Sunday, January 6, 2019

வனநாயகன் குறித்து-9 (ஐடி துறை பற்றிய நாவல் என்றாலே கள்ளக் காதலா ?)

படைப்பை வாசிப்பவர்கள் தங்கள் வாசிப்பனுபவத்தை சுயவிருப்போடு தன்னிச்சையாக மற்றவர்களிடம் சிலாகிப்பதும், பொதுவில் பகிர்வதும்
படைப்பாளனுக்கு மகிழ்ச்சியும் ஊக்கத்தையும் தரக்கூடியது.

அந்த இரண்டையும்  பெங்களூரைச் சேர்ந்த வாசகர் ரெங்கசுப்ரமணி எனக்குத் தந்திருக்கிறார்.  அவருக்கு எனது மனம் நிரம்பிய நன்றிகள் !!

அவருடைய தளத்தில் இருந்து..

//பல நாட்களாக படிக்க நினைத்துக் கொண்டிருந்த புத்தகம், ஐடி துறை பற்றியது என்பதாலேயே பயந்து கொண்டிருந்தேன். காரணம், ஐடி துறை பற்றிய நாவல் என்றாலே கள்ளக் காதல் நாவல் என்று நினைத்துக் கொள்கின்றனர். வெளியாட்கள் எழுதினாலும் பரவாயில்லை, அந்த துறையில் இருப்பவர்கள் கூட அதைத்தான் எழுதுகின்றார்கள். ஒரு வேளை அவர்களின் அனுபவம் அது மட்டும் தானோ என்ன எழவோ. கிண்டில் அன்லிமிட்டடில் கிடைப்பதால் துணிந்து படித்தேன்.  தகவல் தொழில் நுட்பத்துறையை மையமாக கொண்ட ஒரு நாவல்.

தகவல் தொழில்நுட்பத்துறையை பற்றி மாயைகள் அதிகம். அதிக பணம், அதிக உழைப்பில்லாத வேலை, வேலைக்கு அதிகமான சம்பளம், நிரந்தரமற்ற வேலை, உழைப்பை உறுஞ்சுவார்கள், கொத்தடிமைகள், அதிக வேலைப்பளு, குறைந்த சம்பளம் என்று ஒன்றுக்கொன்று முரண்பாடான பல பார்வைகள். தேவைக்கேற்ப கோணத்தை மாற்றிக் கொள்வார்கள். ஐடியில் வேலை செய்பவர்களுக்கே கொஞ்சம் இந்த மாயை உண்டு. கார்ப்பரேட் அடிமைகள், கூலிகள் என்று தங்கள் தலையில் செருப்பால் அடித்துக் கொள்வார்கள். இந்த பார்வை அத்துறையை பற்றி எழுதுபவர்களிடமும் வந்து சேரும். நல்ல வேளை இந்நாவலில் அது இல்லை. முக்கியமாக அடுத்தவன் மனைவியை தள்ளிக் கொண்டுபோகும் இளைஞர்கள் இல்லை. அதற்காகவே பாராட்ட வேண்டும்.

மெலிதான் த்ரில்லர் ஸ்டைலில் எழுதப்பட்ட கதை, மலேசியாவில் நடைபெறுகின்றது.  டெஸ்மா சட்ட காலத்து கதை.ஐடி என்பது தன்னந்தனியாக இயங்கக்கூடிய துறையல்ல. அது பெரும்பாலும்  வேறு ஒரு துறையை சார்ந்தே வேலைசெய்ய வேண்டும். வங்கிகள், மருத்துவதுறை, பங்குச்சந்தை, வணிகம், ஆராய்ச்சி என்று, மற்ற வேலைகளை சுலபமாக்க கஷ்டப்படுவதுதான் ஐடி துறை.  வங்கி இணைப்பு சம்பந்தப்பட்ட பணியிலிருக்கும் ஒருவனுக்கு ஒரு தொலைபேசி வருகின்றது. அது அவனின் வேலை நீக்கத்திற்கு காரணமாகின்றது. காரணத்தை தேடிச்செல்லும் அவன் தெரிந்து கொள்வது மற்றுமொரு உலகை. தகவல் தொழில்நுட்ப உலகில் இருட்டான பக்கங்களை கொஞ்சம் காட்டுகின்றது. ஊழல், லஞ்சம் போன்றவை எல்லாம் இத்துறையில் இல்லை என்ற மாயை உடைக்கப்படுகின்றது. ஒரு ப்ராஜெக்டை பெறுவதில் நடக்கும் தில்லுமுல்லுகள் பலருக்கு தெரிவதில்லை, அதே நிறுவனத்தில் இருப்பவனுக்கே தெரிந்திருப்பதில்லை. அவற்றையெல்லாம் தொட்டு காட்டுகின்றது. த்ரில்லர் என்பதால், நாயகன் சாகசங்கள் எல்லாம் செய்வதில்லை, ஒரு சாதரணன் என்ன செய்ய முடியுமோ அவ்வளவுதான், என்ன, கதாசிரியரின் உரிமையால் அவனுக்கு உதவி செய்ய பலர் தோன்றுகின்றனர், காவல்துறை சரியான நேரத்திற்கு வருகின்றது, குறுக்கே பாய பலர் தயாராக இருக்கின்றனர். நாயகன் கதை ஆரம்பிக்கும்போதே நிறுவனத்திலிருந்து விரட்டப்படுவதால், அதன்பின் சம்பவங்கள் முன்னும் பின்னும் சென்று வருகின்றது. 

குறிப்பிடத்தக்க அடுத்த அம்சம், கதை நடக்கும் இடம். மலேஷியா. மலேஷியாவை படிப்பவர்களுக்கு காட்ட நினைத்து ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளார். மலேஷியாவின் முக்கிய இடங்கள், அவர்களின் கலாச்சாரம், அங்கு நிலவும் இனப் பிரச்சினைகள், உணவு பழக்க வழக்கங்கள் என்று பல நுணுக்கமான விஷயங்களை காட்டியிருக்கின்றார். மலேஷியாவில் நடைபெறும் காடு அழிப்பு, சுற்றுசூழல் பிரச்சினைகள், அரசியல்வாதிகளின் செயல், கேங் வார்கள், சீனர்களின் ஆதிக்கம் என்று பல விஷயங்கள் இணைப்பாக வருகின்றது. .......

//

முழுமையான பதிவு அவருடைய இணையதளத்தில்  http://rengasubramani.blogspot.com/2018/10/blog-post_30.html

''வனநாயகன்- மலேசிய நாட்கள்'' புதினம் சென்னை புத்தகக் கண்காட்சி- கிழக்கு பதிப்பகத்தில்  இந்த ஆண்டும் கிடைக்கிறது. அரங்கு எண்கள் - 365,366,453,454

இணையத்தில் வாங்க.
https://www.nhm.in/shop/9788184936773.html


அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:
https://www.amazon.in/dp/B06X9VTR71?_encoding=UTF8&keywords=vananayagan&qid=1487947428&ref_=sr_1_1&s=digital-text&sr=1-1

No comments:

Post a Comment