நன்னம்பிக்கை முனையான கோடியக்கரையில் வன விலங்கு சரணாலயம் என்ற பெயரில் அடைத்து வைத்திருந்த
காட்டுயிர்களைக் காக்க முன்னெச்சரிக்கையாக நாம்  என்ன செய்தோம் ?
கடலில் இருந்து தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் அந்தச் சராணாலயத்தில் மான்கள் உள்ளிட்ட பல ஆயிரம் விலங்குகள் வீசிய புயல்காற்றில் சிக்கி தப்பிக்க வழியின்றி திணறியிருக்குமே. அச்சத்தில் துள்ளி ஓடிய அந்த மான்களின் கூக்குரல் மனிதர்களுக்குக் கேட்டிருக்குமா ?  இல்லை அலறியபடி மரத்துக்கு மரம் தாவி ஓடிய குரங்குகளின் அலறல் தான் கேட்டிருக்குமா ?

வாய்ப்பு இல்லை. விலங்குகளிடமிருந்து இந்த பூமியைக் கவர்ந்த மனிதன் அவற்றைப் பல லட்சம் ஆண்டுகளாக அடிமையாக்கி அல்லவா வைத்திருக்கிறான். அடிமைகளுக்கு இந்த உலகில் குரல் இருக்கிறதா என்ன ?

3 comments:

  1. விலங்குகள் நுண்ணுர்வு மிக்கவை!

    ReplyDelete
  2. அவைகளை காக்க நாம் எடுக்க்கும்.முயற்சி இரண்டாம்.பட்சமாகவே!

    ReplyDelete